மழலை எல்லாமே அழகு - சிறுகதை

.
                                                                                             ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
வில்லிவாக்கத்திலிருக்கிற விசேஷமான அந்தப் பள்ளிக் கூடத்தைப் பற்றி இவளுடைய மாதர் சங்கத்தில் ஒரு மாது சொல்லக் கேட்டு, அங்கே போயே ஆக வேண்டுமென்று என்னை இழுத்துக் கொண்டு போனாள்.

பள்ளியில் குழந்தைகளெல்லாம் ரெண்டு வயசிலிருந்து நாலு வயசுக்குள்ளேதான். அத்தனையும் விசேஷமான குழந்தைகள். காது கேளாத, வாய் பேச இயலாத பரிதாபத்துக்குரிய அரும்புகள். அம்மா என்கிற ஆரம்ப வார்த்தையைக் கூட உச்சரிக்க வலுவில்லாத உதடுகள். அன்னையின் ஆசை முத்தத்தின் சத்தத்தைக் கூட உள்வாங்கிக் கொள்கிற சக்தியில்லாத செவிப்பறைகள்.


காலையிலிருந்து மதியம் வரை ஒவ்வொரு குழந்தையோடும் அதனுடைய அன்புத்தாய் அமர்ந்திருக்கிறாள், குழந்தைக்கு ஆசிரியை தருகிற பேச்சுப் பயிற்சியை ஆழமாய் உள்வாங்கிக் கொண்டு. குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் இல்லை. அம்மாக்களுக்குத்தான்!

கண்களில் ஈரத்தோடும் நெஞ்சங்களில் உரத்தோடும் தங்களுடைய அன்புச் செல்வங்களின் எதிர்காலத்துக்காக தங்களுடைய உணர்ச்சிகளையும் உடைமைகளனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற அம்மாக்கள்.

"எனக்கு பயம்மா இருக்குங்க" என்று கிசுகிசுத்தாள் இவள்.

"ஒனக்கெதுக்கு பயம்?"

"ஒலகத்துல கொழந்தைங்க இப்படியெல்லாம் பொறக்குதேங்க! நமக்குப் பொறக்கப் போறதும் இந்த மாதிரி ஒரு கொழந்தையாப் பொறந்து, நானும் இந்த மாதிரி ஒரு ஸ்கூல்ல வந்து கொழந்தையோடயும் வேதனையோடயும் ஒக்காந்திருக்கிற மாதிரி நெலமை வராதுன்னு என்னங்க நிச்சயம், நெனச்சுப் பாக்கவே பயங்கரமா இருக்கு."

"சீ, அப்படியெல்லாம் ஒண்ணும் நடந்துராது. இதெல்லாம் லட்சத்துல ஒரு கேஸ். விபரீதமாவெல்லாம் நீ கற்பன பண்ணாதே. ராத்திரி தூங்கறதுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் ஸின்ஸியரா ஆண்டவன வேண்டிப்போம். கடவுள் கைவிட மாட்டார்."

"கடவுள வேண்டிக்கிறது சரிதான், அது நம்மளோட சுயநலத்துக்காக. இந்த பாவப்பட்ட கொழந்தைங்களுக்கு நாம ஏதாவது செஞ்சாக வேணுமேங்க. மாசா மாசம் அஞ்சாயிரமோ, பத்தாயிரமோ இந்த ஸ்கூலுக்குக் குடுப்போம். அதுக்கு முன்னால, ஒரு அம்பதாயிரம் ரூபா நாளக்கி வந்து குடுத்துட்டுப் போவோம், என்ன? இந்தக் கரஸ்பாண்டன்ட்ட சொல்லுங்க."

கரஸ்பாண்டன்ட்டிடம் சொன்னபோது ரொம்ப நெகிழ்ந்து போனார். இந்தப் பள்ளியில் மழலைக் கல்வியில் பயிற்சி பெறுகிற குறையுள்ள குழந்தைகள், அபாரமாய்த் தேர்ச்சி பெற்று, நாலு வயசுக்கு மேல் மற்ற நார்மல் குழந்தைகளோடு சேர்ந்து படிக்க ரெகுலர் ஸ்கூல்களுக்குப் போய் விடுவதைப் பூரிப்போடு சொன்னார்.

இந்தப் பள்ளியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த அஞ்சு வயசுப் பெண் குழந்தையொன்று அண்ணா நகரில் ஒரு பிரபலமான பள்ளிக்கூடத்தில் யூகேஜி யிலிருப்பதைச் சொன்னார்.

"நாளக்கி அந்த ஸ்கூல் டே. எல்லாக் கொழந்தைங்க கூட சேந்து நம்ம கொழந்தையும் டான்ஸ் ஆடுது. நார்மல் கொழந்தைங்க எது, நம்ம கொழந்தை எதுன்னு நீங்க கண்டு பிடிக்கவே முடியாது. நீங்க ரெண்டு பேரும் அவசியம் வந்து பாருங்க."

அடுத்த நாள் அந்த ஆண்டு விழாவுக்குப் போனோம், நானும் இவளும். மேடையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராயிருந்த கரஸ்பாண்டன்ட், எங்களை அவதானித்துப் புன்னகைத்துக் கையசைத்தார்.

ரெண்டு மூணு ஆரம்ப நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, யூ கே ஜி குழந்தைகளின் கோரஸ் நடனம் வந்தபோது, ‘இப்போது கவனியுங்கள்’ என்று எஸ்.எம்.எஸ். கொடுத்தார். நடனத்தில் நாங்கள் லயித்திருந்த போது, ‘நம்ம குழந்தை எது என்று பிரித்தறிய முடிகிறதா?’ என்று இன்னொரு எஸ் எம் எஸ்.

ம்ஹும். என்னாலும் முடியவில்லை. இவளாலும் முடியவில்லை. அடுத்த எஸ் எம் எஸ் இப்படி வந்தது :
"அடுத்து, நம்ம குழந்தையுடைய ஸோலோ டான்ஸ் வருகிறது, பாருங்கள்."

பார்த்தோம், ரசித்தோம், பிரமித்தோம்.

முந்தைய கோரஸ் நடனத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் இணையாய் ஆடி அசத்திய அழகுக் குழந்தை இதுதானா என்று ஆச்சர்யமாயிருந்தது. ஸோலோ டான்ஸ் முடிந்ததும் நானும் இவளும் கண்கள் பனிக்கக் கரகோஷித்தோம். அரங்கத்தில் கரவொலி அடங்க நேடுநேரமாயிற்று. அடங்கியதும், பக்கத்து ஆசனத்தில் ஒரு பெண் குரல் அபஸ்வரமாய் ஒலித்தது.

"என்னங்க இப்படி சொதப்பிருச்சு இது? ஐயே, நல்லாவே ஆடல."

திடுக்கென்றது எனக்கு. வெடுக்கென்று முகத்தைத் திருப்பி நம்ம ஆள் அந்தப் பெண்ணின் மேல் ஒரு ஆக்ரோஷப் பார்வையை ப்ரயோகித்தாள். அதைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் அந்தப் பெண் தன் பக்கத்திலிருந்த புருஷனிடம் குறைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

"ஸ்டெப்ஸ்ல எப்படி ஓட்ட விட்டுருச்சு பாருங்க. ரொம்ப மோசம்." அவள் சொன்னதை ஆமோதித்து அந்த ஆளும் தலையாட்டிக் கொண்டிருந்தான்.

என்னவளுக்குப் பற்றிக் கொண்டு வந்ததை எங்களுடைய நெருக்கம் உணர்த்தியது. "ஷ், இப்ப ஒண்ணும் வாயத் தொறந்து நீ ரசாபாசம் பண்ணாத. ப்ரோகிராம் முடியட்டும்" என்று அவளுடைய கையைப் பற்றி அழுத்தினேன்.

நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றதுதான் தாமதம், என்னுடைய கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வெளியே வந்து, வாசலையொட்டி நின்று கொண்டாள். அந்த வில்லங்க ஜோடி வெளியே வரவும், ‘எக்ஸ்க்யூஸ் மி’ என்று அவர்களைப் பிடித்துக் கொண்டாள்.

"அந்தக் கொழந்தையோட டான்ஸப்பத்தி மட்ட ரகமா கமென்ட் அடிச்சீங்களே, அந்தக் கொழந்தை எப்படிப்பட்டதுன்னு ஒங்களுக்குத் தெரியுமா மேடம்?"

அரண்டு போன அந்தப் பெண், ‘ம்?’ என்று விழித்தாள்.

"எவ்வளவு அற்புதமா ஆடுச்சு அந்தக் கொழந்த. அதப்போய் சொதப்பல்னு வாய் கூசாம சொல்றீங்களேம்மா, ஒங்களுக்கு மனசாட்சியே கெடையாதா?"

அந்தப் பெண் வாயடைத்து நிற்க, அந்தக் கணவன் அவளுடைய உதவிக்கு வந்தான்.

"அதில்லிங்க மேடம், நேத்து இதே ஹால்ல ஒத்திகை நடந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் பாத்தோம். ஒத்திகைல செஞ்சதுல பாதிகூட இன்னிக்கி செய்யல. அதான்..."

"இருக்கட்டும் சார், அது ஒரு முழுக் கொழந்தையில்ல, பாதிக் கொழந்ததான்னு ஒங்களுக்கு தெரியுமா? ஸ்டேஜ்ல கேக்கற ம்யூஸிக் அதோட காதுல அரகொறயாத்தான் விழும்னு ஒங்களுக்குத் தெரியுமா? ஒங்க லிப் மூவ்மென்ட்ஸ வச்சித்தான் நீங்க பேசறத அது கிரகிக்க முடியும்னு ஒங்களுக்குத் தெரியுமா?"

இவளுடைய கண்களில் கனல், குரலில் அனல்.

"அது எல்லாமே அவங்களுக்குத் தெரியும் மேடம், ப்ளீஸ் காம் டௌன்" என்றொரு அந்நியக் குரல் அருகாமையில் ஒலித்தது. கரஸ்பாண்டன்ட்.

ஏவுகணையை நம் ஆள் அவர் பக்கம் திருப்பினாள். "இல்ல சார், இவங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சா, அந்த அபூர்வமான கொழந்தையை இப்படி அசிங்கமா விமர்சனம் பண்ணியிருக்க மாட்டாங்க. அந்தக் கொழந்தையப் பெத்தவங்க இங்க இருந்திருந்தா எவ்ளோ வேதனப்படுவாங்க! அந்தக் கொழந்தையப் பெத்த புண்ணியாத்மாக்கள் இங்க இருக்காங்களா பாருங்க சார், அவங்ககிட்ட இந்த ரெண்டு பேரும் மன்னிப்புக் கேட்டாத்தான் இவங்களுக்கு ப்ராயச்சித்தம் கெடைக்கும்."

"அந்தப் புண்ணியாத்மாக்கள் இங்கதான் இருக்காங்க மேடம்" என்றார் கரஸ்பாண்டன்ட்.

"ஆனா, யார், யார்ட்ட மன்னிப்புக் கேக்கறதுங்கறதுதான் இப்ப கேள்வி."

நானும் இவளும் கரஸ்பாண்டன்ட்டைப் புதிராய்ப் பார்க்க, அவர் அந்த இருவரின் பக்கத்தில் கைகாட்டினார்.

"இவங்க ரெண்டு பேரும்தான் மேடம் நம்ம கொழந்தையப் பெத்த உத்தம ஆத்மாக்கள், யார்ட்ட இவங்கள மன்னிப்புக் கேக்கச் சொல்லப் போறீங்க?"

ஒரு விநாடி ஸ்தம்பித்துப் போன நம்ம ஆள், அடுத்த விநாடி கண்களில் கண்ணீர் பொங்க, ‘ஐ’ம் ஸாரி, ஐ ‘ம் ஸாரி, ஐ ‘ம் ஸாரி’ என்று நாத் தழுதழுக்க அந்தப் பெண்ணை இறுகக் கட்டிக் கொண்டாள்.

கண்கள் பனிக்க, அருகே நின்றிருந்த அந்தத் தகப்பனின் கரங்களை என் பங்குக்கு நான் ஆறுதலாய்ப் பற்றிக் கொண்டேன்



நன்றி :Nilacharal

No comments: