BREMEN இரவு பாடகர் -நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்


.
அண்மையிலே நான் ஜெர்மனியின் வடபகுதியில் இருக்கும் BREMEN என்ற நகருக்கு சென்றிருந்தேன். அழகிய நகரம் பலவற்றையும் பார்த்து இரசிக்க முடிந்தது. நகரத்தின் ஒரு புறத்தில் இருந்த மிருகங்களின் சிலை என்னை வியக்க வைத்தது. சிலை இதுதான் ஒரு கழுதை மேல் நாய் அதன் மேல் பூனை, அதற்கும் மேல் சேவல். இது என்ன வீட்டு பிராணிகளை இவ்வாறு சிலையாக அமைத்துள்ளார்கள் என  வினவ, விழக்கம் வந்தது. அவை “BREMEN பாடகர்” எனப்படுமாம்.

அது ஒரு பாரம்பரிய கதையின் அமைப்பே. ஒரு கழுதை உழைத்து ஓய்ந்துவிட்டது. வயோதியம் வந்து விட்டது. அதன் எஜமான் அதை வீட்டை விட்டே துரத்த திட்டம் போட்டார். இதை உணர்ந்த கழுதை தானாகவே வீட்டை விட்டு நீண்ட தூரம் போய்விட்டது. இனிமேல் வாழ்க்கையில் உடலால் உழைக்க முடியாது, அதனால் BREMEN நகர் போய் அங்கு நகர பாடகனாக வாழலாம் என முடிவெடுத்தது.

வழியிலே நாய் ஒன்று ஊளையிட்டு அழுத வண்ணம் நின்றது. அதைக் கண்ட கழுதை “ஏன் கிழவா அழுகிறாய்” என வினவ, நாயும், எனது வயதோ இனிமேல் எஜமானுடன் வேட்டைக்கு போகும் நிலையில் இல்லை. தள்ளாமை அடைந்துவிட்டேன் எஜமானர் என்னை துப்பாக்கியால் சுட்டு தொலைத்து விடுவதென மனைவியிடம் கூறியதை கேட்டேன். இதனால் வீட்டை விட்டு ஓடி வருகிறேன். ஆனால் மேலே என்ன செய்வது? கழுதை கனைத்து கொண்டே வா நாம் BREMEN நகர் போவோம் அங்கு பாடகராக எஞ்சிய காலத்தை கழிக்கலாம் என்றது. இதை நாயும் நல்ல யோசனை எனக்கொண்டு கழுதையை தொடர்ந்தது.

தெரு ஓரத்திலே பூனை ஒன்று சோகமே உருவாக அமர்ந்திருந்தது. “ஏய் மீசை எதற்காக உம் என்று உட்கார்ந்திருக்கிறாய், ஏதாவது கவலையா?” என கழுதை வினவ, “எனது உயிரே போக போகிறது, கவலைப்படாமல் இருக்கமுடியுமா? எனக்கு வயதாகிவிட்டது ஓடி எலி பிடிக்க முடியவில்லை. வீட்டிலே எலித்தொல்லை அதிகமாகி விட்டதால் எஜமானி என்னை குளத்திலே அமிழ்த்தி கொன்றுவிட முடிவு செய்து விட்டார். நான் அசுகை தெரியாது ஓடி வந்து விட்டேன். இனி என்ன செய்வேன் எங்கு போவேன்? என அழுதது. 

“நீ இரவு பாடகர் பற்றி கேள்விப்பட்டது இல்லையா”, நாம் மூவரும் சேர்ந்து கோஸ்டி கானம் பாடினால் BREMEN மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் அதனால் தான் நாம் போகிறோம். நீயும் எம்முடன் வா” என்றது கழுதை. தனது பிரகாசமான எதிர்காலத்தை கற்பனை செய்த வண்ணம் பூனை அவர்களை தொடர்ந்தது.

நேரம் மதியம் 2 மணியாகிவிட்டது. மூன்று மிருகங்களும் ஒரு கிராமத்தை அடைந்தன. அங்கே ஒரு சேவல் மரத்தின் மேல் கூவியவண்ணம் நின்றது. கழுதையோ, “என்ன கிழவா மூளை பேதலித்து விட்டதா” நேரம் கெட்ட நேரத்தில் கூவுகிறாயே” என் வினவ சேவலோ “மாலை என்னை கொல்ல ப்போகிறாள் வீட்டுக்காரி” வீட்டிற்கு விருந்தாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு என்னை கொன்று சூப் சமைக்க போகிறாள். அதற்கு முன் முடிந்தமட்டும் உரக்க கூவுகிறேன்” என்றது சேவல். கழுதையோ “நீ பயப்படாதே எம்முடன் இணைந்து விடு. நாம் BREMEN நகரம் போகிறோம் அங்கு நாம் இரவுப் பாடகராக வாழ்வை நடத்தப்போகிறோம். உனக்கும் அருமையான குரல் வழம் உண்டு. நீயும் இணைந்தால் நாம் மிக பிரபலமான இசை குழுவாகி விடுவோம் என்றது.

இரவு நேரம் ஆகியதால் யாவருக்கும் நல்ல தூக்கம். கண்ணை சுழட்டியது. நல்ல காட்டு பிராந்தியம் கழுதையும் நாயும் மரத்தின் கீழ் உடலை சாய்த்தன. பூனை மரக்கிளையில் போய் படுக்க சேவல் மரத்தின் உச்சியில் தூங்க போனது. தூங்க போகமுன் சேவல் நாலாபுறமும் பார்த்தது. தொலை தூரத்திலே வெளிச்சம் தெரிந்தது. சேவல் தனது தோழரிடம் தொலை தூரத்திலே வெளிச்சம் தெரிகிறது. அங்கு ஒரு வீடு இருக்கவேண்டும் என கூறியது.

கழுதை உடனே அங்கே போவோம். இது தூங்க வசதியான இடம் அல்ல என யாவரும் ஒளிவரும் திசையில் நடத்தனர். அவர்கள் ஒளி நிறைந்த வீட்டை அடைந்தனர். யாவரிலும் உயரமான கழுதை ஜன்னல் வழியால் நோக்கியது. என்ன அங்கே தெரிகிறது என மற்றவர் வினவினர்.

அங்கே மேசையில் நல்ல உணவுகள் தெரிகிறது. அதை சுற்றி நால்வர் உணவருந்துகிறார்கள் என்றது. நான்கு மிருகங்கட்கும் நல்ல பசி எப்படியாவது அந்த உணவை அடைந்துவிட வேண்டும என திட்டம் தீட்டினர்.

கழுதை முன்னங்கால்களை ஜன்னல் மேல் வைத்து நிற்க நாய் அதன் முதுகில் பாய்ந்தேறியது. நாயின் மேலே பூனை குதித்து தாவி ஏறியது. சேவல் பறந்து பூனையின் முதுகில் ஏறியது. யாவும் சேர்ந்து கத்த தொடங்கின. பின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தன. அங்கு அமர்ந்திருந்த 4 கொள்ளைகாரரும் பேய் வந்துவிட்டது என பயந்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர். உணவை நன்றாக உண்டு விட்டு கழுதை உரம் இருந்த இடத்தில் படுத்தது. நாய் கதவோரமாக சுருண்டது. பூனை சூடாக இருந்த அடுப்பு முன் தூங்கியது. சேவல் வழமை போல் கூரையை தேடி போனது.

நிறைந்த செல்வத்தை விட்டு ஓடிய கொள்ளைக்காரரில் ஒருவன், அங்கு வந்தது பேயோ பிசாசோ அல்ல எமது பிரமையே என மற்றவரிடம் கூறி நான் போய் பார்த்து வருகிறேன் என அங்கு சென்றான்.

விளக்கை எடுப்பதற்கு அவன் அடுப்பின் அருகே போனான். அவன் வருவதை தனது கூர்மையான கண்களால் கண்ட பூனை பாய்ந்து அவனது முகத்தை பிறாண்டியது. கொள்ளைக்காரன் பயந்து வாசலை நோக்கி ஓட நாய் பாய்ந்து அவனது கால்களை நல்லாகவே பதம் பார்த்தது.

அவன் வெளியே ஓடிய போது கழுதை தன் பின்னங்காலால் நல்ல உதை கொடுத்தது. அரவம் கேட்ட சேவல் பறந்து வந்து அவன் தலையில் அமர்ந்து கண்களை கொத்தோ கொத்தென. கொத்த அவன் வேகமாக ஓடியே விட்டான்.

தனது சகாக்களிடம் சென்று அங்கு பெரிய பிசாசே வந்துவிட்டது என கூறினான். நாம் அரண்மனையில் இருந்து கொள்ளையடித்த தங்கம் பொன் நவரத்தினம் எதுவும் கிடையாததை இட்டு அவர்கள் கவலைப்பட்டனர்.

அந்த வீட்டில் இருக்கும் உணவை கொண்டு வாழமுடியாது என உணர்ந்த மிருகங்கள் தமது லட்சியத்தின் படி இரவு பாடகராக முடிவுசெய்தனர். இரவிலே நால்வருமாக தமது கர்னகடூர குரல்களால் பயிற்சியை ஆரம்பித்தனர். இரண்டே நாளில் அவர்கள் கூட்டிசை கிராமத்தை கலவர படுத்தியது. பயந்த கிராமவாசிகள் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.

காவலாளிகள் என்ன நடக்கிறது என பார்க்க அந்த வீட்டில் புகுந்தனர். அங்கு கொள்ளைபோன அரண்மனை செல்வங்களை கண்டனர். அரசனிடம் அறிவித்தனர். அரசனோ தனது செல்வங்களை மீட்டது அந்த நான்கு பிராணிகளும் என எண்ணி அவற்றை அரன்மனையின் அதி கௌரவ செல்ல பிராணிகளாக்கினார்.

இத்தகைய ஒரு வேடிக்கை கதையை கொண்டது BREMEN நகரம். அதனாலேயே அங்கு ஒரு சிற்பி அந்த நான்கு பிராணிகளையும் சிலையாக வடித்துள்ளான். அதை காணும் யாவரும் அந்த அருமையான கதையையும் கேட்டு இரசிப்பர்.

அந்த கதையின் பின்னணியில் வீட்டுக்கு உதவிய பிராணிகள் முதுமை அடைந்ததும், அவற்றுக்கு நடக்கும் பரிதாப முடிவையும் காட்டுகிறது. மிருகங்களுக்கு இருக்கும் நன்றி உணர்வும் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு இல்லையா? அல்லது அவனது ஆறாவது அறிவான பகுத்து உணரும் புத்தி க்கூர்மைதானா இது?

No comments: