. லறீனா அப்துல் ஹக் பீ.ஏ
இதன் அடுத்த பாகம் அடுத்தவாரம் தொடரும்
திண்ணையில் வெளிவந்த இந்தக் கட்டுரையை அதன் நீளம் கருதி இரண்டு பாகமாக பிரசுரிக்கின்றோம் அடுத்த பகுதி அடுத்த வார முரசில் பிரசுரிக்கப்படும்.
அறிமுகம்
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அன்று தொடக்கம் இன்றுவரை பெண்களின் பங்களிப்புக்கள், ஈழத்து கலை இலக்கியத் துறைகளில் பல பரிணாமங்களைப் பெற்று வளர்ந்துள்ளன எனலாம்.
இப் பெண்களில் பலர் கவிதையினைத் தமக்கான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ஈழத்துப் பெண் கவிஞர்களில் சொல்லாத சேதிகளைத் தந்த செல்வி, சிவரமணி, ஊர்வசி, ஒளவை, சங்கரி, சன்மார்க்கா, மைத்ரேயி, கொற்றவை, கண்ணகி, ஆழியாள், ஆகர்ஷியா, கலா, தில்லை, மலரா, பாரதி, கஸ்தூரி, வானதி, கற்பகம் யசோதரா, ரேகுப்தி நிவேதிதா, வாணி சைமன், நாகபூஷணி கருப்பையா, ஜெயந்தி ஜெய்சங்கர், ஜெ. மதிவதனி, ராணி ஸ்ரீதரன், நெலோமி, ஈழவாணி, நவஜோதி ஜோகரட்ணம் ஆகியோரும், முஸ்லிம் பெண் கவிஞர்களில் சுல்பிகா, மரீனா இல்யாஸ், நிலாவெளி ஷர்மிளா றஹீம், பெண்ணியா, மசூறா ஏ. மஜீத், அனார், பஹீமா ஜஹான், லறீனா ஏ. ஹக், லுணுகலை றஸீனா புஹார்,
கலைமகள் ஹிதாயா, சித்தி றபீக்கா, ஃபாயிஸா அலி, ஜெஸீமா ஹமீட், நூருல் ஐன், பாலையூற்று அஷ்ரஃபா நூர்தீன், ரிஸ்கா ரிஸ்வி, புத்தளம் ஜமீலா, சில்மியா ஹாதி, ஷமீலா யூசுஃப் அலி, ஷாமிலா ஷரீஃப், கெக்கிறாவை சுலைஹா, ஷிபானா சனூன், ரிம்ஸா, எம்.எப்.எப். பாரிஹா போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள் எனலாம்.
இப் பெண்களில் பலர் கவிதையினைத் தமக்கான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ஈழத்துப் பெண் கவிஞர்களில் சொல்லாத சேதிகளைத் தந்த செல்வி, சிவரமணி, ஊர்வசி, ஒளவை, சங்கரி, சன்மார்க்கா, மைத்ரேயி, கொற்றவை, கண்ணகி, ஆழியாள், ஆகர்ஷியா, கலா, தில்லை, மலரா, பாரதி, கஸ்தூரி, வானதி, கற்பகம் யசோதரா, ரேகுப்தி நிவேதிதா, வாணி சைமன், நாகபூஷணி கருப்பையா, ஜெயந்தி ஜெய்சங்கர், ஜெ. மதிவதனி, ராணி ஸ்ரீதரன், நெலோமி, ஈழவாணி, நவஜோதி ஜோகரட்ணம் ஆகியோரும், முஸ்லிம் பெண் கவிஞர்களில் சுல்பிகா, மரீனா இல்யாஸ், நிலாவெளி ஷர்மிளா றஹீம், பெண்ணியா, மசூறா ஏ. மஜீத், அனார், பஹீமா ஜஹான், லறீனா ஏ. ஹக், லுணுகலை றஸீனா புஹார்,
கலைமகள் ஹிதாயா, சித்தி றபீக்கா, ஃபாயிஸா அலி, ஜெஸீமா ஹமீட், நூருல் ஐன், பாலையூற்று அஷ்ரஃபா நூர்தீன், ரிஸ்கா ரிஸ்வி, புத்தளம் ஜமீலா, சில்மியா ஹாதி, ஷமீலா யூசுஃப் அலி, ஷாமிலா ஷரீஃப், கெக்கிறாவை சுலைஹா, ஷிபானா சனூன், ரிம்ஸா, எம்.எப்.எப். பாரிஹா போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள் எனலாம்.
பெண்களின் கலை இலக்கியப் பிரவேசமானது பல வகையிலும் தமிழ்க் கலை இலக்கியப் பரப்புக்குப் பன்முகத்தன்மையை வழங்கிற்று என்றால் அது மிகையன்று. பொதுவாகப் பெண்கள், அவர்கள் சார்ந்த விடயங்கள் எனும் போது சீதனப் பிரச்சினை, கல்வியில் பின்னடைவு முதலானவையே பெரிதும் மையப்படுத்தப்பட்ட நிலைமைக்கு அப்பால் பெண்களின் பரந்துபட்ட பிரச்சினைகள் மிக ஆழமான விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்ட நிலைமை மெல்ல மெல்ல உருவாகலாயிற்று. அந்த வகையில், பெண்களின் சமூகநிலைமை, அவர்களின் இருப்பு, ஆண்-பெண் அசமத்துவ உறவின் பல்வேறு பரிணாமங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்க ஒடுக்குமுறைகள், பெண்களின் அகவய உணர்வுவெளிப்பாடுகள் எனப் பல்வேறு தளங்களிலும் பெண்கள் தமது கவனத்தைக் குவிக்கத் தொடங்கினர். அவற்றைத் தமது கலை இலக்கியப் படைப்புக்களின் வழியே வெளிக் கொணரலாயினர். அவற்றைக் கேள்விக்குட்படுத்தினர், தமது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிக்காட்டினர். தமது பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி சமூக, தேசிய, உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பான தமது விமர்சனங்களை முன்வைத்ததோடு, அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தனர். சமுதாய மறுசீரமைப்பில் தமது காத்திரமான பங்களிப்பு குறித்த ஆழமான தமது புரிதலையும் செயற்திறனையும் பதிவுசெய்தனர். காலங்காலமாக நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டிருந்த அவர்களின் ஆற்றலும் உணர்வுகளும் அகன்றதொரு தளத்தில் தமக்கான சிறகுகளைத் தாமே கட்டமைத்துக்கொள்ளும் முயற்சிகளில் தன்முனைப்புப் பெற்றன. அந்த வகையில், ஈழத்துப் பெண் கவிஞர்கள் தமது படைப்புக்களில் தம்மையும், தாம் சார்ந்த அனைத்தையும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆராய்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்களும் காதலும்
காதல் என்ற மெல்லுணர்வு மனித உயிரி என்ற வகையில் பெண்ணுக்கும் உரியதுதான் என்றாலும் அதனைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதில் ‘பெண்’ காலங்காலமாகப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தே வந்துள்ளாள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் காதல் கவிதைகளைப் பொறுத்தவரையில், அவை பெரும்பாலும் ஆண்களால் பாடப்படுபவை, ஆண்கள் தம்மைப் பெண்களாகப் பாவனை செய்து பாடியவை என்ற இரு போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. தமது அகவயப்பட்ட காதலுணர்வைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவது பெண்களின் இயல்புக்கு மாற்றமானது என்ற கருத்துநிலையே அக்காலத்தில் மேலோங்கி இருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்குரியன என்பன போன்ற கருத்தியல்கள் சமூகத்தில் வேரூன்றியிருந்தன. அந்த வகையில், ஆங்காங்கே பெண்களின் காதல் பற்றிய ஒரு சில வெளிப்பாடுகள் இருப்பினும் அவற்றுக்குக்கூட வௌ;வேறு முலாம்களும் முகமூடிகளும் போடப்படும் நிலையே வழக்கில் இருந்தது எனலாம் (உதாரணம்: ‘ஒளவைப்பாட்டி’ என்ற விம்பம்). அல்லது அவை முதன்மைப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டன அல்லது ஓரங்கட்டப்பட்டன. சங்க காலப் புலவர்களில் அகநானூறு, குறுந்தொகை ஆகிய தொகைநூல்களில் சுமார் 26 காதல் பாடல்களைப் பாடியுள்ள ஒளவையார், நன்னாகையார், வெள்ளிவீதியார், பல்லவர் காலத்தில் நாச்சியார் திருமொழி, திருப்பாவை போன்றவற்றைத் தந்த ஆண்டாள் போன்றோர் காதல் உணர்வை வெளிப்படுத்திப் பாடிய தமிழ்ப் பெண்களில் முக்கியமானவர்கள்.
எனின், காலப்போக்கில் நவீன பெண்கள் தமது காதலுணர்வை, அதன் பல்வேறுபட்ட அனுபவங்களைச் சுதந்திரமாகத் தமது படைப்புக்களில் வெளிக்கொணரத் தொடங்கினர். இத்தகைய காதல் கவிதைகளைப் பொறுத்தவரையில் அவை ஆண்களின் காதல் கவிதைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன எனலாம். பெண்மீதான ஆணின் காதல் உணர்வு வெளிப்பாட்டிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டு பெண்ணின் காதல் உணர்வு தனித்தன்மையோடு வெளிப்படுத்தப்படுகின்றது. பெண்களின் சுய இருப்பு, போலித்தன்மை அற்ற மெய்யுணர்வு, சுயாதீனம், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான காதல் முதலான தனியடையாளங்களைப் பிரதிபலிப்பனவாய் இக்காதல் கவிதைகள் அமைந்துள்ளன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் கவிதைகளில்கூட பெண்ணின் தவிப்பும் இரங்கலுணர்வும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. உதாரணத்துக்கு சில கவிதைப் பகுதிகளை நோக்குவோம்.
“அழிந்தும் அழியாத காதலுடன்
அவளின் ஆன்மா
கிழித்தெறிந்த கந்தலாடைகள் போல
காற்றில் சடசடத்து
சிரிப்பொலிகளின் பின்னால்
மெதுமெதுவாய் ஊர்கிறது”
(“காற்றில் ஈரலிக்கும் காதல்” - இது நதியின் நாள்) என்னும் பெண்ணியாவின் வரிகளிலும்,
“ஆழிப் பிரளயத்தில்
அல்லலுறும் சிறுதுரும்பாய்...
பெருமழைப் போதிலொரு
பொந்திழந்த சிற்றெறும்பாய்...
வலியாய்... கண்ணீராய்...
வாழ்வின் பெருந்துயராய்...
.............................
..............................
எல்லாமாய் அந்தரத்தில்
நான் கிடந்து தவிக்கின்றேன்.
எனக்கே அந்நியமாய்...
எனக்கே நான் புதிரானேன்!”
என்ற லறீனாவின் வரிகளிலும்,
(“தவித்துழல்தல்”)
“காற்றென்னைக்
கடந்துபோகையிலும்
நிழலென்னைத்
தொடர்ந்து வருகையிலும்
அதன் காலடியோசை
உன்னுடையதோவென
திடுக்கிட்டுத் திரும்புகிறேன்”
(நிழலின் காலடியோசைகள்”- என்தேசத்தில் நான்)
என்ற ஜெஸீமாவின் வரிகளிலும் மன உறவின் நெருக்கம், தூய அன்புக்கான மனவேட்கை, பிரிவினால் விளைந்த தவிப்பு, ஏக்கம் என்பன முதன்மைப்படுத்தப்படுகின்றனவே தவிர உடல்வேட்கை சார்ந்த உணர்வுநிலைப்பாடு முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன பெண் கவிஞர்களின் காதல் வெளிப்பாட்டைப் பொறுத்தவரை அவை சமத்துவமான காதலை வேண்டிநிற்கின்றன. ‘கற்புநிலை என்று சொல்லவந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்ற பாரதியின் பிரகடனத்தை ஒத்து இங்கு காதலைப் பொதுவில்வைத்து, தானும் சமநிலையில் வைத்து நேசிக்கப்படல் வேண்டும் என்ற பெண்ணுணர்வின் விழிப்புநிலையைப் பிரதிபலிப்பதாய் அனேகப் பெண்களின் கவிதைகள் அமைந்திருக்கக் காணலாம். அவற்றை அப்பெண்கள் மிகத் துணிவாகவும் வெளிப்படையாகவும் கூறுகிறார்கள். வகைமாதிரிக்கு சிலவற்றை நோக்குவோமாயின்,
“நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவேண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!
ஒன்றாய்க் கடப்போம்
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்”
(“தடைதாண்டி”- உரத்துப்பேச) என்ற ஆழியாளின் வரிகளிலாகட்டும்,
“உனது அதிகாரங்களையும்
எனது அண்டிவாழ்தலையும்
கீழிறக்கிவைத்துவிடுவது
சாத்தியமெனில் ஒன்று சேர்வோம்”
(“நீ அவனைக் காதலித்தாயா?”- ஒரு கடல் நீரூற்றி) என்ற பஹீமாவின் வரிகளிலாகட்டும்,
“………………..
அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்தவே விரும்பினேன்
எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது
…………….
பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்
………….
…………..
என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால்
அந்த உச்சிக்கு
வரமுடியாதே!”
(“இடைவெளி” – சொல்லாத சேதிகள்) என்ற சங்கரியின் கூர்மையான வரிகளினூடாகட்டும்
“வாசமுள்ள மலர்மாலையாய்
ஒரு வாலிபனின் தோளில் தொங்க
எனக்கும் ஆசையிருக்கிறது – ஆனால்
அந்தத் தோளுக்குரிய தோழனிடத்தில்
தூய்மையை எதிர்பார்க்கிறேன்..!
கறைபடிந்த கரங்களுக்கு
இரையாகிப்போக எனக்கு இஷ்டமில்லை”
என்ற மரீனா இல்யாஸின் கவிதை அடிகளிலாகட்டும் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவமான, தூய காதலை வேண்டிநிற்கும் போக்கையே காணக்கூடியதாய் உள்ளது. அவ்வாறே, போலித்தனங்களைத் தகர்த்துக்கொண்டு உள்ளது உள்ளபடி பாடும் கூர்மை அவர்களுக்குக் கைவசப்பட்டிருக்கிறது.
“நீ திருப்பித்தரலாம்
மணிக்கூட்டை
கைவிளக்கை, கத்திரிக்கோலை
……………..”
என்று தொடங்கும் ஆழியாளின் கவிதை,
“உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப்பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத்தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒருபுறமாகவே இருக்கட்டும்.”
(“நிலுவை” – உரத்துப் பேச) என்று முடிவுறும்போது ஏற்படுத்தும் தாக்கம் மிகக் கனதியானது.
மேற்படி போக்கிலிருந்து வேறுபட்டு காதலையும் அது சார்ந்த உணர்வுகளையும் இன்னொரு கோணத்தில் அணுக முனையும் சில ஈழத்துப் பெண்கவிஞர்களும் நம்மிடையே உள்ளனர். கலா, கற்பகம் யசோதரா, மைதிலி போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். பெரும் சர்ச்சையைக் கிளப்பிய கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதை, சிங்கள-தமிழ் முரணிலையைப் பகைப்புலமாகக்கொண்டு எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட போதிலும், அதனை ஆண்-பெண் முரணிலையை அடியொட்டியும் வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்ற கருத்து நிலவுகின்றது. கலா தன்னுடைய கவிதையில் ‘யோனி’ என்ற குறியீட்டை படைப்பின் அதி உச்ச சாத்தியப்பாட்டைப் புலப்படுத்தும் வகையில் கட்டமைத்துள்ளார் என ‘ஈழத்து நவீன கவிதையில் பெண் புனைவு’ எனும் கட்டுரையில் சி. ரமேஷ் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
காதலைக் கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கும் வகையில் எழுதும் மற்றொருவராக மைதிலி அடையாளம் காணப்படுகிறார்.
“குறும்பும் சிரிப்பும் கொண்டவளாய்
கனத்த மார்புகளுடையவளாய்
நேசிக்கப்படுகிறேன், நான்”
என்று குமுறும் அவர்,
“யோனி முலைகளற்ற
பெண்ணை
யாரும் காதல் கொள்வாரா?” என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.
இதிலிருந்து ஒருபடி மேலே போய் ஆண் உலகின். வன்முறை மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டவராய்த் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கற்பகம் யசோதரா தற்பாலின்பம், லெஸ்பியன் சார்ந்து மாற்றுப்பாலின்பம் குறித்தும் எழுதியிருக்கின்றார்.
“தெருவோரம் நின்று
சிறிதளவு அன்பிற்காய்
மண்டியிட்டிருந்தவள் நான்.
இன்றோ-
நான் யார் யாரோ
நினைப்பிற்கும் “ஆட”ப் பிறக்காத
தாடகைச் சிறாம்பி!
கடவுளின் ஒரு பகுதி
அல்லது நானே கடவுள்.
இத் தற்பிரேமங்கள் குறித்து
எதுவும் பேசாதே-
என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது.
என்னை என்னால்(க்) கை
விட முடியவில்லை” என்கிறார், கற்பகம் யசோதரா.
இவ்வாறாக, ஈழத்துத் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் காதல், அது சார்ந்த நிலைப்பாடுகள் பன்முகத்தன்மை கொண்டவையாக வெளிப்படுத்தப்படுகின்ற போக்கை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இக் கவிதாயினிகளில் சிலர் பெண்ணின் முலை, யோனி, கருப்பை முதலான அவயவங்களைத் தம்முடைய கருத்துநிலையை மிகக் கூர்மையாகத் தெளிவுறுத்தும் குறியீடுகளாகத் தமது கவிதைகளில் கையாண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தப் போக்கு பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டுள்ளதையும் நாமறிவோம். இந்நிலையில், இதனை அதாவது, இந்தப் போக்கைச் சற்றுப் பின்நோக்கிப் பார்க்க விழைகின்றேன். பெண்ணின் மேற்படி அவயவங்களை முன்னிலைப்படுத்துவதென்பது தம் கருத்துநிலையை தாக்குதிறன்கூடியதாக வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த உத்தி (ளவசயவநபல) ஆகும் என்ற நிலையை முதன்முதலாக உருவாக்கியவர்கள் யார் என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. செல்வி திருச்சந்திரன் அவர்களின் “தமிழ்வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு” என்ற ஆய்வு நூலை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, உண்மையில், அப்படியான போக்கை உருவாக்கியவர்கள் ஆண்களே, அதிலும் நம் அனைவருடைய மரியாதைக்குமுரிய சமயபெரியார்களே என்ற முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.
“கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார்
கெடுவர் என்றே துணிந்து ஆடு பாம்பே” என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடலிலும்,
“பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங்குழியிடைத் தள்ளி…” என்று தொடரும் பட்டினத்தடிகளின் பாடலிலும் இன்னும் பல சித்தர் பாடல்களிலும் தீவிரப் பெண்வெறுப்புக்கான உத்தியாக இத்தகைய மொழிக்கையாட்சி இடம்பெற்றுள்ளமை கண்கூடு. நவீன பெண்களில் சிலர் இதையே ஆணாதிக்கத்துக்கும் பெண்ணடக்குமுறைக்கும் எதிரான தம்முடைய நிலைப்பாட்டைப் பொட்டில் அறைவது போலத் தாக்குதிறன் கூடியதாக வெளிப்படுத்தும் உத்தியாகக் கைக்கொள்ள முனைந்துள்ளனரோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. எது எவ்வாறு இருப்பினும், தாம் கொண்ட கருத்துநிலையை இக்கவிதாயினிகள் ஒவ்வொருவரும் தமது விருப்பத்துக்கும் இயல்புக்கும் ஏற்பத் தனித் தனிப் பாணியில் வௌ;வேறு உத்திகளைக் கையாண்டு தமக்கேயுரிய “பெண்மொழி”யில் வெளிப்படுத்தியுள்ளனர் என்றே நாம் இதனை அணுகவேண்டியுள்ளது.
பெண்களும் வன்முறையும்
பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பலவகைப்படுத்தலாம். அடித்தல், உதைத்தல், இம்சித்தல், வசைபாடுதல், இரண்டாம் பிரஜையாகவும் தாழ்த்தப்பட்ட பாலினமாகவும் நடத்தப்படுதல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் சேட்டைகள், பாலியல் வல்லுறவு என்று அவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை வீட்டினுள் நடக்கின்ற குடும்ப வன்முறைகள், வெளியில் நடக்கின்ற வன்முறைகள் என இரண்டு வகையாக நோக்கலாம். ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகள் இவற்றைத் துணிந்து விமர்சிப்பதை, எதிர்த்து நிற்பதை நாம் அவதானிக்கலாம். பெண்களுக்கெதிரான இந்த வன்முறைகள் பல்வேறு கோணங்களில் அணுகப்பட்டுள்ளன என்ற வகையில் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
“அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தர சிறைச்சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த் துடிப்பு
இருபாலாருக்கும் ஒரே விதமானது
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு.
என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை”
(“பெண்பலி”- எனக்குக் கவிதை முகம்) என்ற அனாரின் ஆதங்கத்தில் மட்டுமல்ல,
“உனக்குப் பொழுது போக்காகவும்
எனக்குப் போராட்டமாகவும்
போய்விட்டது
(என்) வாழ்க்கை
நீ கனவு காண்பதற்காக
என் கண்களைப் பறித்தாய்
நீ உலாவி மகிழ்வதற்காக
என் கால்களைத் தடுத்தாய்
தாழ்மையை
பற்றுதலை
உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சண்யமின்றி
தண்டித்தன”
(“சூரியனைப் பற்ற வைக்க” – ஓவியம் வரையாத தூரிகை) என்ற அவரின் மனக்குமுறலிலும்,
“இயந்திரப்பேய்கள் வாழுகின்ற
எல்லா வீட்டின்
சமையலறைச் சுவர்களிலும்
படுக்கையறைச் சுவர்களிலும்
இந்தச் சரித்திரங்கள் எழுதப்படுகின்றன.
………………………………………
படுக்கை விரிப்பை சரிசெய்வதையும்
புதிய சமையலை கண்டுபிடிப்பதையும் விட
இந்த உலகம் விரிவதே இல்லை”
(“கயல்விழி விரிந்த தோல்” -இது நதியின் நாள்) என்று பெண்ணியா காட்டும் ஒரு சாராசரிப் பெண்ணின் சித்திரத்தில் இருந்தும்,
“உன்னுடன் வாழ்வு
பிணைக்கப்பட்ட போதே – என்
பெயரை… சுயத்தை…
தொலைத்துவிட்டேன்.
என்று தொடங்கும் கவிதையில்…
“…………
எந்தன்-
உணர்வுகள்
கிளர்ந்தெழும் பொழுதுகளில்
நீ-
மரமானாய்;
எனது நிசிக்களில்
நிலா சூரியனானான்;
என்னுடைய விடியல்களில்
பூச்செடிகள்தோறும்
முட்களே மலர்ந்தன…
நான்-
வர்ணனைகளுக்கு அப்பால்
முகமிழந்து ‘வெறும்’ மனுஷியாய்…!”
(“வர்ணனைகளுக்கு அப்பால்” - வீசுக புயலே! ) என்ற லறீனாவின் வரிகளிலும்
நான்கு சுவர்களுக்குள் மௌனமாகக் குமுறும் ‘பெண்’ணின் அழுகையும் ஆணாதிக்க அடக்குமுறையும் தெளிவாகப் பதிவுசெய்யப்படுகின்றன. நான்கு சுவர்களுக்குள் நடப்பதைப் பெண்கள் வெளியில் சொல்வது கூடாது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் காலங்காலமாக நிலவிவந்த சம்பிரதாய வேலிகளைத் தாண்டி, தமக்கெதிரான அடக்குமுறைகளை அழுத்தமாகப் பதிவுசெய்வதோடு மட்டுமன்றி அவற்றைக் கேள்விக்குட்படுத்தவும், காரசாரமாக விமர்சனத்துக்குட்படுத்தவும் பெண்கள் துணிந்துவிட்டார்கள் என்பதைப் பல கவிதாயினிகளின் படைப்புக்கள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன. வகைமாதிரிக்குச் சில எடுத்துக்காட்டுக்கள் இதோ:
“……………
உனக்கு உள்ளது போல
உரிமைகள் எனக்கும் உண்டு
ஏனெனில்
நான்
மானிடப் பெண்ணாகப்
பிறந்திருக்கிறேன்
எனக்கும் உனக்குமிடையிலுள்ளது
ஓர் ஒப்பந்தம் மட்டுமே!”
(“உயில்களல்ல உயிர்கள்” – உரத்துப் பேசும் உள்மனம்) என்று, ‘திருமணம்’ என்பது பரஸ்பரப் புரிந்துணர்வுடன்கூடிய ஓர் ஒப்பந்தம் மட்டுமே என்பதை உணர்த்துகின்றார், சுல்பிகா.
“அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்
நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா”
(“தற்கொலை” – ஆதித்துயர்) என்று குமுறியெழும் ஃபஹீமாவின் கவிதைகளில் காலங்காலமாகத் தொடரும் பெண்ணின் இடையறூத துயரங்கள் மிக ஆழமாகவும் வலுவாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக, ஃபஹீமாவின் கவிதைகளில் கையாளப்படும் ‘ஆதித்துயர்’, ‘ஆதித் திமிர்’ முதலான மொழிப் பிரயோகங்கள் மிகுந்த கவனிப்புக்குரியவை. ஆதியிலிருந்து தொடர்ந்துவரும் பெண்ணின் துயரினைக் கவனமாகத் தெரிந்தெடுத்த சொற்களைக் கையாண்டு தன் கவிதைகளில் வடிப்பதில் ஃபஹீமா கைதேர்ந்தவராகத் திகழ்கின்றார் எனத் துணிந்துகூறலாம்.
இதன் அடுத்த பாகம் அடுத்தவாரம் தொடரும்
Nanri thinnai
No comments:
Post a Comment