வைரவர் சாமி பயப்புராணம் - வாசுகி பரமராஜ்

.

சென்றவாரம் செ.பாஸ்கரன் எழுதிய கட்டுரைக்கு தொடர்ச்சியான கட்டுரை


போனவாரம் தமிழ்முரசில் இடம் பெற்ற “மனதில் பதிந்த வைரவசாமி”என்ற கட்டரை படித்தேன். எனக்குள் அடக்கமுடியாத சிரிப்பு. அதே வைரவர் சாமி பயப்புராண அனுபவம் கட்டுரை ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் அவரது வழித்தோன்றல்களாகிய எமக்கும் இருந்ததென்பதை அவர் அறிய வாய்ப்பிருக்காதென நினை;கிறேன். அந்த வைரவர் சாமி பயப்புராண கதை திட்டமிட்டே ஊர்ப்பெரியவர்களால் பரப்பி விடப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டுமென்றே நம்பத் தோன்றுகின்றது. ஏனெனில் பிள்ளைகள் பொய் களவு போன்ற கெட்ட பழக்கங்களைப் பழகாது நல்லவர்களாக உருவாகுவதற்கும், பாடசாலை விட்டு வரும் குழந்தைகள் வம்பு தும்பு எந்த வித பிரச்சினையிலும் சிக்கிவிடாது பாதுகாப்பாக நேரகாலத்துடன் வீடுவந்து,

 வயிற்றைக்காயவிடாது மதியபோசனத்ததையும் வேளைக்கு உண்டு, வேலைகளை முடிப்பார்கள் என்ற நல்ல நோக்கத்துடன் சொல்லப்பட்ட வேதவாக்காக இருக்கலாம்.

எனது முதல் வருட பள்ளி நாட்களில் இநத வைரவர் பயபுராணம், என்னை விட மூன்று நான்கு வயது பெரிய பிள்ளைகளினாலும், எனது சினேகிதர்களாலும் எனக்கு ஓதப்பட்ட வேத வாக்காகவே இருந்தது. இதன்பின் எம்மைத் தொடர்ந்து வந்த சிறியவர்களும் நாம் ஓதாமல் இதனைப் பின் பற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எமது பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சேர அரை மணித்தியாலமே எடுக்கும். அனேகமாக நான் எனது சினேகிதியுடன் பள்ளியில் இருந்து வரும்போது, தமிழ்மக்கள் ரானுவச் சாவடியைக் கடக்கும்போது உள்ள மரணபயத்தைப்போல வைரவர் சாமி பயம் இருக்கும். அப்போது காற்று மோதிவிiளாயடும் பனையோலைச் சத்தமோ, அல்லது அவலக்குரலெடுத்து கத்தும் பறவையின் சத்தமோ அல்லது ஒரு பனம்பழம் டமார் என விழும் சத்தமோ கேட்டால் அவ்வளவுதான் சொல்லவே வேண்டாம். வைரவரே திரிசூலத்தோடு எம்மை துரத்திக்கொண்டு வருவது போல ஒரு பிரமையை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் ஓட ஆரம்பிப்போம். நான் நல்லா ஓடுவன் சில நேரங்களில் அவளை நான் வைரவருக்கு அகப்பட விட்டுவிட்டு ஆபத்துக்குதவாத நண்பியாக தலைதெறிக்க ஓடித் தப்பிய வீரச் செயல் கனவில் வந்து போகும். அது பயமா? விடை தெரியவில்லை. சில வேளைகளில் நான் தனியே வரும்போது வைரவர் பயம், எனது கால்கள் முதுகில் படும்படியாக ஓடி, எமது முன்னாள் ஓட்டப்பந்தய வீரர்களின் சாதனைகளையெல்லாம் முறியடித்த மகிழ்ச்சியுடன் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்திருக்கிறேன்.

இதற்கு மாறாக எனது மூன்றாம் வருடத்தில் நான், எனது நண்பர்கள் நண்பிகளுடன் வரும்போது, வைரவரே பயப்படும் படியான லீலைகளும் நடந்ததுண்டு. அது யாதெனில், முன்பு பாடசாலையில் மதியநேரம் பிஸ்கட் கொடுப்பார்கள். அதன் வடிவம் ஏறக்குறைய ஜம்பது சத நாணயம்போல் இருக்கும். அதில் பத்து பதினைந்தை எடுத்து மாலையாக கட்டி வைரவருக்கு படையல் போட்டு வடைமாலை போல் அதைச் சாத்தி அவர் முன் எமக்குத் தெரிந்த அத்தனை பாடல் களையும் பாடி, காலில் சலங்கை கட்டி அவரவர்களுக்குத் தெரிந்த நடனங்களை யெல்லாம் ஆடி, எமக்கு அந்த சமயத்தில் வேண்டிய வரமான நன்றாகப் படிக்க வேண்டும், அடுத்த வகுப்பு சித்தியடைய வேண்டும், என்ற நேர்த்திகளையும் வேண்டி, வைரவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவரை கட்டாய பார்வையாளராக்கி, எமக்குள் ஒளிந்திருந்த அத்தனை திறமைகளையும் அவர்முன் அரங்கேற்றம் செய்துவிட்டு வீடுவர ஒரு மணி நேரமாகிவிடும். அந்தக் கூத்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் தொடர்கதையாக இருந்தது.

பின் நாட்களில் வைரவர் இருந்த இடத்தில் ஒரு சிறிய கோயிலைக் கட்டி, வெள்ளி செவ்வாய் நாட்களில் nபியவர்கள், ஊர்மக்கள் யாவரும் ஒன்றுகூடி மேளம் தாளம் சங்கு மணி என்பன ஒலிக்க பொங்கல் பொங்கி வைரவரக்குப் படைத்து பூசை செய்தனர்.
சிறு பிள்ளைகளாகிய எமக்கு இந்த சத்தங்களை கேட்கும்போது ரெத்தம் உறைந்து மயிர்கூச்செறியும். பெரியவர்களில் சிலர் கலையாடுவார்கள். சிலர் குறி சொல்லுவார்கள். இப்படியாக அந்த நாட்கள் பயசந்தோசத்துடன் கடந்து விட்டன. ஆனால் நாம் இடம் பெயர்ந்த காரணத்தால் எமது சந்ததியினர் இந்த வைரவசாமி பயப்புராணத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டது.
இது சந்தோசமா? துக்கமா? விடை தெரியவில்லை.

இந்தியாவில் தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் இந்த வைரவர், காளி வழிபாடுகள் முக்கியமாக அங்கு கிடையாது. மாறாக ஊரக்கொரு காவல் தெய்வம் என்ற ரீதியில், காவல் தெய்வங்களாக நினைக்கின்ற ஐயனார், கருப்புசாமி, மாடசாமி, முனியாண்டிசாமி போன்ற தெய்வங்களை இருபத்தைந்து முப்பது அடிக்குமேல் பெரிய உருவங்களாக அமைத்து கிராமங்கள், ஊர் எல்லைகளில் காவல் தெய்வங்களாக நிறுத்தி பூசை வழிபாடு செய்வார்கள். ஆனால் எமது நாட்டில் எங்கள் சமயத்தில் வைரவர், காளி முதலான தெய்வங்களை ஆயத மேந்திய காவல் தெய்வங்களாக உருவகித்து வழிபட்டு வந்திருக்கிறோம். மேலும் எமது மூதாதையர் பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை அப்போது இருந்ததாக நம்பினர்.

( இப்போதும் பலர் நம்புகின்றோம்) அதனால் அவைகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆல், அரசு போன்ற மரங்களுக்கு கீழும் தங்கள் காவல் தெய்வங்களான வைரவர் காளி போன்ற தெய்வங்களை வைத்து பூசை செய்து வணங்கி தங்கள் பயங்களைப் போக்கிக் கொண்டனர். இதுவும் எங்கள் இடங்களில் வைரவர் காளி கோயில்கள் இருக்க ஒரு காரணம் எனலாம்.

1 comment:

Thya said...

நல்ல கட்டுரை