மதராசப்பட்டினம்

.


'ஆளுக்கொரு அவுன்ஸ் கூவம்' என்று அதட்டினாலொழிய அசுத்தப்படுத்துவதை நிறுத்த மாட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் பழைய சென்னையை கண் முன்னே உருவாக்கி, இதுதான்யா அந்தகால மதராசு என்கிறார் டைரக்டர் விஜய். மீட்டெடுப்பது நடக்காத காரியம் என்றாலும், 'ரிப்பீட் ஷோ' பார்த்து திருப்தி பட்டுக் கொள்ள வைத்த இந்த டீமுக்கு சாஷ்டாங்கமாக ஒரு சல்யூட் போடலாம்.

இன்றோ நாளையோ என்று முடிவை நோக்கி காத்திருக்கும் ஒரு இங்கிலீஷ் பாட்டி, நான் இப்பவே மதராசப்பட்டினம் போகணும் என்று பேத்தியோடு கிளம்புகிறார். சென்னைக்கு வந்திறங்கினால் அவர் தேடுகிற அந்த நபரை கண்டுபிடிக்க முடியாதளவுக்கு ஜன நெரிசல். சுமார் ஐம்பது வருஷத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தோடு தேடி வருகிற அவரது கண்களுக்குள் புகுந்து பிளாஷ்பேக்கை வெளியே எடுக்கிறார்கள். கிடைப்பது அருமையான காதல் கதை.

மதராசப்பட்டினத்தை ஆண்ட கவர்னரின் மகள் எமி, சலவை தொழிலாளி ஆர்யாவின் மீது காதல் கொள்கிறார். அடிமையின் காதலை ஆள்பவன் பொறுப்பானா? கொத்துக் கறியாகிறார் ஆர்யா. ஆனாலும் சுதந்திரம் கிடைக்கப் போகிற அந்த இரவில் தப்பிக்கிறது ஜோடி. விரட்டுகிறார்கள் சிப்பாய்கள். கடைசியில் குற்றுயிரும் குலை உயிருமாக காதலனை தப்பிக்க விட்டுவிட்டு தான் மட்டும் அகப்படுகிறார் எமி. தப்பித்த ஆர்யா பிழைத்தாரா? மூதாட்டியான எமி மீண்டும் ஆர்யாவை சந்தித்தாரா? கண் கலங்க வைக்கிற முடிவு.

எந்நேரமும் கழுதையும் கையுமாக திரிகிற ஆர்யா, தனது கட்டுடலை காட்டிக்கொண்டு போடுகிற மல்யுத்தம் ரசிக்க வைக்கிறது. சலவை தொழிலாளர்களின் துணி துவைக்கிற இடத்தை கோல்ஃப் விளையாட்டு மைதானமாக்க துடிக்கிற வெள்ளைக்காரனிடம் அந்த இடத்தை மீட்டெடுக்கிற ஆர்யாவின் வீரம் அசத்தல். ஆங்கிலேயர்களின் சவுக்கடிக்கு பின்பு காப்பாற்றப்படும் ஆர்யா, இந்த முறை தப்பிச்சுட்டே என்ற வெள்ளையனின் மொழி பெயர்ப்பை கேட்டுவிட்டு 'அதையே அவன்கிட்ட திருப்பி சொல்லு' என்கிறாரே, தமிழன்டா...! மொழி தெரியாவிட்டாலும் எமி மேல் காதல் கொள்வதும், அவருக்காக சில ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொள்வதுமாக சுவாரஸ்யப்படுத்துகிறார். தேங்ஸ் என்ற வார்த்தையை சொல்ல அரண்மனைக்கே போவதெல்லாம் அசட்டு துணிச்சல்.

அமலாவையும் அந்த காலத்து ஸ்ரீதேவியையும் குழைத்து செய்தது போலிருக்கிறார் எமி. எவ்வித மாறுதலுக்கும் அவசியமில்லை. அப்படியே தமிழ் படங்களில் நடிப்பை தொடரலாமே தாயி...! காதலுக்கு துணியின் ஓரத்தையே து£து அனுப்புகிற காட்சிகள் பசுமை.

வாத்தியாரிடம் ஆர்யா இங்கிலீஷ் கற்றுக் கொள்கிற அந்த காட்சி தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. எ...ஏ....பி...பீ... நல்ல கற்பனை! குஸ்தி வாத்தியார் நாசரும், காந்தியவாதி பாலாசிங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், நேதாஜி பாணிக்கு சல்யூட் போடுகிறது காந்தியம்.

போட்டோ எடுக்கும்போது மட்டும் அட்டென்ஷனில் நிற்கும் ஹனிபா நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் பல காட்சிகளில். அவர் உயிருடன் இல்லையே என்பதை நினைத்து ஒரு முறை குலுங்க வேண்டியிருக்கிறது.

வசனங்களில் ஆங்காங்கே குத்தல். நமது ஊர் வாக்காளர் அடையாள அட்டை பற்றிய இயக்குனரின் விமர்சனம் தியேட்டரையே குலுங்க வைக்கிறது. வாஸ்த்தவம்தானே...

கற்பனை சென்னையை கண்முன்னே கொண்டுவந்த கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கே முதல் பொக்கே. அப்புறம் கொத்துக் கொத்தாக கொடுக்கலாம் அத்தனை டெக்னீஷியன்களுக்கும். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, செல்வகுமாரின் ஆர்ட் டைரக்ஷன், காலத்திற்கேற்ப ஆடை வடிவமைப்பு செய்த தீபாலி நு£ர் என்று முப்பெரும் ராஜாக்களாக திகழ்ந்திருக்கிறார்கள் இவர்கள்.

மற்றொரு ஆச்சர்யம் ஜிவி பிரகாஷின் இசை. பின்னணி இசையும் பாடல்களும் தனி அனுபவத்தை தந்திருக்கிறது. குறிப்பாக வாம்மா துரையம்மா பாடல்.

சில காட்சிகளில் நீளத்தை குறைத்திருக்கலாம். டைட்டானிக் சாயல் வருவதை தவிர்க்க முயற்சித்திருக்கலாம். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், படகிலிருந்து ஆர்யாவின் கையை விடுவிக்கும் காட்சிகளில் அப்படியே டைட்டானிக் அடி!

பொதுவாக 'பீரியட்' பிலிம்களை 'மூன்று நாட்கள்' கூட ஓடவைப்பதில்லை தமிழ் ரசிகர்கள். அதை முதன் முதலில் மாற்றியிருக்கிறது இந்த மதராசப் பட்டினம்!

No comments: