இலங்கை , இந்திய செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் வழக்கின் மனுதாரர் சுந்தரராஜன் காலமானார்


17/07/2011
திருவாங்கூர் அரச குடும்பத்தின் கீழ் ஓர் நம்பிக்கையின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சொத்துக்கள் யாருடையது?, அதன் பெறுமதி என்ன? எனும் கேள்விகளை எழுப்பி வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் டி.பி. சுந்தரராஜன் நேற்று காலமானார்.

70 வயதுடைய இவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்ததாக அவருடைய உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், விஷேட புலனாய்வு பிரிவிலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பிரிவிலும் கடமையாற்றியவராவார். இவருடைய திடீர் மரணம் அந்நகரவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி வீரகேசரி இணையம்சாய்பாபாவின் மகாசமாதி திறப்பு: பொதுமக்கள் தரிசனம்


15/07/2011
குரு பூர்ணிமா தினமான இன்று பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபாவின் மகாசமாதி பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.

பிரசாந்தி நிலையத்தில் சமாதி அமைந்துள்ள சாய் குல்வந்த் அறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமினர்.

சாய் குல்வந்த் அறையில்தான் சாய்பாபா பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். மேலும் புட்டபர்த்தியின் நிகழ்வுகளில் குரு பூர்ணிமா முக்கியமான தினமாகும். செவ்வக வடிவிலான மகாசமாதி வெள்ளை பளிங்கு மாளிகையைப் போன்று இருந்தது. சமாதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆந்திர அமைச்சர்கள் ரகுவீர ரெட்டி, கீதா ரெட்டி, விஎச்பி மூத்த தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் சமாதி திறந்த பின்னர் தரிசித்தவர்களில் முக்கியமானவர்கள்.

சமாதி திறக்கப்படுவதையொட்டி புட்டபர்த்தி முழுவதும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற சத்ய சாய்பாபா கடந்த ஏப்ரல் 24-ம் திகதியன்று முக்தி அடைந்தார். அவரது உடல் ஏப்ரல் 27-ம் திகதி அரசு மரியாதைகளுடன் சாய் குல்வந்த் அறையில் அடக்கம் செய்யப்பட்டது.
நன்றி வீரகேசரி இணையம்

மேலதிக படங்கள்நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 4 இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Sunday, 17 July 2011

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்து நாட்கள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து ஆலய சுற்றாடல் அழகுபடுத்தும் பணியினை யாழ்.மாநகர சபை ஆரம்பித்துள்ளது. தற்காலிக மலசலகூடங்கள் அமைத்தல், ஆலய சுற்றாடலில் அதிக மின்விளக்குகளைப் பொருத்துதல், ஆலய சுற்றாடலில் மண் பரப்புதல், குடிநீர்த் தொட்டிகளை அமைத்தல் ஆகிய பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆலய சுற்றாடலில் யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி வர்த்தக ஸ்தாபனங்களைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாதென யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.

வர்த்தக ஸ்தாபனங்களைத் திறப்பதற்கான காணிகளை ஒதுக்குவதற்கான கேள்விகளை யாழ்.மாநகர சபை கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில் பெற்று எதிர்வரும் 28.07.2011 க்கு முன் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரியுள்ளõர். தற்காலிகக் கடைகளை யாழ்.மாநகர சபை அமைத்துக் கொடுக்கும்.

வழமைபோல உற்சவ காலத்தில் தினமும் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் இசையரங்கு இடம்பெறும்.

நன்றி தினக்குரல்அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் தமிழ் மக்களும்
Sunday, 17 July 2011

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழ்நிலையைத் தோற்றுவிக்கவல்ல அரசியல் சமிக்ஞையை அரசாங்கம் தங்களுக்குக் காண்பிக்கவில்லை என்ற கவலை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு வழிவகைகளை ஆராயும் செயன்முறைகளை இயன்றவரை தாமதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களை மாத்திரமே தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் கூட மட்டுப்பாடுகள் உண்டு. இதனால் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளுடன் அன்றி தனது முகவர்களுடனேயே அரசாங்கம் ஊடாட்டங்களைச் செய்ய விரும்புகிறது என்று தமிழ் மக்கள் விசனப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழ்ப் பகுதிகளுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகள் கூட பெரும்பாலும் ஏதாவது ஒரு தேர்தல் நடைபெறும் காலகட்டத்திலேயே பெருமளவுக்கு காட்சிப்படுத்தல் தன்மையுடன் தீவிரப்படுத்தப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக வட பகுதிக்கு படையெடுக்கும் அமைச்சர்களின் தொகை இதற்குச் சிறந்த உதாரணமாகும். எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு இந்தப் படையெடுப்பில் தணிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அபிவிருத்திச் செயற்பாடுகளை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முழு அரசியல் பிரதிநிதிகளையும் சம்பந்தப்படுத்தி முன்னெடுப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டுமேயானால் அதை ஓரளவுக்கேனும் ஆரோக்கியமான அரசியல் சமிக்ஞையாக அந்த மக்களினால் கருதப்படக் கூடியதாக இருக்கும் என்பது எமது உறுதியான அபிப்பிராயமாகும்.

தங்களது சொந்த அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார முறைமைகளைத் தீர்மானிப்பதில் மக்களினால் சுதந்திரமாக வெளிப்படுத்தக் கூடிய விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசப் பெறுமானமே ஜனநாயகம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வாழ்வின் சகல அம்சங்களிலும் தங்களது பங்கேற்பை மக்களினால் உறுதி செய்து கொள்ளக்கூடிய மார்க்கங்களை வழங்க வேண்டியதே ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து மீண்டு வழமையான குடியியல் வாழ்வுக்குத் திரும்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அந்த அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டின் குறைந்தபட்ச அம்சங்களையாவது அனுபவிப்பதற்கு வகை செய்ய வேண்டியதே அரசாங்கத்தின் கடமையாகும். ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக மக்களின் விருப்பமே இருக்க வேண்டுமென்று கூறுவதன் மூலமாக ஜனநாயகத்தின் கோட்பாட்டைத் தெளிவாக விளக்கியிருக்கிறது. பயனுறுதியுடைய அரசியல் பங்குபற்றலுக்கு அத்தியாவசியமான உரிமைகளை மனித உரிமைகள் பிரகடனம் விதந்துரைத்திருக்கிறது. தமிழ் மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய முழு அரசியல் பிரதிநிதிகளையும் தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்திச் செயன்முறைகளில் சம்பந்தப்படுத்துவதன் மூலமாக தேசிய நல்லிணக்கத்தில் அந்த மக்களுக்கு நம்பிக்கையை படிப்படியாக ஏற்படுத்த முடியும்!

நன்றி  தினக்குரல்இலங்கை தமிழர்கள் பிரச்னை: ஹிலாரியிடம் ஜெயலலிதா பேச்சு
jeyalaitha-hilariசென்னை: இலங்கையில், முகாம்களில் உள்ள தமிழர்கள் பிரச்னை குறித்து, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கவலையை பகிர்ந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், மீண்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் செல்வதற்கான, புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.சென்னைக்கு வருகை தந்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, கோட்டையில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். முதலில், தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்காக, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹிலாரி, "இந்தளவு வெற்றி, உலகின் எந்த அரசியல்வாதியையும் பொறாமைப்பட வைக்கும்' என்றார். மேலும், இதற்கு முன் முதல்வராக இருந்த போது, ஜெயலலிதா செய்த சாதனைகளை பாராட்டிய ஹிலாரி, இவ்வளவு பெரிய பிரபலத்தை சந்தித்துப் பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்தார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான வர்த்தக உறவு இருப்பதையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்வதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் நடுத்தர வர்த்தக சந்தை இன்னும் வளரும் போது, வருங்காலங்களில் அமெரிக்காவின் இறக்குமதி சேவை, இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார். மேலும், தமிழகம், ஆட்டோ மொபைல் துறையில் பெரிய அளவில் வளர்ந்து வருவதால், இங்கு அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் அமெரிக்க முதலீடுகள் அதிகமாக செய்வதற்கு, பெருமளவு திறன் இங்கு உள்ளதாக ஹிலாரியும் தெரிவித்தார். திறன் மேம்பாட்டு முயற்சிகளை பொறுத்தவரை, "தமிழகத்தின் மனிதவளம் தான் மிகப் பெரிய முதலீடாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் வளர்ச்சிக்கு கல்வி முக்கிய பங்கு வகிக்க உள்ளது' என்று, ஜெயலலிதா குறிப்பிட்டார்.

"தமிழகத்தில், 2011 முதல் 2020ம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் வேலைவாய்ப்பை தரும் அளவுக்கு, தகுதி உள்ளது. தற்போதுள்ள உயர்கல்வி மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள், இதை உறுதி செய்ய, இன்னும் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கு, அமெரிக்க அரசும் தமிழக அரசும் இணைந்து, திறன் வளர்ப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டால், தற்போதுள்ள தொழில் பயிற்சி மையங்களை மேம்படுத்த முடியும்' என்றார் முதல்வர்.

இதற்கு ஹிலாரி, "அமெரிக்கா மற்றும் தமிழகத்தில் உள்ள பயிற்சி மையங்கள் இடையே, பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்தலாம். மேலும், தமிழகத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், அமெரிக்க மாணவர்கள் உள்பயிற்சி எடுக்க வேண்டும்' என்று விருப்பம் தெரிவித்தார்.

"சாலை உள்கட்டமைப்பு சேவையில் அமெரிக்கா மற்றும் தமிழக அரசுகள் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன' என்று ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு ஹிலாரி, "அமெரிக்காவின் அயல்நாட்டு தனியார் முதலீட்டுக் கழகம், தமிழகத்தில் முதலீடுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரிய முதலீடுகளை செய்வதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொள்ளும்' என்றும் உறுதியளித்தார்.

"சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் வழங்கப்படும், "எச்1பி' விசாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் 65 ஆயிரம் விசாக்கள் என்பது, வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது. நிராகரிக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, ஒரிஜினல் அளவான, ஒரு லட்சத்து 95 ஆயிரம் விசாக்களை வழங்கும் வகையில், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என்று முதல்வர் வலியுறுத்தினார்.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து, இருவரும் வெகு நேரம் பேசினர். "இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், யாழ்ப்பாணம் பகுதியில், இன்னும் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களால், ஏற்கனவே வாழ்ந்த தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை' என்று, முதல்வர் ஜெயலலிதா கவலை தெரிவித்தார். கவலையை பகிர்ந்து கொண்ட ஹிலாரி, "இந்த தடையை முறியடித்து, முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கான புதிய யுத்திகள் மற்றும் திட்டங்களை அமெரிக்கா வகுத்து வருகிறது' என்று பதிலளித்தார். அப்போது முதல்வர், "தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு, இங்குள்ள குடிமகன்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன' என்றார்.

அமெரிக்காவுக்கு வர அழைப்பு : சந்திப்பின் போது, "அமெரிக்காவில் உள்ள மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே மாநிலங்களுக்கு இடையேயான பொருளாதார மற்றும் தொழில் திட்டங்களை இணைந்து செயல்படுத்தலாம்' என்று ஹிலாரி விருப்பம் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்த ஹிலாரி," தமிழகத்தின் சாதனைகள் பற்றி அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ள, அந்த பயணம் உதவியாக இருக்கும்' என்றார்.

சூரிய சக்தி பூங்கா : ஹிலாரியிடம், முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ""சூரிய சக்தி மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களில், நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவில் வாய்ப்புகளை தமிழகம் வழங்க முடியும். தமிழக அரசு, தலா, 300 மெகாவாட் திறன் கொண்ட, 10 சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு, 900 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு தேவை. அமெரிக்க நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய வசதியாக, தமிழகம் மற்றும் அமெரிக்க அரசுகள் இணைந்து திட்டம் வகுக்கலாம்'' என்றார்.

நன்றி தேனீ

இந்திய பலகலாசார ஜனநாயகத்தை இலங்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் ஹிலாரி
Thursday, 21 July 2011

helari_kelithanஇந்தியாவின் பலகலாசார ஜனநாயகம் அண்டைய நாடான இலங்கைக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்த ஹிலாரி கிளின்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இலங்கைத் தமிழர் விவகாரத்தையும் தமது உரையின் போது குறிப்பிட்டிருக்கின்றார்.

தமது உரையைத் தமிழில் "வணக்கம்' என்று கூறியவாறு ஆரம்பித்த ஹிலாரி, இலங்கையிலுள்ள ஒவ்வொரு பிரஜையுமே சம வாய்ப்பையும் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உடையவர்கள் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் சகல குடிமக்களுமே ஒன்றிணைந்ததன் மூலம் வெற்றியீட்டியதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளதுடன், இதே விதமான நம்பிக்கையையும் வாய்ப்பையும்

பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு இலங்கையரும் உரிமையுடையவர்கள் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலமும் இருதரப்பு உறவும் 21 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட பங்குடமையாக விளங்கும் என்று கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், பொருளாதார சுபீட்சத்தை வென்றெடுத்தல் என்பனவற்றில் அமெரிக்காவும் இந்தியாவும் பொது உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறிய ஹிலாரி வித்தியாசமான பின்னணியையும் வேறுபட்ட நாடுகளாகவும் நாங்கள் இருப்பது உண்மை. காலத்திற்குக் காலம் நாங்கள் இணக்கம் அற்ற தன்மையைக் கொண்டிருப்போம். ஆனால், எமது நாடுகளுக்கிடையிலுள்ள பிணைப்பானது வேறுபாடுகளை மேலோங்கச் செய்ததாக அமையுமென்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியை அதிகளவு ஆவலுடன் அமெரிக்கா அவதானித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஹிலாரி ஜனநாயக அத்திபாரத்தை இந்தியா பேணி வருவதுடன், வறியமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் இந்தியாவிற்கு இருக்கும் உறுதியான ஈடுபாட்டை புகழ்ந்துரைத்த ஹிலாரி மியன்மார் அரசாங்கத்துடன், இந்தியத் தலைமைத்துவம் தொடர்ந்தும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டுமெனக் கூறியுள்ளார். தனது சொந்த மக்களை மியன்மார் அரசாங்கம் நடத்துவது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்கிடையில் அதிகளவு பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆதரவை வெளிப்படுத்திய ஹிலாரி ஆனால், அந்த விடயம் இலகுவாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேபாளமானது புதிய அரசியலமைப்பை வரைவதற்கு இருதடவைகள் முயற்சித்திருந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள ஹிலாரி அதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி தினக்குரல்கிளிநொச்சியில் விமான ஓடுதளம் திறந்து வைப்பு _

20/07/2011
இலங்கை விமான படையினால் கிளிநொச்சியில் விமான ஓடுதளம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையின் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்கிரமவினால் திறந்து வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளினால் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு பகுதியிலேயே இந்த விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரிகிளிநொச்சியில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மனோ, கிரிஷ், சுசித்ரா மறுப்பு
21/07/2011

கிளிநொச்சியில் நேற்று நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான மனோ மற்றும் கிரிஷ், சுசித்ரா, ஆகியோர் பங்கேற்க இருந்த போதிலும், தமிழக தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காது மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர்.

கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தேசிய விளையாட்டு மைதான அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர்களான மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

மனோ உள்ளிட்ட மூன்று பேரின் இந்தப் பயணத்திற்கு ம.தி.மு.க. செயலாளர் வைகோ மற்றும் பழநெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மனோ உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்தே சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து பாடகர் மனோ கருத்துத் தெரிவிக்கையில்: என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சகளுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கிளிநொச்சியில் விளையாட்டு மைதான திறப்பு விழாவிற்காக இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை ஏற்பாட்டாளர்கள் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன் தமிழ் பாட்டுக்களைப் பாடலாம் என்று நாங்கள் இதற்கு ஒப்புக் கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கலந்து கொள்கிறார் என்பது தெரியவந்தது. பல பெரியவர்கள் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்தவிடயம் எமக்கு தெரியவந்தது.

நாங்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்னக் கஷ்டம் வருவது போல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன். நானும் பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகின்றோம். நாம் கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் என்றும் நன்றி உடையவர்களாகவே இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
நன்றி வீரகேசரிதேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதி அப்பட்டமான முறையில் மீறியுள்ளார்: மாவை


21/07/2011
தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதியே அப்பட்டமாக மீறியுள்ளார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆட்திரட்டல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையாளரோ நலத்திட்டங்கள், வேலைத்திட்டங்கள், வேலைவாய்ப்புக்கள் நிதிஒதுக்கீடுகள் என்பவை தேர்தல் விதிமுறைகளை மீறுபவை என அறிவித்துள்ளார். ஆனால் அவை அனைத்தையும் ஜனாதிபதியே மீறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி இவ்வாறான சிறிய தேர்தல் விதிமுறையை மீறுவது மக்களை அச்சமூட்டுவதாக இருக்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இங்கு நீதியான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என கபே உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்பினரும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் கூறிவருகின்றனர். அதனையே நாமும் கூறிவருகின்றோம்.

வாக்காளர் அட்டைகள் ஒழுங்காக விநியோகிக்கப்படவில்லை, கிளிநொச்சியில் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை படையினர் வீடுவீடாகச் சென்று பெற்று வருகின்றனர். தீவகத்தில் உள்ள தபாலகத்தில் வாக்காளர் அட்டைகளை இனந்தெரியாதவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.

அரச தரப்பினரும் அதன் அதிகாரிகளும் இராணுவத்தினரும் முறைகேடாக தேர்தலை நடாத்தி வெற்றியீட்ட முற்படுகின்றனர். தீவகப்பகுதிகளுக்கு அரசாங்கத்தின் பங்கு கட்சி தவிர்ந்த எவரும் பிரச்சாரத்திற்கு செல்லமுடியாது உள்ளது. மக்களை நாங்கள் நேரடியாக சந்திக்க சென்றால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

கடந்த காலங்களில் கூட்டமைப்பு மட்டுமன்றி முன்னாள் அமைச்சரான அமரர் மகேஸ்வரன் கூட தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் தீவக வாக்காளர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை பற்றி மாற்றுவழிகள் ஊடாக தெரியப்படுத்தியுள்ளோம். தீவகத்தில் எமது கட்சி வேட்பாளர்களினதும் வாக்காளர்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தெரியப்படுத்தி கூடியளவு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறும் கோரியுள்ளோம்.

ஜனாதிபதி மீதும் அரசினர் மீதும் ஐ.நா. போர்க்குற்றம் சுமத்தப்பட்டநிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் பேசி வருகின்ற நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாது தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு அரசியல் தீர்வை பெறுவதற்கு ஒரேயணியில் பொதுமக்கள் திரள வேண்டும் எனவும் கோருகின்றோம் என்றார்.
நன்றி வீரகேசரி
No comments: