மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 5


.
                                                                                            பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 5

கள்ளக் காதல்

கள்ளக்காதல் சம்பந்தமானவைதான் என்று தௌ;ளத்தெளிவாக உணரக்கூடிய பல்வேறு பாடல்கள் நாட்டுப்பாடல்களிலே உள்ளன. ஒருவனும், ஒருத்தியும் பெற்றோருக்கோ அல்லது மற்றோருக்கோ தெரியாமல் காதலித்தல் கள்ளக்காதல் அல்ல. காதலர் இருவர் கருத்தொருமித்துவிட்டால் அது இரகசியமாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் சரி அது நல்ல காதல்தான்.



ஆனால் அந்த இருவரும் முறையற்ற உறவுமுறை உள்ளவர்களாகவிருந்தால், அல்லது முறைகெட்ட தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டவர்களாயிருந்தால் அவர்களுக்கிடையே நிலவுகின்ற காதலே கள்ளக் காதல் என்று கொள்ளப்படுகிறது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை இந்தப் பகுதியில் சுவைக்கலாம்.

கள்ளக் காதலனைச் சந்திக்கும் ஒருத்தி, தனது கணவனை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்திவிட்டு வருவதைக் குறிப்பதுபோல ஒரு பாடல்.

கஞ்சா உதிர்த்திக்
கறிசமைத்து உண்ணவைத்து
பஞ்சுத்தலையணைமேல்
படுக்கவைத்து நான் வந்தேன்

அவள் மனதுள்குள் இப்படிப் பொருமுகிறாள்.

வாண்டதெல்லாம் இந்த
வயிற்றுக் கொடுமையினால்
இருமல் தலைவலியாம் - கிழவனிடம்
என்ன சுகம் எந்தனுக்கு

அதனால்தான் உன்னிடம் என்னைக் கொடுத்தேன் என்று கள்ளக் காதலனிடம் சொல்லுகின்றாள்.

ஆண்மைக்கரசே
அருளுக் கிருப்பிடமே
தருமத் திருவுருவே - உன்னைச்
சந்திக்க ஓடி வந்தேன்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் கள்ளக்காதல் என்று ஒன்று குறுக்கிட்டு அதிலே வீழ்ந்துவிட்டால், எவ்வளவு நல்லவனாகக் கணவன் இருந்தாலும்கூட, தவறான வழியில் தன்னோடு இணைகின்ற கள்ளக்காதலன்தான் ஒருத்தியின் மனதில் உயர்ந்தவனாகத் தென்படுவான்.

ழூ ழூ ழூ

கள்ளக் காதலின் விளைவாகக் கருத்தரித்துவிட்ட ஒருத்தியின் உள்ளக் குமறல் ஒன்று இங்கே இப்படிக் கேட்கிறது. தன் காதலனிடம் சொல்கிறாள்-


பூத்து மலர்ந்து
பூவாசங் கொண்டிருக்கேன்
பூத்த மரம் காய்க்குமென்றால்
பூவலொன்றே கைதருகும்

அவ்வாறு நடந்துவிட்டால், தன் வயிற்றிலே தங்கிவிட்ட கரு குழந்தையாக வளர்ந்துவிட்டால், பூவலிலே விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிரத் தனக்கு வேறு வழியில்லை என்று கூறுகின்றாள். அதற்கு அவனது பதில் இப்படியிருக்கிறது.

பழிகள் வந்தாலும்
பத்தெட்டிறுத்தாலும்
காப்பேனே நானும்
கவலைவிடு கண்மணியே

என்மேல் பழிச்சொல் வந்தாலும் கவலையில்லை, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நான் உன்னைக் காப்பாற்றுவேன், நீ கவலைப்படாதே என்று அவன் ஆறுதல் சொல்கின்றான். அவள் மீண்டும் தன் நிலைமையை அழுத்திக் கூறுகின்றாள்.

வந்து வழி பண்ணிடுங்கோ
வம்புக்கிடம் வையாதீங்கோ - இந்தப்
பூத்த மரம் காய்க்குமென்றால்
பூவலென்றே கை தருகும்

விடயம் வெளியில் தெரிய வருவதற்கிடையில் வந்து ஒரு |வழி பண்ணிவிடுங்கள்| என்று அவளும், அதற்காகப் பழியைத் தாங்கவும், பணம்செலவு செய்யவும் தயாராக இருப்பதாக அவனும் சொல்வதிலிருந்து இவர்களுக்கிடையே நிலவுவது கள்ளக் காதல்தான் என்பதை ஊகிக்க முடிகிறது.

ழூ ழூ ழூ


கள்ளக் காதலில்கூட, கருத்தொருமித்த காதல் மட்டுமன்றி, ஒருதலைக் காதலும் உண்டு. கல்யாணமான ஒருத்தியிடம் தனது காம இச்சையை வெளியிடும் ஒருவனின் வாய்ச்சொல்லாக வரும் இந்தப்பாடல் இதில் எந்தவகையானதாகவும் இருக்கலாம். கிராமங்களில் போடியார், வன்னியனார், விதானையார் என்றிவ்வாறு பிரமுகர்களாகவிருந்து அதிகாரம் செலுத்தி வாழ்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண குடும்பப் பெண்களிடம் சரசமாடுவதும், தங்கள் இச்சைக்குப் பணியவைப்பதும் அந்தக் காலங்களில் எல்லா இடங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பமொன்றின்போது பாடப்பட்டதாகவே இப்பாடல் தோன்றுகின்றது.

வஞ்சிக் கொடியே
மனதுமெத்த உன்னோட
பொழுது தங்கி விளையாட - உங்கட
புருசன் எங்க போனதுகா

தனது எண்ணத்தை இவ்வாறு அவன் வெளியிட்டதும், பதிலேதும் சொல்லாமப் அவள் பட்டென்று கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே போயய்விடுகிறாள். வெளியே நின்று மேலும் அவன் பாருகின்றான்.

பூட்டுப் பலமோ
புருசனுட தத்துவமோ
தாப்பாழ் பெலமோ - என்னைத்
தள்ளிவிட்டுக் கதவடைக்க

கணவன் வருகின்ற நேரமாயிற்று என்பதால் கள்ளக் காதலனை உள்ளே எடுக்காமல் கதவை அவள் மூடியிருக்கலாம். அல்லது, கள்ளக்கரதல் அவர்களிடையே இல்லையென்றால், காமநோக்கத்தால் அல்லது ஒருதலைக்காதலால் தவறான எண்ணத்தோடு தன்னை அணுகுகின்றவனில் உள்ள வெறுப்பால், கோபத்தால் அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் எண்ணத்தால் கதவைச் சாத்தியிருக்கலாம்.

மூமூமூமூமூ   மூமூமூமூமூ  மூமூமூமூமூ

என்னை என்னைப் பார்த்து நீங்க
ஏகாந்தம் பேசாதீங்க
சின்ன எசமான் கண்டால் - என்ர
சீட்டைக் கிழிச்சிடுவார்

வேலைக்காரிமேல் இச்சைகொண்ட, வீட்டுக்காரர்களில் ஒருத்தன்மேல் சீறிப்பாய முடியாத வேலைக்காரி இப்படிச் சொல்லித் தன்னைக் கத்துக்கொள்ள நினைத்தாளா? அல்லது, இடம் பொருள் பார்க்காமல் இப்படி கண்ட கண்டமாதிரிநடந்து காரியத்தைக் கெடுத்துவிடவேண்டாம், நமது விடயம் வெளியிலே தெரிந்துவிட்டால் என் வேலைக்கு வினையாகிப்போகும் என்று ஏற்கனவே கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த வேலைக்காரி தன் காதலனை எச்சரித்தாளா? இரண்டுவிதமாகவும் இந்தப்பாடலை எடுக்கலாம்.


மூமூமூமூமூ   மூமூமூமூமூ  மூமூமூமூமூ


கொட்டுகிறது மழை. வட்டையிலே அவன். கட்டுகிறான் அணை. யாரவன்? கணவனா? இல்லை! கணவனாக இருந்தால் சோவென்று பெய்யும் மழையிலும், தொடர்ந்து வரும் குளிரிலும் தன்னைத் தவிக்கவிட்டு, அவன் அங்கே வயலிலே வாய்க்கால் கட்டிக்கொண்டு நிற்பானா? என்ன செய்வது? அவன் சோர நாயகன்தானே? வெளியிலே சொல்லவும் முடியவில்லை. உணர்ச்சிகளை வெல்லவும் முடியவில்லை என்று தனக்குள்ளேயே மெல்லுகிறாள்.

இந்த மழைக்கும்
இனிவாற கூதலுக்கும் - என்
சொந்தப் புருசனெண்டா
சுணங்குவாரா வட்டையிலே !

இந்தப் பாடல் இன்னுமெரு விதமாகவும் எழுந்திருக்க இடமுண்டு. மழைக்காலத்தில், குளிர் நேரத்தில் கட்டிய மனைவியை வீட்டிலே தன்னந்தனியே தவிக்கவிட்டு, வயல்வேலை முடிந்து தாமதமாக வீடுவரும் கணவனிடம், அவனின் மனைவி  “எந்த ஒரு சொந்தப் புருசனும் இந்தக் குளிர்காலத்தில் இப்படிச் சுணங்கலாமா? ” என்று ஊடல்கொண்டு சற்றுச் சூடாக இப்படிக் கேட்கிறாள் என்றும் சொல்லலாம். எப்படி எழுந்திருந்தாலும் அற்புதமான ஒரு பாடல் இது!

No comments: