அயராமல் இயங்கிய மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் - முருகபூபதி

.
நான் எழுத்துலகில் பிரவேசித்த 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதனால் கொழும்பில் வீரகேசரி அலுவலகத்திற்கு அடிக்கடி செல்ல நேர்ந்தது. அவ்வேளைகளில் அங்கு பிரதம உதவி ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எஸ்.எம். கார்மேகமும், எஸ்.நடராஜாவும் தான்.

இவர்கள் இருவரும் இருமருங்கும் அமர்ந்திருக்க நடுவே-நடுநாயமாக செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ இருப்பார். இவர்கள் மூவருக்கும் பின்னால் அமைந்திருந்த அறைகளில் ஒவ்வொன்றிலும் ஆசிரியர்களான கே.வி.எஸ்.வாஸ், க.சிவப்பிரகாசம் ஆகியோர் அமர்ந்திருப்பர்.

இவர்களின் கண்பார்வைக்கு முன்பாக துணை ஆசிரியர்கள்.

ஆசிரிய பீடத்துக்குள் நுழைந்தால் - வாசல் பக்கமாக வலதுபுறம் அன்னலட்சுமி இராஜதுரை, அவருக்கு அருகில் நிர்மலாமேனன், இடது புறம் ஓவியர்கள் ஜெயபாலன், மொராயஸ், அவர்களுக்கு பக்கத்து அறையில் மித்திரன் ஆசிரியர்களின் அறை, அங்கே கே.நித்தியானந்தன், அவருக்கு இரு மருங்கும் சூரியகுமாரன், ஜி.நேசன், அடுத்த அறையில் பத்திரிகைகளின் பிரதிகள் தொகுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பிறிதொரு – வாசல்பக்கமாக ஒரு மேசையில் (அச்சுக்கோப்பு – ஒப்புநோக்கு நடக்கும் பகுதிக்குச் செல்லும் வாசல்) பொன்.ராஜகோபால் வீரகேசரி வாரவெளியீட்டை கவனிப்பார்.

நடுவிலிருக்கும் பெரிய அகலமான மேசையின் விளிம்புகளில் அமர்ந்திருப்பார்கள். உலகச் செய்திகள் எழுதும் விஸ்வம், மூர்த்தி, ராமேஸ்வரன், எஸ்.எஸ்.காந்தி, எட்வர்ட், இவர்கள் தவிர பல நிருபர்கள், புகைப்படக்கலைஞர்கள்.

தொலைக்காட்சி இல்லாத அந்தக் காலத்தில் ஒரு வானொலிப்பெட்டி மாத்திரம் செய்தி ஒலிப்பரப்பின் போது வாய் திறக்கும்.

தொலைநகல், மின்னஞ்சல் இல்லாத அக்காலத்தில் வுநடநஒ இயந்திரம். P.வு.ஐஇ சுநரவநச செய்தி ஸ்தாபனங்களின் செய்திகளை அச்சடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

அந்த ஆசிரிய பீடம் - இன்றில்லை, நினைவுகளில் மாத்திரம் பசுமையாக அமர்ந்திருக்கிறது.

நான் படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருந்த வேளையில் - முதல் சம்பளமாகப் பெற்றது. நீர்கொழும்பு நிருபர் வேலையால் கிடைத்த சொற்ப ஊதியம் தான்.

அந்த நன்றியுணர்வுடன்தான் இன்றும் எனது உறவு வீரகேசரியுடன் நீடிக்கின்றது.

நெல்லையா, “மணிக்கொடி” காலத்து வா.ரா. லோகநாதன், கே.கணேஷ், ஹரன், அ.ந. கந்தசாமி செ.கதிர்காமநாதன், அன்டன் பாலசிங்கம், எஸ்.டி.சிவநாயகம், காசிநாதன், கோபலரத்தினம், தனரத்தினம், அளுஹர்தீன், டீ.பி.எஸ். ஜெயராஜ்…. இப்படிப்பலர் பணியாற்றிய அந்த அலுவலகத்திற்குள் ஒரு பிரதேச நிருபராக நான் காலடி எடுத்து வைத்த பொழுது கார்மேகம் எனக்கு அறிமுகமானார்.

1972இல் தொடங்கிய நட்பு- அவர் மரணித்த 2005 ஜனவரி முற்பகுதி வரையில் எமக்கிடையே நீடித்தது. முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்த உறவின் வலிமை – அவரது மறைவின் போது மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

கலகலப்பான மனிதர் இவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். மௌனமாக இருந்தாரென்றால் ஏதோ சீரியஸாகச் சிந்திக்கின்றார் என்பது அர்த்தம். மௌனம் கலைந்தால் அந்தச் சிந்தனையின் வெளிப்படையாக ஒரு திட்டத்தை உருவாக்குவார் என்பதை அனுமானிக்க முடியும்.

1977இல் நானும் இன்று தினக்குரலில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றும் நண்பன் வீ.தனபாலசிங்கமும் ஒன்றாக – வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பே – எனக்கும் கார்மேகத்திற்கும் இடையிலான சந்திப்புகள், உரையாடல்கள், அதிகரித்தன.

பெரும்பாலும் அவர் இரவு நேரப்பணியில்தான் கடமையாற்றுவர். பகல் வேளைகளில் ஏதாவது பொது வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.

நான் ஒப்புநோக்காளராக பணிபுரிய ஆரம்பித்த காலப்பகுதியில் எனது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்து அதற்கு 1976இல் அன்றைய ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவிடம், அந்நு}லுக்கான சாகித்திய விருதும் கிடைத்தது அச்செய்தி படத்துடன் வீரசேகரியில் முன்பக்கத்தில் வெளியானதை நன்கு நினைவில் வைத்துக்கொண்டு, ஒரு எழுத்தாளன் இங்கே Pசழழக திருத்த வந்துள்ளான். இவனை அரவணைப்பது எம்போன்ற மூத்த பத்திரிகையாளர்களின் கடமை என்ற உணர்வுடன் என்னுடன் அன்பாகப்பழகியவர் கார்மேகம்.

அட்டனில் நடைபெற்ற மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாட்டில் என்னைக்கண்டுவிட்டு, எனது இலக்கிய ஆர்வத்தையும், தேடல் மனப்பான்மையையும் இனம் கண்டிருந்த கார்மேகம், தன்னருகே நானும் வந்து பணிபுரிவேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த மூத்த பத்திரிகையாளருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமென்று நானும் எதிர்பார்க்கவில்லை.

எதனையும் சீரியஸாக எடுத்து கவலைப்படாத அவரது இயல்பு என்னைப் பெரிதும் கவர்ந்தது. கவலைக்குரிய விடயத்தையும், நகைச்சுவையுணர்வுடன் சுவாரஸ்யமாக்கி – அந்தக்கவலையின் அழுத்தத்தை மென்மையாக்கிவிடும் தன்மை இவரிடம் குடியிருந்தது.

தனது வாழ்வனுபவங்களை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி மகிழ்வார்.

ஒரு நிகழ்ச்சிக்காக இவர் அவசரமாக டாக்ஸியில் செல்லும் போது, கொழும்பு ஐந்து லாம்புச் சந்திக்கு அருகில் அந்த டாக்ஸியில் ஒரு கைவண்டில்காரன் மோதிவிட்டான். பிறகு கேட்கவா வேண்டும்.

டாக்ஸி சாரதிக்கும் கைவண்டில்காரனுக்கும் கைகலப்புவரும் அபாயம் தோன்றும் விதமாக காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் எதிரும் புதிருமாக வந்தன. வேடிக்கை பார்க்க சனம் கூடிவிட்டது.

கார்மேகத்திற்கோ தான் சென்று கலந்து கொண்டு, செய்தி எடுத்து திரும்ப வேண்டிய அவசரம்.

சிங்களம் தெரியாத கார்மேகம் , பொறுமை இழந்து காரைவிட்டு எழுந்து வந்து, “இருவரும் சண்டை பிடிக்காதீர்கள்? என சிங்களத்தில் சொல்ல நினைத்து – “மே… தென்னம… சமாவெண்ட எப்பா?” (இருவரும் சமாதானம் அடையாதீர்கள்) என்றாராம்.

இந்த எதிர்முரணான பேச்சைக்கேட்டு, களத்தில் நின்ற சாரதியும் கைவண்டில்காரனும் அங்கு வேடிக்கை பார்க்க நின்றவர்களும், சிரித்துவிட்டார்களாம். ஏன் அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது கார்மேகத்துக்குப் புரியவில்லை.

பின்னர் அவர்கள் இருவரும் சமாதானமடைந்துள்ளனர்.

டாக்ஸி சாரதிதான் பின்னர் இவருக்கு இவரது சிங்களப் பேச்சின் அர்த்தத்தை விளக்கியிருக்கிறான்.

எப்படியோ – ஏதோ பேசி நிலைமையை சமாளித்துவிட்டேன் என்று என்னிடம் அவர் சொன்ன அச்சம்பவம் இப்பொழுதும் மறக்க முடியாதிருக்கிறது.

ஒரு அச்சுக்கோப்பாளர், பக்க வடிவமைப்பாளராக ஒரு நாள் இரவு வேலை செய்து கொண்டிருந்த போது – அருகே நின்று கவனித்துக் கொண்டிருந்தார் கார்மேகம். அந்நபர் ஒரு செய்திக்கு தவறான தலைப்பு எழுத்துக்களை வைத்து விட்டு, பின்பு தவறை அறிந்து எழுத்துக்களை மாற்றினார். எங்கே, தான் விட்ட தவறை கார்மேகம் பார்த்துவிட்டாரோ என்ற தயக்கத்தில் கடைக்கண்ணால் பார்த்தார் அந்த அச்சுக் கோப்பாளர்.

“என்னப்பா.. அடிக்கடி கடைக்கண்ணால் என்னையே பார்க்கிறாய்.. நான் என்ன அழகாகவா இருக்கிறேன்” என்றார்.

இதனை எழுதும்போது அந்தக்காட்சி நினைவுக்கு வந்து என்னையும் அறியாமல் சிரிக்கின்றேன்.

ஆனால் கார்மேகத்தின் சிரித்த முகம் இப்போது எமக்கருகில் இல்லை.

இலங்கையில் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கப10ர்வமாக உழைத்தவர் கார்மேகம். இவரது கடினமான உழைப்பை – பல சான்றாதாரங்களுடன் பதிவு செய்துள்ளார். நண்பர் தெளிவத்தை ஜோசப் (நு}ல் - மலையகச் சிறுகதை வரலாறு – துரைவி வெளியீடு- 2000)

கார்மேகம் வெறுமனே, ஒரு செய்தியாளர் அல்ல இலக்கிய ஆர்வலர், அரசியல் ஆய்வாளர், வெகுஜன இயக்கத் தொண்டர்.

வீரகேசரியில் இவர் பணிபுரிந்த காலப்பகுதியில் ஏனைய பத்திரிகையாளர்களை, நிருபர்களை, இலக்கியப் படைப்பாளிகளை, தேடல் உணர்வுடன் எழுதும்படி ஊக்குவித்தார். பலர் தத்தமது படைப்புகளை நு}லுருவாக்கிக் கொண்டனர். ஆனால் இவரது எந்தவொரு படைப்பும் அக்காலப்பகுதியில் நு}லுருவாகவில்லை.

நான் 1987 ஜனவரியில் வீரகேசரியிலிருந்து விலகுவதற்கு முன்பதாக கார்மேகம் விலகினார்.

கொழும்பில் - எஸ்.திருச்செல்வத்தின் கலை, இலக்கிய பத்திரிகை நண்பர்கள்; அமைப்பு சாந்தி விஹார் ஹோட்டலில் கார்மேகத்திற்கு ஒரு பிரிவுபசார நிகழ்வை அன்றைய தினகரன் பிரதம ஆசிரியரான சிவகுருநாதன் தலைமையில் நடத்தியது. இந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.

1983 ஆடிக்கலவரத்தின் பின்பு – நான் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய வேளையில் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டிலிருந்து கொழும்பு வந்திருந்த கார்மேகம், தொலைபேசி ஊடாக எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

1987 பெப்ரவரியில் நான் அவுஸ்திரேலியா வந்து சேர்ந்தேன். கார்மேகத்தின் யாழ்ப்பாண பயணத்தொடரை பாரிஸ் ஈழநாட்டில் தவறாமல் தொடர்ந்து படித்தேன். சென்னையில் தினமணியில் பணிபுரிகிறார் என அறிந்து 1990 ஏப்ரலில் அங்கு சென்ற சமயம் நேரில் சென்று சந்தித்து பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டேன்.

“தாய் நாட்டைவிட்டு எங்கே சென்றாலும் - நீர் எழுதுவதை விட்டுவிடவில்லை. பத்திரிகை உலகப் பந்தம் - எதுவித முன்னறிவிப்பும் இன்றி என்னைத் தேடி வந்து பார்க்கச் செய்துள்ளது. ” என்று சொல்லிக் கொண்டு என்னை ஆரத்தழுவினார்.

கார்மேகத்திற்கு சிகரட் புகைக்கும் பழக்கம் உண்டு. நானும் ஞாபகமாக அவுஸ்திரேலியாவிலிருந்து அவருக்கு சிகரட் பக்கட்டுகள் எடுத்துச் சென்று கொடுத்தேன்.

“அடடே… கொழும்புப் பழக்கத்தையும் இங்கேயும் வந்து தொடருகிறீர்” என்றார் அட்டகாசமான சிரிப்புடன்.

“அது என்ன கொழுப்புப்பழக்கம்” என்றேன்.

“முன்பு – வீரகேசரியில் நான் இரவுக்கடமையில் இருக்கும் போது –நீர் Pசழழக சுநயனiபெ இல் இருந்தீர். அம்பாள் கபேயில் அல்லது வாணி விலாஸில் இரவுச் சாப்பாட்டுக்காக நீர் போகும் போது – என்னிடம் வருவீர்… உங்களுக்கு ஏதும் வாங்கி வரவேண்டுமா எனக் கேட்பீர். நானும் இடியப்பப்பார்சலுக்கும் சிகரட்டுக்கும் உம்மிடம் பணம் தருவேன்… ஆகா… என்ன இனிமையான நாட்கள். அந்தநாட்கள். இனி எங்கே வரப்போகிறது. நினைத்து நினைத்து ஆறுதல் படவேண்டியதுதான்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அப்படியொரு இரவு நேரக்கடமையின் போதுதான் கென்யா நாட்டின் அதிபர் கென்யாட்டா இறந்தார் என்ற செய்தி வந்தது.

ஆங்கிலத்தில் வந்த செய்தியை மிகவும் சிறப்பாக மொழிபெயர்ந்து மறுநாள் நகரப்பதிப்பில் வீரகேசரியில் தலைப்புச் செய்தியாக கார்மேகம் எழுதினார்.

கறுப்பின மக்களின் தலைவரான கென்யாட்டா ஒரு கவிஞர். அவரது பிரபலமான கவிதை வரிகளையும் அச்செய்தியில் இடம் பெறச் செய்தார் கார்மேகம்.

“அவர்கள் வரும் போது எங்களிடம்

நிலங்களும் அவர்களிடம் வேதாகமும் இருந்தன.

சிறிது காலத்தில் அவர்களிடம் எங்கள்

நிலங்களும், எங்களிடம் அவர்களின்

வேதாகமமும் இருந்தன.

வெள்ளையர் இனம் எவ்வாறு கறுப்பின மக்களின் வாழ்வை நயவஞ்சகமாக சூறையாடியது என்பதை துல்லியமாக உணர்த்தும் அக்கவிதை வரிகளை - இலக்கிய அனுபவத்துடன் எழுதியிருந்தார். கார்மேகம்

அவர் கடமைக்கு வரும் வேளையில், நான் பகல் கடமை முடிந்து வீடு திரும்பும் போது – அருகே சென்று – “நீங்கள் இன்றைய தலைப்புச் செய்தியை மிகுந்த இலக்கிய நயத்துடன் எழுதியிருக்கிறீர்கள். என்னால் மறக்க முடியாத எழுத்து – வாழ்த்துக்கள்” என்றேன்.

“அப்படியா… நன்றி” என்று மட்டும் தன்னடக்கத்துடன் சொன்னார்.

எந்தவொரு முக்கியமான செய்தியையும் ஆய்வறிவுடன் எழுதும் பழக்கம் இவரிடம் இயல்பாகக் குடியிருந்தமையால்தான் - பின்னாளில் மூன்று அருமையான அரிய நு}ல்களை இவரால் எழுத முடிந்திருக்கிறது.

ஈழத்தமிழர் எழுச்சி – ஒரு சமகால வரலாறு – 2002

ஒரு நாளிதழின் நெடும் பயணம் - வீரகேசரியின் வரலாறு – 2002

கண்டி மன்னர்கள் - 2004

‘ஈழத்தமிழர் எழுச்சி’ வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும், அரசியல் ஆய்வாளர்களுக்கும் சிறந்த உசாத்துணை நு}லாக விளங்குகிறது.

இதனை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என்று சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்ட செய்தியையும் பத்திரிகைகளில் படித்தேன்.

பேரினவாதிகளின் கண்களை உறுத்திய இந்த நு}ல், இலங்கை வரலாற்றை அறிந்து கொள்ள முனைபவர்களுக்கு பல சுவாரஸ்யமான தகவல்களையும் தருகின்றது.

இந்நு}லைப்பற்றிய எனது கருத்துக்களை அவுஸ்திரேலியாவில் வெளியாகும் ‘உதயம்’ இதழில் பதிவு செய்து குறிப்பிட்ட இதழின் நறுக்கை கார்மேகத்திற்கு அனுப்பினேன்.

1990இல் சென்னையில் கார்மேகத்தையும் அவரது மனைவி பிள்ளைகளையும் சந்தித்து – அவர்களின் அன்பான விருந்துபசாரத்தில் திளைத்து திரும்பிய நான், அதன்பிறகு சந்திக்கும் வாய்ப்பையே இழந்துவிட்டேன்.

எனினும் எமக்கிடையே கடிதத் தொடர்புகள் நீடித்தன.

சென்னை, பீட்டர்ஸ் காலனியிலிருந்து 26.10.90.இல் எனக்கு நீண்டதொரு கடிதம் எழுதியிருந்தார்.

இப்படியொரு கடிதத்தை அவர் எழுதுவதற்கும் நான் அவருக்கு தொடர்ந்து எழுதுவதற்கும் காரணமாக இருந்தது என்.எஸ்.எம். ராமையாவின் மரணம்.

அச்சமயம் கொழும்பிலிருந்து நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரன் மூலம் ராமையாவின் மரணச் செய்தி அறிந்து உடனடியாக சென்னை தினமணி காரியாலயத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கார்மேகத்துடன் உரையாடினேன்.

நான் சொல்லும் வரையில் அவருக்கு இந்த துயரச் செய்தி கிட்டவில்லை.

அவர் எனக்கு எழுதிய அந்த நீண்டகடிதத்தில் ராமையாவுக்கும் தனக்கும் ஏற்பட்ட தொடர்பு – நீடித்த நட்பு – குறிப்பிட்ட சில சம்பவங்கள் முதலானவற்றை விபரித்திருந்தார். அக்கடிதம் தகவல் களஞ்சியமாகவே அமைந்திருந்தது.

மலையக மக்களின் விடிவிற்காகவும் விழிப்பிற்காகவும் உழைத்தவர்கள் பலர். அவர்களில் கார்மேகமும் முக்கியமானவர்.

நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் உட்பட பலரைப்பற்றியும் இவர்களின் கடினமான உழைப்பு குறித்தும், சாரல் நாடனும், தெளிவத்தை ஜோசப்பும் அந்தனி ஜீவாவும் மு. நித்தியானந்தனும் எழுதியவற்றை ஏற்கனவே படித்திருக்கின்றேன்.

கார்மேகத்தின் பணிகளை அவ்வாறு படிக்காமல் அருகேயிருந்து பார்த்திருக்கின்றேன்.

1977 இன்பின்பு இ.தொ.கா.தலைவர் தொண்டமான் ஜே.ஆர். ஜயவர்தனா தலைமையில் உருவான அரசில் அமைச்சராக பதவியேற்றபோது – மலையக மக்கள் மத்தியில் புதிய ஆக்கப10ர்வமான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்காக ஒரு ‘அறிஞர் குலாத்தை’ அமைச்சர் அமைக்க வேண்டுமென்று இர.சிவலிங்கம் ஒரு விரிவான அறிக்கையை விடுத்தார். அதனை வீரகேசரியில் பிரசுரிக்க து}ண்டுகோலாக இருந்தவர் கார்மேகம்.

ஆனால் மலையக அரசியல்வாதிகளும், தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களும் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை.

தமது பிரபல்யத்திற்கும் நடைமுறைப்படுத்த இயலாத, தமது இருப்பை பதிவு செய்து கொள்ள முனையும் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் இந்த அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கவாதிகளும் கார்மேகத்தை நன்கு பயன்படுத்தினர்.

கார்மேகத்திற்கு அடிக்கடி தொலைபேசி தொந்தரவு கொடுக்கும் தலைவர்களையும் - வீரகேசரி அலுவலகம் வந்து காத்திருந்து அவரை அழைத்துப் போகும் தொழிற்சங்கவாதிகளையும் அறிவேன்.

ராமையாவின் மறைவின் பின்பு – அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பிரமுகர்களைப்பார்த்துவிட்டு, அந்தப்பகுதி மக்கள் - இப்படியும் ஒரு மனிதர் எங்கள் பக்கத்தில் இவ்வளவு காலமும் வாழ்ந்திருப்பது தெரியாமலிருந்துவிட்டதே – என்று ஆதங்கப்பட்டனராம்.

மலையக அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், ராமையாவுக்கு உருப்படியாக எதனையும் செய்யவில்லை. மு.நித்தியானந்தன் இல்லையென்றால் ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ தொகுதியை பார்த்திருக்க மாட்டோம் - என்று கார்மேகத்திற்கு எழுதியிருந்தேன்.

எனது கோபத்தின் நியாயத்தை அங்கீகரித்து அவர் எனக்கு பதில் அனுப்பினார்.

2002 ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் எனது பறவைகள் நாவலுக்காக சாகித்திய விருதினைப் பெற்றுக் கொள்ள நான் சென்றிருந்த வேளையில், அந்த சபையில் கார்மேகம் இருந்திருக்கிறார். ஆனால் எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிந்ததும் என்னை சந்திக்க விரும்பியிருக்கிறார்.

நான் பிறிதொரு வாயிலால் வெளியே வந்து நீர்கொழும்புக்கு புறப்பட்டுவிட்டேன். அன்று அடைமழை. வாகன நெரிசல்.

மறுநாள் வீரகேசரிக்குச் சென்று அவரை விசாரித்த பொழுது அவர் அப்பொழுது இல்லை. சகோதரி அன்னலட்சுமி இராஜதுரையிடம் எனது நீர்கொழும்பு தொலைபேசி இலக்கம் கொடுத்து கார்மேகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு சொன்னேன்.

மறுநாள் நான் அவுஸ்திரேலியா புறப்படவேண்டியிருந்தது.

புறப்படு முன்பு – அவரைப்பார்ப்பதற்காக – கொழும்பு செல்லத் தயாரானேன். அன்றைய தினம் காலையில் - வத்தளைப் பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தினால் மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதையடுத்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, நீர்கொழும்பு – கொழும்பு வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது.

நீர்கொழும்பு பஸ்நிலையம் வரை சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பி கார்மேகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன்.

“மீண்டும் சந்திப்போம்” என்றார்.

ஆனால் - நான் மீண்டும் சந்தித்தது அவரது அருமை நண்பர்களைத்தான். 12.02.2005 சனிக்கிழமை. கொழும்பு சுகததாஸ ஸ்போட்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் கார்மேகத்துக்கு அஞ்சலிக்கூட்டம் என அறிந்து அங்கு சென்றேன்.

அவரது மரணச் சடங்கில்தான் கலந்து கொள்ள முடியவில்லை. அஞ்சலிக் கூட்டத்திலாவது சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று நண்பர் தெளிவத்தை ஜோசப்பிடம் சொன்னேன்.

அந்தக் கூட்டமும் ஒரு அவசரக் கூட்டமாக அமைந்தது எனக்கு ஏமாற்றம் தான்.

கார்மேகம் குறித்து எழுதவும், பேசவும் நிறையவுண்டு. அவரது வாழ்வும் பணியும் ஆவணமாக எழுதப்படவேண்டியது.

எம்.என்.அமீன், அன்னலட்சுமி இராஜதுரை, டேவிட் ராஜூ, நடராஜா, மு.சிவலிங்கம், தனபாலசிங்கம், கோவிந்தராஜ், தெளிவத்தை ஜோசப், ஆகியோருடன் நானும் பேசி எனது இரங்கலைத் தெரிவித்தேன்.

மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமது இருப்புக்காகவும், புகழுக்காகவும், கார்மேகத்தின் பத்திரிகைத் தொழிலை நன்கு பயன்படுத்திக் கொண்ட பலரை அந்த அஞ்சலிக்கூட்டத்தில் காணமுடியவில்லை.

மலையக அரசியல்வாதிகளுக்கும், தொழிற்சங்கவாதிகளுக்கும் ராமையாவும் சரி, கார்மேகம் என்றாலும் சரி. எல்லாம் ஒன்று தான்.

கார்மேகத்துடன் நீண்ட நெடுங்காலமாக நெருங்கிப் பழகிய நண்பர் மாத்தளை செல்வா (எச்.எச்.விக்கிரமசிங்க) தொடர்ந்தும் கார்மேகத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பது மாத்திரமே. எனது மன அழுத்தத்திற்கு ஒத்தடம்.(முருகபூபதியின் காலமும் கணங்களும் நூலில் இடம்பெறும் கட்டுரை)


1 comment:

Anonymous said...

விக்கியில் கார்மேகம் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்றுள்ளது. tawp.in/r/162a.

-சிறீதரன்