மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 10


.
                                                                               
  பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

அத்தியாயம் 10

வசைமொழிதல்


நாளாந்த வாழ்வின் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்ற நாட்டுப்பாடல்கள் மக்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் எழுந்தபோது ஏசுவதற்கும், திட்டுவதற்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சாபமிடுகின்றபோதுகூட பாட்டினாலேயே சபிக்கும் அளவுக்குக் கவிநயம் அந்தக் கடலோரத்து மண்ணிலே களிநடம் புரிந்திருக்கிறது.
வசைமொழிகளைக்கூட, இசைமொழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள் அந்தமக்கள்.
அத்தகைய பாடல்கள் சில கீழே தரப்படுகின்றன.

வெள்ளைக்காரத் துரையின் வீட்டில், வேலைக்கிருந்த உள்ளுர்க்காரன் ஒருத்தனின், நடவடிக்கையால் வெறுப்படைந்த பெண்ணெருத்தி வசைசொல்லி ஏசுகிறாள்.



பண்டி இறைச்சி தின்னி
பறங்கி வீட்ட சோறு தின்னி
பீங்கான் வழிச்சி நக்கி - உன்ர,
பெருமையாடா காட்டவந்தாய்

ஆமைதின்னி தூமைதின்னி
அடைக்கோழி முட்டைதின்னி
சங்கு வளலைதின்னி-இப்போ,
சருவாதடா என்னோட

திருமணமானவள் என்று தெரிந்தோ, தெரியாமலோ ஒரு பெண்ணின் மார்பகத்தை, மாதுளங்காய்க்கு ஒப்பிட்டு ஒருத்தன் வர்ணித்தபோது, தான் மணமானவள், ஒரு குழந்தைக்குத் தாயானவள் என்பதைப் பக்குவமாக எடுத்துரைக்கும் அதே வேளை, முறைகெட்ட அவனது செயலுக்காக அவனைச் சண்டாளன் என்று திட்டவும் செய்கிறாள் ஒருத்தி.

மாதாளங் காயுமல்ல
மருக்காலங் காயுமல்ல
பாலன் குடிக்குமென்ர
பால்முலைடா சண்டாளா

அதே போல வேறொரு சந்தர்ப்பத்தில் விதவைப் பெண்ணொருத்திமேல் விருப்பம்கொண்டு அவளைத் திருமணம் செய்யக்கேட்கும் ஒருவனிடம், தான் தனியானவளல்ல என்றும் தனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் அதனால் அவனது கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் மறுக்கும் ஒருத்தியின் வார்த்தைகளாக வருகிறது இந்தப்பாடல்.
ஒற்றை மரமெண்டா
உடன்பிறகே நான்வருவேன்
கந்து விசிறும்
கனமரம்டா சண்டாளா

கிளிபோல மனைவி இருந்தாலும், குரங்குபோல என்றாலும் வைப்பாட்டியொருத்தியைக் களவாக வைத்திருப்பது அந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் சில பெரிய புள்ளிகளின் வழக்கம். அதே வேளை இரண்டு மனைவிகளோடும் பகிரங்கமாக வாழ்பவர்களும் உண்டு. திருமணமாகி மனைவியுடன் வாழும் ஒருத்தன் இரண்டாம்தாரமாக ஒரு பெண்ணை விரும்பியபோது அந்தப் பெண் அதற்கு மறுத்துக் கூறுகிறாள் இப்படி-

தங்கத்தை அள்ளித்
தாறனெண்டு சொன்னாலும்
பொண்டாட்டிக் காறனுக்குப்
போடுவனோ முந்தானை ?

தனது மகளை மணமுடிக்க விரும்புகின்ற ஒருவனை நேரடியாகவே தாயொருத்தி கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறாள். தன் குடும்பத்தின் நிலைமைக்கு அவன் கொஞ்சமும் தகுதியற்றவன் என்பதால் ஏசுகின்றபோதுகூட கூசாமல் வார்த்தைகளைக் கொட்டுகிறாள்.

சுட்டகட்டைபோல நீ
சுடுகாட்டுப் பேய்போல
அட்டை முகறா நீ
அடுப்படிக்கும் ஆகுமாடா ?

அந்தக் காலத்திலே மட்டக்களப்புத் தமிழகத்தின் கிராமங்களிலே ஒரு வழக்கம் இருந்தது. ஒரு ஆண் தான் விரும்பிய ஒரு பெண்ணின் வீட்டிற்கு நேரடியாகவே சென்று அங்கேயே தான் இனிமேல் இருக்கப்போவதாகச் சொல்லி வீட்டுத் திண்ணையிலே அமர்ந்துவிடுவான். உடனே பெண்வீட்டுககாரர் பதைபதைத்து, அவனின் வீட்டுக்குச் சொல்லியனுப்புவார்கள். விளைவு வீட்டுக்கு வீடு வௌ;வேறு விதமாக அமையும். இரு குடும்பத்தாரும் சம்மதித்து சிருமணத்தைச் செய்து வைப்பதும் உண்டு. ஆனால் அது மிக அரிது. பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டார் பொல்லுகள், தடிகளுடன் வந்து அவனுக்கு அடிபோட்டு இழுத்துச்செல்வது அல்லது அவனை மறந்துவிட்டோம் அவன் என்னவானாலும் செய்யட்டும், இனி எங்களுக்கும் அவனுக்கும் ஒரு தொடர்புமில்லை என்று சொல்லித் தலைமுழுகிவிடுவதுதான் வழக்கம்.

இதற்கு மறுதலையாக பெண்வீட்டுக்காரரே இவனை வீட்டை விட்டுத் துரத்தியும் விடலாம். ஆனால் இது மிகவும் அரிது. ஏனென்றால், பெண்ணின் சம்மதம் அல்லது அவளின் வீட்டாரின் சம்மதம் இல்லாமல் அவ்வாறு துணிந்து யாரும் ஒரு பெண்ணின் வீட்டில் போய் அம்ர்நதிருப்பதில்லை. அவனின் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்தால் அவர்களுக்குத் தெரியாமல் பெண்ணின் பெற்றோர் இவ்வாறு அவனைத் தங்கள் வீட்டில் வந்து தங்கச்சொல்லி, மண மக்களுக்குக் கலத்தில் போட்டு அறைக்குள் விட்டுக் கதவை அடைத்துவிடுவதும் உண்டு. இவ்வாறு நடந்த பின்னர் அவனின் தாய் அந்த வீட்டுக்கு வந்து பெண்ணின் தாய்க்கு ஏசுகிறாள். இவ்வளவு வரலாறுகளையும் கூறி நிற்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

கோட்டானைக் கொம்பன்
கோடுதப்பி வந்ததென்று
சண்டாளப் பாதகத்தி சதி
நினைச்சுப் போட்டியாடி ?

காதலித்தவன் தனது இச்சையைத் தீர்த்துக்கொண்டபின் அவளை மறந்து வேறொருத்தியை மணமுடித்துவிட்டான். பின்னர் ஒரு நாள் அவனைக் காணும்போது அவன் தன்னோடு எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை தன் தோழியிடம் இப்படிக் கூறுகின்றாள்.

காற்றடிக்கத் தீப்பறக்க
கண்ணாம்பூச் சோலையிலே
சாத்திவைச்சிச் சதிசெய்த
சண்டாளன் போறானுகா

நடந்தது என்னவென்று வெளிப்படையாக உணரக்கூடியதாக இருந்தாலும், விரசமற்ற வார்த்தைகளால் அது வெளிப்படுத்தப்படுவது இந்தப் பாடலின் சிறப்பாகும்.

No comments: