உலகச் செய்திகள்

நோர்வேயில் பாரிய குண்டுவெடிப்பு இலங்கையர்கள் எவருக்கும் 
    பாதிப்பில்லை
இலங்கை, இந்தியருடன் கப்பல் கடல் கொள்ளையரால் கடத்தல்.
தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்பட்ட சர்ச்சையின் 
   மூலமாகக் கருதப்படும் செய்தியாளர் சடலமாகக் கண்டுபிடிப்பு
தொலைபேசி உரையாடல் ஒற்றுக்கேட்ட விவகாரம் பிரிட்டனின்  
    பிறிதொரு உயர்மட்ட பொலிஸ் அதிகாரி இராஜிநாமா 
பிரபல பாடகி எமி வைன்ஹவுஸ் மர்ம மரணம்
# இலங்கை விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி _



18/07/2011
ந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவுள்ள ஹிலாரி கிளின்டன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.


இதன்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் மட்டுமன்றி இலங்கை விவகாரம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மறுநாள் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலித்தீவு செல்லும் வழியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் சென்னைக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் இலங்கை விவகாரம் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸ் வளாகத்தில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

அதேவேளை, இந்தியாவும் இதுபற்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று முதன் முறையாக கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலரும், இந்தியப் பிரதமரும் கலந்துரையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி


பிரபல பாடகி எமி வைன்ஹவுஸ் மர்ம மரணம்

லண்டன், ஜூலை.24: பிரபல பாப் பாடகி எமி வைன்ஹவுஸ் லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு வயது 27. வைன்ஹவுஸின் பேக் டு பிளாக் ஆல்பம் அவரை புகழின் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. அது 5 கிராமி விருதுகளை வென்றது. வடக்கு லண்டனில் கேம்டன் சதுக்கத்தில் எமியின் வீடு உள்ளது. அவரது வீட்டில் எமி உயிரிழந்து கிடந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும் அவர் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார் என்று சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. வீட்டுக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்று லண்டன் ஆம்புலன்ஸ் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் லண்டன் மாநகரப் பொலிஸ் ஆணையாளர் பதவி விலகல் மேர்டொக்கின் உயர்மட்ட உதவியாளர் கைது
Monday, 18 July 2011

பிரிட்டனில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டமை தொடர்பான சர்ச்சையினால் லண்டன் மாகநரப் பொலிஸ் ஆணையாளர் சேர்.போல் ஸ்ரீபன் தனது பதவியை இராஜிநாமாச் செய்துள்ளார்.


முன்னதாக இச்சர்ச்சை தொடர்பில் நியூஸ் இன்ரநஷனல் அமைப்பின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மேர்டொக்கின் உயர்மட்ட உதவியாளருமான ஹெடேக்கா புரூக்ஸ் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவரது இராஜிநாமா அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பிரிட்டனில் 168 வருட காலமாக பிரசுரமாகி வந்த புகழ்பெற்ற பத்திரிகையான "நியூஸ் ஒப் த வேர்ள்ட்' பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு செய்திகளை வெளியிட்டமை தொடர்பான சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து அது தனது பதிப்பினை நிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பிரிட்டனில் மிகப்பெரிய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கியப் போர்களில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் படை வீரர்களின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட இளவயது யுவதி ஒருவரின் விவகாரம், அமெரிக்காவின் செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல் என்பன தொடர்பில் 4 ஆயிரம் பேரினது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு செய்திகளை வெளியிட்டதாக நியூஸ் ஒப் த வேர்ள்ட் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த ஊடகச் சர்ச்சையானது பிரிட்டனில் அரசியல் மற்றும் பொலிஸ் மட்டங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மேர்டோக்கிடமிருந்து அதிகளவிலான உபசரிப்புகளை ஏன் பெற்றுக்கொண்டனர் எனக் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸார் மேர்டோக்கிடமிருந்து பெருந்தொகையான பணத்தினை இலஞ்சமாகப் பெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே போல் ஸ்ரீபன்சன் இராஜிநாமா செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நியூஸ் ஒப் த வேர்ள்ட்டின் முன்னாள் உதவி ஆசிரியர் நெய்ல் வலிஸ்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடம்பரக் குளியல் நிகழ்வொன்றில் பொலிஸ் ஆணையாளர் ஸ்ரீபன்கன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து கொண்டதாக ரெலிகிராப் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ்துறை மற்றும் அரச அலுவல்களில் மேர்டோக்கின் முன்னாள் ஊழியர்கள் பணியாற்றுகின்றமையானது பிரிட்டனில் கடும் விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, நியூஸ் இன்ரநஷனல் அமைப்பானது அதிகளவான குற்றச்சாட்டுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவதனாலேயே தமது பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பான தீர்மானத்தினை எடுத்ததாக போல் ஸ்ரீபன்கன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நியூஸ் இன்ரநஷனலின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான றெபேக்கா புரூக்ஸ் (வயது 43) லண்டன் மாநகர பொலிஸாரால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளமையான பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் தனது பதிப்பினை நிறுத்திக்கொண்ட நியூஸ் ஒப் த வேர்ள்ட் பத்திரிகையில் றெபேக்கா பணியாற்றியபோது இளம் யுவதி ஒருவரின் கொலை தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

நியூஸ் ஒப் த வேர்ள்ட்டின் பிறிதொரு உயர்மட்ட அதிகாரியான அண்டிகூல்சன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்தே றெபேக்கா கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்து

நன்றி தினக்குரல்

தொலைபேசி உரையாடல் ஒற்றுக்கேட்ட விவகாரம் பிரிட்டனின் பிறிதொரு உயர்மட்ட பொலிஸ் அதிகாரி இராஜிநாமா
Tuesday, 19 July 2011

லண்டன்: பிரிட்டனில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டமை தொடர்பான சர்ச்சையினால் லண்டன் மாநகரப் பொலிஸின் பிறிதொரு சிரேஷ்ட அதிகாரியான ஜோன் ஜாட்ஸ் பதவி விலகியுள்ளார்.

பிரிட்டனில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்ட விவகாரமானது பல்வேறு தரப்பினரிடையே நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், லண்டன் மாநகரப் பொலிஸ் ஆணையாளர் சேர்.போல் ஸ்ரீபன்சன் தனது பதவியை இராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பிறிதொரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ஜோன் ஜாட்ஸும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

பிரிட்டனில் 168 வருடகாலமாக பிரசுரமாகிவந்த புகழ்பெற்ற பத்திரிகையான "நியூஸ் ஒவ் த வேர்ள்ட்' பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்டு செய்திகளைப் பிரசுரித்தமை தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அது தனது பதிப்பினை நிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்ட விவகாரம் பிரிட்டனில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திவரும் நிலையில் அதில் பொலிஸ் அதிகாரிகள் பலர் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன், "நியூஸ் ஒவ் த வேள்ட்' பத்திரிகையின் பணிப்பாளர் ரூபர்ட் மேர்டோக்கிடமிருந்து பெருந்தொகையான பணத்தினையும் அவரின் உயரிய உபசரிப்புகளையும் பொலிஸ் அதிகாரிகள் பெற்றுக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்தே ஸ்கொட்லாந்து யாட் பொலிஸ் துறையின் உயர்மட்ட அதிகாரிகளான ஸ்ரீபன்சன் மற்றும் யாட்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும், "நியூஸ் ஒவ் த வேள்ட்'டின் முன்னாள் உதவி ஆசிரியரும் ஸ்கொட்லாந்து பொலிஸ் துறையின் தொடர்பாடல் ஆலோசகருமான நெய்ல் வாலிஸ் ஒற்றுக்கேட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த அதிகாரிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கொட்லாந்து யாட் பொலிஸ் உதவி ஆணையாளரான யாட்ஸ் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகளை திருப்திகரமாக நடத்தவில்லை என்பதுடன் அது தொடர்பாக பொறுப்பற்றவிதத்தில் நடந்து கொண்டதாகவும் விமர்ச்சிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர் தனது பதவியை இராஜிநாமா செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மர்டொக் மற்றும் நியூஸ் ஒவ் த வேள்ட் பத்திரிகையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள ஸ்ரீபன்சன் வாலிஸால் ஒழுங்கு செய்யப்பட்ட சில உல்லாச நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமையானது பல்வேறு மட்டத்தினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர, நியூஸ் இன்ரநேஷனலின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான றெபேக்கா புரூக்ஸ் மற்றும் நியூஸ் ஒவ் த வேர்ள்ட்டின் முன்னாள் உதவி ஆசிரியர் அண்டிகூல்ஸன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்து

நன்றி தினக்குரல்


தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்பட்ட சர்ச்சையின் மூலமாகக் கருதப்படும் செய்தியாளர் சடலமாகக் கண்டுபிடிப்பு
Tuesday, 19 July 2011

லண்டன்: பிரிட்டனையே உலுக்கிவிடும் தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்பட்ட சர்ச்சை உருவாவதற்குக் காரணமானவரெனக் கருதப்படும் "நியூஸ் ஒவ் த வே ள்ட்' பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர் அவரது வீட்டில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


ஒற்றுக்கேட்டல் சர்ச்சைகள் ஆரம்பமாவதற்குக் காரணமானவராகக் கருதப்படும் "நியூஸ் ஒவ் த வேர்ள்ட்'டின் முன்னாள் செய்தியாளர் சீன் ஹொரே (வயது 47)யின் உடலை வட்வோர்ட்டிலுள்ள அவரது தொடர்மாடி வீட்டிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பரில் நியூயோர்க் ரைம்ஸினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றில் நியூஸ் ஒவ் த வேள்ட்டின் முன்னாள் ஆசிரியரும் பிரதமர் டேவிட் கமரூனின் செய்தி தொடர்பாடல் தலைமையதிகாரியுமான அன்டி கூல்சனின் அனுமதியுடனேயே தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்பட்டதாக சீன் ஹொரே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை கூல்சன் மறுத்திருந்த நிலையில்,தொலைபேசி ஒற்றுக்கேட்டல் விவகாரத்தில் அவரது பங்களிப்பு குறித்து கூல்சன் பொய் கூறுவதாகவும் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் முக்கிய பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்படுவதை கூல்சன் ஊக்குவித்ததாகவும் ஹொரே தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே ஒற்றுக்கேட்டல் விவகாரம் பூதாகரமாக வெடித்து அரசியல்,பொலிஸ் மற்றும் ஊடக வட்டாரங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில்,ஹொரேயின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாகத் தோன்றவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அண்மைய வாரங்களாக மனம் குழம்பிய நிலையில் அதிகம் தனிமையை நாடிய ஹொரே,தனது குடியிருப்பில் தொடர்ந்தும் மறைந்திருந்ததாகவும் யாரும் வந்தால் தான் அங்கிருப்பதைக் கூறவேண்டாமெனத் தன்னைச் சந்திப்பவர்களிடம் கூறி வந்ததாகவும் அவரது நண்பரும் அயலவர்களும் தெரிவித்துள்ளனர்.

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஹொரே, தொலைபேசி உரையாடல் ஒற்றுக்கேட்ட விவகாரம் தொடர்பில் ஏதேதோ உளறியவாறு இருந்ததாகவும் இவ்விவகாரமே அவரது பிரதான கவலையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பரில் ஹொரே தெரிவித்திருந்த கருத்துகள் 2007 இல் நியூஸ் ஒவ் த வேர்ள்ட்டின் ஆசிரியர் பதவியிலிருந்து விலகி டேவிட் கமரூனின் ஊடகத் தலைமையதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்டி கூல்சன் மீதான அழுத்தங்களை அதிகரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் கமரூனின் ஊடகத் தலைமையதிகாரிப் பதவியை இராஜிநாமாச் செய்த கூல்சன் ஒற்றுக்கேட்ட விவகாரம் தொடர்பில் இம்மாத முற்பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததன் மூலமாக கையடக்கத் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்பதற்கு பொலிஸாரின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடியதாக இருந்ததாக கடந்த வாரம் ஹொரே தெரிவித்திருந்தமை இவ்விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஹொரேயின் மரணம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதனையும் தெரிவிக்காத பொலிஸார் தற்கொலைக்கான சாத்தியங்களையும் நிராகரிக்கவில்லை.

இதேவேளை, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இயற்கையாக மரணமடைந்திருக்கலாமென அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளால் 2005 இல் நியூஸ் ஒவ் த வேள்ட் பத்திரிகையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஹொரே மீண்டும் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

டெய்லி மெயில்

நன்றி தினக்குரல்



த நியூஸ் ஒஃப் த வேள்ட்

Wednesday, 20 July 2011

பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடுவதற்காக ஊடக நெறிமுறைகளுக்கு முரணான முறையில் செய்தியாளர்களினால் தொலைபேசிகள் ஒற்றுக் கேட்கப்பட்ட ஊழல் விவகாரத்தின் விளைவாக பிரிட்டனில் 168 வருடங்களாக வெளிவந்துகொண்டிருந்த பழமை வாய்ந்த "த நியூஸ் ஒஃப் த வேள்ட்' குறுஞ்செய்திப் பத்திரிகை கடந்த வாரம் மூடப்பட்டிருக்கிறது. உலகின் ஊடகத்துறை சக்கரவர்த்தி என்று வர்ணிக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய அமெரிக்கரான ரூபேர்ட் மேர்டொக்கின் பிரிட்டிஷ் ஊடக குழுமமான நியூஸ் இன்ரர் நாஷனலினால் வெளியிடப்பட்டு வந்த அந்தப் பத்திரிகையின் ஊழியர்கள் கதறியழுதுகொண்டு அலுவலகத்தைவிட்டு வெளியேறிய காட்சிகளை உலகம் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தது. பிரபல்யம் பெற்றவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை மாத்திரமல்ல, கொலையுண்டவர்களின் தொலைபேசிகளையும் குரல் அஞ்சல்களையும் ஒட்டுக்கேட்ட இந்த விவகாரம் அந்தக் குறுஞ் செய்திப்ப த்திரிகை மூடப்பட்டுவிட்டதுடன் முடிவுக்கு வருவதாக இல்லை. மேர்டொக்கின் ஊடக சாம்ராச்சியத்துக்கு மேலும் சேதத்தை விளைவிக்கக்கூடிய பெருவாரியான தகவல்கள் தொடர்ந்து அம்பலமாகிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பத்திரிகைகளுக்கும் பொலிஸாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்டத்தில் இருக்கக்கூடிய சந்தேகத்துக்கிடமான தொடர்புகளை வெளிக்கொணரக் கூடியதாகவும் இந்த விவகாரம் அமைந்திருக்கிறது.

ரூபேர்ட் மேர்டொக்கும் அவரது மகன் ஜேம்ஸ் மேர்டொக்கும் அவர்களின் இங்கிலாந்து பத்திரிகைக் குழுமத்தின் பிரதம அதிகாரியான றிபேக்கா புரூக்ஸும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கொமன்ஸ் சபையின் ஊடகத்துறை விவகாரக் குழுவினால் துருவித் துருவி விசாரிக்கப்படவிருக்கிறார்கள். தனது பதவியில் இருந்து கடந்த ஞாயிறன்று விலகிய புரூக்ஸ் கைது செய்யப்பட்டிருந்தார். த நியூஸ் ஒஃப் த வேள்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரிடமிருந்து அனுகூலங்களைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து லண்டன் மெட்ரோ போலிட்டன் பொலிஸ் ஆணையாளர் போல் ஸ்ரிபன்சனும் உதவி ஆணையாளர் ஜோன் யேற்ஸும் பதவிகளில் இருந்து விலகியிருக்கிறார்கள். மூடப்பட்ட பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர்களில் ஒருவரான சீன் ஹோரே அவரது இல்லத்தில் திங்களன்று இறந்துகிடக்கக் காணப்பட்டார். இருவாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட அப்பத்திரிகையின் ஆசிரியர் அன்டி கவுல்சனின் நிருவாகத்தின் கீழ் தொலைபேசிகள் ஒற்றுக்கேட்டல் போன்ற சட்டவிரோத நடைமுறைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக முதலில் தகவல் வெளியிட்டவர் சீன் ஹோரே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் சந்தேகத்துக்குரியதாகக் கருதப்படுவதற்குரிய அறிகுறியெதையும் இதுவரை காணவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி நிறுவனக் கட்டமைப்பிற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் ரூபேர்ட் மேர்டொக் தனது ஊடகத்துறைச் சாம்ராச்சியத்தைத் தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பாரா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. பெரும் பணத்தை ஈட்டித்தரவல்ல செய்மதித் தொலைக்காட்சி நிறுவனமான பிரிட்டிஷ் ஸ்கை புரோட்காஸ்டிங்கை தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தையும் மேர்டொக் கைவிடவேண்டியதாயிற்று. ஆபிரிக்காவுக்கான தனது விஜயத்தை இடைநிறுத்திக்கொண்டு லண்டன் திரும்பியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட ஊழல் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்றைய தினம் அவசரமாகப் பாராளுமன்றத்தைக் கூட்டியிருக்கிறார். பொலிஸ்ஊடகத்துறை உறவுகள் தொடர்பாகவும் இடம்பெற்றிருக்கக்கூடிய முறைகேடுகள் தொடர்பாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் ஊடக நெறிமுறைகளும் சட்டமும் பெருமளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு திட்டமிட்ட கலாசாரத்தை மேர்டொக்கின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் பரவலாகக் பின்பற்றி வந்திருக்கின்றனவா என்ற கேள்வியும் கிளம்பியிருக்கின்றது. 4000 க்கும் அதிகமானவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் 2005 லண்டன் குண்டுவெடிப்புகளில் பலியானவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கொல்லப்பட்ட படைவீரர்களின் குடும்பங்களினதும் தொலைபேசிகளும் அடங்கும். 2002 மார்ச்சில் சரே நகரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட 13 வயதுச் சிறுமியான அமந்தா மில்லி டௌலரின் தொலைபேசி கூட த நியூஸ் ஒஃப்த வேள்ட் பத்திரிகையின் செய்தியாளர்களினால் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது.

பத்திரிகையை மூடிய 80 வயதான மேர்டொக் ஊழல் விவகாரத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு ஏனைய பத்திரிகைகளில் விளம்பரங்களை முழுப்பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். தவறுகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கிய பத்திரிகைதான் அவ்வாறு பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்று பகிரங்கமாகக் கூறி அவர் தனது பத்திரிகையைத் தானே விமர்சித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தவறுகள் சகலதுமே தனக்குத் தெரியாமல் இடம்பெற்றதாக அவர் விளம்பரங்களில் குறிப்பிடாதது மாத்திரமல்ல, மன்னிப்புக் கேட்பது மாத்திரம் போதாது என்றும் கூடக் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடிக்கணக்கில் அவர் நஷ்ட ஈடுகளைச் செலுத்த வேண்டிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரிகைகள் எப்படியாவது விற்பனையாகினால் சரி என்று நினைக்கும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களும் செய்திகளை வியாபாரச் சரக்காகக் கருதி பரபரப்பூட்டுவதற்காக வரம்பு மீறுபவர்களும் கலாசாரச் சீரழிவுகளை காட்சிப்படுத்துவதன் மூலம் தங்களது பைகளை நிரப்புவதில் வக்கிரத்தனமான திருப்தி காண்பவர்களும் பிரிட்டனில் இடம்பெற்றிருக்கும் இந்த விவகாரத்திலிருந்து படிப்பதற்கு நிறையவே பாடங்கள் இருக்கின்றன!
நன்றி தினக்குரல்



இலங்கை, இந்தியருடன் கப்பல் கடல் கொள்ளையரால் கடத்தல்


19/07/2011
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சோமாலியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.

எம்.வி. ஜுபா எக்ஸ் எக்ஸ்' எனும் இக் கப்பல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டதாகவும், அதில் 16 ஊழியர்கள் இருந்ததாகவும் ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்களில் இலங்கைøயச் சேர்ந்த ஒருவர் உட்பட இந்தியர்கள் ஐவரும் பங்களாதேஷ் நாட்டவர்கள் மூவரும் சோமாலியர்கள் நால்வரும் கென்யா, சூடான், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி

நோர்வேயில் பாரிய குண்டுவெடிப்பு இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

22/07/2011

நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அரசாங்க கட்டிடங்களுக்கு அண்மையில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து இதில் குறைந்தது இதுவரையில் ஒருவர் இறந்ததாகவும் 8 பேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இதில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இருந்த அரச கட்டிடங்கள் மற்றும் அதன் பாகங்களும் பலத்த சேதத்திற்குட்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ள.

மேலும், இந்த குண்டுவெடிப்பின் நோர்வே பிரதமர் வீட்டிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமருக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஒஸ்லோவில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது எனினும் பாதிப்புக்கள் தொடர்பாக மேலும் அவதானிப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது

நன்றி வீரகேசரி

 

 
அமைதியான நாடான நோர்வேயில் இடம்பெற்ற தாக்குதல்களால் உலகம் அதிர்ச்சி இரு சம்பவங்களிலும் 91 பேர் பலி
 23 July 2011

நோர்வேயில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரு மோசமான தாக்குதல்களில் 91 பேர் வரை உயிரிழந்திருக்கும் நிலையில், இந்தச் சம்பவங்கள் ஐரோப்பாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.

பொலிஸாரின் சீருடையில் வலது சாரி கிறிஸ்தவ துப்பாக்கிதாரியே இத்தாக்குதல் நடத்திய சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகிறது. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் பிரதமரின் அலுவலகம் அருகே இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து யுடோய்யா என்ற உல்லாசப் பயணிகளுக்குக் களிப்பிடமாக விளங்கும் தீவில் இடம்பெற்ற கோடைகால இளைஞர் முகாமின் மீது இடம்பெற்ற தாக்குதலில் 84 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த இளைஞர் அணி முகாம் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி 32 வயதுடைய நோர்வேப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். யுடோய்யாவில் இளைஞர்கள் விடுமுறையைக் களிக்க சென்றிருந்த வேளையிலேயே இந்த அவலம் இடம்பெற்றுள்ளது.

அன்டஸ் பெக்ரிங் பிரீவிக் என்று இந்த சந்தேக நபரை உள்ளூர் ஊடகங்கள் அடையாளங் கண்டுள்ளன. அவர் இப்போது பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மிகவும் அமைதியான நாடென்று என்ற நன்மதிப்பைப் பெற்றிருந்த நோர்வே இந்தத் தாக்குதலினால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது. "சொர்க்க தீவு நரகமாக மாறிவிட்டது' என்று நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொல்டன் பேர்க் கூறியுள்ளார்.

48 இலட்சம் மக்கள் வாழுகின்ற நோர்வேயில் மரங்கள் அடர்ந்த சின்னஞ் சிறிய தீவிலேயே இரண்டாவது சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இந்த தாக்குதலை மேற்கொண்டவரின் நோக்கம் குறித்து பிரதிப் பொலிஸ் தலைவர் ரோஜர் அன்டர்சன் தெரிவிக்கவில்லை. ஆயினும் சந்தேக நபர் தன்னை கிறிஸ்தவர் எனவும் வலது சாரி கிறிஸ்தவத்தைச் சார்ந்தவர் எனவும் தனது பேஸ் புக்கில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். யுடோய்யாவில் 84 பேர் இப்போது இறந்துள்ளனர். ஒஸ்லோவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்னரும் நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. யுடோய்யாவில் இப்போதும் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக தேடுதல்கள் இடம்பெறுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

2004 இல் மேற்கு ஐரோப்பாவில் இடம்பெற்ற மட்ரிட் ரயில் குண்டுத்தாக்குதலில் 191 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்றிருக்கும் பாரிய தாக்குதலாக இச்சம்பவங்கள் அமைந்துள்ளன. வெள்ளிக்கிழமை யுடோய்யாவில் சுமார் 10 பேரே இறந்திருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அத்தொகை 84 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் பைத்தியக் காரனின் வேலையாகவே தோன்றுகிறது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தாக்குதலின் நோக்கம் இன்னரும் அறியப்படவில்லை. ஆனால், இரு தாக்குதல்களும் ஆளும் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் தொடர்புபட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன. ஒஸ்லோவிற்கு வடமேற்கே 35 கிலோ மீற்றர் தூரத்தில் யுடோய்யா தீவில் இளைஞர் முகாம் கட்சியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நேற்று சனிக்கிழமை பிரதமர் உரையாற்றவிருந்தார்.

இந்த துவக்குச்சூடு சம்பவம் தொடர்பாக நேரில் கண்டவர்களில் ஒருவரான 15 வயதுடைய எலிஸ் என்ற பெண் கூறுகையில்; துவக்குச்சூட்டுச் சத்தங்கள் தனக்குக் கேட்டதாகவும் அங்கு ஒரு பொலிஸ் அதிகாரியைக் கண்டதாகவும் அப்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்ததாகவும் பின்னர் அந்த நபர் ஆட்களை நோக்கி சுட ஆரம்பித்ததாகவும் அப் பெண் கூறியுள்ளார். பலர் இறந்தததை நான் பார்த்தேன். முதலில் தீவிலிருந்தவர்கள் மீது சுட்டார். பின்னர் அவர் தண்ணீருக்குள் இருந்தோர் மீது சுட ஆரம்பித்தார் என்று எலிஸ் கூறியுள்ளார். இந்தக் கொலையாளி நின்று கொண்டிருந்த அதே பாறைக்குப் பின்னால் தான் மறைந்துகொண்டிருந்ததாகவும் எலிஸி கூறியுள்ளார்.

இதேவேளை, ஒஸ்லோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அந்தக் கட்டிடடம் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த 20 மாடிக் கட்டிடத்தில் அநேகமான ஜன்னல்கள் உடைந்துவிட்டன. பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொல்டன் பேர்க்கினதும் அவரின் நிர்வாகத்தினதும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை அப்பாவிப் பொதுமக்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல் என பிரதமர் ஸ்டோல்டன் பேர்க் கண்டித்துள்ளார். எம்மீது தாக்குதல் நடத்தியோருக்கு நான் ஒரு செய்தியை வைத்திருக்கிறேன். நோர்வேயிலுள்ள சகலருக்குமான செய்தி இதுவாகும். எமது ஜனநாயகத்தை உங்களால் அழித்துவிட முடியாது. சிறப்பான உலகத்திற்கான எங்களின் அர்ப்பணிப்பையும் உங்களால் அழிக்க முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோட்டோ, பிரிட்டன் ஆகியவை குண்டுத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தமாதிரியான பயங்கரம் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பொறுப்பு முழு சர்வதேச சமூகத்திற்கும் உள்ளது என்பதை நினைவூட்டுவதாக இத்தாக்குதல் அமைந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

குறைந்தது இரு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இந்தத் தாக்குதல்களுக்கான உரிமையை எடுத்துக்கொள்வதற்கு முயற்சித்திருந்தன. ஆனால், ஆரம்பத்தில் உரிமை கோரியிருந்த உலக விடுதலைக்கான உதவியாளர்கள் என்ற அமைப்புப் பற்றி தாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லையென புலனாய்வு ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதேசமயம், குர்திஷ் குழுவான அல்சார் அல்இஸ்லாமும் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

நன்றி தினக்குரல்


No comments: