உலகச் செய்திகள்

.

*ஆசிய நிறுவன உற்பத்தியில் பாதிப்பு
*ஜப்பான் அணு உலையில் மேலும் வெடிப்பு
*மனித உடலைப் பாதிக்கும் அளவு கதிர்வீச்சு

*இடர்பாடுகளுக்கிடையில் உடல்களை தேடும் பணியில் ஜப்பான் தீவிரம்

ஆயிரக்கணக்கானோரை பலியெடுத்தும் பல இலட்சக்கணக்கானோரை நிர்க்கதியாக்கியும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள பாரிய பூகம்பம் மற்றும் கடல்கோளால் மோசமான, மனிதாபிமான,அணு,பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் ஆசியாவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான்  திங்கட்கிழமை சின்னாபின்னமாகியிருக்கும் கரையோர நகரங்களில் சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணியை மீட்புப்பணியாளர்களின் உதவியுடன் தீவிரப்படுத்தியிருக்கிறது.


மூன்றாவது நாளாக குடிநீர்,உணவுத் தட்டுப்பாட்டால் வாடிக் கொண்டிருக்கும் வட,கிழக்குக் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் குளிரினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம், அணுஉலையின் இரண்டாவது ரியக்டர் வெடித்திருக்கின்றது. பங்குச்சந்தை மோசமாக வீழ்ச்சிகண்டுள்ளது. ரொயோட்டா,கொண்டா போன்ற பிரபலம் பெற்ற ஜப்பானின் கைத்தொழில்த் துறைகளுக்குப் பாரிய இழப்பீடுகள் ஏற்பட்டதையடுத்து பங்குச்சந்தையில் சரிவேற்பட்டிருக்கிறது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தினாலும் கடல்கோளினாலும் இறந்திருக்கலாமென மதிப்பிடப்படும் நிலையில், இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்குப் பாரிய அனர்த்தத்தை ஜப்பான் எதிர்கொண்டிருக்கிறது.

பல இடங்களில் குடிநீர் இல்லை, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றது. காஸைப் பெற்றுக்கொள்வதற்கு 4 அல்லது 5 மணித்தியாலங்கள் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சிறியளவு உணவு மற்றும் குடிநீருடனேயே மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். பொருட்கள் இன்னரும் சீரான முறையில் கிடைக்கவில்லை என்று கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இவாத்தேயிலுள்ள அரச அதிகாரியான ஹச்சினி ஷட்டோ கூறியுள்ளார். உதவி வழங்குமாறு அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம். ஆனால், பாரியளவு சேதாரமேற்பட்டிருப்பதால் உணவு, குடிநீரின் தேவை அதிகரித்திருக்கிறது. அத்தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தினால் இயலாமலுள்ளது. எமக்குத் தேவையானவற்றில் 10 சதவீதமானவற்றையே நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆனால்,நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சகலருமே துன்பப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

அதேசமயம், இறந்த உடல்களை வைப்பதற்கு சவப்பெட்டிகளைத் தேடி அதிகாரிகள் ஓடிக்கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். உடலைச் சுற்றிவைக்கும் பைகள்,சவப்பெட்டிகளை அனுப்புமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சவச்சாலைகளை நாங்கள் கேட்டிருக்கின்றோம். இந்த மாதிரியானதொன்று இடம்பெறுமென நாங்கள் நினைத்திருக்கவில்லை என்று ஷாட்டோ கூறினார்.

வெள்ளிக்கிழமை பூகம்பம் இடம்பெற்ற பின்னர் அந்தப் பகுதிகளில் 150 சிறிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. திங்கட்கிழமை 6.2 மக்னிரியூட் அலகிலான பூமியதிர்வொன்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடல்கோள் ஏற்படுமென்று அச்சமும் காணப்பட்டது. மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் சோமாப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அங்குள்ள மக்களுக்குத் தெரிவித்தனர். மேட்டு நிலத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். இங்கிருந்து போய்விடுங்கள் என்று படையினர் உரத்துச் சத்தமிட்டதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஏற்கனவே கடல்கோளால் பாதிக்கப்பட்ட சோமாப் பகுதியில் மேட்டுப்பகுதி நிலத்துக்கு வயது முதிர்ந்தோரை படையினர் காவிச் சென்றதைக் காண முடிந்தது. 65 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மோசமான நெருக்கடியென்று ஜப்பான் பிரதமர் நயோட்டா ஹான் கூறியுள்ளார். எவ்வாறு ஜப்பான் பதிலளிக்கப்போகின்றது என்பதிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பின்னர்  திங்கட்கிழமையே முதன்முறையாகத் தேடுதல் பணியில் ஈடுபடுவோர் சோமாப் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் இடிபாடுகளை அகற்றிவருகின்றனர். ஹெலிகொப்டர்கள் மேலே பறந்தவாறு அழிவுகளை மதிப்பீடு செய்து கொண்டிருந்தனர். கப்பல்கள் வீதிகளுக்குச் சமீபமாக வந்திருக்கின்றன. பியூகுசிமாவில் 1 இலட்சத்து எண்பதாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 1 இலட்சம் படையினர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

நன்றி தினக்குரல்

ஜப்பான் அணு உலையில் மேலும் வெடிப்பு
மனித உடலைப் பாதிக்கும் அளவு கதிர்வீச்சு

குளிரூட்டி செயலிழந்த காரணத்தால் வெப்ப நிலை அதிகரித்து டாய்ச்சியின் 2 ஆவது அணு உலையில்  ஏற்பட்ட வெடிப்பை அடுத்து அணுக்கதிர் வீச்சு அளவு மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஜப்பான் அரசு முதல் முறையாக உறுதி செய்துள்ளது.

ஜப்பானை ஒட்டிய கடற் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் அந்நாட்டின் கிழக்கு கரையிலுள்ள புகுஷிமா நகரிலிருக்கும் டாய்ச்சி அணு மின் நிலையம் செயலிழந்தது.

அதில் இருந்த அணு உலைகளுக்கு குளிர் நீரை செலுத்தும் குளிரூட்டிகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. இதனால் அணு உலைகளில் வெப்ப நிலை அதிகரித்து ஒவ்வொன்றாக வெடித்து வருகிறது.

02 ஆவது அணு உலையில் ஒன்றிற்குள் அதிகமான வெடிப்பு நிகழ்ந்துள்ளதென அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

அணு உலைகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிப்புகளால், அவைகள் உருகும் நிலைக்கு சென்றுள்ளதாகவும், அதன் காரணமாக அணுக் கதிர் வீச்சு மனித உடலை தாக்கும் அளவுக்கும் அதிகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு அபாய அறிவிப்புச் செய்துள்ளது.

‘மனித உடலை பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்’ என்று ஜப்பான் அமைச்சரவை செயலர் யூகியோ ஈடேனோ கூறியுள்ளார்.

மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிக கதிர்வீச்சு அணு உலைகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி உள்ளது என்றும் தூரம் செல்லச் செல்ல அது குறைவாக உள்ளது எனவும் ஈடேனோ கூறியுள்ளார். ஜப்பான் தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமர் நவோட்டோ கேன் “அணுக் கதிர்வீச்சு அதிகமாக வேளியேறும் அபாயம் அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

புகுஷிமா நகரில் ஒரு மணி நேர காலத்தில் தாக்கும் கதிர்வீச்சு அளவு, சாதாரண அளவை விட 8 மடங்கு அதிகமாக உள்ளதென டாய்ச்சி அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் (டெப்கோ) கூறியுள்ளது.

ஜப்பான் நேரப்படி 16 ம்  திகதி 8.31 மணிக்கு 1,941 மைக் ரோசீவர்ட்ஸ் ஆக இருந்த கதிர் வீச்சு அளவு அடுத்த ஒரு மணி நேரத்தில் 8,217 மைக்ரோசீவர்ட்ஸாக உயர்த்துள்ளது என்று டெப்கோ அளவிட்டுள்ளது.

16 ம்  திகதி  காலை டாய்ச்சி அணுமின் நிலையத்தின் 4வது உலையில் தீ பற்றியது. அதன் காரணமாக வீச்சு அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புகுஷிமா நகரில் மட்டுமின்றி, அங்கிருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் கதிர்வீச்சு அளவு அகரித்துள்ளதாக கியோட்டோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2 ஆவது அணு உலையை தாங்கியிருந்த வெளிச்சுவர் வெடித்திருக்கலாம் என்று ஐயப்படுவதாக ஜப்பான் அணுசக்தி முகாமை கூறியுள்ளது. இந்நிலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ள அணு உலைக்கு 20 கிலோ மீற்றருக்குள் இருப்போர் உடனடியாக வெளியேறுமாறும். 20 முதல் 30 கிலோ மீற்றருக்குள் இருப்பவர்கள் வெளிப்பரப்பில் இருப்பதை தவிர்க் குமாறும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் அணு உலைக்கு 20 கிலோ மீற்றருக்குள் மேலும் 500 பேர் அளவில் சிக்குண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதனிடையே சுனாமி அனர்த்தத்தினால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. 16 ம்  திகதி  உத்தியோக பூர்வ அறிவிப்பின்படி பலியானோரின் எண்ணிக்கை 2,400 ஆக அதிகரித் திருந்தது. எனினும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ் சப்படுகிறது.

இதேவேளை இலட்சக்கணக்கானோர் 5வது நாளாக உணவு, தண்ணீரின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரிதும் பாதிக்கப்பட்ட மியாகி பகுதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் கரையொதுங்கியுள்ளன. ஊரில் ஒரேயொரு மின்சார இடுகாடு மட்டுமே இருப்பதா லும் அங்கு நாளொன்றுக்கு 18 உடல்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். என்பதாலும் உடல்களை வைத்துக்கொண்டு ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

உணவு, தண்ணீர், இல்லாததோடு வெப்ப அளவும் குறைந்து குளிரில் மக்கள் வாடி வருவதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புகுஷிமாவில் 3வது அணு உலையும் வெடித்துள்ளதால் கதிர்வீச்சு அபாயமும் அந்த மக்களைத் துரத்துகிறது.

சிறிதளவு உணவு, குடிநீருடன் வட கிழக்கு பகுதிகளில் மக்கள் தற்போது இருந்து வருகின்றனர். நிவாரணப் பொருட்களை அப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தேவைக்கேற்ப நிவாரணப் பொருட்கள் வர முடியவில்லை. 10% நிவாரணப்பொருட்களே இதுவரை தங்கள் கைக்குக் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்களை பாது காப்பாக வைக்கும் பைகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு குறிப்பிட்டுள்ளது. தவிர பல நாட்டு மீட்பு பணியாளர்களும் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------
அணுஉலை செயற்பாடும் அதன் ஆபத்தும்

ரியாக்டரின் மையப் பகுதியில் கோர் கம்பிகளை சுற்றி நீர் இருக்கும் அதற்கு அதிக நீர் தேவை காரணமாகவே அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் ஆறு, கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும்.

அணுக்களை பிளக்கும் போது ஏற்படும் வெப்பம் ஒரே முறையாக வெளியாகாமல் தடுக்க கருவிக்குள் 2 அடுக்கு சுற்றுச் சுவர்கள் இருக்கும். இந்த நடைமுறையில் டர்பைன், ஜெனரேட்டரும் முக்கிய பங்கு வகிக்கும். பயங்கர சக்தியுடன் அணுவைப் பிளக்கும் போது கோர் கம்பிகளில் வெளிப்படும் வெப்பத்தால் நீர் கொதித்து ஆவியாகி அதனுடன் டர்பைன் செயல்பட்டு ஜெனரேட்டரில் மின் சக்தியாக மாற்றப்படும்.

அணுஉலை கதிர்வீச்சு கசிந்து உலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நீரில் பரவும், அதன் மூலம் கடல்நீரில் பரவும், காற்றில் பரவும் மண்ணில் இறங்கி, செடி, கொடி, பயிர்களை அழிக்கும், வானில் நீராவியாக பரவி, மழை தூறலில் கூட நம் தலையில் விழும். இப்படி அணுக்கதிர் ஆபத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்து காய்ச்சல், இருமலில் தான் ஆரம்பிக்கும்; காசநோய் முதல் புற்று நோய் வரை வரும். உறுப்புகளை ஊனமாக்கும். காலம் காலத்துக்குப் பாதிப்பு நீடிக்கும்.

ஜப்பானில் அணு உலைகள் மூன்றில் வெப்பம் அதிகமாகி, ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. அதற்குக் காரணம், பூகம்பம், சுனாமி, எரிமலை சீற்றம் போன்றவை தான். வெப்பம் கட்டுக்கடங்காமல் போக, கடல்நீர், உள்செலுத்தப்பட்டு, தணிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதில் எந்த அள வுக்கு ஆபத்து என்பதை பொறுத்துத்தான் விபரீதங்கள் உள்ளன. அந்தநாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே சில மாதங்களில் தெரியும். பல நாடுகளுக்குப் பரவ வாய்ப்பு உண்டு.
--------------------------------------------------------------------------------

ஆசிய நிறுவன உற்பத்தியில் பாதிப்பு

ஜப்பானில் சுனாமி அனர்த்தத்தால் மின்னணுப் பொருட்கள் முதல் கப்பல் வரை தயாரிக்கும் ஆசிய நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கணனி ‘சிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில், உலகளவில் ஜப்பான் 14 சத வீதம் பங்களிக்கின்றது. நிலநடுக்கத்துக்குப் பின் ஜப்பானின் பல நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

15 ம்  திகதி டொயோட்டா கார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 16 ம்  திகதி  வரை தனது 12 நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாகத் தெரிவித்திருந்தது. கடந்த ஜனவரியில் 2,34,045 வாகனங்களை டொயோட்டா உற்பத்தி செய்தது.

ஒட்டு மொத்த ஜப்பானின் வாகன உற்பத்தியில் அது 38 சதவீத பங்களிப்புக் கொடுக்கிறது. நிலநடுக்கத்துக்குப் பின், பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7.7 சதவீதம் சரிந்தது.இந்த இருநாள் உற்பத்தி நிறுத்தத்தால், ஒட்டுமொத்த மாத உற்பத்தியில் 40 ஆயிரம் வாகனங்கள் குறையும்.

அதேபோல், சோனி நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்தன. குறை கடத்திகளை (செமி கண்டக்டர்) தயாரிக்கும் ‘ஹைனிக்ஸ் செமி கண்டக்டர்’ நிறுவனம், நிலநடுக்கத்தால், தனது தயாரிப்புகள் விற்பனை பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளது.

ஜப்பானின் உருக்கு உற்பத்தித் துறையில் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாறாக இன்னும் சில நாட்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கட்டுமானத்துக்காக அதிகளவில் ஸ்டீல் தேவையும் ஏற்படும்.

--------------------------------------------------------------------------------
அணு சக்திக் கொள்கையில் மாற்றமில்லை - அமெரிக்கா

ஜப்பான் அணு மின் சக்தி நிலையம் பூகம்பத்தால் செயலிழந்து, அணுக் கதிர் வீச்சு அபாயம் அதிகரித்துவரும் நிலையில் தாங்கள் கடைபிடித்துவரும் அணு மின் சக்திக் கொள்கையில் மாற்றமேதுமிருக்காது என்று அமெரிக்க எரிசக்தித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க எரிசக்தித் துறை செயலர் டான் போனிமேன், அமெரிக்காவின் ஒவ்வொரு அணு உலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார். எனினும் பின்லாந்து நாடுகள் தங்களிடம் உள்ள அனைத்து அணு மின் உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

மிக விரைவில் அடுத்த அணு மின் உலை ஒன்று நிறுவத் திட்டமிட்டிருந்த சுவிட்சர்லாந்து, அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது. ரஷ்யா தன் பகுதியில் அணு கதிர்வீச்சு அபாயம் வராமல் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

நன்றி தினகரன்

No comments: