1984-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் நாள். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. வரவிருக்கும் ஆபத்தை உணராத மக்கள், டிசம்பர் மாதத்துக் குளிருக்கு அஞ்சி வீட்டிற்குள் அடைபட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். வீடற்றவர்களோ சாலையோரம் ஒடுங்கிக் கிடந்தனர். போபாலின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், திடீரென அபாயச் சங்கு ஒலித்தது. தொழிலாளர்கள் பரபரப்பானார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையின் உயரமான புகை போக்கியிலிருந்து கொடிய நச்சு வாயு கசிய ஆரம்பித்தது.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பூச்சி மருந்து தயாரிக்க சேமித்து வைக்கப்பட்ட மெத்தில் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) திரவம் தொட்டியைவிட்டு வெளியேறிக் காற்றில் கலக்க ஆரம்பித்து விட்டது. நிறமும், மணமும் இல்லாத இந்தக் கொடிய நஞ்சு கலந்த காற்றை சுவாசிக்கும் சிறிது நேரத்திற்குள் மரணம் நிச்சயம். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், தமது மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார்கள். அபாயச் சங்கை முதலில் ஒலிக்க விட்ட போது, நேரம் சரியாக நள்ளிரவு 12:30.
யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து சில நூறடிகள் தள்ளி வசித்துவந்த எம்.ஏ.கான் எனும் விவசாயி, பக்கத்தில் இருக்கும் பால்பண்ணையில் ஏதோ சத்தம் வருவதை அவதானித்தார். சிறிது நேரத்தில், தனது மாடுகள் கால்களைத் தரையில் ஓங்கி ஓங்கி உதைப்பதை உணர்ந்தார். வெளியே ஓடிவந்து தொழுவத்தில் கட்டியிருந்த தனது பசுமாடுகளைப் பார்த்தார். இரண்டு பசுக்கள் தரையில் செத்துக் கிடந்தன. மூன்றாவது மாடு ஓங்கிக் கத்திக் கொண்டு சாவதை நேரில் பார்க்கிறார். இனம்புரியாம ஒருவித மயக்கம் அவரைச் சுழற்றியது. அவரின் கண்களும் எரியத் தொடங்கின. ஓட ஆரம்பித்தார். அவரது கண்கள் இருளத் துவங்கின. மறுநாள், கண்கள் மூடிய நிலையில் போபாலில் ஹாமில்தியா மருத்துவமனையில் கிடந்தார். அந்தப் பயங்கர இரவில்தான் போபால் படுகொலை தொடங்கியது.
யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய எம்.ஐ.சி. வாயு, வீசிக் கொண்டிருந்த காற்றினால் வழிநடத்தப்பட்டு மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியுனுள் ஊடுருவியது. அது சென்ற திசையெங்கும் சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி, நாய், ஆடு, மாடு, மனிதன் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்ட அனைவரையும், அனைத்தையும் சித்திரவதை செய்து கொன்றொழித்தது.
அந்தத் தொழிற்சாலையை ஒட்டி வசித்த மக்களுக்கு இவ்வாயு கசிய நேரிடுகையில் என்னென்ன செய்யவேண்டும் என்கிற பயிற்சி ஏதும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் இவ்வாறு நச்சு இரசாயன வாயு பரவும் போது ஈரத் துணியை முகத்தில் சுற்றிக் கொண்டு தரையில் தவழ்ந்து மெதுவாக புகை பரவும் திசைக்கு எதிர் திசையில் நகர்ந்து சென்று விட்டாலே, மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்கிற எளிய பயிற்சியைக் கூட அரசோ அல்லது யூனியன் கார்பைடு நிர்வாகமோ அளித்திருக்கவில்லை. தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிப்பதைக் கேட்ட மக்கள், தொழிற்சாலைக்குள் ஏதோ விபத்து என எண்ணி உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற தொழிற்சாலையை நோக்கி ஓடி வந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.
நச்சு வாயுவின் தாக்குதலால், தூக்கத்திலிருந்து உலுக்கியெழுப்பப்பட்ட மக்கள் முதலில் மிளகாய்ப் பொடியையை முகர்ந்தது போன்றதொரு உணர்வை அடைந்தனர். கண்ணில் நெருப்பைக் கொட்டியதைப் போன்று எரிந்தது; விழிகள் வெளியே வந்துவிடுவது போலப் பிதுங்கியது. தொடர்ந்து அவர்கள் நுரையீரலெங்கும் மிளகாய்ப் பொடியைக் கொட்டி நிறைத்ததைப் போன்ற நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. இரத்தமும் கோழையுமாக வாந்தியெடுத்தார்கள்.
அந்தப் படுகொலை நாளில் எப்படியோ உயிர் பிழைத்து, கண்கள் குருடாகிவிட்ட அசீசா சுல்தான், “நள்ளிரவு 12.30 மணி இருக்கும். என் குழந்தை கடுமையாக இருமத் தொடங்கியதை அடுத்து எழுந்து பார்த்தேன். எங்கள் அறை முழுக்க வெள்ளைப் புகை பரவி இருந்தது. வெளியே பல பேர் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.‘ஓடுங்க, ஓடுங்க’ என்றார்கள். எனக்கும் மூச்சு விடும்போதெல்லாம் தீயை சுவாசிப்பது போல இருந்தது. நெஞ்சுக்குலை வெளியே வந்துவிடுவதுபோல இடைவிடாமல் இருமல் என்னைத் தாக்கியது. தீயைக் கொட்டியது போல என் கண்களெல்லாம் எரிந்தது” என்று அந்த நாளின் துயரை நினைவு கூர்கிறார். போபால்வாசிகள் பலர் பார்வையை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பிணமானார்கள்.
வெளியே ஓடிக்கொண்டிருப்பவர்களில் பலர் எங்கே ஓடுவது என்று தெரியாமல் இலக்கின்றி ஓடினார்கள். எந்தளவுக்கு வேகமாக ஓடினார்களோ, அந்தளவுக்கு பிராணவாயுவைக் கோருகிறது நுரையீரல். எந்தளவுக்கு ஆழ்ந்து சுவாசித்தார்களோ, அந்தளவுக்கு அதிகமான எம்.ஐ.சி. வாயு உள்ளே நுழைகிறது. அதிக துடிப்புடன் ஓடியவர்களே முதலில் பலியாயினர். ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நெரிசலில் கீழேவிழுந்து நசுங்கியும் சிலர் மாண்டனர். உயிருக்குப் பயந்து ஓட்டமெடுக்கும் அம்மக்களில் சிலர் உடுத்தியது உடுத்தியபடி, சிலர் உள்ளாடைகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர். ஆடு, மாடுகளும் தன்னைக் காத்துக்கொள்ள மனிதர்களுடன் சேர்ந்து இலக்கின்றி ஓடின. மாடுகள் மிதித்துக் கீழே விழுந்து நசுங்கினர் சிலர். ஓடமுடியாமல் மூச்சுத் திணறிக் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டு சரிந்து விழுந்தனர் சிலர். அவர்கள் மீண்டும் எழவே இல்லை.
வீடற்றுச் சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத்தான் இந்த விசக் காற்று முதலில் தாக்கியது. பின்னர் வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கியது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை அணைத்தபடி தெருவில் உறங்கிக் கொண்டிருந்த தாய்மார்களும் குழந்தைகளும் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். நச்சுவாயு மக்களைக் கொன்று கொண்டிருந்த அந்த இரவில் போலீசோ ஒலிபெருக்கி மூலம் “யாரும் பீதி அடைய வேண்டாம். வீட்டுக் கதவுகளை சாத்தியபடி உள்ளேயே இருங்கள்” என அறிவித்து வீட்டுக்குள்ளேயே செத்து விழச் செதது.
நச்சுவாயுவின் தாக்குதலால் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித மூளை இழந்திருந்தது. தன்னுணர்வின்றி ஆடையிலேயே பலர் மூத்திரம் பெதனர். பெண்களின் கருவறைக்குள் இருந்த இரண்டு-மூன்று மாத சிசுக்கள் அழிந்து இரத்தமும் சதையுமாக கருச்சிதைவடைந்து தாய்மார்கள் மூர்ச்சையடைந்து விழுந்தனர். அந்த நாளில் வயிற்றில் சிசுக்களைச் சுமந்திருந்த தாய்மார்களில் 50 சதவீதத்தினருக்கு உடனடி கருச்சிதைவு ஏற்பட்டது.
முதலில் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இந்த நச்சுவாயு, பின்னர் கண் பார்வை நரம்புகளையும், சதைகளையும் செயலிழக்கச் செய்து விடும். உடனே செத்தவர்கள் பாக்கியவான்கள் என்பதைப் போல, கொஞ்சம் உயிர் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள், கண்கள் குருடாகி, என்ன நடக்கிறது என்றே புரியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் பித்துப் பிடித்தது போல ஓடி துடிதுடிக்க உயிரை விட்டனர். ஓடமுடியாமல் விழுந்து விட்டவர்கள் பிணக் குவியலுக்கு நடுவே அசைவற்றுக் கிடந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் தெருவெங்கும் பிணங்கள் குவிந்து கிடந்தன.
போபால் ரயில் நிலையத்தில், நிலைய அதிகாரியான துருவே, சிக்னல்மேனை நள்ளிரவில் வரவிருக்கும் லக்னௌ-மும்பை இரயிலுக்கான தந்தி எந்திர சமிக்ஞையை சரிபார்த்து அனுப்பச் சொல்லிவிட்டு, வெறிச்சோடிக் கிடந்த நடைமேடைக்கு வந்தார். காற்றில் அன்றைக்கு ஏதோ ஒரு மாற்றம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. தூரத்தில் வெள்ளையா மேகம் போல் ஏதோவொன்று கவிந்து வந்ததை
warren anderson former chairman union carbide
பார்த்தார். அருகில் சுருண்டு படுத்திருந்த தெரு நாய் ஊளையிட்டது. அந்த நாயின் கண்களில் மரண பீதியைக் கண்டார். மிளகாய்ப் பொடி நெடியோடு காற்று அடர்ந்து கொண்டிருந்தது. அவரால் சுவாசிக்க முடியவில்லை. நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. துருவே பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாய் சுருண்டு விழுந்து செத்துப் போனது.
துருவேயின் கண்கள் வெளியே பிதுங்கிக் கொண்டு வந்தது. எதிர் நடைமேடையில், இரவில் வழக்கமாக ஒண்டிக் கொள்ள வரும் பிச்சைக்காரர்கள் சிலரும் இதே போன்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
துருவேயின் உடலெங்கும் வலித்தது. இன்னும் சிறிது நேரத்துக்குள் வந்து சேர்ந்து விடும் லக்னௌ – மும்பை விரைவு இரயிலில் வரும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வில் சிக்னல் அறைக்கு ஓடினார். ஆனால் அந்த இரயில், வெகு நேரத்துக்கு முன்பே முந்தைய இரயில் நிலையத்திலிருந்து கிளம்பி விட்டதாகவும், இன்னும் சில நிமிடங்களில் போபாலுக்கு வந்து சேரும் என்பதாகவும் முந்தைய ரயில் நிலையத்திலிருந்து பதில் வந்தது. அடுத்த சில நிமிடத்திற்குள் இரயிலின் தடதடப்பு காதில் விழவே, நடுங்கும் கால்களோடு தள்ளாடி நடைமேடைக்கு விரைந்தார், துருவே. லக்னௌ – மும்பை விரைவு வண்டி போபால் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவதற்குள்ளாகவே, அவசரமாக இறங்கிய பயணிகளில் சிலர் சுருண்டு விழுந்தனர். அதைக் கண்ட மற்றவர்கள் விபரீதத்தை உணர்ந்து, உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் துவங்கினர். சிலர் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வேகமாக ஓடித் தப்ப முயன்றனர். கீழே சரிந்த தமது உறவினர்கள் மீது தண்ணீரைத் தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தனர்,சிலர். திரும்பிய திசையெல்லாம் உடல்கள் கிடக்க, உறவினர்களின் ஒப்பாரிச் சத்தம் ரயில் நிலையம் முழுக்க எதிரொலித்தது.
அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தவர்களும் இரவில் படுத்துறங்க அங்கு வந்திருந்த பிச்சைக்காரர்களும் சேர்த்து 191 பேர் அநாதைப் பிணங்களாக போபால் இரயில் நிலையத்தில் சிதறிக் கிடந்தனர். நெருங்கி விட்ட தனது மரணத்தை அறிந்த துருவே-வுக்கு மனைவியின் குழந்தைகளின் நினைவும் வந்து போனது. நேரத்தை வீணாக்காது அடுத்தடுத்து வரும் இரயில்களை எப்பாடுபட்டாவது நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணத்தோடு அவர் சிக்னல் அறைக்கு விரைந்தார்.
அங்கே சிக்னல் மேன் வாயோரம் இரத்தமும் கோழையுமாக சரிந்திருந்தார். கண்கள், அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. கடும் வலியோடும், இருமலோடும் சிக்னல் மேனின் உடலை சுவரோரம் நகர்த்தி வைத்தார், துருவே. நடுங்கும் கரங்களால் தந்தி இயந்திரத்திலிருந்து போபால் இரயில் நிலையத்தோடு இணைந்திருந்த எல்லா இரயில் நிலையங்களுக்கும் செய்தி அனுப்பினார். அந்த இரவு முழுவதும் விழித்திருந்து தொடர்ந்து செய்தியை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த எல்லா இரயில் நிலையங்களும் தங்கள் பாதை வழியே எந்த இரயிலும் போபாலுக்குச் செல்லாதவாறு தடுத்து நிறுத்தின. செய்தி கிடைக்காமல் கடந்து வந்துவிட்ட இரயில்களின் சன்னல்களை இழுத்து மூடியபடியே போபாலில் நிறுத்தாமல், வேகமாக் கடந்து போகுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார், துருவே. கடைநிலை ஊழியர்களைத் திரட்டி பின்னே வேகமாக வரும் எந்த இரயிலும் ஏற்கெனவே நிற்கும் இரயிலோடு மோதிவிடாமல் தடுக்க, அதன் தண்டவாளத்தைத் திசைமாற்றும்படி கேட்டுக் கொண்டார்.
மறுநாள் காலை இரயில் நிலையத்துக்குள் வந்த போலீசு மீட்புப் படை, சிக்னல் அறையில் சுவரோரமா சிக்னல் மேனின் பிணத்தையும், மோர்ஸ் கோட் இயந்திரத்தை ஒரு கையால் விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு மேசை மேல் கவிழ்ந்தபடியே கிடந்த துருவேயின் உயிரற்ற உடலையும் கண்டனர். இரயில் பாதையை கடைசி நேரத்தில் மாற்ற முயன்ற கடைநிலை ஊழியர்களின் உயிரற்ற உடல்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் அந்த லீவரைப் பிடித்திருந்த வாக்கிலேயே சரிந்திருந்தன.
இவ்வாறு சாதாரண அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து மக்களைக் காத்தபோது, அதிகாரிகளோ ஊரைவிட்டே ஓடிப் போயிருந்தனர். மக்கள் சொந்த முயற்சியிலேயே இப்பேரிடரை எதிர்கொண்டனர். அன்றைய ம.பி. முதல்வர் அர்ஜுன்சிங் (காங்கிரஸ்) போபால் நகரத்திலிருந்து தப்பித்து 14 கி.மீ. தொலைவில் உள்ள மாளிகையில் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டார்.
மறுநாள் 1000 பேருந்துகளை அரசு இயக்கியது. அதில் எஞ்சி இருந்த மக்களை நகரிலிருந்து வெளியேற்றியது. கிடைத்த வாகனங்களில் ஏறி மக்கள் நகரைக் காலி செய்து கொண்டிருந்தனர். போபால் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் ரயில்களில் ஏறித் தப்பிச் செல்ல மக்கள் காத்து நின்றனர். ஆனால், நச்சு வாயுவுக்குப் பயந்து ரயிலுக்குள் இருக்கும் பயணிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் அவர்களுக்குத் திறக்கவே இல்லை. ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டும் போபால் மக்களின் கையறு நிலை கல்லையும் கரைய வைப்பதாக இருந்தது. வலுவானவர்கள் ரயில்களின் கூரைகள் மீதேறி அகதிகளாக ஏதாவதொரு ஊருக்குப் போச் சேர்ந்தனர். இன்னும் சில தொட்டிகளிலும் நச்சு வாயு வெடித்துப் பரவி விட்டது என வதந்திகள் உருவாகி, பல நாட்கள் மக்கள் பீதியில் ஓடுவதும் திரும்புவதுமாக இருந்தனர்.
போபாலின் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டோரால் நிரம்பி விடவே, அவற்றின் தாழ்வாரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள வெட்டவெளிகளிலும் மக்கள் அடுத்தடுத்துக் கிடத்தப்பட்டனர். இரசாயனப் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பயிற்றுவிக்கப்பட்டிராத மருத்துவர்கள் தம்மால் முடிந்த வரையில் போராடிக் கொண்டிருந்தனர். மக்களுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று வழிகாட்டுதல் தரப்படவில்லை. கண்களுக்கு சொட்டு மருந்தும், இருமல் மருந்தும் கொடுத்து ஆறுதல் கூறினர். நஞ்சை முறிக்க என்ன மருந்து கொடுப்பது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யூனியன் கார்பைடு நிறுவனமும் சொல்லவே இல்லை. மிகவும் தாமதமாகத்தான் நஞ்சு முறிவுக்கு சோடியம் தயோ சல்பேட் தரப்பட்டது. பிறகு, அதனையும் தரக்கூடாது என்று ம.பி. அரசு கட்டளையிட்டது. மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொத்துக்கொத்தாகச் செத்துக் கொண்டேயிருந்தனர்.
தப்பியவர்கள், பிரிந்து போன தமது சொந்தங்களை உயிரோடு எஞ்சிய மனிதர்களிடையே தேடிக் கொண்டிருந்தனர். பிணங்களையும் புரட்டிப் பார்த்தனர். மருத்துவமனை முழுக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணங்கள்தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல பிணங்கள் இன்னாருடையதுதான் எனக் கண்டறிய முடியவில்லை.
ஏனென்றால், பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக மாண்டுபோயிருந்தன. பிணங்களின் மதங்களைக் கண்டறிய முடியாததால் புதைப்பதா, எரிப்பதா என்று தெரியவில்லை. பிணங்களுக்கு வெறுமனே எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டன. பல ஏக்கர் பரப்பளவுள்ள பொட்டலில் ஒட்டுமொத்தமாக எரியூட்டப்பட்டன. அல்லது பெரிய குழிகளாத் தோண்டி மொத்தமாப் புதைத்தனர். அதற்கும் வாப்பில்லாதவர்கள் தமது உறவினர்களின் சடலங்களை கனக்கும் இதயத்தோடு நர்மதை நதி வெள்ளத்தில் விட்டனர்.
மெத்தில் ஐசோ சயனேட் படிந்ததால் போபால் நகரில் மரங்களின் இலைகள் எல்லாம் பச்சை நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறத்துக்கும் கருநிறத்துக்கும் மாறியிருந்தன. பறவைகளெல்லாம் செத்து விழுந்திருந்தன. மக்களோடு கால்நடைகளும் தெருநாய்களும் மாண்டுபோ கவனிப்பாரின்றி சில நாட்களில் சிதைந்து அழுகத் தொடங்கின. தொற்று நோய் பரவிடும் நிலை வந்ததும் கிரேன்கள், புல்டோசர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி பிரம்மாண்டமான குழியொன்றில் ஒட்டுமொத்தமாகப் போட்டு அவற்றின் மீது டன் கணக்கிலான பிளீச்சிங் பவுடர் கொட்டி மூடினார்கள்.
இதற்கிடையில் தெருவெங்கும் வெட்டவெளியில் சிதறிக் கிடந்த மனிதர்களின் பிணங்களும் அழுகி நாறத் தொடங்கின. காலரா பரவும் அபாயம் வெகு அருகில் இருந்தது. அழுகிய பிணங்களைக் குதறிக் கொண்டிருந்த எலிகளால் ப்ளேக் நோய் பரவும் அபாயத்தில் போபால் இருந்தது. பல நாட்களாக வல்லூறுகளும் கழுகுகளும் நகரில் பிணங்களைக் குறிவைத்து வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஒரே இரவில் பத்தாயிரத்துக்கும் மேல் மரணங்கள். தொடர்ந்த மாதங்களில் முப்பதாயிரத்துக்கும் மேல் மரணங்கள். ஐந்து லட்சம் பேர்கள் வரை பாதிப்புக்குள்ளானதில், ஒன்றரை லட்சம் பேர்கள் பதினைந்து வயதுக்குட்பட்டோர். வெறும் எண்களாகக் கடந்து செல்லப் பார்க்கும் இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கிடையிலும், எழுத்துகளுக்கிடையிலும் வழிந்தோடும் வேதனையை, துரோகத்தை உங்களால் உணர முடிகிறதா? எத்தனை கனவுகள் கருகியிருக்குமோ? குழந்தைகள், செத்துப்போன தங்கள் பெற்றோரைத் தேடித் தேடி அலைந்து திரிந்த சோகத்தை உங்களால் உணர முடிகிறதா?
தப்பிப் பிழைத்த அந்நகரப் பெண்களின் கருவறையைக் கூட விட்டு வைக்காமல் நஞ்சூட்டியிருக்கும் அந்த கருணையற்ற முதலாளிகளின் இலாபவெறி, இந்த நிமிடம் வரை கேட்பாரில்லாமல் ஆணவமா எக்காளமிடுகிறது. இலாபத்தின் கொடூரத்தை விஞ்சுகின்ற துரோகத்தின் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குறிப்பு : ஜூன் 7 - 2010 இல் கோட் வழங்கிய தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அமெரிக்கனான வோரன் அண்டேர்சனை தப்ப விட்டுவிட்டு 8 உயர் அதிகாரிகளுக்கு இரண்டு வருட சிறையும் 2௦௦ ௦௦௦. ரூபாய் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் மட்டுமே - ( தமிழ் முரசு )
____________________________
1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம். மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நள்ளிரவு …..
நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.
ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் எம்மவர்களான ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரோடு இணைந்து கொண்டால் மட்டும் தான் உறுதிமிக்க போராட்டத்தை இலங்கை அரச பாசிஸ்டுகளுக்கு எதிராக முன் நகர்த்தும் வலுவைப் பெற்றுக்கொள்ளும். ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கள் எல்லாம் எமது எதிரிகள் அவர்கள் நண்பர்கள் தான் எமது நண்பர்கள். இந்த வகையில் போபாலில் படுகொலை நடத்திய இந்திய – அமரிக்க அதிகாரக் கூட்டால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் முன்னுரையாக அவ்வமைப்பின் புதிய ஜனநாயகம் இதழ் இம்முறை போபால் படுகொலைகள் குறித்த விபரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. புதிய ஜனநாயகத்திலிருந்து ஒரு கட்டுரையை இங்கு செய்கிறோம்.
நன்றி இனிஒரு. com
No comments:
Post a Comment