மல்லிகைப் பந்தல் ஏற்பாட்டில் நடைபெற்ற "சரஸ்வதி' விஜயபாஸ்கரன் அஞ்சலிக் கூட்டத்தில் கேட்டவை


.

ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தின் வீச்சைத் தமிழிலக்கிய உலகுக்குப் பரம்பல் செய்வதில் அதீத அக்கறை கொண்டிருந்த "சரஸ்வதி' தமிழக இலக்கியச் சிற்றிதழின் சாதனைகளைத் தமிழிலக்கிய அபிமானிகள் இன்றும் பொச்சடித்துப் பேசுகின்றனர்.அதன் ஆசிரியராக இருந்தவர் வ.விஜயபாஸ்கரன்.இந்த இலக்கியப் பெருமகன் 11.02.2011 இல் காலமாகியது குறித்து இலக்கியவாதிகள் பேரதிர்ச்சி அடைந்தனர்.பத்திரிகைகளில் இரங்கல் செய்திகள் வெளிவந்தன.இலக்கியப் பிரக்ஞை கொண்ட அனைவரும் பெரும் இழப்பாகக் கொள்ளக் கூடிய துயரம் இது என "ஞானம்' இலக்கியச் சிற்றிதழ் அதன் 130 ஆவது இதழில் தலையங்கம் வெளியிட்டது.அமரர் வ.விஜயபாஸ்கரனோடு நெருங்கிய தொடர்புவைத்திருந்த "மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவா அனுதாபக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.மூத்த பத்திரிகையாளர் சிவா சுப்பிரமணியம் தலைமையில் இக் கூட்டம் கொழும்பு 13, ஸ்ரீகதிரேசன் வீதியிலுள்ள மணிமஹால் மண்டபத்தில், 05.03.2011 ஆந் திகதி நடைபெற்றது.

விஜயபாஸ்கரனுக்கு இரு நிமிடச் சபையின் மௌனாஞ்சலியோடு கூட்டம் ஆரம்பமானது.தலைமையுரை : மூத்த பத்திரிகையாளர் சிவாசுப்பிரமணியம்
இன்றும் "சரஸ்வதி' இலக்கிய சஞ்சிகை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.அதன் ஆசிரியராக இருந்து நடத்தியவர் விஜயபாஸ்கரன்.சிற்றிதழ்களுக்கான விதி"சரஸ்வதி'யையும் விட்டு வைக்கவில்லை.குறுகிய காலமே அது தமிழ் இலக்கிய பணி செய்தது இருந்தும் நின்றுபோன பின்னரும் வெகுவாகப் பேசப்படுகிறது.இச் சஞ்சிகைக்குத் தனித்துவமுண்டு.இலக்கியவாதிகள் அக்காலத்தில் அணிகளாகப் பிரிந்து இயங்கினர். "சாந்தி' "தேசபக்தன்' போன்ற ஏடுகள் போல் சரஸ்வதி முற்போக்குக் களத்தில் தனது இலக்கியப் பணியைச் செய்தது.விஜயபாஸ்கரன் கொம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகாது ஆதரவாளராகவே இருந்தார்.


சரஸ்வதி முற்போக்குச் சித்தாந்த போராட்டம் நடத்தியது.அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த சக இலக்கிய ஏடான "எழுத்து' தோடு முரண்பட்டுச் சித்தாந்தப் போராட்டம் நடத்தியது. படைப்புகளை வெளியிட்டு ஈழத்து எழுத்தாளருக்கு ஊக்கமளித்தது. அவர்களது புகைப் படங்களை அட்டையில் வெளியிட்டது. ஈழத்துச் சிறுகதை மலரையும் வெளியிட்டது."சரஸ்வதி' க்குச் சந்தா சேகரிக்க விஜயபாஸ்கரன் இலங்கைக்கு வந்தார்.அவருக்கு எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ),கே.டானியல், டொமினிக் ஜீவா ஆகியோர் உதவினர். பிரபல தமிழ் நவீன இலக்கியவாதிகளான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர் இவரூடாகவே இலக்கிய உலகில் பிரபலமாகினர்.ஆனால் "சரஸ்வதி'யில் எழுதினவர்கள் காலப்போக்கில் தடம் மாறினர்.இலங்கை எழுத்தாளர் இன்னமும் கொள்கையில் உறுதியாகத் தான் இருக்கின்றனர்.இந்த அனுதாபக் கூட்ட ஏற்பாடு பொருத்தமானதே.
அஞ்சலி உரைகள்:
மல்லிகை டொமினிக் ஜீவா
விஜயபாஸ்கரனுக்கும் எனக்கும் ஐம்பதாண்டுத் தொடர்புண்டு.கடித மூலமான தொடர்புகளும் இருந்தது.யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியில் தமிழ்ப் பண்ணை என்ற புத்தகசாலை இருந்தது.ராமசாமி என்பவர் நடத்தினார்.50 சரஸ்வதி இதழ்கள் இக் கடைக்கு வர ஏற்பாடு செய்தேன்.இதன் விற்பனையில் தேக்கம் காணப்பட்டது தான்! ஆனால் இலக்கியவாதிகள் கடையைத் தேடிச் சென்றது கடைச்சொந்தக்காரருக்குச் சந்தோஷமாக இருந்தது. செ.கணேசலிங்கனுக்கு கொழும்பில் திருமணம் நடந்தது. ஒழுங்கு செய்தது போல் மு.வ.(மு.வரதராசன்) வரவில்லை. விஜயபாஸ்கரனை அழைத்தோம் கலந்து கொண்டார்.யாழ்ப்பாணம் வந்தபோது பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாணம் தேவனின் காரில் சென்று நானும் திருச் செல்வமும் அவரை அழைத்து வந்தோம்.
யாழ்ப்பாணம் லேக் வீயூ ஹோட்டலில் தங்கினார்.அவரைப் பலர் சந்தித்தனர்.கொழும்புக்கு யாழ்தேவியில் வந்தோம். கலியாணம் விஜயபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.கொம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால அனுதாபி கட்சி வெறியால் "சரஸ்வதி'யை நாசமறுத்தனர். ப.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கட்சி ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசினேன். எனது பேச்சுக் கட்சி பெலவில் எடுத்துக்கொள்ளப்பட்டது.தாமரை சஞ்சிகை வந்தது பிழையெனச் சுட்டிக் காட்டினேன்.அரசியல் தளத்துக்கு அப்பாலானது நேசிப்பு.இத்தகையோர் ஆற்றல் காரணமாகவே பேசப்படுகின்றனர்.அப்படியானவர் தான் ரஷ்ய எழுத்தாளர் அன்ரன் செக்கோ.
அக்காலத்தில் "கலைமகள்' ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் ஈழத்துப் படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்றார்.அப்படியாகில் உங்களது அம்மாமித் தமிழுக்கும் அடிக்குறிப்புப் போடுவீர்களா ? என நான் கேட்டேன். கல்கி போன்ற எத்தனையோ தமிழக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் யாருக்காவது விழா வைக்கிறோமா? ஏன் விஜயபாஸ்கரனுக்கு வைக்கிறோம் ! நன்றி உணர்வுண்டு. புதிய பரம்பரையை வளர்த்து விட்டார். விஜயபாஸ்கரனை மறக்கமாட்டோம்.
தெளிவத்தை ஜோசப்
விஜயபாஸ்கரனுக்கும் ஈழத்து இலக்கியவாதிகளுக்குமிடையில் இருந்த இறுக்கமான தொடர்பை இக் கூட்டம் காட்டுகிறது.சந்தோஷமாக இருக்கிறது.அவருடைய பிறந்த மண்ணான தமிழகத்தில் இருந்தளவுக்கில்லை.ஆனால் இங்கு நாம் அவருக்கு அஞ்சலி செய்கிறோம்.1960 களில் எனக்கு விஜயபாஸ்கரனைத் தெரியாது.பின்னர் தேடல் மூலமாக அறிந்து கொண்டேன்.கொம்யூனிஸ்ட் என்பதில் ஆணித்தரமாக இருந்தார்.ஈழத்து எழுத்தாளரை மதிக்கும் பண்பு அவரிடமிருந்தது.1955 இல் தொடக்கப்பட்ட "சரஸ்வதி' சிறிய சைஸிலேயே ஆரம்பத்தில் வெளிவந்தது.பின்னர் பெரிய சைஸில் வெளியிடப்பட்டது.சிற்றிதழ் அட்டையில் இலக்கியவாதிகளின் படத்தை வெளியிடும் கலாசாரத்தைத் தொடக்கி வைத்த முன்னோடி விஜயபாஸ்கரன்.ஈழத்தவரான எச்.எம்.பி. மொஹிதீனின் படத்தைச் "சரஸ்வதி' அட்டையில் வெளியிட்டார்.எழுத்தாளர்களைக் கனஞ் செய்தார்.இதற்கு முரண்பாடுகளும் வெளிப்பட்டதுண்டு.
"சரஸ்வதி' யில் அரசியல் வரக் கூடாதென்ற போக்கில் அதை நடத்தினார்.அக்காலத்தில் முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தூணாக இருந்த பிரேம் சந்த் நடத்திய பத்திரிகையின் பெயரும் "சரஸ்வதி'என்பதே விஜயபாஸ்கரனின் மனைவி பெயரும் சரஸ்வதி தான் ஈழம் வந்து திரும்பிய பின்னர் பதிப்பகமொன்றை ஆரம்பித்தார்.எச்.எம்.பி.மொஹிதீனின்"கார்க்கியைக் கண்டேன்' டொமினிக் ஜீவாவின் "தண்ணீரும் கண்ணீரும்', எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)யின்"தீ' ஆகிய ஈழத்து நூல்கள் அவரது பதிப்பகத்தின் ஊடாகவே வெளியிடப்பட்டன.விஜயபாஸ்கரன் தமிழிலக்கியத்துக்குச் செய்த பணி மறக்க முடியாதது.
"கொழுந்து" ஆசிரியர் அந்தனி ஜீவா
சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை ஆகிய இக்கட்டான சூழலில் ஆத்மார்த்தமான இந்த அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது.கி.வா.ஜகந்நாதன் ஈழத்து இலக்கியப் படைப்புகளுக்கு அடிக்குறிப்புத் தேவை என்றார்.இப்படிப் பல எதிர்க் குரல்கள் அக்காலத்தில் ஈழத்து இலக்கியத்துக்கு எழுந்தன.ஆனால் ஒரேயொரு குரல் எமக்கு அனுதாபம் காட்டியது.அதுதான் விஜயபாஸ்கரன்."சரஸ்வதி'அட்டையில் எழுத்தாளர்களின் படங்கள் வந்தன. சோவியத் நாடு காரியாலயத்துக்கு தி.கா.சியோடு சென்று விஜயபாஸ்கரனைச் சந்தித்தேன்.நன்றாக உபசரித்தார்.
"மணிக்கொடி'க்கு பின் "சரஸ்வதி' தமிழிலக்கியத்துக்குப் பெரும்பங்களிப்புச் செய்திருக்கிறது.இருந்தும் ஒதுங்கியே வாழ்ந்தார். தமிழச் சிறு சஞ்சிகை வரலாற்றில் “சரஸ்வதிக்கும் வ.விஜயபாஸ்கரனுக்கும் என்றும் அழியாத இடமுண்டு.
திக்குவல்லை கமால்
1970 களில் எழுதத் தொடங்கிய காலத்தில் ஏ.எச்.எம்.ஸம்ஸ் மூலமாகக் கிடைத்த சரஸ்வதி இதழ்களை வாசித்தேன்.அதில் வாசிப்பு வித்தியாசமிருந்ததைக் கண்டு விடுபட முடியாது தொடர்ந்தேன்.இந்த அஞ்சலிக் கூட்டத்தை மல்லிகை நடத்துவது சரஸ்வதியின் வெற்றியைத் தான் காட்டுகிறது.அச் சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்கள் இன்று போற்றத்தக்க ஆளுமைகளாகத் திகழ்கிறார்கள்.
பா.ஆப்டீன்
1962 இல் விஜயபாஸ்கரன் நாவலப்பிட்டிக்கு வந்தார்.நான் சரஸ்வதியின் தீவிர வாசகனாக இருந்தேன்."ஆத்ம ஜோதி' முத்தையா அவரைச் சந்திக்க இலக்கிய ஆர்வலர்களைத் திரட்டச் சொன்னார்.விடுதிக்குச் சென்றோம்.அச்சந்தியில் விஜயபாஸ்கரனிடம் மனித நேயம் இருந்ததைக் கண்டோம்.இரண்டு சரஸ்வதி இதழ்களை இலவசமாகத் தந்தார்.அவரது இலக்கிய நோக்குப் புனிதமானது.இலக்கியம் படைப்பாளிகளை மட்டுமன்றி ஆர்வலர்களையும் மதித்தார்.
"ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரன்
விஜய பாஸ்கரனின் தந்தை தீவிர காங்கிரஸ்காரர். இளமைக்காலத்தில் அவரும் அக்கறை காட்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றிருக்கிறார். சிற்றிதழ் வெளியீட்டுக்குச் "சரஸ்வதி' இலக்கணம் வகுத்தது. "மல்லிகை' இதழுக்கு ஆதாரம் "சரஸ்வதி' தான். காவலூர் ராஜதுரையும் "சரஸ்வதி' யில் எழுதியிருக்கிறார். இன்றெனக்கு முக்கியமான தனிப்பட்ட அலுவல்கள் பல இருந்தும், "சரஸ்வதி' ஆசிரியர் விஜய பாஸ்கரனுக்கு அஞ்சலி உரை நிகழ்த்த வேண்டுமென்பதற்காக அவைகளை விட்டு விட்டு இங்கே வந்தேன்.
மூத்த இலக்கியவாதி செ.கணேசலிங்கன்
பூனா சென்று எழுத்தாளர் காண்டேகரைப் பார்த்து விட்டு, விஜய பாஸ்கரனைப் பார்க்கச் சென்னை சென்றேன். அவரோடு பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் இருந்தார். ஜே.கே.தான்"சரஸ்வதி'க்கு புரூவ் பார்த்தார். மவுண்ட் றோட்டுக் ஹோட்டலுக்குச் சென்று காப்பி குடித்தோம். "சரஸ்வதி' இன் கதை சோகமானது. புரட்சிகரமான வாழ்வை விஜயபாஸ்வரன் வாழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அங்கு மாணவர் எழுச்சி ஏற்பட்டது. தந்தையின் கொள்கைகளோடு விஜயபாஸ்கரன் முரண்பட்டார். அப்பொழுது கொம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது.
சோவியத் நாடு அலுவலகத்தில் தொழில் புரிந்த போது தமிழ்,தெலுங்குப் பதிப்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தார். அடிக்கடி நானவரைச் சந்தித்திருக்கிறேன். இரண்டு மகன்மார் இருக்கின்றனர். ஒருவர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். நான் " ஏஐNஈக்' பத்திரிகையில் எழுதும் விமர்சனங்களைப் படிப்பார். தபாலட்டையில் விமர்சனம் எழுதி எனக்கு அனுப்புவார். எனது புத்தகங்களை வாசித்தார்.
சுறுசுறுப்பானவர். எப்பொழுதும் சிரித்த முகத்தோடேயே காணப்படுவார். நெட்டையானவர், திரும்பிச் செல்ல இருந்தேன். அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பிரயாணத்தைப் பிற்போட்டு விட்டு இந்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். "சரஸ்வதி' ஊடாக விஜயபாஸ்கரனின் ஆத்மாவைப் பார்க்கலாம். "மணிக்கொடி' காலகட்டத்தவர்களான புதுமைப் பித்தன், கு.ப.ரா.சிறுகதையின் வடிவத்தை முதன்மைப்படுத்தினர்."“சரஸ்வதி' தான் உள்ளடக்கத்தை முன்னேற்ற வைத்தது.
ஈழத்து இலக்கியம்தான் தகுந்த இலக்கியமென உணர்ந்தவர் விஜயபாஸ்கரன். புதுமைப்பித்தன் மனோரீதியõக (கீOMஅNகூஐஇ) எழுதுகிறார். என பேரா.க.கைலாசபதி கருத்துரைத்தார். அடுத்த கட்டமாக இயற்பியல்வாதம் வந்தது. அதற்குப்பின்னரே யதார்த்த மார்க்சியப் பார்வைகள் படைப்புகளுக்கு வந்தன. இலக்கியத்தில் பேரா க.கைலாசபதி ஏற்றுக் கொண்ட மாற்றம் வேண்டும். புதிய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். கலைஞன் பதிப்பகம் "சரஸ்வதி' சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. இது "சரஸ்வதி'யைப் பிரபலப்படுத்தும் கட்சி ரீதியாகத் தமிழகத்தில் இச் சஞ்சிகையை ஒதுக்கினர். சரஸ்வதியையும் விஜயபாஸ்கரனையும் அடுத்த பரம்பரையும் பேசும், அவர் மறைந்து விட்டது எனக்குப் பெரிய இழப்பாகும்.
நன்றியுரை: மேமன்கவி
சிற்றிதழ் பரம்பலுக்கு"சரஸ்வதி' தான் கால்கோளிட்டது. இதைச் சி.சு.செல்லப்பா கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
புதுக் கவிதைகளைக் க.நா.சு.இச்சஞ்சிகையில் எழுதியிருக்கிறார். கலைஞர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சரஸ்வதி சிறுகதைகளின் தொகுப்புப் புதிய தலைமுறைக்கு உதவும்
Nantri : Thinakural

No comments: