அவுஸ்திரேலியாவில் விநாயகரை இழிவுபடுத்தும் விதத்திலான நாடகத்தை நடத்த ஏற்பாடு உலக இந்துக்கள் பெரும் அதிர்ச்சி

Tuesday, 20 September 2011

 Gaanapatiமெல்போர்ன்: அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இடம்பெறவுள்ள கலாசார விழாவில் இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில் ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவலால் உலகளாவிய ரீதியில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில் அக்டோபர் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா இடம்பெறவுள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக அவுஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு "தி கணேஷ் வேர்சஸ் த தேர்ட் ரெய்க்' என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. இது குறித்து விழாவிற்கான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்துக்களின் புனிதச் சின்னமான "ஸ்வஸ்திக' அடையாளத்தை ஜெர்மனியின் நாஜிக்கள் திருடி தங்கள் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினர்.அந்த அடையாளத்தை இழக்க விரும்பாத இந்துக்களின் தெய்வமான விநாயகர், ஹிட்லரை நேரில் சந்தித்து விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தக் காட்சிகள் மூலம் வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களிலும் ஹிட்லரைப் போல் தோற்றம் உடைய ஒருவர் முன் வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு யானைத் தலையை அணிந்த ஒரு குண்டான மனிதர் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விளம்பரமும் இந்துக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்து ஆர்வலர் ராஜன் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விநாயகர் கோவில்களிலும் வீடுகளிலும் வழிபடப்படுபவர். நாடகங்களில் பலரும் பார்த்து சிரிப்பதற்கான கதாபாத்திரம் அல்ல.அவர் நாஜிக்களால் சித்திரவதைக்குள்ளாவது, அவர்களுடன் விவாதிப்பது போன்ற காட்சிகள் சம்பந்தமில்லாதவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்துபவை என்று தெரிவித்துள்ளார்.

"பேக் டு பேக் தியேட்டர்' அமைப்பின் சிறப்புத் தயாரிப்பாளர் அலைஸ் நாஷ் கூறியுள்ள பதிலில், "அந்நாடகத்தில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எவ்விதக் காட்சிகளும் இடம்பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியத் தலைநகர் சிட்னியைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் உள்ளாடையில் இந்துக்களின் தெய்வமான லட்சுமியின் படத்தை அச்சிட்டுப் பின் அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்புக் கேட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்

No comments: