மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்:13 பேர் பலி

.
13/07/2011
மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 13 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக பொலிஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.

ஜாவேரி பஜார் பகுதியில் இருந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதே போல், தாதர் பகுதியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் பொலிசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்:

மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வீரகேசரி இணையம்


மும்பை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: ப.சிதம்பரம் _

14/07/2011
மும்பை மாநகரில் நேற்று 3 இடங்களில் மாலை 6.50 மணி தொடங்கி அடுத்தடுத்த சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது அலுவலகத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில், தேசிய புலனாய்வு நிறுவனம், கறுப்பு பூனைப்படை, உளவுத்துறை, ரா ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், உள்துறை செயலாளரும் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,

6.45 மணிக்கு முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செயல், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன். மும்பையில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படை உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களை தவிர, மும்பையில் வேறு எங்கும் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

வீரகேசரி இணையம்

No comments: