உலகச் செய்திகள்

* அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி, 70 பேர் காயம்

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் உடல் சிதறிப் பலி

* ஐ.நா. அங்கீகாரத்துக்கான பாலஸ்தீனத்தின் கோரிக்கை

* நேபாளத்தில் உல்லாசப் பயணிகள் விமானம் விபத்து; 19 பேர் பலி

அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி, 70 பேர் காயம்


18 / 9//2011
அமெரிக்காவில் உள்ள நெவாடாவில் விமானக் கண்காட்சி நடந்தது. அப்போது 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற விமானங்களுக்கான பந்தயம் நடந்தது. அதில் ஒரு விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அதில் விமானத்தின் உடைந்த பாகங்களின் சிதறல்கள் விழுந்ததில் விமானி உட்பட பந்தயத்தை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.


விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி ஜிம்மி லீவார்டு உள்ளிட்ட 72 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் 6 முதல் 9 மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி வீரகேசரி

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் உடல் சிதறிப் பலி


21/9/2011

ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி புரானுதின் ரபானி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் நேற்றுக் கொல்லப்பட்டார்.

இவர் 1990களில் அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். தற்போது, தலீபான்களுக்கெதிரான போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான ஆப்கானிஸ்தான் சமாதான குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

நேற்று அவர் தனது இல்லத்தில் இருந்தபோது,அங்கு வந்த தீவிரவாதியொருவர் தனது தலைப்பாகையில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ரபானி மற்றும் அவரது காவலர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவரின் இல்லம், தலைநகர் காபூலில் அதி பாதுகாப்பு மிகுந்த பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி

ஐ.நா. அங்கீகாரத்துக்கான பாலஸ்தீனத்தின் கோரிக்கை
Tuesday, 20 September 2011

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் காலஞ்சென்ற யாசிர் அரபாத் காலத்தில் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன அரசுப்பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பில் சர்வதேச அரசியல் அரங்கில் மூண்டதைப் போன்றதொரு சர்ச்சை தற்போது மூண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு (பாலஸ்தீன அதிகார சபை) ஐக்கிய நாடுகள் சபையிடம் அங்கீகாரம் கோரப் போவதாக அறிவித்திருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அந்தஸ்தில் மாத்திமே தற்போது ஐ.நா.வில் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இதற்குப் பதிலாக பாலஸ்தீனம் நாடு என்ற அந்தஸ்த்து தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரவிருக்கிறது. நாளையதினம் முதல் கூடவிருக்கும் ஐ.நா.பொதுச்சபை வருடாந்தக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை பாலஸ்தீன அதிகாரசபை எழுப்பவிருக்கிறது. இது விடயத்தில் பாலஸ்தீனம் எந்தவகையான தந்திரோபாயத்தைக் கையாளவிருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.

அரபாத் காலத்தில் ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனம் செய்யப்பட்ட பாலஸ்தீன அரசின் இறையாண்மையை இதுவரையில் 126 நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. ஆனால், மேற்குக்கரை எல்லைக்குள் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதையும் ஜெரூசலேம் முழுவதையும் ஆக்கிரமிக்க முயல்வதையும் இஸ்ரேல் நிறுத்திக் கொள்ளவில்லை. 1967 ஆம் ஆண்டுக்கு முன்னரான எல்லைகளுடன் தங்களது இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பதே பாலஸ்தீனத்தின் பிரதானமான கோரிக்கை. அல் அக்ஸா மசூதி அமைந்திருக்கும் கிழக்கு ஜெரூசலேத்தையும் தங்களிடம் தந்துவிட வேண்டும் என்றும் பாலஸ்தீனர்கள் கோருகிறார்கள். இவைதவிர மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை அப்புறப்படுத்துவது போரின் விளைவாக வெளியேறிய அகதிகளுக்குப் பிரஜாவுரிமை வழங்குவது என்று பல பிரச்சினைகள் பாலஸ்தீன நெருக்கடியில் அடங்கியிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பாலஸ்தீனத்துடன் இராஜதந்திர உறவுகளைப் பேணிவந்திருக்கின்ற போதிலும் கூட, அதன் இறையாண்மையை இதுவரை அங்கீகரிக்கவில்லை. பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேலியத் தலைவர்களும் பாலஸ்தீனத் தலைவர்களும் கடந்த வருடம் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒருவருடத்திற்குள் அரசியல் தீர்வு காணப்படுமென்று அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுதியளித்தன. மேற்குலகம் அளித்த அந்த உறுதி மொழிக்கான காலக்கெடு இந்த மாதத்துடன் முடிவடையவிருக்கும் நிலையிலேயே, ஐ.நா.விடம் அங்கீகாரத்தைக் கோருவதற்கு பாலஸ்தீனம் முடிவெடுத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் ஒருதலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைப் போன்று இத்தடவை ஐ.நா.விடம் அங்கீகாரத்தைக் கோருவதற்கு மேற்கொண்ட தீர்மானமும் மேற்குலக நாடுகளை இனிமேல் நம்பிப் பயனில்லை என்று பாலஸ்தீனத் தலைவர்கள் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் இருக்க வேண்டும்.

உலகில் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருந்தாலும் ஐ.நா.வில் அதற்கு இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் எல்லைகளை வரையறுப்பது, இராணுவத்தை அமைப்பது, ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது, சர்வதேச நீதிமன்றங்களில் முறையிடுவது போன்ற விவகாரங்களில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. ஐ.நா.வில் அங்கீகாரம் கோருவதற்கான விண்ணப்பங்கள் நேரடியாக பாதுகாப்புச் சபைக்கே அனுப்பிவைக்கப்படுவதே வழமையான நடைமுறையாகும். அடுத்து இதுதொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதற்கு பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் 9 நாடுகளின் ஆதரவு கிடைக்க வேண்டும். அத்தகையதொரு வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் அதை எதிர்த்து வீட்டோ (ரத்து) அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துவிட்டது. பாலஸ்தீன அரசுக்கான வழி ஐ.நா. ஊடாக அல்ல என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். இதை இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கடந்தவாரம் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

ஐ.நா. பொதுச்சபையில் நேரடியாக வாக்கெடுப்பு நடத்தும் படி தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டால், பாலஸ்தீனத்துக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 193 நாடுகளில் 122க்கும் அதிகமான நாடுகளின் ஆதரவு பாலஸ்தீனத்துக்குக் கிட்டுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், தங்களால் 150 நாடுகளின் ஆதரவைப் பெறமுடியுமென்று பாலஸ்தீனத் தலைவர்கள் கூறுகிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தார்மீக நிர்ப்பந்தம் பாதுகாப்புச் சபைக்கு ஏற்படும்.ஆனால் சர்வதேச அரசியலில் தார்மீகம் என்பது செல்லுபடியாகக் கூடிய ஒரு விடயமாக இல்லை என்ற யதார்த்தத்தை நாம் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்கத் தவறக்கூடாது. பாலஸ்தீன அங்கீகாரக் கோரிக்கை ஐ.நா.வில் விவாதிக்கப்படுவதே மேற்குலக நாடுகளுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும். பல்வேறு உண்மைகள் இத்தகையதொரு விவாதத்தின் மூலம் வெளிவரும் என்பதால் விவாதம் நடைபெறுவதையே தடுத்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது. ஐ.நா. பொதுச்சபையின் வருடாந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் தருவாயில் பாலஸ்தீன அங்கீகாரக் கோரிக்கை விவகாரம் முன்னிலைப்படுத்தப்படுவதால் பாலஸ்தீன நெருக்கடியில் மேற்குலகின் வேடம் இன்னொரு தடவை அம்பலமாகுவதை உலகம் காணுவதற்கு சந்தர்ப்பமொன்று ஏற்படும்!
நன்றி தினக்குரல்

நேபாளத்தில் உல்லாசப் பயணிகள் விமானம் விபத்து; 19 பேர் பலி

 25/9/2011

நேபாளத்தில் உல்லாசப்பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்று எவரஸ்ட் மலைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 19 உல்லாசப் பயணிகளும் கொல்லப்பட் டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

'த புத்த எயர் -103' என்ற குறிப்பிட்ட விமானத்தில் 10 இந்தியர்களும், மூன்று வெளிநாட்டவர்களும், மூன்று நேபாளத்தவர்களும் இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனைய மூவரும் நேபாளத்தைச் சேர்ந்த விமானப் பணியாளர் களாவார்.

நேபாள தலைநகர் காட்மண்டுவிலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள கோதாவாரி பகுதியில் கடும்மழையும், பனி மூட்டமுமாகக் காணப்பட்ட நிலையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. விமானத்திலிருந்தவர்களில் ஒருவர் உயிருடனிருந்ததாகவும் பின்னர் அவர் மருத்து வமனையில் மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீரகேசரி

No comments: