இலங்கைச் செய்திகள்

.
தமிழ் மக்களிடமிருந்து மீண்டும் தெளிவான பதில்
யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை தொடரும்



கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற யாழ்தேவி ரயில் சேவைகள் 26ஆம் திகதி முதல் ஓமந்தை வரை நீடிக்கப்பட உள்ளது.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஓமந்தை ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி வைபவ ரீதியாக திறக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதன்படி கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற ரயில்சேவை அன்று முதல் ஓமந்தை வரைக்கும் நீடிக்கப்படுகின்றது.



ரயில் புறப்படும் நேரத்திலும் சற்று மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. ஓமந்தை நிலையம் திறக்கப்பட்ட தும் கொழும்பிற்கான அனைத்து ரயில் சேவைகளும் அங்கிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளன. _

நன்றி வீரகேசரி இணையம்

தமிழ் மக்களிடமிருந்து மீண்டும் தெளிவான பதில்


கௌரவமான அரசியல் தீர்வைப்பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு அந்தக் கட்சியின் அரசியல் தலைமைத்துவமும் இதர தலைவர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு வட,கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் வாக்காளர்கள் உறுதியான பதிலை அளித்திருப்பதை  வெளியான உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

வடக்கு, கிழக்கில் தேர்தல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையானவற்றில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 சபைகளின் நிர்வாகத்தைத் தன்வசமாக்கிக்கொண்டுள்ளது.

மன்னார் நகரசபை,மன்னார் பிரதேசசபை, வவுனியா பிரதேசசபை, மாந்தை கிழக்கு பிரதேசசபை,திருமலை நகரசபை,நாவிதன்வெளி பிரதேச சபை உட்பட வடக்கு,கிழக்கில் போட்டியிட்ட மன்றங்களில் பெரும்பாலானவற்றை தமிழ்க் கூட்டமைப்பு பெற்றிருப்பதன் மூலம் அந்தப் பிரதேசங்களில் தனது பலத்தைத் தமிழ்க் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கும் நிலையில் நியாயபூர்வமான அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தற்போது அரசாங்கத்திடமே உள்ளது என்பதை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து 22 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு மேலும் தாமதம் காட்டமுடியாது என்பதையும் இந்த குட்டித் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் உட்பட சகல சிறுபான்மையினரையும் அரசியல் பொதுவோட்டத்தில் உள்ளடக்கக்கூடியவகையிலும் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் விதத்திலும் தீர்வை முன்வைக்குமாறு தொடர்ந்தும் கொழும்பை வலியுறுத்தி வருகின்றன.

அண்மையில் முடிவடைந்த யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பும் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நடந்தவற்றை கவனத்திற்கு எடுத்து உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவியளிக்கும் நிலையானதொரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்துக்குப் பின்னர் இடம்பெற்ற சகல தேர்தல்களிலும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் 17 ம் திகதி  இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின் போதும் தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக,பொருளாதார,கலாசார அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான தீர்வைப்பெற்றுக்கொள்ள தமிழ்க்கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்களைப் பலப்படுத்துமாறு மக்களைக் கோரியிருந்தது.

மற்றொருவரின் கருணையில் தங்கியிராமல் தமிழ் மக்களால் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.அத்துடன் தமிழ் மக்களும் அனைத்து அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு பரிபூரண ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவரும் தமிழ் மக்களின் மூத்த தலைவருமான இரா.சம்பந்தனும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை மேசையில் தங்களின் பலத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கும் ஆதரவு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெளிவாகக் கூறியிருந்தார்.

இந்த வேண்டுகோளுக்கு தமிழ் மக்கள் வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் தேர்தல் இடம்பெற்ற 234 உள்ளூராட்சி சபைகளில் 205 ஐ தன்வசமாக்கிக் கொண்டு அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.நாடளாவிய ரீதியில் உறுதியான ஆதரவை தொடர்ந்தும் பெற்று வருகின்ற அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றக்கூடிய தீர்வொன்றை துரிதமாக முன்வைக்க வேண்டும் என்பதே ஜனநாயக சிந்தனைகளை வரித்துக்கொண்டோரின் வேண்டுகோளும் எதிர்பார்ப்புமாகும்.

வட,கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் நடைபெற்ற மூன்று முக்கியமான தேர்தல்களிலும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் அரசாங்கம் அக்கட்சியுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையை இதய சுத்தியுடன் முன்னெடுத்து பெறுபேறுகள் ஆக்கபூர்வமானவையாக அமைவதற்கு வழி சமைக்கவேண்டும் என்பது வேண்டுகோளாகும்.பந்து இப்போது அரசாங்கத்தின் தரப்பில்...

நன்றி தினக்குரல்

No comments: