இலங்கை , இந்திய செய்திகள்

அசாமில் ரயில் கவிழ்ப்பு: 100 பேர் காயம்
11/07/2011

அசாம் மாநிலத்தில் இரவில் ஒரு ரயில் கவிழ்ப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்று மதியம் உ .பி., மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 60 பேர் இறந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் விபத்தா அல்லது சதிச்செயலா என்ற விசாரணை முடிவதற்குள் இரவில் அசாமில் ஒரு ரயில் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பூரி- கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் பெரும் வெடி சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் வேகமாக சென்று கொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது.

பல பெட்டிகள் உருண்டன. இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 20 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவுகாத்தியில் இருந்து கிளம்பிய இரண்டரை மணி நேரத்தில் நலபாரி மாவட்டம் சென்றபோது இந்த ரயில்கவிழ்ந்தது. சம்பவம் நடந்த பகுதி அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் மீட்பு ‌படையினர் செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள கிராம மக்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்து மீட்டனர்.

இந்த ரயில் கவிழ்ப்புக்கு போடாலேண்ட் நக்சல்கள் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் பயன்படுத்தப்பட்ட பெரும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ரயில்வே துறைக்கு தற்போது அமைச்சர் யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறைக்கு அமைச்சராக இருந்த மம்தா மேற்குவங்கத்திற்கு முதல்வராகி விட்டதால் இத்துறையை பிரதமரே கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி இணையம்


இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை

- ரஜனி இக்பால்

widow-2சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட – ‘கண்ணுக்குத் தெரியாமல் மறந்துபோன பாதிப்படைந்தவர்கள்: உலகெங்கும் உள்ள விதவைகள்’ என்கிற ஒரு புத்தகம் வெளிப்படுத்துவது, உலகெங்கிலும் சுமார் 245 மில்லியன் விதவைகள் உள்ளதாக மதிப்பிட்டிருப்பதாகவும் அவர்களில் 115 மில்லியன் பேர்கள் ஏழ்மையில் வாடுவதாகவும் மேலும் அவர்கள் தங்கள் கணவன்மார்களை இழந்துவிட்ட ஒரே காரணத்துக்காக சமூக வடுக்களினாலும் மற்றும் பொருளாதார இழப்புக்களினாலும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று.

காபோன் ஜனாதிபதி அலி பொங்கோ ஒண்டிம்பா டிசம்பர் 21, 2010 ல் அறிமுகப்படுத்திய பிரேரணையின் பயனாக ஐக்கியநாடுகள் பொதுச்சபை ஜூன் 23 திகதியை சர்வதேச விதவைகள் தினமாக முறைப்படி ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் பெண்கள் அபிவிருத்தி முன்னணியினாலும் (ரி.டபிள்யு.டி.எப்) அத் தினம் அனுசரிக்கப்பட்டது. மே 2009ல் நிறைவடைந்த கொடிய யுத்தம் காரணமாக ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமற்போயும் உள்ளதால் மிகப் பெரியளவில் விதவையாக்கப் பட்டுள்ள தமிழ் பெண்களின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டுவர இந்தத் தினத்தைப் பயன்படுத்துவதற்கு ரி.டபிள்யு.டி.எப் சரியானபடி முடிவு செய்திருந்தது.

இன்று ஸ்ரீலங்காவிலுள்ள மிகப் பெரும்பான்மையான விதவைகள் தொகையை இந்த யுத்த விதவைகள் ஏற்படுத்தியிருந்தாலும், ஏனைய அழிவுகளான சமீபத்தில் 2004ல் ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தமும் ஏராளமான பெண்களை விதவைகளாக்கி இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த எண்ணிக்கைக்குள் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் ஆகிய இருபகுதியினரையும் சேர்ந்த ஏராளமான போர்வீரர்களின் மனைவிமாரையும். நாங்கள் சேர்க்க வேண்டியுள்ளது. பல காரணங்களினாலும் மேலே கூறப்பட்ட வகையைச் சேர்ந்த விதவைகளின் சரியான எண்ணிக்கையை பெறமுடியாதிருந்தாலும், அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பலரினால் காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களிலிருந்து நாம் இந்த எண்ணிக்கையை ஓரளவு மதிப்பீடு செய்யலாம். சில தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சில தோராயமான கணிப்பீடுகளும் சில எண்ணிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளன.ஆனால் இவை எதுவுமே சரியான எண்ணிக்கையை வழங்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 86,000 விதவைகள் இருப்பதாகவும் அவர்களில் 40,000 விதவைகள் வடக்கிலும், 46,000 விதவைகள் கிழக்கிலும் உள்ளார்கள் என்று கிழக்கு மாகாண மகளிர் விவகார உதவியமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தது. இவர்களில் இளம் வயதினரும், மற்றும் வயதாகி நோயுற்றவர்களும், மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.அங்குள்ள மற்றும் சிலருக்கு தங்கள் கணவன்மார்களின் நிலையோ இருப்பிடமோ தெரியாது. இந்நிலை எதனாலெனில் அரசாங்கம் யுத்தத்தின்போது வன்னியிலிருந்து வெளியேறிய பெருந்தொகையானவர்களை பிடித்து தடுப்புக்காவலில் வைத்திருந்தது, அவர்களைக் காவலில் எடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து சென்றுவிட்ட போதிலும் தடுப்புக்காவலில் உள்ளவர்களது பெயர் விபரங்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இதன் பின்விளைவாக அநேகமான தமிழ் பெண்களுக்கு தங்களை விதவைகளாகக் கருதுவதா அன்றில் கணவன் தடுப்புக்காவலில் இருந்து விடுதலையாகி வருவான் எனக் காத்திருப்பதா என்பது தெரியாமலுள்ளது.

பெரும்பாலான குடும்பங்கள் பெண்கள் குடும்பத் தலைமையேற்று நடத்தும் குடியிருப்பாளர்கள் உள்ள குடும்பங்களாக மாறியுள்ளன. ஐநாவின் மானிட விவகாரங்களின் இணைப்புச் செயலகம் பிரசுரித்துள்ள ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குறிப்பில் வடக்கில் பெண்கள் குடும்பம் போற்றுதலைச் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்பு கூறியதைப்போல் வட பிராந்தியத்தில் 40,000 வரையான பெண்கள் குடும்பத் தலைமையேற்று நடத்தும் குடியிருப்பாளர்கள் உள்ள குடும்பங்கள் இருப்பதாகவும் அவற்றில் 20,000க்கு மேற்பட்டவை யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் உள்ளதாக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் பெண்கள் மற்றும் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி வெளி வந்திருக்கிறது

இந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களான ஆனைக்கோட்டை மற்றும் சாவகச்சேரியில் உள்ள மொத்த சனத் தொகையின் 30 விகிதமானோர் போர் விதவைகள் ஆவர். சராசரியாக ஒவ்வொரு விதவைக்கும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் உள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் மீள்குடியேற்ற உதவித் தொகை அல்லது நலன் விரும்பிகளின் நன்கொடை போன்ற மிகச் சொற்ப வருமானத்தைக் கொண்டே இந்த விதவைப் பெண்கள் தங்கள் பிள்ளைகளை உணவூட்டிப் பராமரிக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள்.

இதைத்தவிர பிள்ளைகளின் படிப்பையும் சுகாதாரத் தேவைகளையும் அவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இதில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது போரினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான விதவைகள் மீள்குடியேறியிருப்பது தங்கள் சொந்தக் கிராமங்களில் அல்லது போர் முடிவடைந்த பின் அவர்கள் முன்னர் தங்கியிருந்த நலன்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் நலன்களற்ற நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்களில். அவர்களில் அநேகர் முன்னரும் போர் நடந்த பொழுதும் வன்னிப் பகுதியில் வசித்தவர்கள், அதேவேளை மற்றவர்கள் யுத்தத்தின்போது தங்கள் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக மற்றப் பகுதிகளுக்கு நகர்ந்தவர்கள். போர் முடிவடைந்ததும் அவர்கள் மீளக் குடியேற்றப்பட்ட இடங்களில் தங்கள் வாழ்க்ககையை புதிதாக மீளாரம்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

ஆனால் விரைவிலேயே அவர்களால் அறிய நேர்ந்தது, இது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை என்று, ஏனெனில் அவர்கள் கிராமங்களிலிருந்த பெரும்பாலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிவடைந்திருப்பதை அவர்கள் கண்டார்கள். வீதிகள்,சந்தைகள், வீடுகள், வேறு கட்டடங்கள், பாடசாலைகள், நீர்ப்பாசன வசதிகள், ஏன் அவர்களின் கிணறுகள் வாய்க்கால்கள் எனச் சகலதும் அழிக்கப்பட்டு அல்லது பாவிக்க முடியாத நிலையிலிருந்தன. அரசாங்கம் அவர்களுக்கு வீடுகளை வழங்கி சிதைவடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்துத் தருவதாக வாக்குறுதிகள் வழங்கியிருந்த போதிலும்,அந்த வாக்குறுதிகள் இன்னமும் செயல்களாக உருமாறவில்லை.

நிலமையை மோசமாக்கும் விதத்தில் அவர்கள் கண்டது அவர்களால் தங்கள் வாழ்வாதாரத்தையோ அல்லது சமூக நடவடிக்கைகளையோ மீண்டும் தொடரமுடியாமல் இருப்பதை. அங்கு பாடசாலைகள் இல்லாததால் அவர்களால் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை மற்றும் வழமையாக இயங்கிவந்த சுகாதார சேவை வசதிகள் இப்போது அங்கில்லை. அவைகளை எல்லாம் சகித்துக் கொண்டு அங்கு வாழ்ந்தாலும், தொல்லை தரும் பிரசன்னமாக அங்கு காட்சிதரும் இராணுவ வீரர்கள் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானக் கண்கொண்டு பார்க்கிறார்கள்.

அதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த விதவைகளின் குடும்பம் போற்றுனராகவிருந்த அவர்களினது கணவன்மார்கள் இப்போது இல்லை.எனவே தங்கள் குடும்ப வாழ்க்கையை கொண்டு நடத்த இந்த விதவைகள்தான் சம்பாதிக்க வேண்டியுள்ளது.அவர்களில் அநேகர் ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கு வருமானம் தரக்கூடியாதகப் பயன்படக்கூடிய எந்தவொரு தொழில் திறமையையும் கற்றவர்கள் அல்ல.அதன் விளைவாக இந்த விதவைகள் தங்களையோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ போற்றுவதற்கு இயலாத கடினமான ஆதரவற்றவர்களாக மாறியுள்ளார்கள். இந்த விதவைகள் சிலரின் கணவன்மார்கள் ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ யில் போராளிகளாக இருந்துள்ள அதேவேளை மற்றவர்கள் வன்னியில் கூலி வேலைகளைச செய்து வந்திருக்கிறார்கள்.

ஆயினும் பெரும்பாலும் இந்த விதவைகள் எல்லோருமே எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்த அங்கத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே கணிக்கப் படுகிறார்கள். இந்த விதவைகளில் சிலர் 25 வயதுக்கும் குறைவாக உள்ள அதேவேளை மற்றவர்களில் சிலர் 50 வயதுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரு வகையினருக்கும் பிரத்தியேகப் பிரச்சினைகள் உள்ளன. 25 வயதுக்கும் கீழ்பட்டவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டாயத்திலிருந்து தப்பிப்பதற்காக தங்கள் பெற்றோர்களினால் திருமணம் செய்யும்படி கட்டாயப் படுத்தப் பட்டவர்கள். 50 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு வளர்ந்த பெண்பிள்ளைகள் உள்ளனர், அவர்களை இராணுவத்தினரதும் கிராமத்திலுள்ள மற்ற நேர்மையற்ற மனிதர்களின் பாலியல் தொல்லையினால் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுக்குள்ளது.

இந்த விதவைத் தாய்மார்கள் தங்கள் மகள்மாரைப் பாதுகாப்பதில் கடினமான நிலையை எதிர்கொள்ளும் அதேவேளை இளம் விதவைகளும் அதற்குச் சமமான கடின நிலையை.இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது அப்பகுதி இளைஞர்களிடமிருந்தோ பாலியியல் வதைகளுக்கு உட்படும் ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதில் எதிர்கொள்கிறார்கள். இந்தக் கட்டத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது, பாகுபாடு மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவர் கலாநிதி நிமால்கா பெர்ணாண்டோ கூட சுவிட்சலாந்தில் இந்த மாதம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வடக்கு மற்றும் வன்னியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் மேற்குறித்த நிலமையினை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை.

இன்று ஸ்ரீலங்காவில் வாழ்க்கைச் செலவு முன்னெப்போதுமில்லாத நிலையை அடைநந்துள்ளது என்பது சகலரும் அறிந்த விடயமே.இரண்டு பிள்ளைகள் உள்ள ஒரு சராசரி கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்துக்கு ஒரு நாள் வாழ்க்ககைச் செலவாக ஆகக் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் எந்த வழியிலும் எந்தவித வருமானமுமில்லாத ஒரு விதவை எந்த மாதிரியான வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என ஒருவரால் கற்பனை செய்ய முடியும்.

அவர்களில் சிலர் உள்ளுரிலேயே கூலி வேலைகளைத் தேடி அலையும்போது மற்றவர்கள் நாட்டின் தென்பகுதியில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தங்கள் தொழிற்சாலைகளுக்கு மலிவான தொழிலாளர்களைத் தேடுபவர்களின் கைகளில் சிக்கி விடுகின்றனர்.ஆணாதிக்கம் அதிகமுள்ள அப்படியான இடங்களில் வேலை செய்யும்பொழுது அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப்பற்றி நான் இங்கு விபரிக்கத் தேவையில்லை. வேலைக்காகப் பறந்து திரியும் மற்றவர்களை சாதாரணமாகப் பெண்கள் செய்ய முடியாத கடின வேலைகளை செய்வதற்கு சில அமைப்புகள் அமர்த்தியுள்ளன.

வடக்கில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் வேலை,அநேகமான பெண்களைக் கொண்டு சேர்த்திருக்கும் அப்படியான ஒரு களமாகும். நிலக் கண்ணிவெடிகளை சுத்திகரிப்போர்களாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றிய ஒரு காணொளி பிறகு உங்களுக்கு காண்பிக்கப்படும்.சூழ்நிலையின் தாக்க விசை காரணமாக இந்த விதவைகளில் சிலர் மேற்கொண்டிருக்கும் ஒரு தொழில் எங்கள் அனைவரையும் நாணித் தலைகுனிய வைப்பதுடன் எங்கள் சமூகத்துக்கு அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நான் இங்கு குறிப்பிடவேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன்.

தொழில் ரீதியான விபச்சாரிகளாக ஸ்ரீலங்காவில் சுமார் 40,000 வரையிலான பெண்கள் இருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது.அவர்களில் சிலர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளம் யுத்த விதவைகள் எனச் சொல்லப்படுகிறது.அவர்களின் உள்ளுணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,அவர்களுக்காக நான் இரக்கப்படுகிறேன்.இப்படி நடப்பதற்கான பொறுப்பை நாங்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஜூன் 3, 2011ந்திகதிய வீரகேசரியில் “வடக்கில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை தடுப்பது மிகவும் முக்கியம்” எனும் தலைப்பில் வெளியான செய்தியின் சாரங்களை இந்தக் கட்டத்தில் இங்கு நான் வாசிப்பது பொருத்தமாகவிருக்கும் என நான் நினைக்கிறேன்.

“இறுதியாக வடக்கில் குற்றச்செயல்களில் ஒரு அதிகரிப்பு காணப்படுகிறது. கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன..... இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை கிளிநொச்சி மாவட்டத்திலேயே நடைபெற்றுள்ளன.

தமிழ் கலாச்சாரத்துக்கு வெட்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெறுகின்றன. கடந்த ஞாயிறன்று ஒரு மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும்,அவரது கணவரின் வைப்பாட்டி எனச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அப்படிக் கொலை செய்த பெண்ணும் மூன்று பிள்ளைகளையுடைய ஒரு விதவை ஆவார்.”

அநேகமாக ஒவ்வொரு நாளும்; போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச்சேர்ந்த குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவு தொகையான பெண்கள் தற்கொலை செய்வதாக செய்தி அறிக்கைகள் பேசுகின்றன.அப்படிப்பட்ட சம்பவங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எதுவும் கிடைக்கக் கூடியதாகவில்லை.

சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்விலிருந்து தெரியவருவது,வடக்கிலுள்ள இப்படியான ஆதரவற்ற பெண்களின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் அனாதை விடுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் மற்றும் சில பெண்கள் தங்கள் பிள்ளைகளை மலிவான தொழிலாளர்களாக அவர்களைத் தேவைப்படுவர்களிடத்து அனுப்புவதாகவும். இந்தப் பிள்ளைகளின் சேவையைப் பெறுவோர் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்கோ உட்படுத்துகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்தியிருருக்கிறது.

இவ்வகையான பெண்களிடையில் பணியாற்றும் மனநல மருத்துவரான கலாநிதி எஸ். யமுனா நந்தன் தெரிவித்திருப்பது,பெரும்பாலான பெண்கள் மனநலக் கோளாறுகளினால் பாதிக்கப் பட்டிருப்பதாக.அப்படியான பெண்கள் தனிநபர்களினால் வடிவமைக்கப்படும் முயற்சிகளுக்கு சுலபத்தில் இரையாவதாகவும் அதேவேளை மற்றவர்கள் தற்கொலை முயற்சிக்கு தூண்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த விதவைப் பெண்கள் முகங்கொடுக்கும் மற்றொரு விடயம் வீட்டுடமையில் ஆண்களின் பிரசன்னம் அற்றருப்பதால் அது அவர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு தன்மையை உணர வைக்கிறது.தவிரவும் வீடுகள் என்ற பெயரில் அவர்கள் வாழுமிடங்களில் இரவு நேரங்களில் பலவித சாக்குபோக்குகளைச் சொல்லி உள்நுழைய முயல்பவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக அதைப் பூட்டி வைக்கக்கூட முடியாமலிருக்கிறது.

இதன்விளைவாக அவர்கள் இரவு நேரங்களில் பெண்களைத் தேடி அலைபவர்களிற்கு சுலபமான இரையாகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அநேக முறைப்பாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர் அப்படியாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி முறைப்பாடு செய்வதற்காக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்றபொழுது இரவில் உள்நுழைந்த நபர் முகாமில் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொறுப்பான அலுவலராக அமர்ந்திருப்பதை கண்டு கொண்டார்.

பிள்ளைகளுள்ள ஒரு விதவை, அந்தப் பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய இரு பாத்திரங்களையும் வகிக்க வேண்டியுள்ளது.அவர்களில் அநேகருக்கு இது ஒரு சவாலான பணியாக உள்ளது,வேலையின் நிமித்தமோ அல்லது வேறு தேவைக்கு வேண்டியோ அவர்கள் வெளியே செல்லும் வேளைகளில் தங்கள் பிள்ளைகளில் ஒரு கண் வைத்திருக்க அவர்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள் .தங்கள் வீடுகளில் வளர்ந்த பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் விதவைத் தாய்மார்கள் அவர்களைத் தனியே விட விரும்புவதில்லை.அதன்காரணமாக வீட்டுக்கு வெளியேயுள்ள எந்த வாழ்வாதார முயற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதைப் பற்றி அவர்களால் சிந்தனை செய்யக்கூட முடியாமலுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெரும்பாலான இந்த விதவைகளின் சொந்த சமூகத்திலுள்ள அங்கத்தினர்களே இவர்களை இறந்துபோன எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களின் மனைவிகள் என நினைத்து இந்த விதவைகளை தூர ஒதுக்கி வைப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிலவேளைகளில் இராணுவத்தினர் இந்த விதவைகளின் செயற்பாடுகளை எந்நேரமும் கண்காணித்து வருவதால்,இந்த விதவைகளுக்கு ஆதரவு காட்டும் சமூக அங்கத்தினர்களை எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் என அவர்கள் சந்தேகப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம்.

இந்த விதவைகள் விசேடமாக இளம் விதவைகள் எதிர்கொள்ளுவதும்,வெகு அபூர்வமாகப் பேசப்படுவதுமான மற்றொரு விடயம். அவர்கள் விதவைகளானபடியால் அவர்களது உடற்தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலே தங்கி விடுகின்றன.இது எவ்வளவு தீவிரமான விடயம் என்பதை எங்களில் அநேகர் சிந்திப்பதேயில்லை.இந்தப் பாலியல் பசிக்கு ஆளாகும் விதவைப் பெண்கள் தங்கள் இயற்கைத் தேவைகளை போக்குவதற்காக வேறு திசைதிருப்பக்கூடிய மார்க்கங்களோ அல்லது பொழுதுபோக்குகளோ இல்லாமல் சாதாரண வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என எவ்வாறு நாங்கள் எதிர்பார்க்க முடியும்?


அத்தகைய மானிடப்பிறவிகளை பச்சாத்தாபத்தோடு நடத்துவதற்கு மாறாக எங்களது சமூகம் விதவைகளை அதிருஸ்டம் கெட்டவர்களாகத் தரம்தாழ்த்திப் பார்ப்பதுடன் சமூகச் சடங்குகளில் அவர்கள் கடைசி இருக்கையில்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறது.விழாக்களில் அவர்கள் எளிமையாகத்தான் ஆடைகளை அணியவேண்டும்,அழகூட்டும் எதனையும் அணியக்கூடாது என்றும் எதிர்பார்க்கிறது.

காலாவதியான எங்களது கலாச்சார நடைமுறைகள் இந்தப் பெண்களுக்கு ஒரு சாபமாக உள்ளது. உடைந்துபோன பாத்திரங்களைப் போல அவர்கள் ஒதுக்கப்படுவது மடடுமல்ல,அவர்கள் வசிக்குமிடத்திலுள்ள குடும்பங்களிலுள்ள கணவன்மார்களையும் வசியப்படுத்தி மயக்கக் கூடியவர்கள் எனவும் கருதப்படுகிறார்கள்.அதன் விளைவாக அநேகமான மனைவிமார்கள் இந்த விதவைகளுடன் கூடியிருக்கும் சந்தர்ப்பங்களில் தங்கள் கணவன்மார்கள்மீது எப்போதும் ஒரு எச்சரிக்கைக் கண் வைத்தபடியே இருக்கிறார்கள். இவைகள் எல்லாவற்றையும் ஒரு வரம்புக்குள் கொண்டு வந்தாலும்கூட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒரு விதவை மறுமணம் செய்வதற்கு நமது கலாச்சாரம் அனுமதிப்பதில்லை.இப்படியான கலாச்சாரத் தடைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது,இந்த விதவைகள் ஒரு நரக வாழ்க்கை வாழ்வதற்கே விதிக்கப்பட்டுள்ளார்கள்.

WIDOWSசமூகத்திலுள்ள ஆண்கள் இறந்துபோனது,இளம் பெண்களுக்கே கணவன்மார்களைத் தேடுவதைக் கடினமாக்கியுள்ளபோது,ஒரு இளம் விதவைக்கு மனைவி இறந்துபோன ஒருவரைக்கூட திருமணம் செய்யத் தேடுவது மிகவும் கடினம்.இந்த விதவைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயத்தில் தீவிர சிந்தனைகளை வழங்குதல், மற்றும் இந்தப் பிரச்சனை பற்றிய எங்கள் கலாச்சார அணுகுமுறைகளில் ஒரு மாற்றத்தை உருவாக்க எண்ணுதல் மற்றும் சமூகத்தில் இந்த விதவைகளுக்கு நல்ல ஒரு அந்தஸ்தை வழங்குதல் போன்றவை எமது சமூகத்திடமே விடப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள யுத்த விதவைகள் அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு குழுவினரல்ல என்பதைத் தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.மேலும் இதிலுள்ள யதார்த்தம் என்னவென்றால் இந்த விதவைகளின் பரிதாப நிலை வடக்கிலுள்ள தமிழர்களுக்கோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகளுக்கோ முன்னுரிமை அளிக்கப் படவேண்டிய ஒரு விடயமாகத் தோன்றவில்லை.பொதுவாகத் தமிழர்களிடத்து வேகமாக மாறிவரும் சூழ்நிலைகளின் காரணத்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய வேறு பல விடயங்கள் இருக்கின்றன.

இந்த விதவைகளின் மனிதாபிமான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய கொள்கை ஆவணமொன்றைத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அநேகர் வலியுறுத்திய போதும், இந்த விடயம் அரசாங்கத்தின் உரிய கவனத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை.

தவிரவும் ஸ்ரீலங்காவில் உள்ள மனிதாபிமான மற்றும் அது தொடர்பான சட்டங்கள் யாவும் ஆண்களை மையப்படுத்தியதாகவே உள்ளன.பெண்கள் தொடாபான மனிதாபிமான விடயங்களில் தனித்தன்மையான ஆறுதல் வழங்கும் நோக்கோடு தயாரிக்கப்பட்ட எந்த ஒரு சட்டமாவது உள்ளவதாகத் தோன்றவில்லை. விதவைகளுக்கு சட்டப+ர்வமான அங்கீகாரத்தை பெறும் வழியில் தடைக்கல்லாக நிற்பது இதுதான்.சட்டவாக்கலில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பது போர்விதவைகள் தொடர்பான விடயங்கள் அதற்குரிய கவனத்தை ஏன் பெறவில்லை என்பதற்கான மற்றொரு காரணம்.

சட்டமியற்றலில் பங்கு கொள்ளும் ஒரு சில பெண்களும் உரிய சூழ்நிலைகளில் யுத்த விதவைகளைப்பற்றி பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு போதிய சக்தி படைத்தவர்கள் போலத் தோன்றவில்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,யாராலுமே கவனிக்கப்படாத இந்தப் போர் விதவைகளுக்கு முடிந்தளவு சாத்தியமான உதவிகளை வழங்க முன்வரவேண்டி உள்ளது மிகவும் அவசியம் ஆகிறது. எப்படியாயினும் இந்த விதவைகளின் நிலையை நன்கு அறிந்த உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் இந்த விதவைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் போதியளவு அக்கறை காட்டவில்லை என்றே தெரிகிறது ஸ்ரீலங்காவிலுள்ள தொண்டு நிறுவனங்களிலுள் பெண் தலைவர்கள் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்கு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து இந்த விதவைகளின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்.

மாறாக நாட்டிலுள்ள அரசியற் காலநிலை அப்படியான விடயங்களை எழுப்புவதற்கு உகந்ததாகவில்லை என எண்ணி சிலவேளைகளில் இந்தத் தலைவர்கள் மௌனம் சாதிக்கக் கூடும்.மக்களின் பிரச்சினைகளுக்கு வெளிப்படையாகக் குரல்கொடுத்த ஊடகவியலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட அதே பின்விளைவுகள் தங்களையும் தாக்கலாம் என்றுகூட அவர்கள் அச்சமடையலாம்.

நான் நினைவுபடுத்துவது, எப்படி 1995ல் கல்முனை பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்த 56 விதவைகள் ஒன்றுகூடி ஒரு அழுத்தக் குழுவை அமைத்தார்கள் என்பதையும் அது சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் முன்வந்து அந்த விதவைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குத் தக்கவகையில் தேவையான கருத்துள்ள உதவிகளைச் செய்தார்கள் என்பதையும்.துரதிருஷ்டவசமாக வடக்கிலுள்ள அரசியற் சூழ்நிலைகள் அங்குள்ள விதவைகள் ஒன்றுகூடி தங்களுக்குள் ஒரு குழுவை அமைப்பதற்கோ,வேறுவழியில் தங்கள் குரலைக் கேட்கச் செய்வதற்கோ உகந்ததாக இல்லாமலிருக்கிறது.

எனினும் அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு சில தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள விதிகளின் கட்டமைப்புக்குள் இந்த விதவைகளின் நலன்கருதி திட்டங்களைக் கையாள்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது ஒரு உண்மையாகும்.இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தனது நிகழ்ச்சித் திட்டத்தில் கொண்டுள்ள புதிய அமைப்புக்களை பதிவு செய்வதற்கு தற்போதைய சூழ்நிலைகளில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என்பதை.

இத்தகைய சூழ்நிலைகளில் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது தமிழ் புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்களுக்கோ போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவுவதற்கு கிடைத்திருக்கும் ஒரே சாத்தியமான தெரிவு வடக்கில் பணியாற்ற அனுமதிக்கப் பட்டுள்ள ஸ்ரீலங்காவிலுள்ள அரசு சாரா அமைப்புகள் ஏதாவது ஒன்றுடன் ஒன்றிணைந்து செயற்படுவதே ஆகும்.

அத்தகைய ஒருங்கிணைப்பு, ஒன்றில் தற்போது அரசு சாரா அமைப்பு ஒன்றிடமுள்ள திட்டமொன்றுக்கு நிதியுதவி அளிப்பதோ, அல்லது விதவைகளின் நலன்களுக்கு உதவக்கூடிய சாத்தியமான திட்டப்பணி ஒன்றைத் தயாரித்து அதைத் தெரிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு விற்று அதனுடன் ஒருங்கிணைப்பு தேடுவதோ ஆகும்.

யாழ்ப்பாணம் நல்ல நிலமையிலிருந்தபோது அங்கு வாழ்ந்த எங்களில் பலருக்கு அதிக எண்ணிக்கையிலான சிக்கன மற்றும் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள் அநேகமாக குடாநாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இயங்கி வந்தது தெரியும்.அந்த நாட்களில் இந்தச் சங்கங்கள் சிக்கனத்தையும் சேமிப்பையும் மட்டும் முன்னேற்றாது அவை ஒரு சிறிய வங்கிபோல அபிவிருத்தியாகி செயற்பட்டு வந்ததுடன் அதன் அங்கத்தவர்கள் அதனிடமிருந்து சுலப தவணை முறையில் பிரசவச் செலவு,நீரிறைக்கும் இயந்திரம் போன்ற விவசாய உபகரணங்களின் கொள்வனவு,சுயதொழில் முயற்சிகள் போன்ற தங்களின் அவசரத் தேவைகளுக்கு கடன் பெற்று வந்ததையும் நாமறிவோம்.

சமீபத்தைய யுத்தம் இந்தச் சங்கங்களின் செயற்பாடுகளைச சீரழித்து விட்ட போதிலும், அநேகமானவை பிழைத்திருந்து தற்போது செயற்பாட்டில் இருக்கக்கூடும். நாங்கள் விரைவான ஒரு ஆய்வை நடத்தி விதவைகளை அங்கத்தவர்களாக கொண்ட சங்கங்கள் எவை எனக் கண்டறிந்து அவைகளுக்கு விசேட உதவிகளை வழங்குவதன் மூலம் அதன் அங்கத்தவர்களான போர் விதவைகளுக்கு உதவி வழங்க முடியும்.

இந்த சிக்கன மற்றும் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அங்கங்களாக உள்ளபடியால்,அவை கூட்டுறவுச் சங்கத் திணைக்களத்தின் மேற்பார்வையிலும் வழிகாட்டலிலும் வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும்.இந்தச் சந்தர்ப்பத்தில் இது புலம் பெயர் சமூகத்தவருக்கு வடக்கிலுள்ள யுத்த விதவைகளுக்கு உதவி செய்யக் கூடிய மற்றுமொரு தெரிவாகும்.

இதில் அவதானிக்க வேண்டியது என்னவென்றால் விதவைகளின் நலன்கருதி உருவாக்கப்படும் எந்தத் திட்டமும் விதவைகளைத் தரமுயர்த்தி அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கக்கூடியதை முகக்குவியமாக கொண்டிருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குப் பாவனைப் பொருட்களை வழங்கும் திட்டமாக இருக்கக்கூடாது,ஒரு திட்டம் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை மட்டுமே கருதி உருவாக்கப்பட்டால் அது மிக மோசமான தவறாகும்,ஏனெனில் அது அந்த விதவைகளை வாழ்நாள் முழுவதும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வாழும் நிலைக்குத் தள்ளி விடும்.

செயல்படுத்தப் படுவதற்காக திட்டப் பணிகளை அடையாளம் காண்பதற்கு,அந்தத் திட்டம் செயல்முறையில் சாத்தியமானதா என அவதானமாக பரிசோதிக்க வேண்டும்.புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்கள் தையல் இயந்திரங்களையும், கோழிப்பண்ணை, ஆடு மாடுகள்,வளர்த்தல் போன்ற கால்நடை உற்பத்தியிலும் உதவிகளை வழங்க விரும்பும் சந்தர்ப்பங்களை நான் கண்டுள்ளேன்,இவைகள் அவர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தி அத்தகைய முயற்சிகள் மூலம் தங்களின் வாழ்க்கையை கொண்டு நடத்த இயலுமா என்பதைப்பற்றி சிறிதுகூட ஆய்வு செய்யாமல் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்.

தவிரவும் இந்த விதவைகளுக்கு அத்தகைய முயற்சிகளுக்கான போதிய முன் அனுபவம் கூட இல்லை, மற்றும் தையல் இயந்திரங்களை அல்லது கால்நடைகளை இங்கு அதிகரித்து காணப்படும் திருடர்களிடமிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதற்கான தகுந்த இடம்கூட அவர்களிடம் இல்லை. எனவே அத்தகைய திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன்னர் வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் குறிக்கோளை அடைய வேண்டுமானால், திறமைகள், தேவைகள், மற்றும் விதவைகளின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு என்பன பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு தெரிவாக உள்ளது,இந்த யுத்த விதவைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் கிராமங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது.அவர்கள் ஒரு பொதுக் கிணறு ஒன்றைக் கட்டிக் கொடுப்பார்களானால் அது பல குடும்பங்களுக்கு பயன் தருவதாக இருக்கும். அல்லது போரினால் சிதைவடைந்து போயுள்ள சிறிய பாடசாலைக்கு ஒரு கட்டடத்தை அமைத்துத் தருவார்களானால் அது இந்த விதவைகளின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தும்.

போரின் தாக்கத்தால் அநேக விதவைகள் கால்கள் துண்டிக்கப் பட்டதாலோ அல்லது முடமாக்கப் பட்டதாலோ நடமாடும் சக்தியற்றவர்களாக உள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது, அதேபோல ஒரு கையையோ அல்லது இரண்டு கைகளையுமோ இழந்தவர்களும் இருக்கிறார்கள்.

இதற்காக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்கள் சாதாரணமாக நகருவதற்கான இயக்க உதவிகளை மட்டுமல்லாது,ஏதாவது ஒரு வழியில் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தும் பெரும் முயற்சிக்குத் துணையாக இருக்கக்கூடியவற்றையும் கண்டறிந்து,அதற்கு வேண்டியவற்றை வழங்குவதற்கு வேண்டிய தீவிர அக்கறைகளை மேற்கொள்ள வேண்டும்.

நான் இங்கு குறிப்பிட விரும்பும் மற்றுமொரு விடயம், நாங்கள் செய்யும் உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டதனால் இரட்டையாகி விட்டதோ என்பதை நாங்கள் உறுதிப் படுத்த வேண்டியது மிகவும் அவசியம். பிரதான வீதிக்கு அண்மையில் இருக்கும் கிராமங்களிலுள்ள விதவைகளை அணுகுவதைக் காட்டிலும் வெகு தொலைவில் கிராமத்தின் உட்பகுதியில் உள்ள விதவைகளை நாம் அணுகவேண்டும்.

தஙகளின் கிராமங்களை அணுகுவதற்கு வழித்தடங்கள் அற்றிருப்பதனால் எந்தவிதமான உதவிகளையும் வெகு குறைவாகவே பெறும் அத்தகைய விதவைகளுக்கு நாம் கூடியளவு முன்னுரிமை வழங்க வேண்டும்.புலம் பெயர் சமூகத்தினர் ஏற்கனவே விதவைகளின் குடும்பங்களைத் தத்தெடுத்து மற்றும் தங்கள் வளர்ப்பு குடும்ப அங்கத்தவர்களுக்கு நேரடியாகவே உதவிகளை வழங்கி வருவதை நான் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இந்த முறை அத்தகைய குடும்பங்களுக்கு சில உடனடி நலன்களை வழங்கிய போதிலும், அதில் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் புலம்பெயர் நலன் வழங்குபவரிலேயே தங்கியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதுடன் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகளைக் குறைவாகவே முன்னெடுப்பார்கள்.

ஆனால் மிகவும் உண்மையாக தமிழ் பெண்கள் அபிவிருத்தி முன்னணி (ரி.டபிள்யு.டி.எப்) போன்ற அமைப்புகளும் மற்றும் பலவும் எற்கனவே பல்வேறு வழிகளில் வடக்கிலுள்ள யுத்த விதவைகளுக்கு உதவக்கூடிய பல திட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்,அது இந்த விதவைகள் யாரும் மறந்து விடவில்லை என்பதற்கு ஒரு அடையாளமாகும், விசேடமாக புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்கள்.பாதகமான அரசியல் காலநிலை இருந்தும்கூட,பல்வேறு அமைப்புகளாலும், மற்றும் தனி நபர்களாலும் இந்த விதவைகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப் படவேண்டியுள்ளன.மிகவும் அவசிய தேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,அதேவேளை பலமற்றவர்களுக்கும் மற்றும் நிலையற்றவர்களுக்குமான உதவிகளின் பங்கை அவர்கள் அடைய வேண்டும்.

எந்த வகையான திட்டங்களோ அல்லது உதவிகளோ இந்த விதவைகளுக்கு வேண்டி எற்படுத்தப் பட்டாலும் அந்தத் திட்டப்பணிகளின் செயற்பாடுகள் குறிப்பிட்ட திட்ட இலக்கோடு ஒத்துள்ளதா என்பதைக் கண்காணிப்பதற்காக திறமையான மேற்பார்வைப் பொறிமுறை இருக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் வரக்கூடிய தடைகளை முறியடிக்கத் தக்க விதத்தில் மாற்றங்களை எற்படுத்த இயலத் தக்க விதத்தில் இந்தத் திட்டப் பணிகளில் ஒரு நெகிழ்வுத் தன்மை இருப்பதும் அவசியம்.நிதிகளைச் செலவிடுவது தவறான பயன்பாடுகளைக் குறைக்கத் தக்க விதத்தில் ஒழுங்காக நிர்வகிக்கப் படவேண்டும்.திட்டங்களைப் பற்றி ஒழுங்கான இடைவெளிகளில் மதிப்பீடு செய்வதற்காக ஒழுங்கு விதிகள் அமைக்கப் படவேண்டும்.

என்னுடைய விளக்கத் தரவுகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் தமிழ் பெண்கள் அபிவிருத்தி முன்னணியினால்(ரி.டபிள்யு.டி.எப்) கவனத்தில் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்,அத்தோடு அவதானமாகத் தயாரிக்கப்பட்ட திட்டமொன்றை விரைவிலேயே ஆரம்பித்து இந்த விதவைகளை எங்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்துக்குள் சாத்தியமான வேகத்தில் கொண்டு வருவார்கள் என்றும் நம்புகிறேன்.

(இதன் எழுத்தாளர் ஒரு சுயாதீன ஆய்வாளரும் மற்றும் பயிற்சி ஆலோசகருமாவார். இந்தக் கட்டுரை காணப்பட்ட இணையத்தளம் This appeared in freemalaysiatoday.com)

தமிழில். எஸ்.குமார்

nantri thenee

கஷ்டத்திற்கு வழிவகுத்த யுத்தம்



யுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்த செல்வதுரை போன்றவர்கள் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று தாங்களும் இனிமேல் சமாதானத்தின் அனுகூலங்களை அனுபவிக்கலாம் என்று கருதுகிறார்கள். அதற்கு இருக்கும் வளங்களை உரிய முறையில் பயன்படுத்த பெருமுயற்சி செய்ய வேண்டும்

அநேகமான இலங்கையர்களைப் போன்றே கந்தையா செல்வதுரையும் அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவியதால் அவர் அவற்றுக்கு அதிக விலை கொடுத்து வந்தார். ஆனால் இந்த நாட்களில் அவர் அப்பொருட்களை முன்னரிலும் பார்க்க மிகக் குறைந்த விலைக்கு வாங்குகிறார்.இருந்தும் வாழ்க்கை கடினமானதாகவே இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு கிலோ அரிசியை வாங்க செல்வதுரை 2,500 ரூபாவை (25 டொலர்) அல்லது அதற்கும் மேலாகச் செலவிட்டார். இலங்கையில் இரத்தக்களறியை ஏற்படுத்திய சிவில் யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்த அந்த வேளையில் வடபகுதிக் கரையோரப் பிரதேசத்தில் சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த செல்வதுரையும் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒரு சிறு துண்டுக் காணியில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.

இப்போது செல்வதுரை இலங்கையின் வடபிரதேசத்தில் ஒரு சமயத்தில் யுத்தம் மிக மோசமாக இடம்பெற்ற வன்னியில் ஆலங்குளம் கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அங்கு ஒரு கிலோ அரிசியின் விலை 50 ரூபாவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பார்க்க இது குறைவான விலையாகும். இருந்த போதிலும், யுத்தத்தின் பின்னர் வாழ்க்கை எப்படி என்று கேட்டால் கஷ்டமானது, வாழ்க்கை மிகவும் கஷ்டமானது என்றே செல்வதுரை கூறுகிறார்.

ஆனால், பிரச்சினையான நேரத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைகளை எதிர்த்து அவர்களது இறுதிப் போரை நடத்திக் கொண்டிருந்த வேளையில் உணவு, மருந்து போன்ற அனைத்துமே வன்னியில் பற்றாக்குறையாக இருந்த போது வாழ்க்கை மிக மோசமாக இருந்ததை செல்வதுரையால் இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு கட்டுப்பீடி (ஒரு வகை உள்ளூர் புகையிலைச் சுருட்டு) 3,500 ரூபாவாக (33 டொலர்) விற்பனை செய்யப்பட்டது என்று செல்வதுரை கூறுகிறார்.

பொருட்களின் விலை அதிகரிப்பையும் விட மேலும் பல அவலங்களை யுத்த நினைவுகள் கொண்டு வருகின்றன. அவசர அவசரமாகத் தோண்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் துண்டுதுண்டாக சிதறிக்கிடந்த காட்சிகளை செல்வதுரை பார்த்துள்ளார். அந்தக் கொடுமையான நாட்களைப் பற்றி விரிவாகப் பேச அவர் விரும்பவில்லை. அவரது மனைவி காயங்களுக்கு உள்ளாகி முழுமையாக குணமடைய முடியாத நிலையில் இருப்பதாக அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குத் தெரிவித்தார். ஆனால் அவரது இரண்டு புதல்வியர் ஆலங்குளத்திலிருந்து 330 கிலோமீற்றர் தூரத்தில் கொழும்பில் வாழ்ந்து வருவது குறித்து அவர் சந்தோஷப்படுகிறார்.

விடுதலைப் புலிகள் இறுதியில் தோல்வியடையவே, மோதல்களிலிருந்து தப்பி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த முகாம்களில் ஒன்றில் செல்வதுரை 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வந்தார். அவர் 2009 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவரது சொந்த இடத்தில் சேதமடைந்தது போக மீதமாக இருந்த அவரது வீட்டுக்குத் திரும்பினார். ஆலங்குளத்தில் 187 பதிவு செய்யப்பட்ட குடும்பங்கள் உண்டு. அவர்கள் அனைவருமே தற்காலிக அல்லது ஓரளவு நிரந்தரமான வீடுகளில் வசிக்கிறார்கள். அநேகமான வீடுகள் மண் சுவரும் தகர கூரையையும் கொண்டுள்ளன. யுத்தத்தின் பின்னர் ஒரேயொரு முக்கிய முன்னேற்றம் என்னவெனில் வடக்கிலிருந்து தெற்கிற்கு வன்னியை ஊடறுத்துச் செல்லும் ஏ9 வீதியின் நீண்ட பகுதி புனரமைக்கப்பட்டதாகும். அந்த வீதி மேலும் 6 பாதைகளைக் கொண்டதாக புனரமைக்கப்படவிருக்கிறது.

இதேவேளை, ஆலங்குளத்திற்கான வீதி திருத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. ஏ9 பிரதான வீதியிலிருந்து 20 கிலோமீற்றர் நீளமான ஆலங்குளம் வீதி குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. ஆலங்குளம் கிராமவாசிகளின் பிரதான போக்குவரத்துச் சாதனம் சைக்கிளாகும். பொதுப் போக்குவரத்து வசதிகள் அங்கு கிடையாது. குடிமக்கள் யுத்தத்தின் போது தப்பி ஓடுகையில் விட்டுச் சென்ற சைக்கிள்கள் தற்போது கிராமவாசிகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கால்நடை வளர்ப்பு, நெல் மற்றும் காய்கறிச் செய்கை மற்றும் சில்லறை வேலைகளைச் செய்து அவர்கள் சீவனம் நடத்துகிறார்கள். அங்கு நிரந்தர உத்தியோகம் கிடையாது. கிரமமான வருமானத்தைத் தரும் ஒரேயொரு தொழிலான ஆசிரியத் தொழிலில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக காத்திருக்காமல் கூட்டாக கோழி வளர்ப்பு, சிறு காய்கறிச் செய்கை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். வெறும் 6 பேருடன் ஒரு காய்கறித் தோட்டத்தை செய்து வரும் தங்கராசா சிவக்கொழுந்து நாளொன்றுக்கு சுமார் 300 ரூபாவை (2.50 டொலர்) தாங்கள் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். தன்னார்வ நிறுவனங்களிலிருந்து பயன்பெற்று வரும் 60 க்கு மேலான குடும்பங்களுக்கு பெண்களே குடும்பத் தலைவியராக இருக்கிறார்கள் என்று அந்நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

புதிதாக தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கிராமவாசிகள் வருவாய்க்காக சமுதாயக் குழுக்களையே எதிர்பார்த்திருக்கின்றனர். தனியார் வர்த்தகங்கள் அங்கு மேற்கொள்ளப்படுமானால் கிராமவாசிகளால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று வன்னியை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தினதும் உலக வங்கியினதும் கூட்டு விழிப்புணர்வுத் திட்டப் பிரதிப் பணிப்பாளர் நாகமணி இரத்தினராஜா கூறுகிறார். ஆனால், ஒரு சில பாரிய கம்பனிகள் அந்தப் பிரதேசத்திற்கு தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க முன்வந்துள்ளன. ஒரு கம்பனி அப்பிரதேசத்தில் உற்பத்தியாகும் பாலை கொள்வனவு செய்வதெனவும் ஒரு சிகரட் கம்பனி புகையிலை உற்பத்திற்கு உதவவும் முன்வந்துள்ளன.

அந்தப் பிராந்தியத்திற்கு உதவும் அரசாங்கமும் நிறுவனங்களும் வருமானத்தை ஏற்படுத்தும் துறைகளை துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென ரத்னராஜா ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். உட்கட்டமைப்பு அபிவிருத்தி இடம்பெறுகிறது. ஆனால் மக்கள் வருமானம் பெறுகிறார்கள் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பிராந்தியத்திற்கு அபிவிருத்தி வந்துள்ளது. ஆனால் ஒரு தெரிவு அடிப்படையிலேயே அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. ஏ9 வீதியும் அருகிலுள்ள நகரங்களும் அதிக அனுகூலங்களைப் பெறுகின்றன. புதிய கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ஏ9 வீதிக்கருகில் கட்டப்படுகின்றன. ஆனால் கிராமவாசிகள் மருந்தகத்திற்குச் செல்வதற்கே பல மைல்கள் சைக்கிளில் செல்ல வேண்டி இருக்கும். ஆலங்குளம் கிராமத்தில் எதுவும் இடம்பெறவில்லை.

அண்மையிலுள்ள பிரதான நகரான மல்லாவியில் தான் மருத்துவ வசதி உண்டு. ஆனால் வீதியோரங்களில் கடைகள், பல வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள், ஒரு மதுபானக் கடை ஆகியன வரிசையாக அமைந்துள்ள மல்லாவி ஒரு பாலைவனச் சோலையாக காட்சியளிக்கிறது.

சொந்த இடங்களுக்குத் திரும்பிய மேலும் சிலர் உள்ள நிலைமையை பயன்படுத்தி அனுகூலம் பெற்றுள்ளார்கள். அரசாங்கமும் உலகி வங்கியும் அமுல் செய்யும் திட்டங்களைப் பயன்படுத்தி கந்தன் நமனதாஸ் சம்பாதித்த பணத்தை அவர் சேமித்துள்ளார். இவ்வாறு சேமித்த பணத்துடன் மேலும் 25,000 ரூபாவை (225 டொலர்) முதலிட்டு ஆலங்குளத்தில் ஒரு சிறு பலசரக்குக் கடையை அவர் திறந்துள்ளார். கிராமத்தில் பல தூரத்திற்கு வேறு கடைகள் எதுவும் இல்லை.

"நாளொன்றுக்கு சுமார் 2,500 ரூபா வருமானம் எனக்குக் கிடைக்கிறது' என்று அவர் கூறுகிறார். இப்பொழுது ஒரு சிறிய குளிர்ச்சாதனப் பெட்டியையும் மின் பிறப்பாக்கியையும் அவர் கொள்வனவு செய்ய இருக்கிறார். "அதற்காக நான் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அதற்கு ஈடு வைப்பதற்கு என்னிடம் சொத்து எதுவும் இல்லை' என்று நமனதாஸ் கூறுகிறார்.

யுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்த செல்வதுரை போன்றவர்கள் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று தாங்களும் இனிமேல் சமாதானத்தின் அனுகூலங்களை அனுபவிக்கலாம் என்று கருதுகிறார்கள். அதற்கு இருக்கும் வளங்களை உரிய முறையில் பயன்படுத்த பெருமுயற்சி செய்ய வேண்டும் என்பதை செல்வதுரை அறிவார்.

"இந்தக் கிராமத்தில் வேலைவாய்ப்புகளையும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்த யாராவது முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், எங்களுக்கு நல்ல வீதிகள் இருக்கும். ஆனால் பணம் இருக்காது' என்று அவர் கூறினார்.

ஐ.பி.எஸ்.
- Thinakural-

பாடசாலை மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்


14/07/2011
உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இளைஞன் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேசன் தொழில் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற தங்கராசா தயாகரன் என்ற 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளதாவது, உருத்திரபுரம் பகுதியில் உள்ள 15 வயதேயான மாணவி ஒருவர் பாடசாலைக்குச் சென்றிருந்த போது வகுப்பில் மயக்கமடைந்துள்ளார். வகுப்பாசிரியரும் ஏனைய மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வைத்திய உதவிக்காகக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு அந்த மாணவியைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அந்த மாணவி எட்டு மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார், அந்த மாணவியுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் அடிக்கடி உடலுறவு கொண்டு வந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து சந்தேக நபராகிய இளைஞனைக் கைது செய்து விசாரணை செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அவரை சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி வைத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீதான வைத்திய பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

வீரகேசரி இணையம்









No comments: