வரலாற்றை நினைவுகூர்தல் - நாடகம்


.
சண்முகராஜா
நூற்றைம்பது வருடங்கள், ஏழு தலைமுறைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாதக் குழந்தை முதல் 90 வயதுப் பாட்டிவரை மேடையேறி நடிக்கும் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என நெடிய பாரம்பரியம் கொண்டது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா நாட்டிய மண்டலி (Surabhi Theatre).
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடகக் குழுவாகச் செயல்படுவது சுரபியின் சிறப்பம்சம். பார்ஸி தியேட்டரின் உட்பிரிவான சுரபி நாடகங்கள் அதிகமும் தொன்மங்கள் சார்ந்தவை. ஆந்திராவில் குழந்தைகள் உட்படக் குடும்பம் குடும்பமாக மக்கள் வரவேற்போடு அரங்கு நிறையப் பார்வையாளர்களைக் கொண்டது சுரபி நாடகம்.
சுரபி கம்பெனியின் முன்னோர்கள் மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களது பேச்சு மொழி ‘ஆரே’. இதற்கு வரிவடிவம் இல்லை. ‘ஆரே’ மராத்தி மொழியின் வட்டார வழக்கு. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இம்மொழி பேசியவர்கள் ஆந்திரா முழுவதும் பரவியிருந்தனர். மராட்டிய அரசர்களுக்குப் போர்ப் படையில் உதவியவர்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பின் வேளாண் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கிராம சேவகர்களாகத் தங்களை மாற்றிக்கொண்டனர். ஆந்திராவில் இவர்கள் ‘ஆரே மராத்திகள்’ என்றழைக்கப்பட்டனர். ஆரே மராத்தியினர் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் வனராசா குடும்பத்தினர் ராயலசீமா பகுதியில் வாழ்ந்தனர். இக்குடும்பத்தினரே சுரபியின் மூலக் குடும்பத்தினர். ஆந்திராவின் கிராமப்புறங்களில் நிகழ்த்தப்பட்டு வந்த ‘தொலு பொம்மலாட்டா’ (Shadow Puppet Play) கலையில் வனராசா குடும்பத்தினர் ஈடுபட ஆரம்பித்தனர். மகாபாரதம், ராமாயணக் கிளைக் கதைகளைக் குறிப்பாக லட்சுமண மூர்ச்சா, மாயராவண போன்ற படலங்களைச் சிறப்பாக நிகழ்த்தியதன் விளைவாக மிக முக்கியத் தோல்பாவைக் குழுவாகப் பெல்லாரி, ஆனந்தபூர், கடப்பா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றனர். மிருதங்கம், தாளம், பாட்டு பொம்மைகளை ஆட்டுவித்தல், பொம்மைகளை உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு ஆண், பெண் உட்படக் குடும்பத்தினர் ஒன்றாக ஈடுபட ஆரம்பித்தனர். மேலும் ஆந்திரா முழுவதும் பயணம் செய்து அந்தந்தக் கிராமங்களில் தங்கி நிகழ்த்துவதற்கான திறன்களையும் வளர்த்துக்கொண்டனர்.
இந்தக் காலகட்டத்தில் வனராசா குடும்பத்தைச் சேர்ந்த வெங்கோஜி- சுந்தம்மா தம்பதியினர் தாய்தந்தை இல்லாத 9 வயதுச் சிறுவனைத் தத்தெடுத்து அவனுக்குக் கோவிந்தப்பா எனப் பெயர்சூட்டித் தோல் பாவைக் குழுவில் இணைத்துக்கொண்டனர். கோவிந்தப்பா தோல் பாவைக் கலையில் லயித்து, ஈடுபட்டுத் தனது திறன்களை வளர்த்துக்கொண்டு குழுவில் மிக முக்கிய உறுப்பினராகத் தன்னை உருவாக்கிக்கொண்டார். தோல் பாவைக் கலையை நேசித்த அளவிற்கு அதிலிருந்து அவர் விடுபடவும் நினைத்தார். அதற்கு மிக முக்கியக் காரணமாக அமைவது அந்தக் காலகட்டத்தில் தோல்பாவைக் கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டிச் சன்மானம் பெற வேண்டியிருந்தது. இந்தச் சம்பிரதாயம் கோவிந்தப்பாவிற்கு எரிச்சலூட்டியது. தன் 18ஆம் வயதில் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து ஆனந்தபூர் மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு ‘ஜோதி சுப்பையா கம்பெனி’ என்ற நாடகக் குழுவின் நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். கோவிந்தப்பாவை மிகவும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அந் நாடகத்தில் நடித்த அத்தனைபேரும் பெண்கள். அந்தக் கம்பெனியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க அதன் உரிமையாளர் ஜோதி சுப்பையா “ரிணீறீணீஸ்ணீஸீtலீuறீu” எனும் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்தவர். கோயிலில் நடனமாடிய தேவதாசிப் பெண்களை ஒன்றாகச் சேர்த்து அவர் நாடகக் கம்பெனியை நடத்திவந்தார். கோவிந்தப்பாவிற்கு அந்தப் பெண்கள் பாடிய பாடல்கள் தங்களது தோல்பாவை நிகழ்வில் பாடும் சாயலை ஒத்ததாக விருந்தன. மேடையில் அவர்கள் தோன்றிய விதம் அவர்களது மெருகூட்டப்பட்ட உடைகள், ஆபரணங்கள் முக்கியமான நிகழ்விற்குப் பின் பார்வையாளர்கள் அவர்களை மதிக்கும் விதம் ஆகியன கோவிந்தப்பாவிற்கு நாடகத்தின் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின. கோவிந்தப்பா ஜோதி சுப்பையாவிடம் சென்று தான் நகரத்தைச் சேர்ந்தவனென்றும் தனது பெயர் கோவிந்தராவ் எனவும் கூறி நாடகக் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜோதி சுப்பையா கம்பெனியில் இசை, உடை, ஒப்பனை, மேடை அமைப்பு, நடிப்பு என நாடகத்தின் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கோவிந்தராவ் மிக நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்தார்.
ஓராண்டுக்குப் பின் அவருடைய பெற்றோர் தேடிவர ஜோதி சுப்பையா கம்பெனியிலிருந்து தன் குடும்பத்தினருடன் சில நிபந்தனைகளுடன் இணைந்து மீண்டும் தோல்பாவை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். நிகழ்ச்சிகளுக்குப் பிந்தைய சன்மானம் பெறும் சம்பிரதாயங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதில்லையெனக் குழுவினர் உத்தரவாதம் தந்தனர். வனராசா தோல்பாவைக் குழுவினர் பெரும் புகழ்பெற்றுக் கிராமத் திருவிழாக்கள் முதல் குடும்ப விழாக்கள்வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாத குழுவாக மாறிப்போயினர். 1885இல் ஜம்மலா மடுகு அருகேயுள்ள ‘சொருகு’ (சுரபி) என்ற கிராமத்தில் அலப்பூ சென்னா ரெட்டி என்னும் நிலக்கிழார் குடும்பத் திருமண நிகழ்வில் தோல் பாவை நிகழ்ச்சி நடத்துவதற்காக அழைப்பு வந்தது. வனராசா தோல்பாவைக் குழுவின் தலைமை உறுப்பினரான பெட்ட ராமைய்யா மகாபாரதத்தின் கிளைக்கதையான “கீசக வதம்” நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். ‘கீசக வதம்’ அவர்களது தயாரிப்புகளிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அலப்பூ சென்னா ரெட்டி தோல் பாவை நிகழ்ச்சிகளுக்குப் பேராதரவு தந்து ஊக்குவித்த புரவலராகவுமிருந்தார். அவரது வேண்டுகோள்படியே சுரபி கம்பெனியினர் தற்போது சுரபி என்றழைக்கப்படும் ‘சொருகு’ கிராமத்தைத் தங்களது வாழ்விடமாகக் கொண்டனர். ஆகவே ‘கீசக வதம்’ நிகழ்த்துவது முறையாகவிருக்குமெனக் குடும்பத்தினர் கலந்தாலோசிக்கையில் கோவிந்த ராவ் ‘கீசக வதத்தை’ ஏன் நாடக நிகழ்வாக நிகழ்த்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார். அது அற்புதமானதொரு சந்தர்ப்பம் எனவும் ஊக்கப்படுத்தினார். மேடை சார்ந்த தொழில் நுணுக்கங்கள் பற்றிய அறியாமையால் கலைஞர்கள் அனைவருக்கும் தயக்கமிருந்தது. திரைக்குப் பின்னிருந்து செய்ததை அப்படியே திரைக்கு முன் தோன்றி நடிக்கலாம். ‘கீசக வதம்’ தோல்பாவையில் நிகழ்த்தியதால் கலைஞர்கள் அனைவருக்கும் பிரதி முழுவதும் பாடமாகத் தெரியும் என்று கோவிந்தராவ் கூறக் கிராமம் முழுவதும் கூடியிருக்க சுரபியின் முதல் நாடகமான ‘கீசக வதம்’ மேடையேறியது.
கீசக வதம் மிகப் பெரிய வெற்றியடைவதற்கு முக்கியக் காரணம் சுரபியில் ஆண் கதாபாத்திரங்களை ஆண்களும் பெண் கதாபாத்திரங்களைப் பெண்களும் ஏற்று நடித்தது தான். தோல்பாவையிலிருந்து இந்த வழக்கம் வந்திருக்கிறது. 1899இல் முழுவதும் நாடகம் மட்டுமே நிகழ்த்தும் குழுவாக சுரபி மாறி யிருந்தது. 1899இல் சுரபியின் முதல் இயக்குநராக, சமஸ்கிருத தெலுங்கு மொழி விற்பன்னரும் ஹரிகதா கலாட்சேபப் பாடகரும் நடிகருமான ரப்ததி சுப்பதாஸ் பொறுப்பேற்றார். அவர் padyanataka (verse drama)த்தை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை எழுதினார். ஓட்டுமொத்தக் கலைஞர்களின் இசைஞானம், உச்சரிப்பு, மேடை மொழி முதலிய ஆதார விசயங்களைக் கற்பித்து இசை எவ்வாறு சூழலுடன், உணர்ச்சியோடும் ஒருங்கிணைந்து செல்கிறது என்பதை விளக்கிக் கூறினார்.
தோல்பாவைக் கலைஞர்களான சுரபி குழுவினருக்கு padyanataka பின் புலத்துடன் ஹரிச்சந்திரா, சாகுந்தலா, சாரங்கதாரா முதலிய நாடகங்களைப் பயிற்றுவித்தார். சுப்பதாஸ் நான்கு வருடங்களில் புரபொஷனல் நாடகக் கம்பெனியாக உரு மாற்றினார். தற்போது சுரபி என்றழைக்கப்படும் குழுவிற்கு முதன் முறையாக அடையாளப்படுத்தும் விதமாகப் பெயர்சூட்டத் திட்டமிட்டார். ஆந்திராவின் தென்பகுதிகளில் குறிப்பாகப் பெல்லாரி போன்ற ஊர்களில் சரஸ விநோதினி சபா, மனோரமா சபா ஆகிய பிரசித்தி பெற்ற குழுக்கள் இயங்கி வந்தன. வடக்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் இயங்கி வந்த குழுக்கள் தங்களை ‘சமாஜம்’ என அழைத்துக்கொண்டன. சுப்பதாஸ் தென்மரபுகளைப் பின்பற்றி “சாரத மனோவிநோதினி சபா” என்ற பெயரைச் சூட்டினார். 1890இல் சுப்பதாஸ் அனுமதிச் சீட்டு விற்பனையை ஆரம்பித்துவைத்தார். குழுவின் ஓர் இரவுக்கான வருமானம் அப்பொழுது 100 ரூபாய். தோல்பாவையில் அவர்களுக்குக் கிடைத்ததோ வெறும் 5 ரூபாய்தான். 1889-95இல் சாரத மனோ விநோதினி சபா பணமும் புகழும் ஒருங்கே பெற்ற குழுவாக வலம் வந்தது. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள். 1. நடிகர்கள் மிகச் சிறந்த பாடகர்களாகவும் இருந்தது. இவர்களது நாடக வெளிப்பாட்டுத் திறனும் இசைப்பாடலும் மற்ற குழுவினருடன் ஒப்பிடுகையில் மேலோங்கியிருந்தன. 2. குழுவின் பெரும் சிறப்பாகப் பெண் பாத்திரங்களைப் பெண்கள் ஏற்று நடித்தனர். 3. தனித்துவமான தயாரிப்புப் பாணி குறிப்பாக மற்ற குழுக்களில் இரண்டு, மூன்று பேர் மட்டுமே தேர்ந்த நடிகர்களாக மையக்கதா பாத்திரங்களில் நடித்தனர் மற்றவர்கள் மிகவும் சராசரியாக இருந்தனர்.
சாரத மனோவிநோதினி சபாவில் கலைஞர்கள் ஒரே குடும்பத்தினராகயிருந்ததால் பயிற்சி மற்றும் மேடைப் பணிகளில் ஒரே மாதிரியான திறன்களைப் பெற்றிருந்தனர். பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்ற வேறுபாடில்லாமலிருந்தது. மேலும் இவர்களது திரைச்சீலைகளின் தன்மையும் பயன்பாடும் பிரசித்தி பெற்றதாக விருந்தது. 1896-1900 வரை கடப்பா, ஆனந்தபூர் மாவட்டங்களில் பரவலாக நாடகப் பயணங்களை மேற்கொண்டது. 1901 முதல் நீண்ட நாடகப் பயணங்களாகக் குண்டூர், எல்லூர், ராஜ முந்திரி, விசாகப்பட்டிணம், விஜய நகரம், முன்பு மதராஸ் பிரிசிடென்ஸியில் இருந்து தற்போது ஒரிசாவிலிருக்கும் பிரம்மபுரம் ஆகிய தெலுங்கு மக்கள் அதிகமும் வாழும் பகுதிகளில் நடத்தியது. 1912-1913இல் மதராஸ் மற்றும் ரங்கூனுக்குப் பயணமானது. ரங்கூனில் நாடகங்களை நிகழ்த்திய குழு பிரம்மபுரம் வந்து அங்கு இரண்டு மாதங்கள் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இறுதியாக மதராஸ் வந்து தங்களது பதினைந்து முக்கிய நாடகங்களை விக்டோரியா ஹாலில் நடத்தினர். இதற்கு முன்பு மதராஸில் அது போன்ற நாடகப் பயணங்களின்போது அந்தந்தப் பிராந்திய நாடகங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. கந்தாமதி, பல்லானா ராஜூ சரித்ரா ஆகிய இரு நாடகங்களைக் கன்னட நாடகக்குழுவான ‘குப்பி’ கம்பெனியின் இரு நாடகங்களிலிருந்து தழுவி உருவாக்கினர். 1905-06இல் மூன்று மாதங்கள் மதராஸில் தங்கி நாடகம் நடத்தியபோது உள்ளூர்க் குழுக்களின் நாடகங்களில் ஹார்மோனியக் குழுவினர் ஷ்வீஸீரீs இல் அமராமல் அரங்கத்தின் முன்பகுதியில் அமர்ந்ததைக் கண்டு அதைப் பின்பற்றத் தொடங்கினர்.
முக்கியமாக மதராஸிலும் மைசூரிலும் பார்ஸி நாடகங்களைப் பார்த்து அவற்றின் தாக்கத்தில் நிகழ்த்து முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டனர். சுப்பதாஸுக்குப் பின் தோல்பாவைக் கலையிலிருந்து நாடகக் கலைக்குக் கலைக் குடும்பத்தை உந்திச்சென்ற கோவிந்தராவ் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பார்வையாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு காலத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களை எழுதுவதற்குக் கவிஞர்களையும் நாடக எழுத்தாளர்களையும் வரவழைத்தார். பல்லாட விஷ்வநாத சர்மா, பல்லாட வெங்கட கிருஷ்ண சர்மா, கோப்பரப்பு சுப்பராவ் போன்ற நாடக எழுத்தாளர்களை வரவழைத்து அவர்கள் குழுவுடன் தங்கி எழுதுவதற்கு ஏற்பாடுசெய்தார். அதுபோல் திரைச் சீலைகள் வரைவதற்கு மதராஸிலிருந்து வேணு, ரங்கநாயக்கலு ஆகிய இரு ஓவியர்களை வரவழைத்தார். அதுபோல் அரங்கத் தொழில் நுட்பத்திலும் கவனம் செலுத்தி அரங்க நிர்மாணத்திற்கு உதவியாகவிருந்த லம்பாடா பட்டிஸ்க்குப் பதிலாக க்ஷ்வீஸீநீ தகடுகளைப் பயன்படுத்தினார். மேலும் இவரது காலத்தில்தான் அரங்கம் 6 மணி நேர அவகாசத்தில் உருவாக்கப்பட்டு 2 மணிநேரத்தில் கலைக்கப் படும் தொழில்நுட்ப வசதி ஏற்பட்டது.
மற்றொரு பகுதியை அவசரச் செலவுகளுக்கு ஒதுக்கி மருத்துவச் செலவுகள் மற்றும் மழை, புயல் காலங்களில் ஏற்படும் சேதங்களுக்குச் செலவிட்டார். மற்றொரு பகுதி கலைஞர்களின் சம்பளமாயிற்று. சம்பளம் கலைஞர்களுக்கு முதியோர், இளையோர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்கள் இளையோர் பட்டியலில் அடங்கினர். முதியோருக்கு வழங்கப்பட்ட தொகையில் சரிபாதி இளையவர்களுக்குச் சம்பளமாக அளிக்கப்பட்டது.
நவீன இந்தியாவின் மாடர்ன் பாப்புலர் தியேட்டர் எனப் பார்ஸி நாடகத்தைக் குறிப்பிடலாம். பார்ஸி நாடகம் விக்டோரிய, மொகலாய, ராஜ்புத் மற்றும் பிராந்தியக் கலையம்சங்களின் தாக்கத்தோடு உருவான வெகுசன நாடக வடிவம். 1850-1930 பகுதிகளில் பார்ஸி நாடகம் இந்தியா முழுவதிலும் மிகப் பரவலாக இருந்தது. தென்னிந்தியாவில் அதிகமும் நிகழ்த்திய இரு முக்கியக் கம்பெனிகள் நியூ ஆல்பிரட் கம்பெனியும் விக்டோரியன் தியேட்டர் கம்பெனியுமாகும். இதில் விக்டோரியன் தியேட்டர் கம்பெனி பாலிவாலா கம்பெனி என்னும் பெயரில் மதராஸ் பிரசிடென்ஸியில் பிரசித்தி பெற்ற கம்பெனியாகும். இது முறையே 1880, 1888, இறுதியாக 1901இல் தன் நாடகங்களை மேடையேற்றியுள்ளது. 1776களில் பாம்பேயில் இருந்த ஆங்கிலேயர்களுக்காக ஆங்கில நாடகங்களை மேடையேற்றிய இக்கம்பெனிகள் இரண்டாம் கட்டமாக மெலோடிராமாக்கள், காமெடி நாடகங்களை மேடையேற்றின. பின்பு பார்ஸி வரலாறு மற்றும் புராணங்களை அடியொட்டிய நாடகங்களை நிகழ்த்திவந்தன. ருஸ்தம் சொருப், இந்திரசபா போன்ற நாடகங்களிலிருந்து இறுதியாக அரிச்சந்திரா, பிரகலாதா போன்ற இந்து புராணங்களை மேடையேற்றத் தொடங்கின. இந்த நாடக மேடையேற்றத்தில் நடந்த மாற்றங்கள் பார்வையாளர்களின் வருகை, தேவைக்கேற்ப மாறிவந்துள்ளன.
பார்ஸி நாடகக் கம்பெனியின் தாக்கத்திற்குட்பட்ட மிக முக்கியமான தென்னிந்திய நாடகக் கம்பெனிகள் குப்பி கம்பெனி (கர்நாடகா), நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை கம்பெனி (தமிழ்நாடு), சுரபி கம்பெனி (ஆந்திரா). மெட்ராஸ், பெங்களூரில் 1879இல் நாடகங்களை மேடையேற்றிய பார்ஸி கம்பெனிகள் ஆந்திராவிற்கு 1885இல்தான் வருகை புரிந்தன. பார்ஸி நாடகக் கம்பெனிகளின் தாக்கமிருந்தாலும் சுரபி நாடகக் கம்பெனியை நாம் பார்ஸியின் உட்பிரிவாகத்தான் வகைப்படுத்தலாம்.
தேசிய நாடகப் பள்ளியும் இந்திராகாந்தி கலைகள் ஆய்வு மையமும் இணைந்து மார்ச் 2009 இல் சுரபி நாடகக் கம்பெனியின் ஏழு நாடகங்களை அரங்கேற்றின. மாடர்ன் பாப்புலர் தியேட்டர் என்ற திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்தில் சுரபியின் நாடகங்களும் ஏப்ரல் இறுதியில் அசாம் மொபைல் தியேட்டரின் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. வெகுசனப் பண்பாடு மற்றும் கலை விமர்சகரும் இந்திராகாந்தி கலைகள் ஆய்வு மையத்தின் இயக்குநருமான ஜோதிந்ரா ஜெயின் மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநர் அநுராதா கபூரின் கூட்டுமுயற்சியால் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றது.
சுரபியின் மேன்மையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்ட ஆந்திர அரசாங்கம் சட்டசபைக்கு அருகேயுள்ள பப்ளிக் கார்டனில் அரங்கும் குழுவினருக்குத் தங்கும் வசதியுமளித்து வாரத்தில் ஐந்து நாட்கள் நாடகம் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. றீ
உதவிய நூல்கள்:
1. M. Nagabhushana Sarma எழுதிய The Surabhi Theatre of Andhra.
2. Dr. Anuradha Kapur எழுதிய Optics for the stage curtains of the Surabhi Company.
Nanri: Kalachchuvadu

No comments: