“நெஞ்சில் ஈரமுள்ள எழுத்தாளர்”;முருகபூபதியின் மணிவிழாவில் சில குறிப்புகள் - கோகிலா மகேந்திரன் - சிட்னி

.
“ பிறர் துன்பத்தைக்காணும்போது, தனது துன்பம் போல எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவரும், பிறர் துன்பத்தைக்கருதாத ஒருவரும் யாப்பிலக்கணம் படித்துக்கவிதை செய்யப்பழகுவாராயின் முந்தியவர் உண்மையான கவிதை எழுதுவார். பிந்தியவர் பதங்களைப்பின்னுவார். இப்படியேதான் ஒவ்வொன்றிலும்....” என்று பாரதி ஒரு முறை குறிப்பிட்டான்.

1972 இல் ‘கனவுகள் ஆயிரம்’ என்ற சிறுகதை மல்லிகையில் பிரசுரமானதன் மூலம் லெ. முருகபூபதி என்ற எழுத்தாளர் ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். எனது முதல் சிறுகதையும் அதே ஆண்டில்தான் வெளிவந்தது என்பது தற்செயலான ஒற்றுமை.


நாங்கள் இலக்கியப்பரப்பினுள் நுழைந்த அந்தக்காலம் மிகவும் ஆரோக்கியமானது. ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாவற்றையும் நாங்கள் படிப்போம். தற்செயலாக வீட்டில் படிக்காதுபோனாலும் பாடசாலை நூலகத்தில் தவறவிடமாட்டோம்.

நல்ல சிறுகதை அல்லது கவிதை கண்ணில் படும்போது அதைப்பாராட்டி அல்லது விமர்சித்து சக எழுத்தாளருக்கு அல்லது பிரசுரித்த பத்திரிகைக்கு ஒரு கடிதம் உடனே எழுதிவிடுவோம்.

எழுத்தாளர்கள் மட்டுமல்ல வாசகர்கள், நேயர்கள் பலரும்கூட அதைச்செய்வார்கள். வானொலியில் இசையும் கதையும் நிகழ்ச்சியில் எமது ஒரு கதை ஒலிபரப்பினால்கூட அடுத்தவாரத்தில் ஐந்து அல்லது பத்துக்கடிதங்களை எதிர்பார்க்கலாம். எழுத்தாளர் பலரும் முகம் தெரியாமலே அறிமுகம் ஆவோம். அப்படித்தான் முருகபூபதி எனக்கு அறிமுகமானார்.

அப்போது தெல்லிப்பழையில் எனது சொந்த வீட்டில் நான் வாழ்ந்தேன். (சொந்த வீட்டில் வாழ்வது என்பது மறந்துபோய்க்கனகாலம் ஆகிவிட்டபடியால் அதைச்சொல்ல நேரிடுகிறது.) எனது ஆசிரியத்தொழில் வருமானம் செலவுக்குத்தாராளம். ஆகவே, ஒய்வு நேரங்களில் அற்புதமாக இலக்கியம் செய்யவும் இலக்கிய உறவுகளை வளர்க்கவும் முடிந்தது. வாழ்வு மிக அமைதியாக எளிமையாக இருந்தது. அதிக பணம் சேர்த்தல் மட்டும்தான் வாழ்வின் இலக்கு என்று யாரும் ஓடுபட்டுத்திரியவில்லை. வாசிப்பதும், எழுதுவதும், விவாதிப்பதும் அருமையான சுகம் என்றிருந்தது அந்தக்காலம்.

1977 முதல் 1987 வரை முருகபூபதி வீரகேசரியில் முதலில் ஒப்புநோக்காளராகவும் பின்னர் ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்த காலப்பகுதியில் எனது இரண்டாவது நுலாகிய ‘முரண்பாடுகளின் அறுவடை’ என்ற சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவிற்கு நீர்கொழும்பிலிருந்து தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரிக்கு வந்திருந்தார்.

அப்போதுதான் முகம் தெரிந்த அறிமுகமாயிற்று. எனது சிறுகதைகள் சிலவும் சமகாலத்தில் எழுதத்தொடங்கிய புலோலியூர் ஆ. இரத்தினவேலோனது சிறுகதைகள் சிலவும் சேர்ந்து ‘அறிமுகவிழா’ என்ற பெயரில் வர இருந்த நூலில் ஒவ்வொரு சிறுகதைக்குமான ஒரு விமர்சனத்தையும் சேர்க்க விரும்பியிருந்தோம். 1980 ஆம் ஆண்டு ஈழநாடு வாரமலரில் புத்தாண்டு விசேட சிறுகதையாகப் பிரசுரமாகியிருந்த எனது ‘நெருடலும் ஓர் அசைவும்’ என்ற சிறுகதைக்கு முருகபூபதி எழுதிய விமர்சனத்தை அத்தொகுதியில் பிரசுரித்திருந்தோம். இவ்வாறாக இந்த இலக்கிய நட்புத்தொடர்ந்தது.

1987 இல் முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துவிடுகிறார். இந்திய அமைதி காக்கும் படையின் அகோரப்பிடியினுள் திணறிப்போய் நாங்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து இலக்கியப்பணியைத்தொடர்ந்த அவரிடமிருந்து கடிதங்கள் இடையிடையே வரும்.

யுத்தத்தில் பெற்றோரை இழந்து கல்வியைத் தொடரமுடியாத பிள்ளைகளுக்கு உதவவேண்டும் என்ற அவரது குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியில் இருந்து அவ்வாறான சில பிள்ளைகளின் விபரங்களை நான் அனுப்பியதும் அவர்கள் நிதியுதவி பெற்றதும் நல்ல பசுமையான நினைவுகளாய் இன்றும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த 24 வருடமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபக உறுப்பினரான இவர் இப்போது அதன் துணை நிதிச்செயலாளராகப் பணிபுரிகிறார்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைப்பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் தொடர்ந்து எழுதிவந்த சில எழுத்தாளர்களில் முருகபூபதி முக்கியமானவர் என்பதை மறக்க முடியாது.

சிறுகதைத்தொகுதிகள், பயணக்கட்டுரை, சிறுவர் இலக்கியம், கடித இலக்கியம், நேர்காணல், நாவல் என்று இதுவரையில் 17 இற்கும் மேற்பட்ட நூல்களை இவர் வெளியிட்டிருந்தாலும் சிறுகதை எழுத்தாளர் என்ற பெயரே இன்றுவரை ஊன்றி நிற்பதாக எனக்குப்படுகிறது.

‘சுமையின் பங்காளிகள்’ சிறுகதைத்தொகுதிக்காக 1976 இலும் ‘ பறவைகள்’ நாவலுக்காக 2002 இலும் இலங்கையில் தேசிய சாகித்திய விருதை இவர் வென்றார். அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில ஈழத்தமிழ்ச்சங்கம் 1998 இல் இவருக்கு மகத்தான இலக்கியப்பணிக்கான விருதையும் 2004 இல் மெல்பன் தமிழ்ச்சங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விருதையும் வழங்கிச்சிறப்பித்திருந்தன.

மனிதர்கள் துன்பப்படுவதைத் தொலைக்காட்சி ஊடாகத்தானும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாத ஒரு மனிதர் முருகபூபதி. 2004 இல் சுனாமி அநர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்தேன். அப்போது இவர் ஓடி ஓடி உடுதுணிகள் சேர்த்த முறையையும் அதை இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாட்டையும் அவதானித்தேன். அத்தகைய நேரங்களில்தான் முருகபூபதி அவர்களின் ஆற்றலையும் முழுமையாகத்தரிசிக்க முடியும். தானும் உணவு உறக்கமின்றி ஓடித் தன்னைச்சுற்றியுள்ள பலரையும் ஓடவைத்துக்கொண்டிருப்பார்.

இந்த இயல்பை அறிந்துதான்போலம் 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினமன்று விக்ரோரியா மாநில டெறபின் மாநகரசபை சிறந்த பிரஜைக்கான விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது.

சமூகவாழ்வில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொள்பவர்களின் வாழ்வுக்காலம் அதிகமானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தான் , தனது குடும்பம் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்வு இருப்பதை முருகபூபதி எப்போதும் மனதில் கொண்டவர் என்பதற்கு, இலங்கையில் நீர்கொழும்பு இலக்கிய வட்டம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம், இந்து இளைஞர் மன்றம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியனவும் அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் ஆகியனவும் சான்று பகரும்.

தன்னோடு எப்போதும் பலரையும் இணைத்து அணைத்துச்செல்லும் போக்கு இவரிடம் இருப்பதற்கு இவர் தொகுப்பாளராக இருந்து பதிப்பித்த உயிர்ப்பு (சிறுகதைத்தொகுதி) வானவில் (கவிதைத்தொகுப்பு) டீநiபெ யுடiஎந (ஆங்கில சிறுகதைத்தொகுதி) சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மலர், கட்டுரைக்கோவை ஆகியன சாட்சிகளாகின்றன.

பத்திரிகை ஆசிரியர் என்ற இவரது பணி, வீரகேசரியின் ஆசிரிய குழுவிலிருந்து தொடங்கி அவுஸ்திரேலியாவில் மக்கள் குரல், அவுஸ்திரேலிய முரசு, உதயம் ஆகியனவற்றின் ஆசிரிய குழுவில் நீடித்ததை அவதானிக்க முடிகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு எந்தத் தமிழ் எழுத்தாளர் வந்தாலும் அது முருகபூபதிக்குத் தெரியாமல் போகாது. “ எங்கள் வீட்டில் வந்து தங்கிச்செல்லுங்கள்” என்று அழைப்பு விடுத்து விருந்துபசாரம் செய்யவும் இவர் தவறுவதில்லை. எழுத்தாளர் விழாக்கள் நடத்துவதில் இவது பெயர் பிரபலமானது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தாபக உறுப்பினராகவிருந்து அவுஸ்திரேலியாவில் இவர் வருடந்தோறும் முன்னின்று எழுத்தாளர் விழாக்களை நடத்திவருவது அனைவரும் அறிந்தது. ஆயினும் பலரது கருத்தையும் கவனத்தையும் ஈர்த்தது இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் முன்னின்று இலங்கையில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.

இந்த மாநாட்டுக்கு எதிராக எழுந்த பலத்த விமர்சனங்கள் இவரது பெயரை உலகறியவைத்தன.

எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடிப்பார் என்ற பதிவை இந்த மாநாடு ஆழப்படுத்தியது.

ஒருவர் தனது வாழ்வில் மகன், சகோதரன், கணவன், தந்தை அயல்வீட்டுக்காரன், உறவினன் என்று பல வகிபங்குகளை ஏற்றுக்கொண்டாலும் இயல்பு ஒன்றுதான் உயர்ந்து நிற்பது. ஒன்றினால் சிறக்கும்போது மற்றயவை தாழ்ந்துவிடாது பார்த்துக்கொள்வதும் அவசியம்.

“நெஞ்சில் ஈரமுள்ள ஒரு எழுத்தாளர்” என்ற பாத்திரமே முருகபூபதி அவர்களின் வாழ்வில் விஞ்சி நிற்பதாக எவரும் இலகுவாக இனம் காண முடியும்.

இது அவருக்கு மணிவிழா ஆண்டு. தனது மணிவிழாப்பரிசாக உள்ளும் புறமும், காலங்களும் கணங்களும், சொல்ல மறந்த கதைகள் ஆகிய நூல்களை அவர் வெளியிடவிருப்பதாக அறிகின்றோம்.

முருகபூபதி தனது குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழவும் இலக்கியப்பணியில் தொடரவும் வாழ்த்துவோம்.






No comments: