தமிழ் சினிமா

தெய்வத்திருமகன்


படத்திற்குப் படம் தன்னை மெருகேற்றி கொள்ளும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு சிறந்த படமாக வெளியாகியிருக்கிறது ”தெய்வத்திருமகள்”.

ஐந்து பாட்டு, மூன்று சண்டை, பஞ்ச் வசனங்கள் என்று பெரிய நாயகர்களை மசாலா கண்ணோட்டத்தில் பார்க்கும் சில இயக்குனர்களுக்கிடையே, தான் முற்றிலும் மாறுபட்டவன் என்பதை மறுபடியும் ஒரு முறை நிருபித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

மனவளர்ச்சி குன்றிய விக்ரமுக்கும், அவருடைய காதல் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் விக்ரமின் மனைவி இறந்து விடுகிறார். குழந்தை அழுதால் கூட என்ன செய்வது என்று தெரியாத மனநிலையில் இருக்கும் விக்ரம், தனது பெண் குழந்தைக்கு ”நிலா” என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.

குழந்தைக்கு ஐந்து வயதாகி பள்ளிக்கு செல்லும் இடத்தில் பிரச்சினை ஆரம்பமாகிறது. விக்ரமின் பணக்கார மாமனார் திடீரென்று நிலாவை விக்ரமிடம் இருந்து பிரித்து விடுகிறார். நிலாவை தேடி அலையும் விக்ரமுக்கு உதவ முன்வரும் வழக்கறிஞரான அனுஷ்கா, நீதிமன்றத்தின் மூலம் நிலாவை மீட்க சட்டப்படி போராடுகிறார். மனவளர்ச்சி குன்றியவர் குழந்தையை வளர்க்க முடியாது என்று சொல்லும் சட்டத்திற்கு இடையே விக்ரமின் தந்தை பாசம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை உணர்ச்சிக்கரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


ஆட்டிசம் என்று சொல்லக்கூடிய ஒருவகை மனவளர்ச்சி குன்றிய தந்தை வேடத்தில் விக்ரம். தனது மற்றொரு பரிணாமத்தை எந்த வித ஆர்பாட்டமும் இன்றி அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார். கயிற்றில் நடப்பது போன்ற கதாபாத்திரமாக இருப்பினும், எந்த இடத்திலும் அதிகப்படியான நடிப்பை வெளிப்படுத்தாமல் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறார் விக்ரம் என்ற இந்த நடிப்பு திமிங்கலம்.

விக்ரமிற்கு அடுத்தப்படியாக ரசிகர்களை கவர்கிறார் விக்ரமின் மகளாக நடித்திருக்கும் சாரா. அழகிலும் சரி, நடிப்பிலும் சரி ரசிகர்களை அசர வைக்கும் இந்த குழந்தை நட்சத்தித்தின் நடிப்பும் அபாரம். கவர்ச்சி நாயகி என்ற முத்திரையை இப்படத்தின் மூலம் உடைத்தெரிந்திருக்கிறார் அனுஷ்கா. குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் அனுஷ்காவின் உடல் மொழி அசத்தல்.

இவர்களைப் போலவே நடிப்பின் மூலம் நம்மை பிரமிக்க வைக்கிறார் நாசர். பாஸ்யம் என்ற பெரிய வழக்கறிஞராக நடித்திருக்கும் நாசரின் நடிப்பு அனுபவத்திற்கு பெரிய அப்ளாஸ். சந்தானத்தின் கொமெடி கண் கலங்கும் ரசிகர்களை அவ்வப்போது சந்தோஷப்படுத்துகிறது. சிறிய வேடமாக இருந்தாலும் அமலா பாலின் வேடமும், எம்.எஸ்.பாஸ்கர், சச்சின் கடேக்கர், கிருஷ்ணகுமார், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் வகையில் அமைந்திருக்கிறது.

நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு இனிமையான மெட்டுக்களை கொடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசையிலும் இப்படத்தின் மூலம் முன்னணிக்கு வருவார். ஒவ்வொரு காட்சிகளுக்கும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையை கொடுத்டிருக்கும் ஜி.வி.யின் இசை கூட ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறது. நீரோவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு என அத்தனை தொழில்நுட்பங்களும் கதையுடன் பயனித்திருக்கிறது.

மனவளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு எப்படி குழந்தை என்று யோசிக்கும் அறிவு ஜீவிகளுக்காக எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரத்தை கொண்டு ரொம்பவே அழகாகவும், கொமெடியாகவும் விளக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய். ”'தெய்வத்திருமகள்” படம் தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரை பதிக்கும் படம் என்பது உறுதி. எல்லை மீறாத காட்சிகள், காட்சிகளுக்கேற்ற வசனங்கள், தினிக்காத பாடல்கள் என கதைக்கு தேவையான திரைக்கதை ரசிகர்களை படத்தோடும், படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களோடும் ஒன்றிவிட செய்கிறது.

குறிப்பாக நீதிமன்ற காட்சியில் தந்தையும், மகளும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி அத்தனைப் பேரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்துவிடுகிறது. படத்தின் ”மைனஸ்” என்று பார்த்தால், முதல் பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்வது தான். குறிப்பாக ”கதை சொல்லப்போறேன்” என்ற பாடலின் நீளத்தை குறைத்திருக்கலாம். இருப்பினும் இந்த குறைகள் அனைத்தையும் ரசிகர்கள் மறந்து படத்துடன் ஒன்றிவிடச் செய்திருப்பது தான் இயக்குனர் விஜய்க்கு கிடைத்த வெற்றி.

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய முக்கியமான படம்.

நடிகர்கள்: விக்ரம், சந்தானம், எம்.எஸ். பாஸ்கர், நாசர்.
நடிகைகள்: அனுஷ்கா, அமலா பால்
குழந்தை நட்சத்திரம்: சாரா
ஒளிப்பதிவு: நீரோவ் ஷா
படத்தொகுப்பு: ஆண்டனி
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடல்கள்: நா. முத்துக்குமார்
தயாரிப்பு: யு.டி.வி. தனஞ்செயன்.
இயக்கம்: விஜய்

நன்றி விடுப்பு


No comments: