தமிழ் சினிமா

.
கருங்காலி


இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு இருக்கும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் கதை.

பொறுக்கி, பெண் பித்தன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம். சேரிப்பகுதியில் அனாதைகளோடு அனாதையாக வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு கஞ்சாபேர்வழியின் கையில் அந்த சிறுவர் கூட்டமே சிக்குகிறது.

அவனிடம் கஞ்சா பொட்டலம் விற்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கொலைகாரனாகவும் மாறுகிறார். அதோடு பெண்களை அனுபவிக்க வேண்டும் ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பெரிய பெண் பித்தனாகவும் இருக்கிறார். தனது கூட்டத்தில் வளரும் அஸ்மிதாவுடன் கணவன்-மனைவி போன்று வாழ்பவர் அவள் வயிற்றில் தனது குழந்தை வளர்கிறது என்பது தெரிந்ததும் அவளை சுட்டுக் கொல்கிறார் களஞ்சியம். அப்படிப்பட்டதொரு மிருக குணம் கொண்ட கேரக்டர்.

அதன்பிறகு சாலையில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு டாக்டர் பெண்ணின்(சுனிதா வர்மா) அழகில் மயங்கி அவளை இவர் காப்பாத்துகிறார். ஆனால் அந்த பெண்ணே இவரை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறாள். இதனால் அவளுக்கு கணவனாகி சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் களஞ்சியம், குழந்தையின்மை காரணமாக மனைவியிடம் சிகிச்சைக்கு வரும் அஞ்சலியை அனுபவிப்பதற்காக தொடர்கிறார். இதற்காக சில நாடகங்களை நடத்துகிறார். களஞ்சியத்தின் காமப் பிடிக்குள் அஞ்சலி சிக்கினாரா இல்லை தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.

ரவியாக நடித்த இயக்குநர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும் வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும், தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் சுத்தமாக எடுபடவில்லை.அஞ்சலியின் கணவனாக வரும் சீனிவாசன் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு நன்றாக உள்ளது.

அஞ்சலி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடிப்பில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக தனது சொந்த குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். நடிப்பில் பலபடி உயர்ந்து நிற்கிறார். சுனிதா வர்மாவை அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட சேரிப்பெண்ணாக வந்து களஞ்சியத்தையே சுற்றி சுற்றி வரும் அஸ்மிதாவின் கேரக்டர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிழலாடுகிறது. பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு போன்ற வெற்றி படங்களை தந்த மு.களஞ்சியம் முதல் முறையாக கதை நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம். பூமணி படத்தின் திரைக்கதை இன்னும் அப்படியே கண் முன்னே இருக்கிறது பதினைந்து வருடங்களுக்கு பிறகும் அந்த கதையை மறக்க முடியாது அப்படி ஒரு படம். ஆனால் பூமணி உடன் ஒப்பிடும் போது கருங்காலியின் திரைக்கதைக்கு களஞ்சியம் மெனக்கெடவில்லை என தெரிகிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம். அதிலும் அஞ்சலி, களஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு படம் தோற்றது போங்கள். 'கன்னிப்பருவத்திலே' படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம் பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால் இவ்வளவு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு அபத்தம்.

அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், 'தெய்வத்திருமகள்' கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள். ஏராளமான லாஜிக் மீறல்கள், எதையோ சொல்ல நினைத்து எங்கோ கதை சுற்றுகிறது, கடைசி இருபது நிமிடத்தில் மட்டும் விறுவிறுப்பாக உள்ளது, அந்த விறுவிறுப்பை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

நன்றி விடுப்பு
போடிநாயகனூர் கணேசன்


பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், 'தண்ணி' விற்கிற ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.

பப்ளிக்காக பன்றியை கொன்று அவ்வப்போது பெண்களையும் கொல்லும் கற்கால வில்லன். அவனிடம் அடிமைப்போல கஞ்சாவும், கள்ளச் சாராயமும் விற்கும் ஹீரோ.

வேலைக்காரன் மகன் என்னைவிட புத்திசாலியாக இருக்கக் கூடாது என்று அந்த பிஞ்சு வயசிலேயே ஹீரோ ஹரிகுமாருக்கு நஞ்சை பழக்குகிறார் வில்லன் சாய் ரவி. முதலாளியின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் சகித்துக் கொள்ளும் ஹரிகுமாரின் காதலுக்கும் சாய் ரவி குறுக்கே நிற்கிறார். ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் அருந்ததியை கடத்தி திருமணம் செய்து கொள்ளவும் முற்படுகிறார் சாய் ரவி. பொறுமை இழந்த ஹரிகுமார் வில்லன் கூட்டத்துடன் மோதுகிறார், ஜெயிப்பது யார் என்பது இறுதிக்காட்சி. 'மதுரை சம்பவம்' படத்துக்குப் பிறகு ஹரிகுமார் நடித்திருக்கும் படம். இந்தப் படத்தில் எல்லாப் பழியையும் சுமக்கும் தியாகத்திருவுரு கேரக்டர் ஹரிகுமாருக்கு. எந்த சிச்சுவேஷனுக்கும் எக்ஸ்பிரஷன் மட்டும் காட்டவே மாட்டேன் என்று அவர் அடம் பிடிப்பதுதான் சரியில்லை. பிடிவாதத்தை விடுங்க பாஸ். இவருக்கு பக்க வாத்தியமாக சூரி. கொமெடியனாக வருகிறவரின் கழுத்தில் சுருக்கு மாட்டி தொங்க விடுகிறார்கள். ஹீரோவுக்கு கோபம்வர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன... நடன இயக்குநராக இருந்து ஹீரோவானதால், ஹரிகுமாரின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கதாநாயகியாக 'வெளுத்துக்கட்டு' அருந்ததி. ஹரிக்குமார் காதலை சொன்னதும், உன்னை எல்லாம் யாரு காதலிப்பா என்று படக்கென்று முறுக்கும் போது அடடா இது நல்லாயிருக்கே என்று தோன்றுகிறது. அவரே அடுத்தக் காட்சியில் பால்ய நட்பை சொல்லி ஹரிகுமாரிடம் பம்மும் போது சப். வழக்கமான ஹீரோயின். படத்தில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவது பன்னி மேய்க்கிற அந்த வில்லன் சாய் ரவிதான். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அடிவயிற்றில் பந்து சுழல்கிறது. தனது மனைவியை காப்பாற்றுவதற்காக நண்பனின் தம்பியை காட்டிக் கொடுக்கும் சூரி, கடைசியில் தற்கொலை செய்து கொள்கிற காட்சி மனசை ரம்பம் போட்டு அறுக்கிறது. ஆரம்பத்தில் சஸ்பென்சாக செல்லும் கதையில், பிளாஷ்பேக் வரும்போது ஓரளவு விறுவிறுப்பு தெரிகிறது. என்றாலும் காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்தது போன்றே இருப்பதால் படம் தொடங்கிய ஒரு பதினைந்து நிமிடத்திலேயே போர் அடிக்கிறது. அவ்வப்போது ஒரு பாடல் இளையராஜா ஸ்டைலில் வந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக சுவராஸ்யம் எதுவும் இல்லை.

ஹரிகுமார் அடங்கிப் போவதற்கு முதலாளியின் சத்தியம், மூளை வளர்ச்சி இல்லாத சகோதரன் என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குநர். காட்சிகளுக்கான லாஜிக்கை உருவாக்குவதில் இயக்குநர் ஞானம் இன்னொரு ஹரி. பன்றி பிடிக்கும் வில்லன் நல்ல கற்பனை. பன்றியை கொல்லும் உலக்கையால் ஹரிகுமாரின் மூளை வளர்ச்சியில்லாத தம்பியை கொல்வது தேவையில்லாத காட்சி. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என்று மூன்றையும் கலந்து கொடுத்திருக்கும் இயக்குநர் ஞானம் வழக்கமான கதை என்றாலும் இன்னும் லேட்டஸ்டாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஜான்பீட்டர் பாடல்கள் பழைய ரகம் என்றாலும் கேட்க இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் சபாஷ் வாங்குகிறார். தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை நன்றாக காண்பித்துள்ளார் பிரபாகர். எடிட்டிங்கின் மூலமாக படத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.

நன்றி விடுப்பு

டூ


காதலர்களுக்குள் ஏற்படற கருத்து வேற்றுமைகள், ஊடல்கள், சின்ன சின்ன சண்டைகள், தற்காலிகப்பிரிவுகள் நிரந்தரம் அல்ல.

காதல்தான் நிரந்தரம் என்பதை சொல்லும் கதை. சஞ்சய் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவன் ப்ளஸ் டூ வரை படித்த நட்சத்திராவை ஒரு நாள் சந்திக்க நேரிடுகிறது. பள்ளியில் படிக்கும் போது அவளிடம் ஒரு நாள் அவன் காதலைச் சொல்ல அவளோ அப்போது படிப்பை காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள். இன்று படித்து நல்ல வேலையில் இருக்கும் நட்சத்திராவே சஞ்சய்யை தேடிப் போய் காதலைச் சொல்கிறாள். அப்போது உலகையே ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறான் அவன். பின்பு இருவருக்கும் சின்னச் சின்ன சண்டைகள் வருகின்றன. இந்த சண்டைகள் ஒருகட்டத்தில் ஈகோவில் போய் முடிகின்றன. இதனால் ஒரேயடியாக பிரிந்து விட்டால் தொல்லையே இல்லை என்று நினைக்கிற இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சுதந்திர பத்திரிகையாளினியாக, (Freelance Jouinalist) வரும் சங்கீதா பட் சஞ்சய்க்கு பிடித்தமானவராக ஆகிவிடுகிறார். இந்த மூவருக்குள்ளும் ஏற்படும் சுவாரசியமான விஷயங்களையும், உரசல்களையும் சொல்லி யார் யாரோடு சேர்கிறார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கியிருக்கிறார்கள்.

'முன்தினம் பார்த்தேனே' படத்தில் அறிமுகமான சஞ்சய் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தான் நெனச்ச மாதிரி தன் காதலியின் கேரக்டர் இல்லை எனும் போது இவர் சண்டை பிடிக்கும் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். முந்தைய படத்தை விட, இப்படத்தில் தன் திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரது நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகளிலும், குறிப்பாக காதலி நட்சத்திராவிற்காக ஏங்கும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். முன்னாள் நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா, தாயின் பெயரை காப்பாற்றும் அளவிற்கு நடித்திருக்கிறார். சஞ்ஜயிடம் கோபப்படும் காட்சிகள், ரசிக்கும்படியாக இருக்கிறது. நகைச்சுவையும் நளினமாக வருகிறது நட்சத்திராவுக்கு. கிச்சனுக்குள் வந்து 'இதுதான் கிச்சனா?' என்று ஊர்வசியை அதிர்ச்சியூட்டுகிறாரே, தியேட்டர் கலகலக்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் இவர் இன்னும் நடித்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

மற்றொரு நாயகியான சங்கீதா பட், இவர் வருகைக்குப் பிறகு கதை வேறு கோணத்தில் நகர்கிறது. இவரது பகுதியை இவர் நிறைவாகவே செய்திருக்கிறார். இவரையும் காதலிக்கலாமே என்று சொல்லும் அளவிற்கு நடிப்பிலும், அழகிலும் நம்மைக் கவர்கிறார். எந்நேரமும் மென்று கொண்டேயிருக்கும் ஒரு சிறுவனை காட்டுகிறார்கள். காமெடிக்காகவாம். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் தம்பி. எவ்வளவு பிரமாதமான நகைச்சுவை நடிகர்? ஆனால் வீணாக்கியிருக்கிறார்கள் மயில்சாமியை. 'லொள்ளு சபா' ஜீவா இருக்கிறார். ஆனால் நல்லவேளை, ஜெகன் இருப்பதால் சில சீன்கள் கலகல... ஊர்வசி, ராஜேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காதலர்கள் இருவரும் சீன் பை சீன் சண்டை போடுவது நம்பும்படி இல்லை. 2 சீன் காதலுடன் இருப்பது போல காட்டி 3 சீன் ஊடல் என காட்டி இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு லவ் ஃபீலே வரவில்லை. அதாவது ஜோடிகள் ஒன்று சேர வேண்டும் என்ற பரிதவிப்பு வரணுமே அது வரவேயில்லை.

இடைவேளை ட்விஸ்ட்டுக்காக வைக்கப்பட்ட காதலர்கள் பிரிவுக்காட்சியில் ஏதோ கள்ளக்கடத்தல் கோஷ்டிகள் சட்டவிரோத பார்சலை, பணத்தை எக்ஸேஞ்ச் பண்ணிக்கொள்வது போல காதலர்கள் தாங்கள் அவரவர் தந்த பரிசுப்பொருள்களை மாற்றிக்கொள்வது ரொம்பவே செயற்கை. ஓப்பனிங் சீன் காமெடி டிராக்ல ஜெகனை சிம்பு மாதிரி மிமிக்ரி காமெடி பண்ண வெச்சு சிம்பு காலை வாரியது... படம் முழுக்கவே காதல் காட்சிகளாகட்டும் கதாநாயகிகள் உலாவாகட்டும் கண்ணியமாக, குடும்ப உறவுகளோடு அமர்ந்து பார்க்கும்படி படம் ஆக்கியது... கதையுடன் ஒட்டிய காமெடி டிராக் மற்றும் வசனங்கள்... பாடல் காட்சியில் ஜப்பான் குமாரின் ரசிக்க வைக்கும் அலட்டல்கள்.. என இயக்குநரை பாராட்டும் விஷயங்களும் உண்டு. 'தம்ம விட்டுடு மச்சான்...சரக்க விட்டுடு மச்சான்...' என்று தொடங்கும் பாடலை டி.ராஜேந்தரும், 'ஒரு பார்வையாலே பூத்தது பெண்ணே' என்ற பாடலை சிம்புவும் பாடியுள்ளார்கள். 'டூடா..' பாடலுக்கு டி.ஆரின் குரல் வளத்திற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம்தான் போடுவது? ஆட்டக்காரர் சீனாவை பெண்டு நிமிர்த்துகிறது அவரது குரலும், அபிஷேக்-லாரன்சின் இசையும். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி.ஆர்.மாறவர்மனின் கொமிரா கண்கள்தான் இப்படத்திற்கு பெரிய பலம். காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்து நம் கண்களுக்கு இதமாகத் தந்திருக்கிறார்.
நன்றி  விடுப்பு

No comments: