உலகச் செய்திகள்

ரஷ்யாவில் சுற்றுலாப் படகு விபத்து 110 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்


12/07/2011
மத்திய ரஷ்யாவில் பழைமையான சுற்றுலாப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை மூழ்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் சுமார் 110 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் சிறுவர்களாவர்.

மொஸ்கோ நகரின் கிழக்கே சுமார் 750 கிலோமீற்றர் தொலைவில் தடாஸ்டானிலுள்ள வொல்கா ஆற்றில் மூழ்கிய இந்தப் படகில் பயணம் செய்த சுமார் 80 பேர் பிறிதொரு படகில் சென்றவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை பலரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூழ்கிய படகினுள் பல சடலங்கள் சிக்கியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதென சுழியோடிகள் தெரிவித்தனர்.

மேற்படி இருதட்டு பல்கேரியப் படகு மூழ்கியபோது அதில் குறைந்தது 199 பயணிகளும் படகு ஊழியர்களும் இருந்துள்ளனர்.

55 ஆண்டுகள் பழைமையான இந்தப் படகு பிராந்திய தலைநகரான இஸானை நோக்கிச் சென்றவேளை சீரற்ற காலநிலை, இயந்திரக் கோளாறு மற்றும் அளவுக்கதிகமான பயணிகள் என்பன காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

260 அடி நீளமான மேற்படி படகு கடற்கரையிலிருந்த பல கிலோ மீற்றர் தூரத்தில் மூழ்கியுள்ளது.

படகு மூழ்குவதற்கு முன் அப்படகிலிருந்த விளையாடுவதற்கான தளத்தில் சுமார் 30 சிறுவர்கள் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவ் உத்தரவிட்டுள்ளார்.

வீரகேசரி இணையம்


எண்ணற்ற சவால்களுடன் வாழ்வைத் தொடங்கும் புதிய தேசம் Wednesday, 13 July 2011

 சுமார் 25 இலட்சம் பேரைப் பலியெடுத்த பல தசாப்தகால இரத்தக்களரிக்குப் பிறகு உலகின் புதிய தேசமாக தென்சூடான் கடந்த சனிக்கிழமை பிறப்பெடுத்திருக்கிறது. உலகின் 193 ஆவது நாடாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெறும் 54 ஆவது ஆபிரிக்க நாடாகவும் உலக வரைபடத்தில் தென்சூடான் இடம்பிடித்திருக்கிறது. ஜூபாவைத் தலைநகராகக் கொண்ட புதிய தேசத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் தற்போது மூழ்கியிருக்கின்ற போதிலும், அவர்களின் எதிர்காலம் வேறுபட்டதொரு போராட்டமாகவே அமையப்போகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் நிருவாகத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த கொலின் பவலின் மத்தியஸ்தத்தின் விளைவாக 2005 ஆம் ஆண்டில் காட்டூமைத் தலைநகராகக் கொண்ட வட சூடானும் தென்சூடானும் ஐக்கிய நாடுகளின் அனுசரணையின் கீழ் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தென் சூடான் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். தென்சூடானை முதலில் அங்கீகரித்த நாடாக சூடான் விளங்குகிறது. 1956 ஜனவரி முதலாம் திகதி இருந்த எல்லைகளின் பிரகாரம் தென்சூடானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக சூடான் ஜனாதிபதி செயலக விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் பக்ரி ஹசன் சாலி வெள்ளிக்கிழமை மாலையில் விடுத்திருந்த அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். அதிகப் பெரும்பான்மையினராக முஸ்லிம்களைக் கொண்ட (வட) சூடானும் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென்சூடானும் 1950 களில் இனக்குரோதம், மதவேறுபாடு, கோட்பாட்டுத் தகராறு மற்றும் எண்ணெய் வளம் தொடர்பான சர்ச்சைகளினால் மூண்ட உள்நாட்டுப் போரில் ஒரு சில வருடங்களைத் தவிர இதுகாலவரை மோதிக்கொண்டே வந்திருக்கின்றன. இந்த மோதல்களில் பலியான மேற்கூறப்பட்ட தொகையினருக்குப் புறம்பாக சுமார் 40 இலட்சம் மக்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதன் விளைவாக கிழக்கு ஆபிரிக்கா உறுதிப்பாடற்ற பிராந்தியமாக மாறியது.

இத்தகையதொரு இடர்மிகு வரலாற்றைக் கொண்ட சூடான் சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தென்சூடானை அங்கீகரித்திருப்பது எதிர்காலத்தில் இரு நாடுகளும் கசப்பான கடந்த காலத்தை மறந்து சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சனிக்கிழமை தலைநகர் ஜூபாவில் இடம்பெற்ற கொண்டாட்டங்களில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் பல நாடுகளின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் கலந்துகொண்டனர். சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷீர் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டமை தெற்கிற்கான வடக்கின் நல்லெண்ணத்தைக் காட்டும் ஒரு செயற்பாடாக அமைந்திருந்த போதிலும், மேற்குலக இராஜதந்திரிகளுக்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சூடானின் டார்பர் பிராந்தியத்தில் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக பஷீர் மீது குற்றஞ்சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

தென்சூடானைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியில் ஒப்பேறுவதற்கு பயனுறுதியுடைய முயற்சிகளில் இறங்க வேண்டியதே அதன் முதன்மையானதும் மிகவும் நெருக்கடியானதுமான பணியாகும். பிறந்த தினத்தன்றே தென்சூடான் மனித அபிவிருத்திச் சுட்டெண்களைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சகல சர்வதேச நியமங்களிலும் அடிமட்டத்திலேயே இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 80 இலட்சத்துக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட புதிய தேசம் உலகிலேயே மிகவும் உயர்வான மகப்பேற்று மரண வீதத்தைக் கொண்டதாக இருக்கிறது. பெண்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் தினமொன்றுக்கு ஒரு டொலருக்கும் குறைவான செலவிலேயே தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின்மை போன்ற முக்கியமான பிரச்சினைகள் சொற்ப அனுபவத்தையும் தொடக்க நிலை நிறுவனங்களையும் கொண்ட புதிய அரசாங்கத்தினாலேயே கையாளப்படவேண்டியவையாக இருக்கின்றன. தென்சூடானின் முன்னாள் கிளர்ச்சிக் குழுவான சூடானிய மக்கள் விடுதலை இயக்கம் ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு என்ற நிலையில் இருந்து ஆளும் அரசியல் இயக்கமாக மாறியிருக்கிறது. அதன் தலைவரான சல்வா கிர் புதிய தேசத்தின் ஜனாதிபதியாக சனிக்கிழமை பதவியேற்றிருக்கிறார்.

தென் சூடானின் வருவாயில் 98 சதவீதமானவை அதன் எண்ணெய் வளத்தில் இருந்தே கிடைக்கின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எண்ணெய்க் குழாய்களும் வட சூடானிலேயே அமைந்திருப்பதால் எண்ணெய் வளத்தில் முழுமையாகத் தங்கியிருப்பதென்பது தென்சூடானைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும். எண்ணெய் வளத்தின் மூலமான வருவாயை பிரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள், எண்ணெய் வளத்தைஎடுத்துச் செல்வதற்கான செலவுகள் தொடர்பில் இரு சூடான்களும் இணக்கப்பாடொன்றுக்கு வருவதென்பது சுலபமான காரியமாகத் தெரியவில்லை. எண்ணெய் வளமிக்க அபேயி பிராந்தியத்தை எந்தத் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென்பது உட்பட 2005 சமாதான உடன்படிக்கையின் பிரதானமான அம்சங்களுக்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை. அந்தப் பிராந்தியத்தில் ஜனவரி சர்வஜன வாக்கெடுப்புக்கு பிறகு புதியமோதல்கள் மூண்டிருந்தமை இந்த விவகாரத்தில் இருக்கின்ற சிக்கலான தன்மையைப் பிரகாசமாக வெளிக்காட்டியது. சமாதான உடன்படிக்கையைக் கண்காணிப்பதற்காக சூடானில் நிலை வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் ஐ.நா. அமைதி காக்கும் படையின் ஆணைக் காலம் கடந்த சனிக்கிழமையுடன் காலாவதியான நிலையில் தென் சூடானில் 7 ஆயிரம் அமைதிகாக்கும் படையை நிலை வைப்பதற்கான தீர்மானத்தை பாதுகாப்புச் சபை அங்கீகரித்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எண்ணற்ற சவால்களுடனேயே தென் சூடான் புதிய தேசம் என்ற வகையில் அதன் வாழ்வை ஆரம்பித்திருக்கிறது!

nantri thinakkural

No comments: