சந்தோஷம் ஹரே கிருஷ்ணா

.


ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் எல்லோரும் விரும்பும், தேடும் உண்மையான சந்தோஷத்தை பற்றி காண்போம். சந்தோஷம் என்றால் என்ன? எதற்காக மகிழ்ச்சியை மனம் நாடுகிறது ? எதற்காக இன்பத்தை போல் துன்பத்தை ஏற்க மனம் மறுக்கிறது? நான் இன்பமாக உள்ளேன் என்று கூறும் போது நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறேனா? ஒரு மனிதன் எப்போதும் இன்பமாகவோ (சந்தோஷமாக) இருக்க முடியுமா? இருக்க என்ன வழி? இதை பற்றி இன்று ஆராயலாம்.



சந்தோஷம் என்பது மனத்தின் ஒரு நிலை. அது காதல், நிறைவு, மகிழ்ச்சி,போன்ற உணர்வுகளினால் ஏற்படுகிறது. ஒரு உதாரணம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண்ணை சந்தோஷ படுத்த வேண்டுமா? மிகவும் சுலபம், அவளுக்கு பூவோ அல்லது கடைகளுக்கு அழைத்து அவளுக்கு பிடித்ததை கொடுத்தால் அவள் மனத்தில் இடம் பிடிக்கலாம் என்பது ஒரு பரவலான கருத்து. பொதுவாக நாம் இந்த நிலையற்ற அழிய கூடிய உடலை பொருட்களினால் சந்தோஷ படுத்துவதே உண்மயான சந்தோஷம் என்று நினைக்கிறோம். இந்த அழிய கூடிய செல்வங்கள் எல்லாம் நிலையற்றவை என்று தெரிந்தும் அதன் பின்னே தான் செல்கிறோம். அதிகமான பணமோ, பெரிய வீடு, பெரிய வாகனம் எல்லாம் வந்தால் வாழ்க்கை இன்பமயமாகி விடும் என்று பல சமயம் நினைக்கலாம்.

பணமோ, பொருளோ வேண்டிய சந்தோஷத்தை தருவதானால், உலகின் பெரும் பணக்கார “பில் கேட்ஸ் “ முதலிடம் பெற வேண்டும். பணக்கார நாடுகள் மிகவும் நிம்மதியோடு இருக்க வேண்டும். பில் கேட்ஸ் தான் உலகில் சந்தோஷ மான மனிதர் என்றால் அவர் முதல் 100 சந்தோஷாமன மனிதர் பட்டியலில் முதலில் வர வேண்டும்" பார்க்க போனால் அப்படி ஒரு பட்டியலே கிடையாது,. ஏனென்றால் சந்தோஷத்தை அளவிடுவது மிகவும் கடினம். சிலருக்கு பணம் இருந்தால் எல்லாம் இன்பமயம் என்று நினைப்பார்கள், சிலர் நல்ல குடும்பமே இன்பம் தரக் கூடியது என்று நினைப்பார்கள், சிலர் நல்ல மக்களே இன்பம் தரக்கூடியவர்கள் என்று நினைப்பார்கள். இவை எல்லாமே நிலை ஆனவை இல்லை. நான் மிகவும் நிறையாக, இன்பமாக உள்ளேன், இனி ஒரு சொட்டு அதிகமானாலும் வெடித்து விடுவேன் என்று கூற முடியுமா? அந்த ஒரு நாள் வருமா? அந்த நாள் வருவதற்கு கிருஷ்ணர் கீதையில் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
மாத்ராஸ்பர்ஷாஸ்த்து கெளந்தேய சீதோஷநஸூகத்துக்கதா:
ஆகமாபாயிநொ (அ)னித்யாஸ்தாம் திதிஷஸ்வ பாரத

பகவத் கீதை 2.14

அர்த்தம்:
குந்தி மகனே ! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப்போக்கிலான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றனவாதலால், இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ள கற்றுகொள்வாயக

இது ஒரு அற்புதமான உபதேசம் ஆகும். இதில் கிருஷ்ணர் இன்பம் துன்பம் இரண்டும் நிரந்தரமானது இல்லை என்று ஆணி தரமாக கூறுகிறார். அதற்கு இந்த குளிர் காலமே ஒரு நல்ல உதாரணம். குளிர் தாங்கமாட்டாமல் நல்ல வெய்யில் அடித்தால் எத்தனை இன்பமாக இருக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் அதுவே வெய்யில் காலத்தில் மழை இன்பமாக இருக்கும். ஆகவே சந்தோஷமும் நிலையானது இல்லை.

அப்படியானால் பொருள் எல்லாம் நிலையான இன்பம் தராது . ஆக உண்மையான இன்பம் என்றால் என்ன? உண்மையான இன்பம் பரம் பொருளிடம் இருந்தே வரவேண்டும். எல்லாம் நிறைந்தவன். அதனால் தான் அவரை "பகவான்" என்று அழைக்கிறோம். உண்மயான இன்பம் அந்த கண்ணனின் கருணையில் தானே வர முடியும். உண்மையான பக்தியோடும் அன்போடும் அவனைத் தொழுது அவர் நாமங்கள் வாயார பாடினால் எத்தனை இன்ப தரும் என்பதை ஒவ்வொருவரும் அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இன்பம் நிரந்தரமானது, எப்போதும் சாசுதமானது .

சந்தோஷத்தின் உண்மயான அளவு கோல் - நாம் எத்தனை தூரம் கிருஷ்ணர் மேல் ஈடுபாட்டொடு உள்ளோம் என்பதைப் பொருத்து உள்ளது. அவர் அருகில் செல்லச் செல்ல எல்லாம் இன்ப மயம் ஆகிறது.

கிருஷ்ணர் மேலே குறிப்பிடுவது போல் இன்பமும் துன்பமும் புலன்களின் எண்ணங்களே! ஆகையால் புலன்களை, அவர் மேல் திருப்பினால், அவர் நாமங்களைப் பாட வைத்தால் என்றும் எப்போதும் இன்பமாக இருக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் வாயார பாடி மனதார மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்

No comments: