இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் இரு பாடசாலைகள் அவுஸ்திரேலிய உதவியில் புனரமைப்பு
Saturday, 13 August 2011


2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சியில் சேதமடைந்த இரண்டு பாடசாலைகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் மீளமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவமொன்றில் கிளிநொச்சி கல்வி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்தப் பாடசாலைகள் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் அவுஸ்திரேலிய அரசாங்கம், யுனிசெப் ஆகியவற்றிற்கு இடையிலான பங்களிப்புடன் 112 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.


பளை மத்திய கல்லூரி, மாசார் ஆரம்பப் பாடசாலை ஆகியவை சுமார் 2 ஆயிரம் பிள்ளைகள் கற்கக்கூடிய வகையில் தரமுயர்ந்த நவீன வசதிகளை வழங்கக் கூடியதாக மீளமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடசாலைகளை வடக்கில் நீடித்த நெருக்கடிக்குப் பின்னர் துரித கட்டுமானத் திருத்த வேலைகள் அவசியப்படும் பாடசாலைகளின் பட்டியலில் இலங்கை அரசாங்கம் சேர்த்திருந்தது.

இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கெத்தி குளுக்மன்;

கிளிநொச்சியில் வாழும் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கணிசமான பங்களிப்பை நல்க முடிந்ததையிட்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது.இந்தப் பங்களிப்பு பிராந்தியத்தின் பெரும்பாகத்திற்கு சிறந்த கல்விச்சேவையை வழங்க வாய்ப்பளிக்கிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பளை மத்திய கல்லூரிக்குள்ள முக்கியத்துவத்தை ஆராய்ந்தால் இது தெளிவாகும். யுனிசெப், அரசாங்கம் ஆகியவற்றின் பங்களிப்பின் மூலம் ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் பாரிய அளவைக் கொண்டதாக பாடசாலைகளைக் கட்டியெழுப்பினோம். இவை அடுத்து வரும் பல வருடங்களில் பிரதேசவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவையாக இருக்கும்.

பாடசாலை மாணவர்கள் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின்போது புதிய வகுப்புகளில் கல்வி பயிலக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்தப் பாடசாலையில் இன்னமும் மேலதிக வேலைகளை நிறைவேற்ற வேண்டியதாக இருக்கிறது.

யுனிசெப் பிரதிநிதி ரீஸா ஹொசைனி கருத்து வெளியிடுகையில்;

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தயாள குணத்துடன் கூடிய உதவியை வரவேற்கிறோம், இதன் மூலம் கல்வி நடவடிக்கைகள் துரிதமாகும். கல்வி என்பது தேச அபிவிருத்தியின் அடித்தளமாக இருக்கிறது. இந்தப் பாடசாலைகள் பளை மற்றும் மாசார் பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று அவர் கூறினார்.

வட மாகாணத்தில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சுமார் 23 பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அல்லது திருத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெப்பும் ஏற்படுத்திய ஒரு பில்லியன் ரூபா பங்களிப்பின் ஒரு பகுதியாகவே இந்தப் பாடசாலைகள் மீளமைக்கப்பட்டன. இந்தத் திட்டமானது 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

நன்றி தினக்குரல்

மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?


16 /8/2011
""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''

மகாகவி பாரதியாரின் கவிவரிகள் முணுமுணுக்கப்பட்ட காலம் மாறிப்போய் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் அடங்கி, அன்றாட கடமைகளைக் கூட மறந்து ஏக்கம், பயம், பதற்றம், சந்தேகம் மட்டுமன்றி ஒருவகையான மனப்பிராந்தியில் வாழவேண்டிய நிலையே நாட்டின் சில பாகங்களில் நிலவுகின்றது.

யுத்தத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டு சுறுசுறுப்பான வாழ்க்கையை ஆரம்பித்து அதில் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் "மர்ம மனிதன்' "கிறீஸ் மனிதன்" எனும் அச்சத்தினால் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் வேலைநேரத்திற்கு புறம்பாக மக்கள் மேலதிக வேலைகளை தேடியலைகின்ற இக்காலகட்டத்தில் இவ்வாறான பீதியினால் நேரகாலத்துடன் குடும்பத்தோடு வீட்டிற்குள்ளே முடங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மர்ம மனிதர்களின் அச்சத்தினாலும் சந்தேகத்தினாலும் மக்கள் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

பெண்களை கண்டால் பேயும் இரங்கும் என்பார்கள் எனினும் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கின்ற கிறீஸ் மனிதன் அன்றேல் மர்ம மனிதன் பெண்களை மட்டுமே குறிவைப்பதில் இருக்கின்ற மர்மம் என்ன? சரி, யார் இந்த கிறீஸ் மனிதன்? தான் செய்கின்ற தவறுகளிலிருந்து தப்பிப்பதற்கும் மற்றவர்களிடம் அகப்பட்டு கொள்ளாமல் இருப்பதற்காக உள்ளாடை மட்டுமே அணிந்து உடல் முழுவதும் கிறீஸ் பூசிக்கொண்டிருப்பவனே கிறீஸ் மனிதனாவான் என்று கூறப்படுகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் கிலிகொள்ளும் செயற்பாடுகளில்அவன் ஈடுபடவும் இல்லை அச்சுறுத்தவும் இல்லை என்பது வெளியாகின்ற செய்திகளிலிருந்து புலனாகின்றது.

எனினும் வெளியாகியிருக்கின்ற தகவல்களின் பிரகாரம் தங்களை தாக்கவருகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை, தொப்பி அணிந்திருப்பதுடன் சப்பாத்தும் போட்டிருக்கின்றான். சில நேரங்களில் முகத்தை மூடி கறுப்புத் துணியினால் கட்டியும் இருக்கின்றான் அப்படியாயின் அவ்வாறானவன் கிறீஸ் மனிதன் அல்ல மர்ம மனிதனேயாவான்.

மர்ம மனிதன் தனது சேஷ்டைகளை பெண்கள் மட்டும் இருக்கின்ற வீடுகளிலேயே கூடுதலாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றான். அப்படியாயின் அந்த மர்ம மனிதன் வெளியிடத்திலிருந்து வந்தவனாக இருக்கமுடியாது. குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களினால் மட்டுமே இவ்வாறு அச்சுறுத்த முடியும்.

தாக்குதல், அச்சுறுத்தல், பீதியை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் சில இடங்களில் வதந்திகளே பரப்பிவிடப்படுகின்றன. இதனால் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போலவே மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மர்ம மனிதர்களின் நடமாட்டம் எனும் போர்வையில் சிற்சில இடங்களில் தனிப்பட்ட குரோதமும் தீர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களை அச்சத்தின் பீதியில் வைத்திருப்பதற்கும் சிந்திக்காது விடுவதற்கும் இவ்வாறான புரளிகள் கிளப்பிவிடுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் , ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவிருக்கின்ற நிலையிலும் இவ்வாறான பயப்பீதி நாட்டின் கல்வி வளர்ச்சியில் சற்றேனும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் தனது சேஷ்டையை புரிந்த மர்ம மனிதன் வயது முதிர்ந்த எட்டு பெண்களை கொன்றொழித்தான். இதனால் இரத்தினபுரியில் மட்டுமின்றி முழு நாட்டிலும் பெரும் பீதி ஏற்பட்டிருந்தது. மக்களின் எதிர்ப்பலைகள் வெகுவாக அதிகரித்தன. நிலைமையை புரிந்து கொண்ட அரசாங்கம் விசேட அதிரடிப்படையினரை காவலுக்கு அனுப்பி இரண்டொருவரை கைது செய்தது.

மர்ம மனிதன் "காட்டுப்படை அணியை'' சேர்ந்தவன் என்றும் படையிலிருந்து தப்பியோடியவர்கள் என்றும் பரவலாக கருத்துக்கள் வெளியான போதிலும் மனநோயால் பாதிக்கப்பட்ட சிலரையே பொலிஸார் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தில் கைது செய்து பின்னர் விடுவித்தும் இருக்கின்றனர்.

இரத்தினபுரியில் தனது சேஷ்டையை ஆரம்பித்த மர்ம மனிதன் வடக்கு, தெற்கு மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் இன்றேல் இடங்களில் தனது மர்ம செயலை காட்டவில்லை இது ஏன்? என்ற சந்தேகமும் வலுப்பெறுகின்றது. எனினும் மர்ம மனிதனின் சேஷ்டைகள் மலையகத்தில் பொதுவாக பெருந்தோட்டப் புறங்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

முகத்திற்கு திரவத்தை வீசுதல், தலைமுடியை கத்திரித்தல், வருமாறு பற்றைக்காடுகளில் ஒழிந்திந்து கொண்டு பெண்களை கூப்பிடுதல், பெண்கள் கொழுந்து பறிக்கும் இடங்களில் மரங்களிலிருந்து விறு விறுவென்று இறங்கி அச்சுறுத்தல் போன்ற செய்திகளே அன்றாடம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதேபோன்று மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் செய்தியாகவே இடம்பிடித்துக் கொள்வதற்கு தவறவில்லை. எனினும் அதற்கு பின்னர் சட்டரீதியாக பொலிஸா ரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை.

இதனால் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் மோதிக் கொண்டும் உள்ளனர். சட்டத்தை மக்கள் கையிலெடுக்க முடியாது. எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் காரணமாகவே சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு தாம் கோரி நிற்பதாக மக்கள் விளக்கமளிக்கின்றனர்.

இந்நிலையில் அப்புத்தளை தொட்டுலாகலை தோட்டத்தில் நடமாடிய மர்ம
மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் இருவரும் படுகாயமடைந்து பலியாகியுள்ளனர். மர்ம மனிதனின் நடமாட்டம் என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டே இவ்விருவரும் பெண்களை பயமுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு உயிரையே இழந்துள்ளனர்.

மர்ம மனிதன் விவகாரத்தில் பொலிஸ் தரப்பு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் இவ்வாறான மனித உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்பது மட்டுமன்றி தங்களுடைய சொந்த இடங்களிளுக்கு வெளியே கடமையாற்றுபவர்கள் இரவில் மட்டுமன்றி பகல்வேளைகளிலும் கூட தங்களுடைய வீடுகளுக்கு செல்வதற்கு அஞ்சும் அளவிற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தியுள்ளான் அல்லது வதந்தியினால் மக்கள் அஞ்சியுள்ளனர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களை புரிந்து விட்டு தலைமறைவாக வாழ்கின்ற குற்றவாளிகளை பொலிஸாரினால் கைது செய்ய முடியுமாயின் மர்ம நபர்களை மட்டும் ஏன் கைது செய்ய முடியாது? என்ற கேள்வி எழும்பத்தான் செய்கின்றது.

ஒவ்வொரு கிராமங்களிலும் இன்றேல் பெருந்தோட்டங்களிலும் இரண்டொரு பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டால் பொது மக்களின் ஒத்துழைப்புடன் மர்ம மனிதனை கைது செய்வது கடினமான விடயமாக இருக்காது என்பது பலரினதும் அபிப்பிராயமாகும்.

மர்ம மனிதனின் அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க மர்ம மனிதன், கிறீஸ் மனிதனின் பெயரை பயன்படுத்தி சிலர் தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தியும் வருகின்றனர். பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளின் கதவுகளை தட்டி தங்களுடைய இச்சைகளை தீர்த்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளனர்.

பெருந்தோட்டங்களை பொறுத்தவரையில் தோட்டங்களுக்குள் வியாபாரத்தில் ஈடுபடும் வெளியிடங்களைச் சேர்ந்த நடமாடும் வியாபாரிகள் இவ்வாறான அச்சுறுத்தலில் ஈடுபடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பகல் வேளைகளில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் பெண்கள் மட்டுமே வாழ்கின்ற குடும்பத்தை இனங்கண்டு கொண்டு இரவு வேளைகளில் அச்சுறுத்துவதாகவும் அறிய முடிகின்றது. இதற்கு மத்தியில் சிலர் கையில் கிடைத்த எதனையாவது சூறையாடிக்கொள்வோம் என்ற நோக்கில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதற்றம்மிகுந்த சூழ்நிலையில் பொலிஸாரின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே மலையகத்திற்குள் கடமையில் ஈடுபடுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினர் அனுமதிக்கப்பட்டனர்.

ஓர் சம்பவம் இடம்பெறுகின்ற போது பொலிஸாரின் மீது குற்றஞ்சாட்டி அதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதன் பின்னரே இராணுவமோ அல்லது இதர படைகளோ மேலதிக பாதுகாப்பிற்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், மலையகத்தில் ஒரே இரவுக்குள் விசேட அதிரடிப்படையினர் கடமைக்கு அழைக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன.

விசேட அதிரடிப்படையினரால் மட்டும் தான் மர்ம மனிதனை பிடிக்க முடியும் என்றால் விசேட அதிரடிப்படையினரின் தளமாக இருக்கின்ற கிழக்கில் உலாவுகின்ற மர்ம மனிதனை அவ் விசேட அதிரடிப்படையினரால் ஏன் கைது செய்ய முடியவில்லை, அங்கு மர்ம மனிதனின் சேஷ்டையை ஏன் அப்படையினரால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

கிழக்கிலிருந்து விசேட அதிரடிப்படையினரை முழுமையாக விலக்கிக்கொண்டு வடக்கைப் போன்று கிழக்கிலும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தி மலையகத்தை விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்து அதாவது சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழ்கின்ற பகுதிகளை படையினரின் கீழ் கொண்டுவருவதற்காக வகுக்கப்பட்ட முயற்சியா? என்பது விøடகாணப்படாத வினாவாகும்.

இல்லையேல் பெருந்தோட்ட தொழில்துறை மீது அதிருப்தி கொண்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொழில்புரியும் இளைஞர்கள் மற்றும் குடும்பத் தலைவனை மீண்டும் தோட்டத்திற்குள் வரவழைத்தால் தான் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற வியூகத்தில் தொழிற்சங்கங்களினால் மர்ம மனிதன் ஏவி விடப்பட்டானா? என்பது மற்றுமொரு வினாவாகும்.

மர்ம மனிதனின் நடமாட்டம், சேஷ்டை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் பல்வேறு வினாக்கள் எழும்பியிருந்தாலும் எதிர்க்கட்சிகளின் பார்வையில் அவை வேறுவிதமாகவே தென்பட்டன. அவசரகாலச் சட்டத்தினை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போது அவசரகாலச்சட்டத்தை ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்காக அரசினால் ஏவி விடப்பட்ட மர்ம மனிதன் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வும் துட்டகைமுனு மன்னனின் பெறுமதிமிக்க "வாள்' "கிரீடம்" ஆகியவற்றை கண்டு பிடித்து நேர்த்திக்கடன் செய்துகொள்வதற்காவே மர்ம மனிதன் மக்களை அச்சுறுத்தி அவற்றை தேடி வருவதாக ஜனநாயக தேசியக்கூட்டணியும் தெரிவித்திருந்தன.

எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படுகின்ற சாதாரண குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் முண்டியடித்துக்கொண்டு பதிலளிக்கின்ற ஆளும் தரப்பினர் கிறீஸ் மனிதன் இன்றேல் மர்ம மனிதனின் அடாவடித்தன குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காது மௌனிகளாகவே இருந்து விட்டனர். இந்நிலையிலேயே ஆளும் தரப்பு எம்.பி.யான வீ. இராதாகிருஷ்ணன் கிறீஸ் மனிதனின் பீதியில் மலையகத்திற்குள் படையினரை கொண்டுவர அரசியல் வாதிகள் முயற்சிப்பதாகவும் அது வடக்கில் ஏற்படுத்திய துயரத்தை மலையகத்திலும் ஏற்படுத்திவிடுமென எதிர்வு கூறியிருந்தார்.

அரசாங்கத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டும் மக்களை அச்சத்தில் உறைய வைப்பது ஏன்? என்பதெல்லாம் எதிர்காலம் பதிலளிக்கவேண்டிய கேள்வியாகும்.

எது எப்படியோ மர்ம மனிதன் மலையகத்தில் விசேட அதிரடிப்படையை ஊடுருவுவதற்கு வழிவகுத்துவிட்டான் அதற்கு மலையக கட்சிகளும் இடமளித்து விட்டன என்பது மட்டும் திண்ணம். மர்ம மனிதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அவதானத்துடனும் விழிப்போடும் இருந்தால் போதுமானதாக இருக்கும் என்பது மட்டுமே நிதர்சனம்.

மர்ம மனிதர்கள் தொடர்பாக உங்களிடம் உள்ள செய்திகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

நன்றி வீரகேசரி

யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம்17/8/2011
யாழ்.மாவட்டத்தில் இளவயது கர்ப்பந்தரித்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த மாவட்டத்தின் சுகாதாரப் பணிமனை தெரிவிக்கிறது.

யாழ். குடாநாட்டில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் 211 இள வயதினரும்; திருமணமாகாத பெண்கள் 69 பேரும் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த ஐந்து மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இத்தகவலை வீரகேசரி இணையத்தள செய்திப்பிரிவினருக்கு உறுதிப்படுத்திய யாழ். மாவட்ட சுகாதார பணிமனையின் தாய்சேய் நல வைத்திய அதிகாரி திருமதி.தி.சிவசங்கர், கலாசார சீர்கேடுகள் குறித்து தமது கவலையையும் வெளியிட்டார்.

நன்றி வீரகேசரி


முல்லைத்தீவு மருத்துவமனை விடுதிக்கட்டட திறப்பு விழா


18/8/2011
ஹமர் போறம் ஜேர்மன் நிறுவன அனுசரணையில் யூன்.ஒ.பி.எஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மருத்துவமனை விடுதிக் கட்டிடத் தொகுதி திறப்புவிழா மற்றும் தளபாட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 15-08-2011 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜேர்மனிய நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் ஏக்ஷனட் புளோர்; வடமாகாணத்திற்கான சுகாதார மற்றும் சுதேச மருத்துவ பணிப்பாளர் ரவீந்திரன் ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்கல் ஸ்தாபன இயக்குனர் பிரான்ஸ் வெயஸ் ஜெக்கப் டாக்டர்; அகிலன், டாக்டர்; ஜெயகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி


வடக்கு,கிழக்கில் யுத்தம் இயற்கை அனர்த்தங்களால் 59,601 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்
Monday, 15 August 2011

வடகிழக்கு மாகாணங்களில் யுத்தம், கடல்கோள் போன்ற பல்வேறு காரணங்களினால் 59,601 பெண்கள் விததைவளாக்கப்பட்டுள்ளதாக சிறுவர்கள்,மகளிர் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


வடகிழக்கில் இவ்வாறு விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து நிவாரணங்களை வழங்கிவருகின்றது. யுத்தம் காரணமாக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் ஆயிரக்கணக்கானோர் விதவைகளாகியுள்ளதாக அமைச்சின் புள்ளவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரத்து 936 பெண்களும் கிழக்கு மாகாணத்தில் 42 ஆயிரத்து 885 பெண்களுமாக மொத்தம் 59 ஆயிரத்து 601 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விதவைகளான பெண்களுக்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சும் மகளிர் பணியகமும் முடிந்த வரை உதவிகளை வழங்கிவருகின்றது என்றும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்

யாழில் சமூக சீர்கேடுகள் கலாசாரத்தின் ஆணிவேரை அழிக்கின்றனவா? அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும் _


20/8/2011 

முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது.

ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையாடப்படும் சிறுவர் வாழ்க்கை, கயவர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருமணமாகாத பெண்கள், தென்னிலங்கை மக்களின் வருகை மற்றும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்தியுள்ள நாகரிகத் தாக்கம் என இதனை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போது அடிக்கடி சூடாகப் பேசப்படும் விடயம்தான் யாழில் கலாசார சீர்கேடு. இதன் உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள நாம் அங்குசென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆம்..! யாழ் மாவட்டத்தில் பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையான (பதின்ம வயது) பள்ளிப்பருவ இளம் பெண்கள் 211 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கர்ப்பமாகியுள்ளனர். இவர்களில் 90 வீதமானோர் பாடசாலைக்குச் செல்லும் மாணவியர். இதே காலப்பகுதியில் திருமணமாகாத 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அது தவிர 242 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 61 வீத அதிகரிப்பினை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என அறிந்துகொள்ள நாம் முயற்சித்ததுடன் இது குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி சிவசங்கர் திருமகள், வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் ஆகியோருடனும் யாழ். மாநகர முதல்வர் யோ.பற்குணராசாவுடனும் கலந்துரையாடினோம்.
சிவசங்கர் திருமகள்

தாய் சேய் நல வைத்திய அதிகாரி - யாழ். மாவட்ட சுகாதாரப் பணிமனை


"யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடத்தே நன்னடத்தை பேணப்படுவதற்கான ஒழுங்குகளை செய்துவருகிறோம். ஆயினும் பாடசாலை மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிலர் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

1. மேலதிக வகுப்புகள் எனக் கூறி இளவயதுப் பெண்கள் தவறான இடங்களுக்குச் செல்லுதல் கண்காணிக்கப்படுதல்

2. அளவுக்கதிகமான சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல்

3. பிள்ளைகளின் நண்பர்களுடைய பெற்றோருடன் உறவினைப் பேணுதல்

4. ஆசிரியர் - மாணவர் உறவில் நீண்ட விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் (ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரை தன்னுடைய பிள்ளை என நினைத்தல் அவசியம்)

5. வேலையின்றித் திரியும் இளைஞர்களின் அடாவடித்தனங்களை மட்டுப்படுத்துதல்

6. லொட்ஜ் உரிமையாளர்களுக்குரிய சட்டதிட்டங்கள் வகுக்கப்படுதல்

7. பொதுக் கட்டிடங்களுக்கு அண்மித்ததாக மதுபானசாலைகள், விடுதிகள் அமைக்கப்படுவது தொடர்பான சட்டம் முன்மொழியப்படுதல்

8. பெண்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவு உருவாக்கப்படுதல்

9. வாழ்க்கைத் தேர்ச்சி பாடசாலைகளில் உரிய முறையில் போதிக்கப்படுதல்

10. பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நடைமுறையிலிருந்து சமுதாயம் விடுபடுதல்

ஆகியவை அத்தியாவசியமானவையாகும். மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றத்தை நினைக்கையில் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமே மேலிடுகிறது. கர்ப்பம் தரித்துள்ள பள்ளி மாணவர்களை பார்த்து நான் பலதடவை கண்ணீர் வடித்திருக்கிறேன். இதனால் சட்டவிரோத கருத்தரிப்புகளும் அதிகரிக்கின்றன. திருமணம் முடித்தோரும் சட்டவிரோத கருத்தரிப்புகளை செய்துகொள்கின்றனர். இதன் பின்விளைவுகள் குறித்துத் தெரியாததால் நாளடைவில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவருகிறது. எது எவ்வாறாயினும் எங்களால் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை) இயன்றளவான செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்"

வழக்கறிஞர் பொன்.பூலோகசிங்கம்"இன்று யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற வழக்குகள் எங்களுக்கு யாழ்ப்பாண சமூகத்தினுடைய தற்போதையை நிலையை வெளிச்சமிட்டுக்காட்டுவதாக இருக்கின்றது. நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல நாங்கள் வெளிப்படையாகக் காண்கின்ற யாழ்ப்பாணத்து கட்டமைப்பு பெருமளவில் இன்று சீர்குலைந்துவிட்டது. அதற்கு ஆதாரமாக யாழ்ப்பாண குடாநாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற குற்றவியல் வழக்குகள் பெரும்பாலும் சீர்குலைந்துபோயிருக்கின்ற யாழ் சமூகத்தின் கட்டமைப்பின் மறுபக்கத்தை எங்களுக்கு காட்டுகின்றன. வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் மத்தியில் நீண்டகாலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், வாழ்வியல் அம்சங்சங்கள், வாழ்க்கையின் தேவைப்பாடுகள், இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் வித்தியாசமான தடத்தில் செல்வதாகப் பார்க்கிறேன். யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளும் பாலியல் ரீதியிலான வழக்குகளுமே முன்னிலை வகிக்கின்றன.

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் எமக்கு அனுகூலமான விடயம் அல்ல. ஏனைய மாவட்டங்களை விட பாலியல் பிரச்சினைகளில் யாழ் மாவட்டம் குறைவான புள்ளிவிபரங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருகின்றமையை நாம் சிந்திக்க வேண்டும். மிகச்சிறந்த கலாசாரப் பண்பாடுடைய தமிழ்ச் சமூகம் எனப்போற்றப்படும் எமது கலாசாரத்துக்கு இது ஆரோக்கியமாக அமையாது என்பதே எனது கருத்து"

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா"பரப்பரப்பாக பேசப்படும் விடயமாக கலாசார சீரழிவு காணப்படுகின்றது என்பதை இணையத்தளங்களினூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடகால போரின் பின்னர் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் இன்று சரி பிழைக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மையினூடாக பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் இந்நிலைக்கு இது முக்கியமான காரணம். போர்க்காலச் சூழல் முழுமையான கல்வியை வழங்கத் தவறியது. இளைஞர்களின் நிலை கட்டுங்கடங்காத வகையில் உள்ளது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கி சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நல்ல வகையில் திசை திருப்பலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடாமல் கூட்டு முயற்சியில் பொறுப்புணர்வுடன் இவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

யாழில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள் மூடிமறைக்கப்படுகின்றனவா?

ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதனை நீங்கள் வெளிப்படையாகக் கண்டுகொண்டிருக்கிறீர்கள். இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடைபெறுவதில்லை. கொழும்பில் இதனை விட சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏன் உலகளாவிய ரீதியில் இப்பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது. ஆனால் யாழில் ஒரு சிறு விடயம் ஏற்படுகின்ற போது அதனை விசுவரூபமாக பிரசாரப்படுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

இங்கு உள்ள லொட்ஜ்களில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த வகையில் உண்மை? இந்த லொட்ஜ்கள் மாநகர சபை அனுமதியுடன்தான் நடத்தப்படுகின்றனவா? எனக் கேட்டபோது...

லொட்ஜ்கள் உண்மையிலேயே எமது அனுமதியின்றித் தான் நடத்தப்படுகின்றன. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் வீடுகளே இன்று லொட்ஜ்களாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றை உண்மையான சட்ட வரைவுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்றால் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். அதே நேரதத்தில் அந்த லொட்ஜ்கள் விடுதிகளாக்கப்படுவதற்குரிய அனுமதியை சுற்றுலாத்துறையினர் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறான சட்டதிட்டங்களை நாம் செயற்படுத்தும்போது வேலைவாய்ப்பு குறித்து லொட்ஜ் நடத்துநர்கள் கவலை கொள்கிறார்கள். ஆயினும் உரிய வகையில் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்

மற்றும் ஒருசில மாணவர்கள் லொட்ஜ்களுக்கு சென்று வருவதால் ஒட்டுமொத்த பாடசாலையின் நன்மதிப்பும் கெடுகிறது. ஒருசிலர் விடும் தவறால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் கலாசாரமும் சீர்கெடுகிறது எனக் கூற முடியாது. இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்" என்றார்.

தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப்; பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு தரப்பு. இது மூடி மறைக்கப்படுமானால் நமக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டுவிடும். ஆதலால் உண்மையை வெளிப்படையாகக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இன்னொரு தரப்பு.

இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வின்மையுமே அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இந்த இழி நிலைக்குக் காரணம் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.

தென்னிலங்கையர்களின் வருகையோடு விபச்சாரத்தை தொழிலாக செய்யும் பாலியல் தொழிலாளர்களின் வருகை யாழில் அதிகரித்துள்ளமையை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் பாதுகாப்பான உறவினை மேற்கொள்கிறார்களா என்பதே இங்கு கேள்விக்குறியாகும். அதனை விட யுவதிகளும் பாடசாலை மாணவர்களும் இந்த வட்டத்துக்குள் உள்வாங்கப்படுவது கவலைக்குரியதே. இவர்கள் மூன்றாவது சக்தியினூடாக பலவந்தமாக இதற்கு ஆளாக்கப்படுகிறார்களா அல்லது தாமாகவே விரும்பி ஈடுபடுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள யாழிலுள்ள சகோதர மொழி பேசும் லொட்ஜ் உரிமையாளருடன் உரையாடினோம்.

"யாழ்ப்பாண நகரத்தில் இரவு ஏழு மணியானால் போதும் எனது கைத்தொலைபேசி அலறிக்கொண்டுதான் இருக்கும். அண்ணா ரூம் இருக்கிறதா? வரலாமா? என்று அடிக்கடி கேட்பார்கள். பாடசாலை மாணவர்கள் வருகிறார்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில் நான் அவர்களை ஏசி அனுப்பியிருக்கிறேன். மிக இளவயதுப் பெண்கள் இங்கு வந்து தாமாகவே முன்வந்து தமது அடையாள அட்டையைக் கொடுத்து பதிவுசெய்யச் சொல்வதும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் இளைஞர்கள் இங்கு சிங்களப் பெண்களை அழைத்து வருவார்கள். பணம் படைத்த பலர் அறையின் வாடகையை விட மேலதிகமாக கொடுப்பதும் உண்டு" என்றார் அவர்.

இவ்வாறு நாம் உரையாடிய லொட்ஜ்கள் பலவற்றின் உரிமையாளர்களும் இதேபோன்ற பதிலையே எமக்கு அளித்தனர்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இணையத்தளங்கள், இணைய அரட்டை, சமூக வலையமைப்புகள் உட்பட ஏனைய இணைய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் தவறான கட்டமைப்புக்குள் தாமாகவே உள்வாங்கப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய சிந்தனையோட்டம் மாறுபடுகின்றது. அதன் பின்விளைவாக பாலியல் ரீதியிpலான இயல்பான தூண்டுதலுக்கு உள்ளாகி குற்றம் புரிகின்றனர். இதற்கு உதாரணமாக தாவடிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தினைக் குறிப்பிடலாம்.

தமது சொந்த கிராமத்திலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரம் வந்த 16 வயதான யுவதிகள் இருவர் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களுடன் பாலியல் உறவுகொண்டுள்ளனர். இவ்விடயம் பெற்றோரினூடாக வழக்கு விசாரணைக்கென நீதிமன்றுக்கு வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலின் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 16 வயது அல்லது அதற்குக் கீழ்ப்பட்ட பெண்களுடன் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியிலாக தொடர்புகொண்டால் சட்டப்படி குற்றமாகும். ஆதலால் அந்த இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. எனினும் இதன் பின்புலத்தில் நவீன தொடர்பாடல் முறைகளே காரணமாக அமைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறு அடிக்கடி பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

அத்துடன் யுத்தத்தின் பின்னர் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட பாழடைந்த வீடுகளை இளைஞர்கள் தமது சட்டவிரோத தேவைகளுக்கென பயன்படுத்திக்கொள்கின்றனர். இவ்வாறான இளைஞர்களால் அப்பாவி யுவதிகள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டியமை அவசியமாகும். 2010 ஆம் ஆண்டு திருமணமாகாத கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 98 ஆக இருந்துள்ளது. இவ்வருடம்; ஐந்து மாதங்களில் மாத்திரம் 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அதேபோன்று 2010 இல் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 175 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாண்டு ஐந்து மாதங்களில் இது 242 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால் மிகப்பெரிய சமூகச் சீர்கேட்டினை எதிர்நோக்க வேண்டிய அபாயம் உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. அகன்று பரந்து விரிந்த அழகான மரம்போல் நமது சமுதாயம் காட்சியளித்தாலும் இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் எங்கோ ஒரு மூலையில் எமது ஆணிவேரை அரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனம்.

நடைமுறையைக் கவனமாக நோக்குகையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக அக்கறையாளர்கள், அரச தரப்பினர் உட்பட அனைவருமே பேதங்களின்றி இவ்விடயத்தில் ஒருமித்த மனதுடன் கைகோர்ப்பதே இன்றைய தேவையாக உள்ளது.

யாழிலிருந்து எம்.ப்ரியந்தி
படங்கள்: ஜே.எஸ்.கே

நன்றி வீரகேசரி
No comments: