முடிவுறாத முகாரியொன்று -செ.பாஸ்கரன்

.

         10.09.2008  இல் எழுதியது

நீலாம்பரி ராகம்
நெஞ்சில் உதைக்கிறது
முகாரி ராகம் வீட்டின் முகட்டு வழியால்
இறங்கி வருகிறது
அவள் பிறந்தபோதும்
தவழ்ந்த போதும்
முகாரியே முகவுரை கூறியது
தொப்பிள் கொடியறுத்த அன்னை
தொலைந்து போனோர் பட்டியலில்
துணைக்கிருந்த அப்பன்









நடு இரவில் இழுத்துச் செல்லப் பட்டான்
துடிக்கத் துடிக்க மனித உடலொன்று
மாயமாய்போனது
அவள் நடைபிணமானாள்
அயலவர்கூட ஆறுதல் சொல்ல
வரப்பயந்த இரவில்
துணைக்கிருந்தது முகாரி மட்டுமே
அம்மாவின் அணைப்பற்று
அப்பாவின் ஆதரவற்று
அகதிமுகாமில்
அடைக்கலம் தேடியபோது
அவள் கேட்டதும் முகாரி மட்டும்தான்
துள்ளி விளையாடும் சின்ன வயதில்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
துன்பச் சுமையோடு பள்ளிப்படிப்புக்கும்
முழுக்குப்போட்டுவிட்டு
ஊரைவலம் வந்தவளோடு
துப்பாக்கிச் சனியனும்; ஒட்டிக்கொண்டது

சின்ன விரல் விசை அழுத்த
சீறிப்பாயும் எரிகுண்டு
ஆளைத்துளைக்கும் போது
அம்மா என்ற சொல்லோடு
எழுகின்ற முகாரி
மடியும் போதும் அவளுக்காய் காத்திருக்கும்
அவள் மடியும்போதும் அவளுக்காய் காத்திருக்கும்
மானிடத்தின் வதை நிலமாய்
மாறிவிட்ட நம் தேசத்தில்
இன்னம் எவ்வளவு காலம்தான்
இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி
நெஞ்சில் உருண்ட கேள்வியோடு
என் பிஞ்சுக் குழந்தையைப் பார்க்;கிறேன்
முகாரி அறியாத மகிழ்வோடு
நீலாம்பரி இசைத்துக்கொண்டிருக்கிறது.

3 comments:

kirrukan said...

நிஜ வரிகள்
இணப்புக்கு நன்றிகள்

kirrukan said...

இந்த டமிழ்முரசில் ஏன் மக்கள்(வாசகர்கள்) பின்னூட்டம் விடுவதில்லை என்பதை டமிழ் முரசு கவனத்தில் எடுத்ததா?
வாரந்தோரும் ஒருவர் ,அல்லது இருவர் தான் பின்னூட்டம் விடுகிறார்கள்.

கதாசிரியர்களின்,கவிஞர்களின் படைப்புக்களுக்கு பின்னூட்டம் எழுதினால் அதற்கும் நன்றி தெரிவிக்காத படைப்பாளிகள் இந்த டமிழ்முரசில தான் அடியேன் பார்த்துள்ளேன் .அவ்வளவு தலைக்கணம்........................

டமிழ்ஸ் விரும்பாத இணையம் இருந்து என்ன இல்லாட்டித்தான் என்ன?

paskaran said...

தங்களின் கருத்துக்கு நன்றி. சுட்டிக்காட்டிய விடயம் தெளிவைத்தந்திருக்கிறது. படைப்பாளியாக நன்றி சொல்வதா பத்திரிகையாளனாக நன்றி சொல்வதா என்ற குழப்பம் காரணமாகவும் விட்டு விட்டேன். மற்றப்படி நீங்கள் குறிப்பிட்ட பெரிய வார்த்தைகள் போன்று எதுவுமில்லை. உலகத்தில் எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்களோடும் பத்திரிகைகளோடும் ஒப்பிடும்போது அடியேன் வளரவேண்டியது எங்கேயோ உள்ளது. சுட்டிக்காட்டியதற்கும் எல்லாவற்றையும் படித்து அதற்கு ஊக்கமருந்தையும் தருவதற்கு மனமார நன்றி நன்றி நன்றி.