இலங்கைச் செய்திகள்

* வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ்

* பாதுகாப்புச் செயலாளர் உட்பட 12 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

* கிளிநொச்சி தொழிநுட்பக் கல்லூரிக் கட்டடங்கள் இரவோடிரவாக உடைப்பு



வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


2009 ஜனவரி 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரையில் 4ஆயிரத்து 164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற பொதுமக்கள் இழப்புக் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பகிர்ந்துகொள்ளவில்லை என விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 33 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெப்ரவரி மார்ச் மாதங்களில் இந்த எண்ணிக்கை 63 வரையில் உயர்வடைந்ததாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 எனவும், பெப்ரவரியில் இந்த எண்ணிக்கை 145ஆகவும், மார்ச்சில் அந்த எண்ணிக்கை 115 ஆகவும் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மருத்துவர்கள், மதகுருமார், உதவி அரசாங்க அதிபர்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கடமையாற்றிய 213 உள்நாட்டு பணியாளர்கள் போன்ற தரப்பினரிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல்களைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவை நம்பகமானவை எனவும் ரொபர்ட் ஓ பிளக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு கரையோரப் பகுதி வழியான இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் அறிவித்த பெப்ரவரி 12ஆம் திகதி வரையில் 2452 பேர் கொல்லப்பட்டதுடன், 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

யுத்த சூன்ய வலயங்களின் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

தேவாயலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 400 சிறுவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமான முறையில் படையில் இணைத்துக் கொண்டதாக ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

நன்றி வீரகேசரி

பாதுகாப்புச் செயலாளர் உட்பட 12 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்


22 /9/2011
"கிறீஸ் பூதம்' அல்லது மர்ம மனிதர்களின் ஊடுருவலையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதி மக்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கிறீஸ் பிசாசு என்ற தோற்றப்பாட்டினை தொடர்ந்து நாவாந்துறையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதி வாழ் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இருதயநாதன் வீனஸ் றெஜி மற்றும் வில்பிரட் அப்பா ஹில்டா ஆகியோர் சட்டத்தரணி மோஹான் பாலேந்திரா மூலம் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், பெண் பொலிஸ் அதிகாரி நதீகா, சட்டமா அதிபர் உட்பட 12 பேர் பிரதிவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

கிறீஸ் பூதம் மீதான குறிப்பிடப்படும் இனந்தெரியாதவர்களினால் வடக்கிலும் இலங்கையின் வேறு பிரதேசங்களிலும் சாதாரண மக்கள் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இது மக்கள் மத்தியில் பயப் பிராந்தியை தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் பல நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த கிறீஸ் பூதம் என்ற தோற்றப்பாட்டின் பின்னணியில் முக்கியமாக அரசாங்க அதிகாரிகள், கிறீஸ் பூதம் தொடர்பான செய்திகள் பொய்யானவை எனக் கூறியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளுடன் மக்கள் விளையாடக் கூடாது எனக் கூறியதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

"கிறீஸ் பூதத்தின்' தோற்றப்பாட்டுடன் தொடர்புபட்ட நிகழ்ச்சிகளின் பின், தான் ஆகஸ்ட் 22 ஆம் திகதி இரவு 9 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு எழுந்ததாகவும் 40 50 வரையிலான மக்கள் நாலு சந்தி இராணுவச் சாவடியிலிருந்து நாவாந்துறை சந்தி நோக்கிப் பெரும் ஆரவாரப்பட்டுக் கொண்டு சென்றதாகவும் மனுதாரர் ஒருவர் மனுவில் கூறியுள்ளார்.

அவரது மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ""இரவு 11.30 மணியளவில் தனது வீட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டி உள்ளேயிருப்போரை வெளியில் வருமாறு அழைத்தார்.

பின்னர் இராணுவத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து என்னையும் தனது சகோதரியின் கணவனையும் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றனர். எம்மை குழாய்கள், இரும்புக் கோல்கள், தடிகளால் தாக்கினர். பின்னர் எம்மை, நாவாந்துறை சந்தை சந்திக்கு கொண்டு வந்து அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் சேர்த்து விட்டு கண்டபடி தாக்கினர். ஏனைய சிலருடன், என்னையும் ஜீப்பில் ஏற்றி விட்டு ஜீப்பிலிருந்த தள்ளி விட்டனர். பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான நதீகா, தனது தலையிலும், மார்பிலும் ஆணுறுப்பிலும் சப்பாத்தினால் தாக்கினார். பின்னர், எம்மை பஸ்ஸில் ஏற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சிங்களத்தில் எழுதப்பட்ட ஏதோ ஒரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கினர். அடுத்த நாள், எம்மை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டேன்.

சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடச் செய்ததன் மூலம் எனது மொழியுரிமை மறுக்கப்பட்டது. சித்திரவதைக்கு உட்படாமல் இருக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமத்துவத்துக்கான உரிமை, சம பாதுகாப்புக்கான உரிமை, எழுந்தமானமாக கைது செய்யப்படாமல் இருக்கும் உரிமை ஆகியன எனக்கு பிரதிவாதிகளால் மறுக்கப்பட்டன.

இதன்படி, யாப்பின் உறுப்புரை 22 (1), 22 (2) ஆகியவற்றால் உறுதி செய்யப்பட்ட மொழியுரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டுள்ளன' என்று அவர் அந்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

கிளிநொச்சி தொழிநுட்பக் கல்லூரிக் கட்டடங்கள் இரவோடிரவாக உடைப்பு
25/9/2011

கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரிக் காணியில் அமைந்திருந்த கட்டடங்கள் இரவோடிரவாக இடித்தகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கான கட்டடமொன்றை அமைக்கவே ஏற்கெனவே இருந்த கட்டடங்கள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் கிளிநொச்சி அரச அதிபரே அக்காணியை கையளித்திருந்ததாக அதிகார சபையின் நிர்வாகப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஏ9 வீதியோரமாக கிளிநொச்சியில் அமைந்திருந்ததே கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் வன்னியிருந்த காலப்பகுதியில் புலம் பெயர் தமிழர் உறவுகளின் உதவியுடன் சுயாதீனமாக உருவாக்கப்பட்டதே கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியாகும். கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டு இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி மையமாக இது செயற்பட்டு வந்தது. எனினும் , வன்னி யுத்த நடவடிக்கைகள் காரணமாக அதனது பெரும்பாலான செயற்பாடுகள் முடக்க நிலையை அடைந்திருந்தன.

இந் நிலையிலேயே இளைஞர் விவகாரத் திறன் விருத்தி அமைச்சு கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. சுமார் 600 பேருக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கக்கூடியதாக மூன்று மாடிக் கட்டடமொன்றை அங்கு அமைக்கப் போவதாகவும் அதற்கு ஜேர்மனிய அரசு நிதி உதவியை வழங்கியிருப்பதாகவும் தேசியபயிலுனர் தொழிற்பயிற்சி அதிகாரசபை கூறுகின்றது.

எனினும் , புதிய கட்டட அமைப்பிற்காக அங்கிருந்த பழைய கட்டடங்கள் சில இரவோடிரவாக இடித்தகற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடம் அறிவியல் நகரில் இருக்கின்றது. ஆனால் அங்கு செல்ல அவர்கள் தயாராகவில்லை. ஏற்கெனவே தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து கட்டடங்களை ஆக்கிரமித்து இருப்பதுடன் பழைய கட்டடங்களை உடைத்தகற்றி புதிய கட்டடங்களை அமைப்பது பற்றி கூறுகிறார்கள் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிறீதரன். கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தமக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளையடுத்து அங்கு நேரில் விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தியுள்ளார்.


நன்றி வீரகேசரி

No comments: