மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 1


.
                                                                                           பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


நீர்வளமும், நிலவளமும் நிரம்பப்பெற்றது மட்டக்களப்பு நாடு. அந்த மண்ணிலே நிறைந்திருப்பது கனிவளம். மக்கள் மனதிலே உறைந்திருப்பது கவிவளம். மானோடும் காடுகளும், மயிலாடும் சோலைகளும், வற்றாத நீர் பாயும் வாவிகளும், தானாக விளைகின்ற கழனிகளும் நிறைந்த அந்த நாட்டிலே மீன்கூட, பாடும்! அந்த மக்கள் கதைக்கும் தமிழிலும் ஒரு கவிநயம் தெரியும். வளம் மிகுந்த நாடு என்பதால், மக்களுக்கு ஓய்வுநேரம் மிக அதிகமாகவே இருந்தது. அதனால் கலைகளில் ஈடுபாடு மிகுந்தது.

உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் அவர்கள் மிக அழகாகப் பாடினார்-

மட்டுநகர் நாடு கவி மணக்கும் நாடு
மகளிர் வாய்த் தாலாட்டில் மயங்கும் நாடு



……………………………………
……………………………………
என்நேரமும் இங்கே பாடல் கேட்கும்
இப்பக்கம் வசந்தன்பா! இன்னோர் பக்கம்
புன்னைமர நீழலிலே ஊஞ்சல் பாட்டு
     புறத்தே ஓர் வீதியிலே அழகுக் கும்மி
கண்ணகியாள் கோயிலிலே குளுத்திப் பாடல்
காற்றெல்லாம் உழவர்தம் பொலிப்பாட்டோசை
மண்ணளைந்து கிட்டிக் கோல் ஆடும் சேயர்
மணிவாயில் எப்போதும் நாட்டுப் பாடல்......

கூத்தும், பாட்டும,; கும்மியும்,  குரவையும் அங்கே வெறும்; பொழுது போக்குக்களல்ல. அவை வாழ்வின் நடைமுறைகள். ஆடலும் பாடலும்; அரங்கேறுகின்ற வெறும் நிகழ்ச்சிகளல்ல. அவை பண்பாட்டுச் சிறப்புக்கள்.

நாட்டுக்கூத்து, வசந்தன,; கும்மி, கோலாட்டம், கொம்புமுறியாட்டம்,  கரகாட்டம், காவடியாட்டம் என்பன கிராமியக் கலைவடிவங்கள். முறையான ஆட்டமும், இசையோடு பாட்டும் இணைந்த நிகழ்ச்சிகள்.

நாட்டுக்கூத்தில் வடமோடி, தென்மோடி என இரண்டு வகைகள் உள்ளன. தாளக்கட்டு, ஆடல் வகை என்பவற்றின் கடுமையான விதிமுறைகள் காரணமாக வடமோடி நாட்டுக்கூத்தை ஆடுவோர் மிகக் குறைவாகவே இருந்தனர். தென்மோடி நாட்டுக்கூத்து கிழக்கிலங்கையின் பெரும்பாலான கிராமங்களில் ஆடப்பட்டுவந்தது. இப்பொழுதும் சில கிராமங்களில் நாட்டுக்கூத்து மிக நல்லமுறையிலே பேணப்பட்டுவருகின்றது.

வசந்தன், கும்மி, கோலாட்டம் என்பன பெரும்பாலும் மகிழ்ச்சியான உணர்வுகளை உள்ளடக்கிய பாடல்களைக் கொண்டவை. குதூகலம் நிறைந்த ஆட்டங்கள். கரகாட்டம், காவடியாட்டம் என்பன பக்தியோடு கூடியவை. பெரும்பாலும் கோயில் திருவிழாக்களிலேயே ஆடப்படுபவை.

கொம்புமுறியாட்டம் எனப்படும் மிகப்பிரபல்யமான ஆட்டமும், அதில் பாடப்படும் கொம்புமுறிப் பாடல்களும் தோன்றியமைக்குச் சிலப்பதிகாரமே காரணம் என்று சொல்லப்படுகின்றது. கோவலன் கொலையுண்டதால் கோபங்கொண்ட கண்ணகி மதுரையை எரித்த பின்னரும் கோபம் தணியாதிருந்ததாகவும், அவளின் கோபத்தைத் தணிக்க இடையர்கள் கொம்புவிளையாட்டினை நடத்தி அவளைக் குளிர்வித்தார்கள் என்றும் பேசப்படுகின்றது. அதன் விளைவாக ஆரம்பமானதே கொம்புமுறிப் பாடல்கள் என்று கூறப்படுகின்றது.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பிரசித்திபெற்றது என்பதும், அங்குள்ள கண்ணகியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கடைசித் திருவிழா “குளுத்தி” திருவிழா என்பதும், கோபங்கொண்ட கண்ணகியம்மனைக் குளிர்ச்சிப்படுத்துவதாகவே இந்தத் திருவிழா அமைந்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்கள்.

வசந்தன், கும்மி, கோலாட்டம், கொம்புமுறியாட்டம் என்பவற்றில் இடம் பெறும் பாடல்கள் பெரும்பாலும் ஏற்கனவே ஆக்கப்பட்டு இசையோடு சோர்க்கப்பட்டவை என்றாலும், இனிமையும் பொருத்தமும் காரணமாக  இத்தகைய கலை  வடிவங்கள் சிலவற்றில் இடம்பிடித்துக்கொண்ட நாட்டுப்பாடல்களும் உண்டு.

நாட்டுப்பாடல்;கள் என்பவை பாமரமக்களின் உணர்ச்சிப் பிரவாகங்களின் பிரசவங்கள். இன்பத்திலும் துன்பத்திலும,; நெஞ்சத்திலிருந்து வெளிக்கிளம்பும் தங்குதடையற்ற உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள். இலக்கணம் அறியாத மக்களின் இதயங்களிலிருந்து வெளிப்பட்ட இலக்கியங்கள். அவை பாமரமக்களின் வாய்வழிவந்து, பரம்பரை பரம்பரையாகச் செவிவழி பயணம் செய்யும் தௌ;ளுதமிழ்ப்பாடல்கள்.

மட்டக்ளப்பு நாட்டுப் பாடல்கள் மக்களின் நாளாந்த வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளையே கருப்பொருளாகக் கொண்டவை. அப்;பாடல்களில் குறிப்பிடப்படும் பாத்திரங்கள் உண்மை வாழ்விலே உலவுகின்றவர்கள். காதலைப்பற்றி மட்டுமன்றி கள்ளக் காதலைப் பற்றியும் பாடல்கள் உண்டு.

நேரடியாகத் தமது உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதுதான் நாட்டுப்பாடல்களின் தனிச்சிறப்பாகும். இதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த நேரங்களில் வெளிப்படுத்திய  வார்தைகளே நாட்டுப்பாடல்களாக அமைந்தமைதான்.
காதல் வயப்படும் போதும், காதலரைக் கண்டபோதும், காணாமல் தவிக்கும் போதும், பெற்றோரிடம் காதல் பற்றித் தெரிவிக்கும் போதும், பெற்றோர் கண்டிக்கும் போதும், மற்றும், நெல் குற்றும்போதும், வயலிலே உழுகின்றபோதும், நெல் விதைக்கும்போதும்,
நீர் பாய்ச்சும்போதும், நாற்று நடுகின்றபோதும், அருவி வெட்டுகின்றபோதும், சூடு மிதிக்கின்றபோதும். . . . . இப்படி, அன்றாட வாழ்வின் ஒவ்வோர் அசைவிலும் நெஞ்சத்து உணர்வுகளை அந்த மக்கள் வெளிப்படுத்தியபோது அவை வெறும் வார்த்தைகளாகவன்றி, கவிதைகளாக வெளிவந்தன. அந்தக் கவிதைகளிற் பல சந்தக் கவிதைகளாயமைந்தன. விடயத்துக்கேற்ப ஏற்ற இறக்கத்தோடு இசையும் கலந்து வெளிப்படுத்தப்பட்டன.

வீட்டுக்கு வீடு அவ்வப்போது வெளிப்பட்ட இத்தகைய பாடல்கள் வீட்டைக் கடந்து, ஊரைக் கடந்து, வாய்வழி வந்து செவிவழி நுழைந்து காலத்தைக் கடந்து இன்றும் வாழ்கின்றன. இப்போது ஏட்டில் இடம்பெற்றுவிட்டதால் இப்பாடல்கள் வாழ்விழந்து போகாமல் காப்பாற்றப்பட்டு விட்டாலும், காலவோட்டத்தில் வழக்கொழிந்து போவதைத் தடுக்கடுடியாது. ஏனெனில் நாளாந்த வாழ்வில் இவற்றைப் பயன்படுத்தும் பண்பாடு அருகிவருகிறது என்பதுடன், புதிதாக இத்தகைய பாடல்கள் தோன்றுவதும் அரிதாகிவிட்டது.

எந்தெந்த ஊர்களில் எந்தெந்தப் பாடல்கள் தோன்றின என்பதற்கோ, வழக்கிலிருந்தன என்பதற்கோ ஆதாரம் கிடைப்பது அரிதானதென்றாலும், சிலபாடல்களில் வருகின்ற ஊர்களின் பெயர்களைக் கொண்டு அப்பாடல்கள் அவ்வந்த ஊர்களோடு தொடர்புள்ளவை என்பதை ஊகிக்க முடிகிறது.

காதலன், காதலி, தாய், தந்தை, மாமன், மாமி, மச்சான், மச்சாள், பாட்டன், பாட்டி, நண்பர்கள், சக தொழிலாளர்கள் என்று இவ்வாறு நிவவுகின்ற உறவுமுறைகளுக்கிடையில் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் நடந்த உரையாடல்களே இந்தநாட்டுப்பாடல்களாகும். வார்த்தைகளில் சொல்ல வேண்டியவற்றைப் பாடல்களாகச் சொல்லியிருக்கிறார்கள். தனித்தனிப் பாடல்களாகவும், பதிலுக்குப்பதிலாகப் பகரப்பட்ட பாடல்களாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இவை தோன்றின. இப்பாடல்களுக்குப் பொருத்தமான சந்தர்ப்பங்கள் தமது வாழ்க்கையில் வந்து வாய்க்கின்றபோது அவற்றை அறிந்திருந்த மக்கள் அச்சந்தர்ப்பங்களில் தாமும் அவற்றைப் பயன்படுத்திவந்தனர். அதன்காரணமாகவே இப்பாடல்கள் வழிவழிவந்து நிலைபெறமுடிந்தது.

இத்தகைய பாடல்களைப் பொருளுக்கேற்பக் கோவைப்படுத்தி, அவை எத்தகைய சந்தர்ப்பங்களில் பாடப்பட்டிருக்கலாம் என்பதைக் கற்பனை செய்து, விடையங்களுக்கேற்ப வௌ;வேறு அத்தியாயங்களில் நாடகபாணியில்  அமைத்துக் கீழே தருகிறேன். எந்தெந்த ஊர்களிலோ, யார்யாருக்கோ இடையில் நடந்திருக்கக்கூடிய வௌ;வேறு சம்பவங்களில் இடம்பெற்றிருந்திருக்கக்கூடிய பல பாடல்கள் சுவை கருதி ஒரே காட்சியில் தொகுத்துத் தரப்படுகின்றன. இடமும், ஆட்களும் வேறாக இருந்தாலும் களமும், கருவும் ஒன்றாக இருப்பதைக் கருத்தில் கொண்டு கற்பனையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டுப் பாடல்களிலுள்ள கருத்துச் செறிவும், கவிநயமும் இக்கற்பனைத் தொகுப்பு மூலம் நன்கு வெளிப்படவேண்டும் என்பதே நோக்கம். வெளிப்படும் என்பது நம்பிக்கை.
அத்தியாயம் 1


காதலர் ஊடல்


இந்த அத்தியாயத்திலே கருத்தொருமித்த காதலர் இருவரின் வாடலையும், ஊடலையும் பற்றிய பாடல்களைத் தொகுத்துப் பார்ப்போம்.


சொன்னபடி காதலன் வீட்டுக்குத் தன்னைத்தேடி வரவில்லை.  அதனால் சோர்ந்துவிட்டாள் காதலி.  அவருக்கு என்ன நடந்ததோ? ஏதாவது பிரச்சினையோ என்று அன்றிரவு முழுக்க அவள் தூங்கவில்லை.  மறுநாள் அதிகாலையில் எழுந்து, சிலவேளை ப+வலடிக்கு வருவான் என்ற நம்பிக்கையில், அங்கே செல்கிறாள்.  அவனுக்கும் அவளது நினைவுதானே.  எனவே எண்ண அலைகளால் தூண்டப்பட்ட அவனும் அங்கே வருகிறான்.  முன்னாலே செல்லும் அவளைப்பார்த்து பின்னால் நடந்து கொண்டே அவன் பாடுகிறான்.

மான்போல நடை நடந்து
மயில்போல் சிறகொதுக்கித்
தேன்போல் குடி கிளம்பி - என்ர,
சின்னவண்டு போறதெங்கே?

அவனது குரலை கேட்டதும் அவள் இதயத்தில் இன்ப வெள்ளம் பொங்குகிறது.  நிலத்தில் அரைக்கண்ணும் அவன் முகத்தில் அரைக்கண்ணுமாக நாணத்தோடு நோக்குகிறாள்.  உடனேயே நேற்றுத் தன்னை ஏமாற்றியதற்காக, நெஞ்சிலே பொயக்கோபம் வந்துவிடுகிறது.  நின்று நிமிர்ந்து கழுத்தால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு தொடர்ந்து குனிந்து நடக்கிறாள்.  அவனுக்கு அவளது கோபம் விளங்கி விட்டது.  பாடுகிறான்.

இஞ்சி கல்லப் போன என்ர,
இளமயிலே தாராவே
கண்கள் சிவந்து நீ,
கடுங்கோப மானதென்ன?

அவளுக்குக் கோபம் ஒரு புறம், கவலை மறுபுறம்.  இருப்போமோ விழுவோமோ என்றபடி கண்களிலே தத்தளிக்கும் கண்ணீர்த்துளிகள்.  பாடுகிறாள்...

மனசை மனசறியும்
வஞ்சகத்தை நெஞ்சறியும்
நெஞ்சிலுள்ள ப+ங்காரத்தை
யாரறியப் போறார்களோ?

அதிர்ந்துவிட்டான் அவன்!  காதலியின் கோபத்தை தாங்கும் சக்தி உலகில் எந்தக் காதலனுக்குத்தான் உண்டு.  அதிலும், படிப்பறிவில்லாத பாமரன், கள்ளங்கபடமில்லாத கிராமத்தவன் - அவனால் தாங்க முடியுமா?

ஓலையை வெட்டி
ஓழுங்கையிலே போட்டதுபோல்
வாடுறன் கண்ணே உன்ர
வண்ணமுகம் காணாமல்

அதனால்தான்,

ஓடிவரும் தண்ணீரில்
உலவிவரும் மீனதுபோல்
நாடிவந்தேன் பெண்ணே உந்தன்
நல்லுறவு வேணுமெண்டு
என்று சொல்லித் தன் இதயத்தை அவன் திறந்து காட்டுகின்றான்.  இருந்தாலும், ஊடலில் உள்ள இன்பத்தை எளிதில் இழக்க அவளால் முடியவில்லை.  வானத்தைப் பார்த்தபடி குத்தலாகப் பாடுகிறாள் -

கதைப்பார் கதையெல்லாம்
கல்லுருகி நெல்விளைய
சிரிப்பார் கொடுப்பால் - உங்கள்,
சொல்லையுமா நம்புறது?

உடனே அவன் நெருங்கி வந்து அவளைச் சமாதானப்படுத்தும் தொனியில் -

அன்று முளைத்து நாளை
அழிந்துவிடும் பூண்டோதான்
என்றும் நிலைத்திருக்கும்-நல்ல,
இன்பம் உண்மை அன்பாகும்

என்று அவளின் மாறாத காதல் மனதை உசுப்பி, ஊடலைத் தகர்க்க முனைகிறான்.

அத்தோடு மட்டும் விடவில்லை.  அவளிடம் கேட்கிறான்.

தங்கச் சிலையே மச்சி
தாமரை முகநிலவே
செங்கல் வடிவே நாங்க
சேருவது எப்பகிளி?

அவளது உடல் நிறத்தைச் செங்கல்லின் நிறத்துக்கு ஒப்பிடும் இந்தப் பாடலின் சுவைதான் எத்தகையது!

நேற்று வரவில்லை.  இன்று மட்டும் வந்து இதென்ன அதிகம் பேச்சு... என்பது போல அவள் திருப்பிப் பாடுகிறாள்.

காலமில்லாக் காலம்
கண்டதில்லை ஒரு நாளும்
இன்றைக்கு வந்ததென்ன
காரியமோ நானறியேன்

மேலும் பாடுகிறாள். வருவேன் என்று சொல்லிவிட்டு அவன் வராமல் இருந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பாடுகிறாள்-

வாயிருந்தால் இந்த
வயது வந்த புளியமரம்
சொல்லாதோ எந்தன்
துரை சொன்ன உறுதிமொழி

அவனுக்கு அவளின் கோபத்தின் காரணம் தெரியாதா என்ன?   தான் நேற்று வராமல் விட்ட காரணத்தை இனியும் கூறாது விட்டால் அவள் மனம் வேதனை தாங்காது என்பதால் தன் உள்ளத்தைத்திறந்து காட்டுகிறான்.

ஓடி வருவேன் கண்ணே
ஓழுங்கையில் தங்கி நிற்பேன்
உன்னை நினைப்பேன் பெண்ணே
உங்க வீட்ட வர நாட்டமில்லை

ஏனென்றால்

தெருவால போகவெண்ணா
தேன்போல மணக்கிறது
உறவாட நான் வருவேன் - உன்ர
அண்ணன்மார் காவலாமே?

அதுமட்டுமா?

வேப்ப மரத்தினிலே
வெற்றிலையால் கூடுகட்டி
தங்க வருவேன் - உன்ர,
தம்பிமாரும் காவலாமே

உன் அண்ணன்மாரும், தம்பிமாரும் உனக்குக் காவலாக இருக்கும்போது உன்னைத்தேடி நான் உன் வீட்டுக்கு வந்தால் அதனால் ஏதாவது தகறாறு வந்துவிட்டால் பின்னர் உனக்கல்லவா கஷ்டம், நம் உறவுக்கல்லவா நஷ்டம்.  அதனால் தான் நான் அங்கு வரவில்லை என்று கூறுகிறான்.  அதற்கு அவளது பதில் இது -

கடப்படியில் வந்து நின்று
காளை கனைக்குமென்றால்
எங்கிருந்த போதும் நாகு
எழுந்து வரமாட்டாதோ

எப்படியிருக்கிறது சிலேடை!  காளை மாடு வீதியில், வீட்டுக் கடப்பருகில் வந்து நின்று கத்தினால், வீட்டில் எங்கேயிருந்தாலும் நாகு - அதாவது பெண்மாடு எழுந்து ஓடி வரமாட்டாதா என்கிற இந்தப் பாடலின் உட்பொருள் எவ்வளவு அருமையாக அமைந்திருக்கின்றது.அவளது கோபம் தணிகிறது என்பது அவனுக்குப் புரிகிறது.  எனவே இப்படிப் பாடுகிறான் -

அன்புக் களஞ்சியமே
அழகொழுகும் சித்திரமே
கற்புக்கணிகலமே  உன்னை,
காண்பதற்கு ஓடிவந்தேன்

எனவே,

மாடப்புறாவே என்ர
மலைநாட்டு நங்கணமே
மாமிக்கொருமகளே - என்னை,
மறந்து விட எண்ணாதே

என்று கெஞ்சுகிறான்.

இதைக் கேட்டதும் அவளால் தாங்க முடியவில்லை.  மறப்பதா? அவனையா?  நானா?  இந்த வார்த்தையே அவளை வாட்டுகிறது.  பட்டன்று பாட்டு வருகின்றது.

உன்னை மறப்பதென்றால்
உயிரோடு ஆகாது
மாண்டு மடிவது தான்
மறப்பதற்கு மாற்றுவழி

எவ்வளவு தெளிவாக, உறுதியாகச் சொல்லி விட்டாள்.  சொன்னதோடுமட்டும் நிற்கவில்லை, வீடு நோக்கித் திரும்பி நடக்கிறாள்.  உடனே அவன் இன்னும் கொஞ்ச நேரம் கதைத்திருந்துவிட்டுப் போகலாமே என்று இப்படிக் கேட்கிறான் -

கட்டை விரலழகி - என்ர,
கமுகம்ப+ மார்பழகி
ஈச்சம் குருத் தழகி - நீ,
இருந்து போனால் என்ன வரும்?

அவளுக்கும் ஆசைதான்.  ஆனால், வந்து நெடுநேரம் ஆகிவிட்டது.  இனியும் தாமதிக்க முடியாது, எனவே, அவனை எங்கே, எப்போது மீண்டும் சந்திப்பது என்று சொல்லிப் பாடிக் கொண்டே ஓட்டமும் நடையுமாகச் செல்கிறாள்.

சந்தன மரத்தை மச்சான்
சந்திக்க வேணுமென்றால்
பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்துபோங்க.

விளக்கேற்றி இருசாமம்
வெள்ளி நிலா வேளையிலே
குளத்தோரம் வந்திடுங்கோ
கூடிக் கதைத்திடலாம்

அவள் பாடிக்கொண்டே ஓடுகிறாள்.  நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியோடு அவள் போவதையே வைத்தகண் வாங்காமல் அவன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

தொடர்ச்சி அடுத்த வாரம்

No comments: