மக்களை ஈர்த்த மகராசர்....! தி. ஜானகிராமன்


.



விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார்.

இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ?

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்டிவிட்டு அப்பால் கார் கூட்டத்தோடு சேர்ந்து நின்றன. 


பத்தாயிரம் பேர் கூட்டத்தின் முன் வரிசையில் ஒரு முந்நூறு பேர் ரோஜா மாலைகளும் கைகளுமாக நிற்கிறார்கள். ஒரு மொத்தமான மனிதரின் கழுத்தில் மாலையைப் போட்டு கும்பிடுகிறார்கள். பின்னே போகிறார்கள். மாலைகளுக்குள் உடல் மறைந்தது, முகம் மறைந்தது, சுமை தாங்காமல் போனதும், மொத்தமான மனிதர் மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார். பக்கத்திலிருப்பவர்களிடம் பார்க்காமலேயே கொடுக்கிறார். பக்கத்திலிருப்பவர் இன்னொருவர். மாலைகளை மூன்று அல்லது நான்காகச் சேர்த்துக் கழற்றிக் கழற்றி உதவுகிறார். இன்னொரு குழு முன்னால் வருகிறது. மாலைகளைப் போடுகிறது. மீண்டும் மாலைகளுக்குள் உடல் மறைகிறது. தோள் தாங்க முடியவில்லை. மொத்தமான மனிதர் தானாகவும், பக்கத்திலிருப்பவர்கள் உதவியுடனும் மாலைகளை எடுத்து கொடுக்கிறார். அவர் முகத்தில் மாறாத புன்னகை, கை குலுக்கல், கும்பிடுகள். சிலர் குழந்தைகளிடம் மாலையைக் கொடுத்து, குழந்தைகளையே உயரத் தூக்கி மாலைகளை அணி விக்கச் செய்கிறார்கள். போலீஸ்காரர்கள் தடியும் கையுமாகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். எம்பிஎம்பியும் குதித்துக் குதித்தும் கூட்டத்தின் நடுவில் உள்ளவர்கள் மொத்தமான மனிதரைப் பார்க்க முயலுகிறார்கள். 

மாலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. போட்ட வண்ணமும் கழன்ற வண்ணமும் இத்தனை மாலைகளையும் போட இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகுமே என்று கணக்குப் போடுகிறார் வெள்ளைக்காரர். அரைமணி ஆகிவிட்டது. அவர் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறார். படபட வென்றும் சடசட வென்றும் விறுவிறு வென்றும் கூட்டம் நகர்ந்து நகர்ந்து வேகமாக, விரைவாக, நொடிக்கொன்றாக மாலைகளைப் போட்டுவிட்டது.

'உலகம் காணும் உத்தமனே சென்று வா. '

'திருமகனே வெற்றி கொண்டு திரும்பி வா '

'அயல் நாடு காணும் ஆண்டகையே
புயல் பிரயாணம் கண்டு வா '

நாடு போற்றும் நாயகா
நீடு புகழ் பரப்பி வா. '

இப்படி நூற்றுக் கணக்கான வெவ்வேறு வகை கோஷங்கள் விமான நிலைய வெளியை நிரப்ப, போலீஸ்காரர்கள் பாதை விலக்க மக்கள் கூட்டம் முண்டி முண்டிப் பின் தொடர, மொத்தமான மனிதர், காக்கி உடை பாதுகாப்பாளர் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிவிடும் பரிசோதனையினின்றும் விலக்குப் பெற்று விமானத்தை நோக்கி நடந்தார். அவர் பின்னால் போக ஐந்தாறு பேர்தான் அனுமதிக்கப்பட்டார்கள்.

வெள்ளைக்காரரும் மற்றவர்களும் உடலைத் தடவும் பாதுகாப்பாளரிடம் உடலைக் காட்டி அனுமதி பெற்று விமானத்திற்குத் திரும்பினார்கள். அதே கோஷங்கள் விமானம் வரையில் வானைப் பிளந்தன. மொத்தமான மனிதர் உடல் முழுதும் ரோஜா இதழ்கள். கோட்டு கால் சட்டை தலை--முகம்--காது மேல் இமை தோள்--எங்கும் ரோஜா இதழ்கள். இரண்டு மாலைகளை மட்டும் கழற்ற விடாமல் அணிந்து கொண்டே இருக்குமாறு கூட்டம் வற்புறுத்திற்று.

'யார் இந்த ஜென்டில்மேன் ? ' என்று பக்கத்தில் நடந்து வருபவரிடம் கேட்டார் வெள்ளைக்காரர்.

'தெரியவில்லை யாராவது மந்திரியாக இருக்கலாம். '

'என்ன தெரியவில்லை ? இவர் ரொம்ப பெரிய வி.ஐ.பி. போலிருக்கிறதே ? ' என்று கேட்டார் வெள்ளையர்.

'அதான் சொன்னேனே. மந்திரியாக இருக்கலாம் ' என்று.

'மந்திரி என்றால் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டுமே '

'இந்த நாட்டில் பல ராஜ்யங்கள் உள்ளன. சில ராஜ்யங்களில் முப்பது நாற்பது மந்திரிகள் உண்டு. மொத்தம் கணக்குப் பார்த்தால் ஐந்நூறு மந்திரிகளுக்கு மேல் இருக்கலாம். நான் எண்ணியதில்லை. அந்தக் காலத்தில் படிப்பு முடிந்ததும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சைகள் எழுதுவதற்காக காபினெட் மந்திரிகள், ராஜ்ய மந்திரிகள், உதவி மந்திரிகள், ஏழு உலக அதிசயங்கள் ---என்றெல்லாம் பெயர்களை மனப்பாடம் பண்ணியதுண்டு. இப்போது யார் எதற்கு மந்திரி என்றெல்லாம் தெரிந்து கொள்ள நேரம் இல்லை. '

'வாஸ்தவம், இந்தியா மிகப் பெரிய நாடுதான். '

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஐயாயிரம் ஜனங்கள் போலீஸ் பந்தோ பஸ்துகளை மீறி உள்ளே திமுதிமுவென்று ஓடி வந்தார்கள்.

'செல்வமே சென்று வா '

'பாரதத்தின் திருமணீ '
வான் ரதம் ஏறிவா '

என்றெல்லாம் கூட்டம் மீண்டும் கோஷங்கள் எழுப்பிற்று. இளைஞர்கள் குரல் கம்ம, கழுத்து புடைக்க உரக்க உரக்க கோஷமிட்டனர். சில இளைஞர்கள் பூமியிலிருந்து எம்பி எம்பிக் குதித்து கோஷம் எழுப்பினார்கள்.

வெள்ளையர் படிக்கட்டில் ஏறி தன் இருக்கையில் அமர்ந்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தார். விமான நிலைய அதிகாரிகள் கூட்டத்துக்கு நல்ல வார்த்தை சொல்லி விமானம் புறப்பட வசதி செய்து கொடுக்குமாறு வேண்டிக் கொள்வதைப் பார்த்தார். கடைசியில் ஒருவழியாக மொத்தமான மனிதர் மூன்று மாலைக் கழுத்தும் மேனிமுழுதும் பூவிதழ்களுமாக உள்ளே வந்தார். விமான அழகி, வழிகாட்டி இடம் காட்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
வெள்ளையருக்கு ஆச்சரியமாகி விட்டது. அவருக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டார் மொத்தமான பிரமுகர்.

விமானம் புறப்பட்டது. தரையை விட்டு எழும்பிற்று.

'ரொம்ப அழகான மணமான ரோஜாக்கள் ' என்று பூமணத்தை முகர்ந்து பாராட்டினார் வெள்ளையர். இந்தியப் பிரமுகர் சிரித்தார். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

'நான் பசுபதிநாத். பாலிடிக்ஸில் பதிமூன்று வருஷமாக இருக்கிறேன். தேசிய உளுந்து வாரியத்தின் தலைவனாக சென்ற வாரம் நியமித்தார்கள் என்னை '

'உளுந்து ? '

'உளுந்து என்பது ஒருவகைப் பருப்பு, கறுப்பு நிறம் ' என்று ப்ரீஃப்கேஸைத் திறந்து ஏழெட்டு பொட்டலங்களைக் காண்பித்தார் பசுபதிநாத். ஒரு பொட்டலத்தை கிழித்து ஒரு தேக்கரண்டியளவு உளுந்தை வெள்ளையர் கையில் போட்டு வாயில் போட்டு மெல்லச் சொன்னார். வெள்ளையர் மென்றார்.

'மொட்டுக் மொட்டுக்.... ப்சப் சப்சப்சப் ' என்று ருசி பார்த்தார். 'ம்...குட் ' என்றார்.

'இது அப்படியே ப்ரோட்டீன்  கோழி, முட்டை, மாமிசத்தில் உள்ள புரதம் எல்லாம் இதில் உண்டு. தோசை, இட்லி, வடை, அடை, கொழுக்கட்டை என்ற பெயர்களைக் கேட்டிருக்கிறீர்களா ? '

'அப்படி என்றால் ? '

'பரவாயில்லை ' என்று உளுந்து தேன் குழல் ஒன்றை ஒரு பையை கிழித்து எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார் பத்ரிநாத்.

'கரக், கரக் கரக் கரக் ப்சப் சப்சப் ? ' என்று வெள்ளையர் ருசி பார்த்தார். 'நைஸ், தாங்க்யூ ' என்றார்.

'எங்கள் ஊரில் தென்னாட்டு சைவர்கள் வட நாட்டு வைஷ்ணவர்கள் என்ற சாகபட்சிணிகள் இதைத் தான் புரதத்துக்காக உண்பார்கள். இந்த உளுந்தை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று பார்க்கத்தான் நான் இப்போது பல மேல் நாடுகளுக்குப் பயணம் தொடங்கியிருக்கிறேன். '

'நல்லது. அதிருக்கட்டும், நீங்கள் மிகமிகப் பெரிய பிரமுகர் என்பதை அறிந்து கொண்டேன் பல்லாயிரக்கணக்கில் வந்து மக்கள் வழி அனுப்புகிறார்களே ' என்ன கூட்டம் என்ன கூட்டம் ' எத்தனை நூறு மாலைகள். '

'ஹி ஹி ஹி. என்ன பிரயோசனம் ? பதிமூன்று வருஷம் ஆச்சு, அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள. பத்து லட்சம் தேர்தலுக்கு கொடுத்தேன். ஒன் மிலியன் டாலர். இல்லாவிட்டால் இந்த உளுந்து போர்டு தலைமை கூடக் கிடைத்திராது. '
'ஓ....வாட் எ பிட்டி ' '

எட்டு மணி நேரம் இறங்காமல் பறந்தது விமானம். பிறகு இறங்கிற்று. 

இறங்குகிற வரையில் ஷாம்ப்பேன் விஸ்கி பீர் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டார் பசுபதிநாத். வெள்ளையருக்கும் உபசாரம் செய்தார். ஒரு பெக் விஸ்கி சாப்பிட்டு நன்றி கூறி விட்டுத் தூங்கினார்.

பசுபதிநாத் இன்னும் தொடர்ந்து பறக்க வேண்டும். வெள்ளைக்காரர் 'நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. ' என்று விடை பெற்றுக் கொண்டார்.
பசுபதிநாத் 'நானும் ட்ரான்ஸிட் லெளஞ்சிலிருந்தே உங்கள் நாட்டை பார்க்கிறேன் ' என்று இறங்கி கூடவே வந்தார். 

திடீரென்று 'நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பிஸினஸா. சர்க்கார் வேலையா ஒன்றும் கேட்கவில்லை. கேட்கலாம் என்றிருந்தேன். தூங்கிவிட்டீர்கள் ஸாரி. நீங்கள்.... ? '

'நான் இந்நாட்டின் உதவிப் பிரதம மந்திரி '

'ஆ ' இந்த நாட்டுக்கு உதவிப் பிரதம மந்திரியா ? '

'ரொம்ப ஆச்சரியப் படாதீர்கள். உங்கள் இந்தியாவில் எட்டில் ஒரு பங்குதான் எங்கள் நாடு. ஜனங்கள் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இராது. '

'அது சரி. நீங்கள் உதவி பிரதமர் என்கிறீர்கள்: உங்களை யாரும் வரவேற்க வரவில்லையா ? '

'அதோ என் மனைவி -- அதோ பாருங்கள் --- அப்புறம் என் செக்ரட்டரி. பக்கத்தில் நிற்கிறார் பாருங்கள் '

'போலீஸ் கீலீஸ் ஒன்றும் வர வில்லையா ? '

'போலீஸ் எதற்கு ? -- வரவேற்கவா ? '

'உங்கள் நாடு ஜனநாயகம் இல்லையா ? '

'ஜனநாயகம் தான் '

'பின்னே மக்கள் யாரும் வரவேற்க வரவில்லையா ? '

'ஜனநாயக நாடல்லவா ? அதனால்தான் யாரும் வரவேற்க வரமாட்டார்கள்.... நான் வருகிறேன். ஹாப்பி லாண்டிங்க்ஸ்... அப்புறம் மறுமடியும் ஒரு தாங்க்ஸ். உங்களோடு டிரிங்ஸ் சாப்பிடும் வாய்ப்பை அளித்ததற்கு. ஓ ' இவர் என்னுடைய பர்சனல் அஸிஸ்டண்ட் -- இவர் மிஸ்டர் பசு..... ' என்று விமானத்தின் பின்பக்கத்திலிருந்து இறங்கி பின்னால் வந்த ஒரு இளைஞனை அறிமுகப் படுத்தி விட்டு மறுபடியும் 'ஹாப்பி ' லாண்டிங்ஸ் மிஸ்டர் பசு ' சொல்லி விட்டு நடந்தார் வெள்ளையர் '

'ஜனநாயகமா.... பூ ' என்று மனதுள் சிரித்துக் கொண்டு ட்ரான்ஸிட் கூடத்துக்குள் நுழைந்தார் ' தேசீய உளுந்து வாரியத்தலைவர். 

No comments: