சுவாமி விபுலானந்த அடிகளின் தமிழ்ப்பணிகள் - (பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

.
ஜூலை மாதம் 19 ஆம் திகதி சுவாமி விபுலானந்த அடிகளின் நினைவதினமாகும்.

மட்டுநகர் நாடு கவிமணக்கும் நாடு
மகளிர்வாய்த் தாலாட்டில் மணங்கும் நாடு
வட்டமுக முக்காட்டு மகளிர் காதல்
மகிழ்ந்து உழவர் கவிபாடும் அழகு நாடு
மெட்டுக்களில் மீன்பாடும் இசையில் எங்கள்
மெய்யெல்லாம் அமுத மழை பெய்யும் நாடு
கட்டிலிலே மாங்குயிலின் பாடல் வந்து
காதுகளைத் தொடுகின்ற கவிதை நாடு

தென்மோடி வடமோடி என்று தாளம்
சிதறாமல் நிகழ்கின்ற நாட்டுக்கூத்தில்
பண்ணோடு தமிழென்னும் கவிதை வெள்ளம்
பாய்கின்ற நாடையா மட்டு நாடு!
உண்மையை மனம்விட்டே ஒப்புக்கொள்வோம்
ஒருகோடி வாதங்கள் எதற்கு? வேண்டா
இந்நாட்டில் பிறவாத விபுலானந்தன்
இன்னெருநாட் டில்பிறக்க நியாயமில்லை!

என்று விதந்து பாடினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.


மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி எத்தனை மணிநேரம் பேசினாலும் எடுத்தியம்ப இயலாது

அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல்மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்சியாளராக, நாடகத்தமிழ் நல்லாசிரியராக நமது தாயக மண்ணிலே நற்பணிபுரிந்தவர்.

தமிழுக்காக, தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் இனத்திற்காக, இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.

சைவத்தின் காவலர்கள் என்று எழுந்தவர்கள், சாதித்துவத்தின் காவலர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை விதைத்தார்கள். மனித குலத்தின் மடமைத்தனத்தின் உச்சநிலையான வருணப் பாகுபாடுகளை வளர்த்தார்கள். ஆனால் சுவாமி விபுலானந்த அடிகளோ, மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார். சாதிப் பிரிவுகளை நீக்க உழைத்தார். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று தீயவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.

உலகத்திலேயே முதல் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பதவி வகித்திருந்த சுவாமி அவர்கள் தமது பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும்கூட அடிமட்டத் தமிழ் மக்களுக்கு கல்வியறிவூட்டுவதில் அக்கறையோடு முனைந்தார்.

தமிழ்நாட்டு மக்களிடையே கல்விமறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தன்னிகரற்ற பணிகளை ஆற்றிய சுவாமி அவர்கள். ஈழத்திலும் ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனானார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்காக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் சுவாமி அவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராகப் பணிபுரிந்தோர் அவரதுகாலத்திற்கு முன்னர் என்றாலும் சரி, அவருக்குப் பின்னர் இன்றுவரை என்றாலும் சரி யாருமே பிறந்ததுமில்லை, உயர்ந்தவராய்த் திகழ்ந்ததுமில்லை, பணியிலே சிறந்ததுமில்லை.

தமிழர்களுக்குக் கல்வியுட்டுவதிலே தளராத அவரது முயற்சியினால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். பேராசிரியர்களாக, பண்டிதமணிகளாக, புலவர்மணிகளாக உருவாகினார்கள். வாழையடி வாழையாகத் தமிழ் வளர்ச்சியின் எருவாகினார்கள். அதனால் சுவாமியவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மொழி வளர்ச்சியின் கருவாகினார்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கான பாடத்திட்டத்தினைத் தயாரித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே. அதன்மூலம் சீரியவழியில் தமிழ் ஆராய்ச்சிக்கல்வி வளர்வதற்கும், தமிழ் ஆராய்ச்சிக் கலை தொடர்வதற்கும், தமிழ்மொழியின் நிலை உயர்வதற்கும் காலாக அமைந்தவர் சுவாமிகளே.

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே.

கணிதம், வரலாறு, பொதிகவியல், தாவரவியல், விலங்கியல், இராசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத் தலைவராகவும், இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க்கலைச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் அகராதி 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்தவகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பக்காற்றிக்கொண்டிருக்கின்றது.

சுவாமி அவர்கள், இந்தியாவில் இராமகிரு~;ண மடத்தால் வெளியிடப்பட்ட வேதாந்த கேசரி என்றும் ஆங்கிலப் பத்திரிகைக்கும், இராமகிரு~;ண விஜயம் என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரால் அவ்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கங்களும் சமய உண்மைகளை விளக்குவனவாக மட்டுமன்றித் தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு என்பவற்றைப் பரப்புவனவாகவும் அமைந்திருந்தன.

தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப்பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். பாரதியாரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துவிட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில், தொட்டிகளில்கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும், பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.

பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.

படித்தவர்கள், விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள், அவருக்குப் பதவி அளித்தவர்கள்

எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?

விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல, தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டுசென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற, கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும், இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன.

வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் புவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

என்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கின்ற யாழ்நூல் விபுலானந்த அடிகளாரின் இசைத் தமிழ்ப் பணியினை இசைத்துக் கொண்டிருக்கின்றது. வழக்கொழிந்து போன பண்டைத்தமிழ் இசைநூல் இலக்கணத்தை யாழ்நூல் வகுத்துரைக்கின்றது. நூற்று மூன்று வகையான பண்களைப் பகுத்துரைக்கின்றது. மறைந்துகிடந்த தமிழிசை மரபுகளை எடுத்துரைக்கின்றது.

1947 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தினால் யாழ்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

யாழ்நூல் அரங்கேற்றம் நடைபெற்றதன்பின்னர் நாற்பத்து ஐந்து நாட்களே அடிகளார் இவ்வுலகில் வாழ்ந்தார்கள். 1947 ஆம் ஆண்டு

பதினான்கு ஆண்டுகள் அடிகளார் அவர்கள் அயராது செய்த ஆராய்ச்சியின் பலனாக தமிழ் இசையின் தொன்மையைத் தமிழ் உலகம் அறிந்துகொண்டது. தமிழ் இசையின் அருமையைத் தமிழிசை உலகம் புரிந்துகொண்டது. தமிழ் இசையின் பெருமையை எல்லா உலகமும் தெரிந்துகொண்டது.

அவருக்குப்பின்னர் தமிழ் இசைபற்றி ஆராய்கின்ற அறிஞர்களுக்கு யாழ்நூலே ஆதாரமாய் அமைந்தது.

மதங்கசூளாமணி நாடகத்தமிழுக்கு அடிகளார் வழங்கிய நல்லதொரு நூல்
N~க்ஸ்பியருக்கு அடிகளார் வைத்த பெயரே மதங்கசூளாமணி என்பதாகும்.
N~க்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களைத் தெரிந்தெடுத்து அவற்றின் சிறப்புக்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். அந்த ஆங்கில நாடகங்களில் சுவைமிகுந்த உரையாடல் பகுதிகளை சுவைகுன்றாமல் செய்யுள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாடக இலக்கணங்கள் பற்றி நயம்பட எடுத்துரைத்துள்ளார். கூத்துக்களின் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியலோடு கூத்துக்கள் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் கூறியுள்ளார். தமிழ்நூல்கள் தருகின்ற தகவல்களையும், இசைநாடக இயல்புகளையும் கருத்துரை செய்துள்ளார்.

1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் 13 ஆம் திகதிகளில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 23 ஆவது வருடாந்த விழா.

அடிகளார் அவர்கள் முதல்நாள் “தமிழ் அபிவிருத்தி” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

இரண்டாம் நாள் கலாநிதி உ.வே. சாமிநாதையர் தலைமையில் “N~க்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையின் விரிவே மதங்கசூளாமணி என்ற நூலாகும். அது மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இவ்வாறு, அண்ணாமலைப்பல்களைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக,
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளின் பங்காளராக,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவத்திற்குரியவராக,
மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் பெரிதும் மதிக்கப்பட்ட அறிஞராக
அடிகளார் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன.

அடிகளார் அவர்கள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப்பாடசாலைகளை அமைத்தார். வறிய மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தார். அதன்மூலம் தமிழையும் வளர்த்தார், தமிழ் மக்களின் கல்வியையும் வளர்த்தார்.

லண்டன் விஞ்ஞானப் பட்டதாரியான சுவாமி அவர்கள் இலங்கையின் முதலாவது தமிழ்ப்பண்டிதர் என்ற பெருமைக்குரியவர். கொழும்பு அரசினர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் புனித பத்தரிசியார் கல்லூரியிலும் பௌதிகவியல் ஆசிரியராகப் பணி புரிந்த அடிகளார், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராக மட்டற்ற பணியாற்றியவர்.

இன்று கொழும்பு மாநகரிலே சிறந்து விளங்குகின்ற விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், காரைதீவு சாரதா வித்தியாலயம் ஆகியவற்றை ஆரம்பித்தவர் சுவாமியவர்களே. அவை மட்டுமா? யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்;வரா வித்தியாலயம் விவேகானந்தா வித்தியாலயம், ஆகியவற்றை பொறுப்பேற்று நடாத்தியதுடன் வண்ணார் பண்ணையில் அநாதைச்சிறுவர் இல்லத்தினை அப்போதே ஆரம்பித்து வைத்தவர் விபுலானந்த அடிகளே.

ஈழமுதற்பனி இமயம் வரைக்கொடி கட்டும் இசைத்தமிழன்
இந்திய வாணியை ஆங்கிலபீடத் தேற்றிய புதுமையினோன்
தோழமை கொள்வட மொழிமயமாகிய தொன்மை யிசைத்தமிழைத்
தூயதனித்தமிழ் வடிவிற் தோற்றிய தந்தையெனுந் துணையான்
சூழமுதத் தமிழ் வாணர் மதிக்கொரு சோதிச் செஞ்சுடரோன்
சுவாமிசிவானந் தக்கடலாகிய படிமைத் தோற்றத்தோன்

என்று பாடினார் விபுலானந்த அடிகளாரின் மாணவர்களில் ஒருவரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்.

முத்தமிழையும் வளர்த்தவர், முழுத் தமிழ் இனத்திற்காகவும் உழைத்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்கள். அவருக்கு நிகராக அவருக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி இதுவரை யாரும் யாரும் இலங்கையில் தோன்றியவர் இல்லை என்றால் அதற்கு நியாயமான எதிர்வாதம் இருக்கமுடியாது.

வாழ்க விபுலானந்த அடிகளின் புகழ்.

No comments: