நாடாளும் வண்ணமயில்...,-

.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பதை நாம் அறிவோம். இப்படத்தில் ‘அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்!’ என்ற பாடலை அருமையாக எழுதிய கவிஞரையே, படத்திற்குத் தேவையான மீதி இரண்டு பாடல்களையும் எழுதுமாறு, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு வேண்டிக் கொண்டார். அவற்றுள் ஒன்றுக்கான காட்சியைப் பந்துலு விவரித்தார். ‘கதாநாயகி ஜெயலலிதாவோ சிறுவயதுப் பெண்; முதன்முதலாக மிகப்பெரும் புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரோடு நடிக்கிறார். அதுவும் நெருக்கமான காதல் காட்சியில் நடிக்கிறார். அக்காட்சியே படப்பிடிப்பில் முதலாவதாக எடுக்கப்படவுள்ளது. எனவே பாடலும் அதற்கேற்ப அமைய வேண்டும்!’ என்றார்.

கவியரசருக்கா, காட்சியமைப்பிற்கான கானம் எப்படியிருக்க வேண்டும் என்று தெரியாது? ஏற்கனவே கலைச்செல்வியின் தமிழ்க் கலையுலகத்தின் தலைப்பிரசவமான முதல் படமான, ‘வெண்ணிற ஆடை’ படத்தின் வெற்றிக்கே மூலகாரணமான பாடல்களைப் பாங்குடன் எழுதியவர் கவியரசர். ஸ்ரீதரின் இயக்கத்தில், அவரது தயாரிப்பில் உருவான சித்ராலயாவின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் கலைச்செல்வி ஜெயலலிதா நடித்த முதல் காட்சி ஓர் அற்புதமான பாடல் காட்சியாகும் அப்பாடல்,

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச்

சொல்லச் சொல்ல

கல்லும் முள்ளும் பூவாய் மாறும்

மெல்ல மெல்ல!….”

என்று, கனிவாய் மலர்ந்து, கேட்போர் மனங்களை மகிழ்விக்கும் கண்ணதாசன் பாடலேயாகும். அந்தப் படத்தில் ஜெயலலிதா நடிக்கும் பாடல் காட்சி முதன் முதலாகப் படமாக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின் பல்லவி இதுதான்.

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல

கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல’

ஜெயலலிதா தெய்வபக்தி மிக்கவர். அவருடைய வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்பட்ட கல்லையும், முள்ளையும் தெய்வ பக்தி சார்ந்த தனது மன உறுதியால் பூவாக மாற்றி வெற்றிநடை போட்டு வந்திருக்கிறார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படத்தில் அவர் ஏற்ற பாடல் வரிகளே அவருடைய எதிர்கால வாழ்க்கைக்குக் கட்டியம் கூறுவதுபோல் அமைந்துவிட்டன.” இதனால் கவிஞருக்குள் எழுந்து வரும் பாடல் வரிகள், பலரது வாழ்க்கைக்கும் அனுபவப் பாடமாகவே அமைந்துள்ளன என்பதனை அறியலாம்.

ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் காதல் காட்சிக்கான பாடல்.....

ஆண்: “நாணமோ? இன்னும் நாணமோ? – இந்த

ஜாடை நாடகம் என்ன? – அந்தப்

பார்வை கூறுவதென்ன?

நாணமோ?…. நாணமோ?…..

பெண்: நாணுமோ? இன்னும் நாணுமோ? – தன்னை

நாடிடும் காதலன் முன்னே – திரு

நாளைத் தேடிடும் பெண்மை

நாணுமோ? ….. நாணுமோ?”

டி.எம்.எஸ். பி. சுசீலா இருவரின் இன்பக் குரல்களில் ஒலிக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இந்தப் பாடல் தரும் இனிமையை இன்றும் நம் இதயங்கள் குளிரக் கேட்கலாம்! இப்பாடல் காட்சியில், ஜெயலலிதா நடிக்கும்போது, அவரையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் உண்டாகி விட்டது. அதனைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். ‘என்ன? ஏன் இப்படி நடுங்குறே? எதற்காக இப்படியெல்லாம் நடுங்க வேண்டும்? என்றார். எப்படியோ…. பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்து முடித்தார். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அங்கு வந்திருந்த சாண்டோ சின்னப்பா தேவரும், காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், ஜெயலலிதாவுக்குத் தைரியம் கூறி, ‘தைரியமா நடிக்கணும்மா… எம்.ஜி.ஆரோடு சரோஜாதேவி நடிச்சிருக்கிற மாதிரி நடிக்கணும்!’ என்றும் கூறிச் சென்றார்.

ஆனால், பாடல் காட்சி திரையில் வரும்போது, கவிஞரின் நாணமோ? இன்னும் நாணமோ?’ என்ற நளின வார்த்தைகளுக்கு ஏற்பவே புரட்சிச் செல்வியின் நடிப்பும் அமைந்திருந்தது கண்டு அனைவரும் பாராட்டினர் இப்படிக் கலைச்செல்விக்காக, கவிஞர் தந்த முதல் பாடல்களை எல்லாம் முழுமையான வெற்றி பெற்ற பாடல்களே எனலாம். இதே படத்தில் காதல் ஏக்கத்தில் கதாநாயகன் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதிய, டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ஒப்பற்ற பாடல் ஒன்றும் உண்டு. அதுதான்…..

“ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ!

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!”

என்று ஆரம்பமாகும் பாடல்.

“நாடாளும் வண்ண மயில்

காவியத்தில் நான் தலைவன்!

நாட்டிலுள்ள அடிமைகளில்

ஆயிரத்தில் நான் ஒருவன்!

மாளிகையே அவள் வீடு

மரக்கிளையே என் கூடு!…..”

இப்படித் தொடரும் பாடலை நம் மனங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா? இப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரின் ஏக்கப் பார்வை கொண்ட நயமான நடிப்பைத்தான் நம் நினைவுகளில் இருந்து நீக்கி விடத்தான் முடியுமா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி  “கவியரசு மின்னஞ்சல்”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: