மெல்பேர்னில் ஜுலை நினைவு நிகழ்வு

.

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் “ஜுலை நினைவு நிகழ்வும்“ வீரத்தளபதிகள் நினைவு பாடல் இறுவட்டு வெளியீடும்

ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுக்களில் ஒன்றாக அமைந்த கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வும், ஜூலை மாதப் பெருநினைவுகளை சுமக்கும் தற்கொடையாளர் களுக்கான நினைவுநிகழ்வும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஞாபகார்த்த நினைவுப் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடும் ஆஸ்திரேலியா மெல்பேர்னில் கடந்த ஞாயிற்றுக்கிமை கிளைட்டனில் அமைந்துள்ள கிளைட்டன் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

 விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவி்ன் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


மாலை ஆறு மணிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனை அடுத்து பொதுச்சுடர், ஈகச்சுடர் மற்றும் தளபதிகளுக்கான நினைவுச்சுடர் ஆகியவை ஏற்றிவைக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம் இடம்பெற்றது.

நிகழ்வுகளில் முதலாவதாக, கறுப்பு ஜுலை நினைவுப்பகிர்வு உரை நடைபெற்றது. அவுஸ்திரேலிய தமிழ் ஒன்றியங்களின் சம்மேளனம் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிவகுமார், கறுப்பு ஜுலையில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இவ்வாறான நினைவு நிகழ்வுகளின் மூலம் எமது வரலாற்றுக்கூறுகளை எம்மனங்களில் ஆழப்பதிந்துகொள்ளவேண்டும் என்றும், அதேவேளை தாயகமக்களுக்கான அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான செயற்றிட்டங்களையும் சமாந்தரமாக முன்னெடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
அவரை அடுத்து தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மருத்துவ கலாநிதி ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை தனது அனுபவ பகிர்வையும் சிங்கள மேலாதிக்கம் தமிழர்களின் மீது கொண்டிருந்த தீராத இனவெறிக்கு அடிக்கல்லாக அமைந்த கறுப்பு ஜுலை அப்போது சிறிலங்காவின் ஆட்சிபீடத்தில் இருந்தவர்களால் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதையும், இந்த மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜுலையை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் தாயகத்து தமிழ் மக்களின் துயர் நிலையைப் போக்க முன்னெடுக்கும் துயர் துடைப்பு மாத மனிதாபிமான சேவைகளையும் எடுத்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து, "எங்கள் தேசத்திலே இடி விழுந்தது ஏனம்மா" என்ற பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து கறுப்பு ஜுலை நினைவாக வெளியிடப்பட்ட "எரியும் நினைவுகள்" என்ற பெட்டக இறுவட்டிலிருந்து காணொளி முன்னோட்டம் திரையிடப்பட்டது.

அதனை அடுத்து, தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக சுரேஷ் உரையாற்றினார். ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஜுலை மாதம் என்ற காலப்பகுதி ஏற்படுத்தி சென்ற தாக்கங்களை எடுத்துக்கூறிய அவர், கடந்த காலங்களில் ஜுலை மாதங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் தெரிவித்தார். 83 ஆம் ஆண்டு 13 சிங்கள இராணுவத்தினரை படுகொலை செய்தமைக்காக தமிழர்களின் மீது பாரிய படுகொலை படலம் ஒன்றையே கட்டவிழ்த்துவிட்ட சிறிலங்கா அரசினால், பிற்பட்ட காலத்தில் ஆயிரத்து முந்நூறு இராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டபோது தமிழர்களின் மீது அவ்வாறான ஒரு காரியத்தை மேற்கொள்ள முடியாத அளவுக்கு தமிழர்களின் எழுகை இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் அடுத்ததாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரத்தளபதிகள் நினைவாக நினைவெழுச்சி பாடல் இறுவட்டுகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன. பிரிகேடியர் பால்ராஜ் நினைவான பாடல்கள் இறுவட்டும், பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் மணிவண்ணன், கேணல் தமிழேந்தி கேணல் சசிக்குமார் ஆகியோரின் நினைவுப்பாடல்கள் இறுவட்டும், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுஷா நினைவுப்பாடல்கள் இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

அதனை அடுத்து, கொடியிறக்கம் இடம்பெற்றது. இறுதியாக ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதிப்பிரமாணத்துடன் ஜூலை மாதத்தின் பெருநிகழ்வுகளை நினைவுகூரும் நிகழ்வு இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது.

No comments: