ஈழத்து இசை அமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்களின் வாழ்க்கையும் இசைப்பணியும். - திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்

.
ஈழத்துத் தமிழ் வரலாற்றில் தமிழ், சமயம், கலை, இலக்கியம், அரசியல், சமூகம் என்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சியிற் பங்காற்றியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களில் இருபதாம் நு}ற்றாண்டிலும் வாழ்ந்து இந்த நு}ற்றாண்டிலும் வாழ்ந்து ஈழமண்ணிற்தடம் பதித்த திரு கண்ணன் அவர்களின் வாழ்க்கையையும் இசைப்பணியையும் எனக்குத் தெரிந்தவரை இக்கட்டுரை மூலம் தர முயல்கின்றேன்.

திரு கண்ணன் அவர்கள் ஈழத்தில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் என்னும் இடத்தில் 1943 03 29 ல் பிறந்தவர் இவர் தனது ஆரம்ப இசைப்பயிற்சியைப் புலவர் சண்முகரட்ணம் அவர்களிடமும் நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் பெற்றார் பின்னர் சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடமும் வேலணை சங்கீதபூஷணம் இராஜலிங்கம் அவர்களிடமும் வாய்ப்பாட்டினை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு முழு நேரமும் தன்னை இசையில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். இசைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அவருடைய எண்ணத்திற்கமையச் சூழலும் உருவாகியது. அறுபதுகளிற் தென்னிந்தியக் கலைஞர்களின் வருகை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தென்னிந்தியக் கலைஞர்கள் குழுவாகச் சென்று இலங்கையில் முகாமிட்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. இச்சூழல் கண்ணன் அவர்களுக்கு மிகச் சாதகமாக அமையவே அவரும் இசைக்குழுவை உருவாக்கத் தீவிரமாக முயற்சி செய்தார். தான் எவ்வாறு இசைக்குழுவை ஆரம்பித்தார் என்பதைக் குளோபல் தமிழ் ஊடக நிறுவனத்திற்கு அவர் அளித்த செவ்வியிற் பின்வருமாறு கூறுகின்றார்.அந்தக்காலத்தில் ‘தினகரன்’ இசைப் பத்திரிகையினால் தினகரன் விழா ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. இது பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் யாழ்ப்பாணம் எங்கும் விழாக்கோலம் பூண்டு காணப்படும் இந்த விழாவில் வர்த்தக விளம்பர பவனியும் இடம்பெறும் சிறந்த விளம்பரப்பவனிக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. அந்த வர்த்தக விளம்பர பவனியில் நானும் கலந்து கொண்டேன். ஒரு வாகனத்தில் வீடு போன்றதோர் அமைப்பினை உருவாக்கி இசைக்குழுவிற்காக ஒன்று சேர்ந்த கலைஞர்களும் நானும் அந்த வாகனவீட்டிற் பவனிவந்த படியே எமது முதலாவது இசை நிகழ்ச்சியினை நடாத்தினோம். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு முதற்பரிசினையும் எமக்குப் பெற்றுத்தந்தது. எமது இசைக்குழுவிற்கு உறுதியானதொரு ஆரம்பமாகவும் இந்நிகழ்வு அமைந்து விட்டது.

மேலும் இந்நிகழ்வின்போது அறவிப்பாளராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்த திரு நடராஜா என்பவர் சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியைத் தயாரித்துத் தரும்படி வேண்டினர். யாழ்ப்பபாணக் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு கர்நாடக சங்கீதபாணியில் இலகு சங்கீதமாக இசை அமைத்துப் பத்துப் பாடல்களை அந்த நிகழ்வில் வழங்கியிருந்தோம். இந்நிகழ்வு யாழ்ப்பாண மக்கிடையே மட்டுமல்லாது தென்இலங்கை மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஈழத்து மெல்லிசை அமைப்பாளராகக் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகவே கொழும்பில் இருந்தபடியே இசைக்குழுவையும் நடாத்திவந்தேன் என்னுடன் “நேசம்” என்பவரும் இணைந்து கொண்டதால் எமது இசைக்குழு “கண்ணன் நேசம்” இசைக்குழு என்ற பெயரைப் பெற்றது.

இக்கால கட்டத்தில் நாடகக்குழுக்களோடும் எனக்கு அறிமுகம் கிட்டியது நாச்சிமார் கோவிலைச் சேர்ந்த “வண்ணக்கலைவாணர்” நாடகக்குழுவில் (இதை இயக்கிவர் ஈழத்தின் பழைய நடிகரும் ஒப்பனையாருமாகிய திரு அரசையா அவர்கள்) இசை அமைப்பாளராக இருந்துள்ளேன். கொழும்பில் ஜெகசோதியின் “சிவசக்தி” கலை அரங்கிலும் இசையமைப்பாளராக இருந்து எரிமலை, கண்டி விக்ரமராஜசிங்கன் ஆகிய நாடகங்களுக்கும் இசை அமைத்துள்ளேன்.


1978ம் ஆண்டு நவீன நாடக இயக்குனர் நட்சத்திரவாசி பாலேந்திரா அவர்களின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. பாலேந்திரா அவர்களால் 1979ம் ஆண்டு மேடையேற்றப்பட்ட யுகதர்மம் நாடகம் காலதாரணி நிகழ்வு, 1980ம் ஆண்டு மேடையேற்றப்பட்ட “முகம் இல்லாத மனிதர்கள்” நாடகம் 1981ல் மேடையேற்றப்பட்ட “ஒரு பால வீடு” நாடகம் 1982ல் மேடையேற்றப்பட்ட துக்ளக் ஆகியவற்றுக்கும் இசை அமைத்தேன்.

இவை அனைத்தும் எனக்கு நல்லதோர் அனுபவமாக எமது இசைக்குழுவின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் அமைந்தன. எங்கள் இசைக்குழுவும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவிட்டது.

ஈழத்து மெல்லிசைப்பாடல்கள், பொப்இசை, றொக்இசை, ஆங்கில இசை, தென்னிந்தியத் திரைஇசை, பக்திப்பாடல்கள் போன்றவை எமது இசைக்குழுவால் இசைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் பிரபல சிங்களத் திரைப்பட இசை அமைப்பாளர் திரு றொக்சாமி அவர்களின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. அவர், கீபோட், வயலின் செக்ஸபோன் ஆகிய கருவிகளை இசைப்பதில் வல்லவர் சிறந்த இசையமைப்பாளர் அவரோடு இணைந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதும், “தெய்வம் தந்த வீடு” என்ற ஈழத்துத் தமிழ்த்திரைப்படத்திற்கு இசை அமைத்ததும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒர் அனுபவம். இவ் அனுபவம் இசைத்துறையில் ஆழமான ஈடுபாட்டையும் உற்சாகத்தினையும் எனக்கு ஏற்படுத்தியது. தொடர்ந்து கோமாளிகள் ஏமாளிகள் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்பையும் தந்தது. முதன்முதல் சிங்களத்திரைப்படத்திற்கு இசை அமைத்த திரு முத்துஸ்வாமி ஐயர் அவர்களது அறிமுகம் இவ்வேளையில் எனக்குக் கிடைத்தது என்கின்றார்.

“மேலும் ஈழக்கவிஞரான தீபச் செல்வனின் கவிதை வரிகளைப் “பூப்பூத்த நகரில் யார் வந்து புகுந்தார்” என்னும் பாடலாகவும் மாற்றியிருக்கின்றார் திரு கண்ணன் அவர்கள். ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுரோஜா மலரே என்னும் பாடலுக்கு இசை அமைத்தவர்கள் “கண்ணன் நேசம்” இசைக்குழு ஆகும். அருவி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட ‘குளிரும் நிலவு’ இசைத்தட்டில் உள்ள ‘பாலை வெளி’ என்ற என் சண்முகலிங்கம் எழுதிய பாடலையும் “கண்ணன் நேசம்” இசைக்குழுவினர் இசையமைத்துள்ளனர். 1980ல் கண்ணன் அவர்களின் இசையில் ‘கானசாகரம்’ என்ற நிகழ்ச்சி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது” (தகல் குளோபல் தமிழ் செய்திகள்)

கர்நாடக இசை, பொப் இசை, மெல்லிசை பக்தி இசை, திரைஇசை, நாடக இசை, என்று பல பரிமாணங்களிலும் கண்ணனின் இசை ஆளுமை விரிவடைவதை நாம் இங்கு கவனிக்க முடிகின்றது. பாடல்களுக்கு இசை அமைப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. நல்ல இசை அறிவு வேண்டும் வாத்தியங்களைக் கையாளத் தெரியவேண்டும் திரை இசை, நாடகஇசை என்று எந்தத் தளத்தில் நிற்கின்றோமோ அந்தத்தளத்தில் நின்று அவற்றை உள்வாங்கி அந்தக்கதையம்சங்களுக்கு ஏற்ப சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு பாடல்களின் பொருளை அறிந்து இசை அமைத்தல் வேண்டும். அது மக்களிடம் செல்லும் போது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பிரக்ஞையும் இசையமைப்பாளருக்கு இருக்கவேண்டும்.

தமிழ் நாட்டில் வாழ்ந்த எம். எம். தண்டபாணி தேசிகர் பாரதிதாஸனின் பாடலான ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்ற பாடலுக்கு மெட்டுப்போட இரண்டு வருடங்கள் சிந்தனை செய்தாராம் ‘தேஷ்’ இராகத்தில் அமைந்த மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல் அது.

திரு கண்ணன் அவர்கள் 1983ம் ஆண்டு வரை இசைக்குழு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், நாடகக்குழு என்று அவர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டு அவற்றை எல்லாம் துறந்துவிட்டு 1983ல் யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோவிலில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு தனது குடும்பத்தாருடன் ஒய்வெடுக்க எண்ணி வந்தார். ஒரு வருடம் ஒய்வாக இருந்திருப்பார் மீண்டும் கலை உலகம் அவரை விடவில்லை. காரணம் ஈழத்தில் இருந்த தரமான இசையமைப்பாளர் கண்ணன் ஒருவரே.

யாழ்ப்பாணத்தில் சி.மௌனகுருவின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட ‘புதியதொரு வீடு’ ‘சம்காரம்’ ஆகிய நாடகங்களுக்கு இசையமைக்கும் பணியேற்று மீண்டும் நாடக உலகினுட் பிரவேசிக்கின்றார். 1985ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மண் சுமந்த மேனியர்” என்ற நாடகத்திற்கும் “எங்கள் மண்ணும் இந்த நாட்களும்” என்ற கவிதா நிகழ்விற்கும் கண்ணனே இசை அமைத்தார். இவ்விரு நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய சாதனையைப் புரிந்தவை. இதற்குக் கண்ணனுடைய இசையும் மிகமுக்கிய காரணம் என்று விவரிக்காத விமர்சகர்கள் இல்லை.

‘மண் சுமந்த மேனியர்’ குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு சிதம்பரநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டது. எங்கள் மண்ணும் இந்த நாட்களும் சுவிதா நிகழ்வில் இடம் பெற்ற கவிதைகள் பாடல்கள் அனைத்தும் உ.சேரன் அவர்களுடையது.

இந்த இரு நிகழ்வுகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்நிலைப் போராட்டங்களையும் (அகம், புறம்) அவற்றின் வலிகளையும் 1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் அழிவுகள், இழப்புகள், துயரங்கள் ஆகியவற்றையும் சித்தரிப்பனவாக அமைந்து இருந்தன. இந்நிகழ்வுகளுக்கு இசை அமைப்பதற்குக் கண்ணன் அவர்கள் உபயோகப்படுத்திய இசைக்கருவிகள் ஒரு ஹார்மோனியம், ஒரு வயலின், ஒரு தபேலா ஆகியவை மட்டுமே. 1985 ற்கு முன்னர் அமைத்த இசைகளை விட இவை சற்று வித்தியாசமாகவே அமைந்து இருந்தன. தமிழிசையை அடிப்படையாகக் கொண்டு நாட்டாரியற் கூறுகளையும் அவற்றுடன் இணைத்து அவசியம் ஏற்படின் மேலைத் தேசஇசை உத்திகளையும் கையாண்டு யாழ்ப்பாணக் கலாசாரப் பின்னணியையும் இணைத்துத் தனது கற்பனைகளைப் புகுத்தி மண்வாசனையுடன் அவரது தனித்துவமான ஆளுமையில் பாடல்கள் உயிர்பெற்று எழுந்தன. அவற்றைப் பாடும் போது பாடகர்களும், நடிகர்களும் வெளிப்படுத்திய உணர்வலைகள் யாழ்ப்பாணத்தை அதிரச் செய்தன. யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இவ்விரு நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது போல இக்காலத்தில் யாழ்ப்பாணத்துப் புல்லும் விடுதலைக்கவி பாடியது. மண் சுமந்த மேனியர் நாடகத்தில் இருந்து கண்ணனின் இசையில் உருவானதோர் யாழ்ப்பாணத்து நாட்டார் பாடல் இது.

தெந்தினத் தின்னா தினத்தினத் தின்னா
தினத்தினத் தன்னா தினளானா
திக்கிட திரிகிட கணபதி சரணம்
சீரிய யானைக் கன்றே சரணம்
                                                                      தெந்தி-----


வாரண மதமுள்ள கணபதி சரணம்
அன்புடை அமரர்கள் நாதா சரணம்
                                                                        தெந்தி---


இந்த நாடகம் நிறைவடைந்து நடிகர்கள் மேடையை விட்டு இறங்கி மக்களோடு கலக்கும் போது மக்களின் விண்ணைப்பிளந்த கோஷங்களிடையே கவிஞர் சேரனிடம் இருந்து முகிழ்த்தது. ஒரு பாடல் இதற்கும் கண்ணன் அந்தக் கணமே இசையமைத்தார்.

எத்தனை காலங்கள் இப்படிப் போயின
நீங்கள் எழுந்திருங்கள்
எங்கள் நிலத்தினில் எங்கள் பலத்தினில்
தங்கி நிற்போம் நாங்கள்
பொங்கி வரும் நதி வெள்ளமெனப்புயல்
வேகமுடன் எழுக
சிந்திய செங்குருதித் துளியோடு நீர்
போரிடவே வருக போரிடவே வருக

என்ற பாடல்தான் அது. மக்களனைவரும் இப்பாடலை உயிர்த்துடிப் போடு முழங்கினர் படைபடையாகத் திரண்டனர் இந்நிகழ்விற்கு விடுதலை முழக்கம் விண்ணைத் தொட்டன. எங்கும் விடுதலை எதிலும் விடுதலை என மக்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தெருக்கூத்து, வீதி நாடகம், வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம், நாடகம்


 நாட்டியம் ஓவியக்கண்காட்சி, புத்தகக்கண்காட்சி இலக்கிய விமர்சனம் என்று யாழ்ப்பாணம் அமளிப் பட்டது. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டியம், ஓவியம் என்று எல்லாப் படைப்புகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலையும் சமூகப் போராட்டங்களையும் மையப்படுத்தியே எழுந்தன.

நவீன நாடகத்துறையில் ஒரு புதிய எழுச்சி. புதுக்கவிதையில் ஒரு புதிய பரிமாணம் விடுதலைப் பாடல்களில் உயிர்த்துடிப்பு எல்லாவற்றிலும் ஒரு யதார்த்தப் பார்வை என்று ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன. இக் காலத்தில் தோன்றிய ஈழத்துப் படைப்புகளுக்கு நிகராக சிறப்பாகப் புதுக்கவிதையின் வளர்ச்சியோடு ஒப்பிட சமகாலத்தில் இந்தியப் படைப்புகள் எதுவும் இல்லை என்று இந்திய விமர்சகர்களாலேயே விதந்துரைக்கப்பட்ட காலம் இதுஅந்த நாள் இனி வருமாஅப்படி ஒரு யாழ்ப்பாணத்தைப்
பார்க்க இனி எந்தனை தவம் செய்ய வேண்டுமோ
காலனது காலடிகள்
காற்றதிரப் பதிவதற்கா
காலமகள் நீரெடுத்துக்
கோலமிட்டாள் மணற்பரப்பில்
நெற்கதிரே! நீள்விசும்பே
நெஞ் சிரங்காச் சூரியனே
புல்லின் இதழ் நுனியிற்
பூத்திருக்கும் பனித்துளியே
நீங்கள் அறிவீர்களா?
எம் நெஞ்சுறையும் சோகத்தை"
                                                   - கவிதை சேரன்


எங்கள் மண்ணும் இந்த நாட்களும் என்ற கவிதா நிகழ்வில் கண்ணன் இசையமைத்த ஈழத்துக் கவிஞர் சேரனின் பாடல் ஒன்று.

மூன்று நூற்றாண்டுகள் சென்றன
ஆயினும் அம்மா அம்மா
உன்னுடைய மென்கழுற்றில்
இன்னும் விலங்கு இன்னும் விலங்கு
                                                             --- மூன்று
நேற்றொரு காலம் உனது புதல்வரின்
விழிகளைப் பிடுங்கியே வீசினர்
இன்னொரு நேரம் உனது வீட்டின் மேல்
நெருப்பே எரியும் தினமும்.
                                                     -- மூன்று

அந்நியன்  கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும்
பாடுவோம் உயர்த்திய குரல்களில்
இன்னும் எம்குருதி இந்த மண்நனைத்த போதிலும்
நடக்கலாம் நீண்டதோர் பயணமே
                                                         ----- மூன்று


1986  ஆம் ஆண்டு தமிழ் ஈழ மாணவர் சார்பாகக் குருபரனால் வெளியிடப்பட்ட விடுதலைக் குரல்கள் என்ற ஒலிப்பேழைக்கான பாடல்களை ஈழத்துக் கவிஞர்களான ..சஜெயபாலன், .சேரன் ஆகிய இருவரும் எழுதியிருந்தனர். இவற்றிற்கான இசையை இசைவாணர் கண்ணன் அவர்கள் அமைத்திருந்தார். அதில் இருந்து ...ஜெயபாலனின் ஒரு பாடல்.

என் மனத் துன்பம் தாயின் பாடலில்
கண் வளராயோ செல்வா
தந்தையர்கள் தமிழ் ஈழமண் மீட்டிட
போர்க்களம் சென்றனர் செல்வா
                                            ------- என்மனத்
நீயும் உன் நாட்களில் விலங்குகளின்றி
நடந்திட வேண்டும் என் செல்வா
சாவின் ஓலமும் இளிமையும் வீழ்ந்திட
தந்தையர் எழுந்தனர் செல்வா
                                         -------- என்மன


விடுதலைப் போரினால் ஆயுதம் ஏந்தி
துயர்க்கொடி தாங்கி வாழ்ந்தோம்
கண்ணே உன் காலம் விடிக விடிகவென
விழிப்போடு கண் உறங்காய் செல்வா
                                                  ------- என் மன

இதே ஆண்டில் (1986  இல்சி மௌனகுருவின் "சக்தி பிறக்குது" என்ற நாடகத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த நாடகம் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது பரதமும் நாட்டுக்கூத்தும் இணைந்ததொரு நாட்டிய நாடகம் இது. இதற்கான நெறியாள்கையும் நாட்டுக்கூத்து அமைப்பும் சி.மௌனகுருவினுடையது நடன அமைப்பு செல்வி சாந்தா பொன்னுத்துரை அவர்களுடையது.

1987  இல் மீண்டும் சிதம்பரநாதனின் நெறியாள்கையில் கண்ணனின் இசை அமைப்பில் ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் புதியதொரு வீடு மேடையேறியது. இது யாழ்ப்பாணத்து மீனவ மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்றது. கண்ணனின் இசையமைப்பில் இன் நாடகத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று.

சிறு நண்டு கடல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும்
                                                                     ------ சிறு
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
                                                                    --------- சிறு
வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்
வெறி கொண்ட புயல் வந்து கரகங்கள் ஆடும்
                                                                         ----- சிறு
இருளோடு வெளியேறி வலை வீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறலாடும்
                                                             -------- சிறு

இதைத் தொடர்ந்து குழந்தை . சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய "உயிர்த்தெழுந்த மனிதர் கூத்து" பொய்க்கால் போன்ற நாடகங்களுக்கும் கண்ணன் அவர்கள் இசை அமைத்து இருந்தார்.
1990  இல் இந்த இசை போர்க்கால இசையாக மாற்றம் பெறுகின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இசைப் பனி புரிந்த கண்ணன் அவர்கள் இக்காலத்தில் தனது இருப்பிடத்தை வன்னிப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார்.  கால மாற்றங்களினால் அள்ளுண்டு அழிந்து போகாமல் அவற்றை அனுசரித்து மக்களின் தேவைகளை போராளிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை எல்லாம் உள்வாங்கி நல்லதோர் இசை அமைப்பாளராக மேலெழுகின்றார். கண்ணன் அவர்களுடைய ஆளுமையின் இன்னுமொரு பரிமாணம் இது. 1990  ஆம் ஆண்டின் பின் போராட்டக் களத்திலும் போராளிகளே கவிஞராக இருந்தும் பாடிய ஏராளமான பாடல்களுக்குக் கண்ணன் இசையமைத்துள்ளார். அவருடைய இரு பிள்ளைகளாகிய சத்தியனும் சாயிதர்சனும் தந்தையாருடன் வன்னியில் இருந்து இப் ணி சிறக்க உதவியுள்ளனர். அவர்கள் தனியாகவும் பல பாடல்களுக்கு இசையமைத்து உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இக் காலத்தில் கண்ணனின் இசையமைப்பில் வெளிவந்த புதுவை இரத்தினதுரை எழுதிய கீழ்க் கண்ட பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.
வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்
தள்ளிவலை ஏற்றிவள்ளம் போகும் மீன்
அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்.
எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது
எங்கிருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேட்காது
தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் மீன்
அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்.
எந்த வித தொழில் நட்ப வசதியும் இன்றி மிகக்குறைந்த வாத்தியங்களையும் மிகக் குறைந்த கலைஞர்களையும் வைத்துக்கொண்டு மண்ணின் மணம் கமழ மக்கள் மனதைப் பிசைந்து பிசைந்து உணர்வையும், புத்தியையும் உயிர்ப்பிக்கும் இசையைக் கண்ணன் அவர்கள் போர்க்கால இசையாக எமக்குத் தந்துள்ளார். போராட்டச் சூழலிற் குண்டுகள் பொழிய மானிடம் மரணிக்க மக்களின் கூக்குரல்களுக்கு மத்தியில் குருதிதோய்ந்த  மண்ணில் இந்த அற்புதமான பாடல்கள் உருவாகியுள்ளன.
1996 என்ற வெளிவராத குறும் படத்திற்கான இசையமைப்பும் கண்ணனுடையதே அண்மையில் முள்ளி வாய்க்கால் பேரழிவினை நினைவு கூறும் முகமாகக் குளோபல் தமிழ் ஊடக நிறுவனம் தயாரிக்க சோமிதரன் தொகுத்த காலத்துயர் என்ற விவரணப் படத்தில் ஈழத்துக் கவிஞரான 'தேவ அபிரா' எழுதிய 'மூன்கிலாறே' என்ற அறிமுகப் பாடலுக்கும் கண்ணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இதோ அப்பாடல்
மூங்கில்  ஆறே முது நாள் நதியே
மூச்சின்றிக் கிடந்தாயோ
காற்றில் ஆயிரம் கனல்கள் பறந்தன
சேற்றில் ஆயிரம் பிணங்கள் நெரிந்தன
காட்டின் ஒருபிடி கருகிச் சரிந்தது
கண்ணீர் மல்கி நாம் கரைந்துறைந்தோமே.
ஆடிய கால்கள் அடங்கிப் போயின
மோதிய விழிகள் மோட்சம் அடைந்தன
ஆடாக் கடலில் அந்நியன் படுத்தான்
கூடாக் கனவொடு குறுகிப் போனோமே
இவ்வாறு ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த கண்ணன் ஈழ மண்ணினின் இசையமைபாளராகத் தடம் பதித்து ஈழத்து மெல்லிசை, போபிசை, றொக்கிசை, ஆங்கில இசை, கர்நாடக இசை, ஈழத்துத் தமிழ்ச் சினிமாவின் இசை நாடக இசை, பக்தி இசை, போர்க்கால இசை என்று பல பரிமாணங்களிலும் அவரது புலமை விரிந்து ஆளுமை மிக்க அற்புத மனிதராக வாழ்கின்றார். தன்னுடைய புத்திரர்களான சத்தியனையும், சாயி தர்சனையும் இத்துறையிலேயே ஈடுபடுத்தியுள்ளார்.
இவ்வளவு ஈழத்துப் பாடல்கள் இருக்க (இது மட்டுமல்ல இன்னும் நிறைய உண்டு) தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களை மேடையில் முழங்கி விட்டு நாம் ஈழத்துப் பாடகர் நாம் ஈழத்துக் கலைஞர், நாம் ஈழத்தமிழர் என்று பறை சாற்றுவதில் என்ன பெருமை இருக்க முடியும்?
கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக - வள்ளுவர் -

No comments: