பகவத் கீதை - நான்கு தூண்கள்


ஹரே கிருஷ்ணா! சென்ற வாரம் நெறிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். இந்த உலகில் இயற்கையும் மிருகங்களும் ஒரு எழுதப்படாத நியமத்தை பின்பற்றுகின்றன. மனிதர்களான நாமும் நான்கு முக்கிய நியமத்தை பின்பற்ற வேண்டும் என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த நான்கு நெறிமுறைகள் குறித்து இந்த வாரம் ஆராய்வோம்.


இந்த உலகத்தில் எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற வேண்டுமெனில் ஒரு நெறிமுறையைப் பின்பற்றி ஒரு வித கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியம். உதாரணமாக ஒருவர் விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டுமெனில் அவர் அதற்கான பயிற்சியைப் பின்பற்ற வேண்டும். நேரத்திற்கு உண்ண வேண்டும். நேரத்திற்கு உறங்க வேண்டும். நேரத்திற்கு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நெறியை பின்பற்றினால் கூடிய விரைவில் நல்லதொரு விளையாட்டு வீரராக முடியும். இந்த நெறியை பின்பற்றாமல் ஒருவர் அவர் விருப்பப்படி வாழ்ந்தால் விளையாட்டில் வெற்றிபெற முடியாது. இதைப் போலவே ஒருவர் படிப்பில் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கென்ற ஒரு நெறியைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக அவர் வகுப்புக்கு ஒழுங்காக செல்ல வேண்டும்; புத்தகத்தை ஒழுங்காப் படிக்க வேண்டும்; பரீட்சையை ஒழுங்காக எழுத வேண்டும். இதில் எதாவது ஒன்றை அவர் ஒழுங்காக செய்யவில்லை என்றாலும் அவரால் கல்வியில் மகத்தான வெற்றி காண முடியாது. இவ்வாறு மனித வாழ்விலும் நாம் ஒரு நெறியைப் பின்பற்றினால் தான் நாமும் நம்முடைய வாழ்கையிலும் வெற்றி காண முடியும். அந்த நெறிகள் என்னவென்று இந்த வாரம் பார்ப்போம்.

மனித இனத்தின் அஸ்திவாரம் நான்கு தூண்களைக் கொண்டது - கருணை, உண்மை, தவம் மற்றும் தூய்மை. நம் அனைவருக்கும் இந்த நான்கு விஷயங்களும் மிகவும் பிடித்தமான ஒன்றே. ஒரு மனித சமுதாயத்தின் நாகரீகம் எவ்வளவு உன்னதமானது என்பதை இந்த நான்கு குணங்களை அளவுகோலாகக் கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று வேதங்கள் கூறுகின்றன. இந்த நல்ல குணங்களை நாம் எப்படி நம் சமுதாயத்தில் வளர்ப்பது என்பதையும் வேத இலக்கியங்கள் நன்கு விரிவாக எடுதுரைகின்றன. இந்த நான்கு குணங்களை நாம் வளர்க்க வேண்டுமெனில் நாம் கீழே தரப்பட்ட நான்கு விஷயங்களையும் தவிர்க்க வேண்டும்.

மாமிசம்
மது
சூதாட்டம்
தவறான உறவு முறை(அதாவது கணவன் மனைவி அல்லாது வேறொருவருடன் பாலுறவு)

1. மாமிசம்:

நாம் மாமிசம் உண்டால் கருணை என்னும் குணமானது நம்மிடையே குறைய ஆரம்பிக்கும். எல்லா உயிர்களையும் நாம் சமநோக்குடன் பார்க்க வேண்டும். இதைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகக் கூறுகிறார்.

வித்யா வினைய சம்பன்னே
பிராமனே கவி ஹச்தினி
சுனி சைவ ச்வபகே ச
பண்டிதா சம தர்ஷின
- பகவத் கீதை 5.18

"அடக்கமுள்ள சாது, உண்மை ஞானத்தின் வாயிலாகக் கற்றறிந்த தன்னடக்கமுள்ள அந்தணன், பசு, யானை, நாய், நாயைத் தின்னுபவன் இவர்கள் எல்லோரையும் சம நோக்கில் பார்க்கின்றான்"

ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா உடல்களிலும் பரமாத்மாவாக இருக்கின்றார். கடவுள் தங்கி இருக்கும் இடம் ஒரு கோயில் ஆகும். நம்முடைய உடலும் ஆண்டவனின் ஒரு கோயில். அதனால் தான் நம்முடைய உடலின் நெற்றியில் குங்குமம் அல்லது சந்தனத்தால் திலகம் இட்டுக்கொள்கின்றோம். பண்டிகை தினங்களில் நம்மில் பலர் நம்முடைய உடலில் 12 இடங்களில் திலகம் இட்டுக்கொள்வதும் இத காரணத்திற்காக தான். வேத மரபின்படி நாம் மற்றொருவரைப் பார்க்கும்பொழுது இரு கைகளைக் கூப்பி வணக்கம் என்று கூறுகின்றோம். அந்த வணக்கம் நம் உடலுக்கல்ல. நமது உடலின் தங்கி இருக்கும் பரமத்மவுக்கான வணக்கம் ஆகும். அதைப் போல தவறாக நம்முடைய கால் ஒருவரின் உடலைத் தொட்டால் உடனே அவருடைய உடலை தொட்டு கும்பிடுவோம். ஏனென்றால் ஒருவர் உடலின் நம்முடைய கால் தொட்டால் நாம் கடவுளை எட்டி உடைத்ததற்கு சமானம் ஆகும். அதனால் தான் நாம் உடலை தொட்டு கும்பிடுகிறோம். இந்த உடலில் நம்முடைய ஆன்மா எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ, அத்தனை காலத்திற்கும் இந்த உடலில் பரமாத்மா குடி கொண்டிருப்பார். நாம் இறக்கும் போது நம்முடைய ஆன்மா வேறு ஒரு உடலுக்குச் செல்லும் போது பரமாத்மாவும் கூடவே செல்வார். நம்முடைய ஆன்மா ஒரு குதிரையின் உடலுக்குச் சென்றால் நாம் குதிரை ஆவோம். அந்த குதிரையின் உடலிலும் பரமாத்மா உருவத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பார். அதை போல நாம் ஒரு கோழியின் உடலுக்குச் சென்றாலும் நம்முடன் பரமாத்மாவும் அதில் குடி கொண்டிருப்பார். இதைத் தான் ஸ்ரீ கிருஷ்ணர் மேல கூறப்பட்ட ஸ்லோகத்தில் கூறுகின்றார்.

ஒரு உயிரைக் கொள்ளவது ஒரு இரக்கமற்ற செயல். அதிலும் நம்முடைய நாவின் ருசிக்காக நாம் மற்ற உயிரைக் கொன்றால் நாமும் இறக்கமற்றவர்களாகி விடுவோம். மேலும் ஒரு உயிரைக் கொன்றால் நாம் அதில் குடி கொண்டிருக்கும் பரமாத்மாவையும் வேறு இடத்திற்கு துரத்துவதாக அர்த்தம். இதிலிருந்து நாம் எந்த ஒரு உயிரையும் கொல்லக் கூடாது என்று புரிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் நாம் உயிரை கொள்ளும் வரையில் நமக்கு அமைதி வரவே வராது. ஏனென்றால் கருணை என்னும் தெய்வீக குணம் நாம் அசைவ உணவினை உண்ண உண்ண குறைத்து கொண்டே வரும். மாறாக நாம் சைவ உணவினை சமைத்து, அதை ஸ்ரீ கிருஷ்ணருக்குப் படைத்தது பிறகு அதை பிரசாதமாக உண்டால் நம் அனைவரிடமும் கருணை குணம் வளரும். உலகமெங்கும் அமைதி நிலவும்.

2. மது

இந்த காலத்தில் மது அருந்துவது நாகரீகத்தின் ஒரு வெளிப்பாடாக ஆகிவிட்டது. இது ஒரு துரதிஷ்டவசமான ஒரு விஷயம். நாம் தான் நமது அறிவைப் பயன்படுத்தி புத்திசாலியாக செயல்பட்டு இந்தப் பழக்கத்தை விட்டோடோழிக்க வேண்டும். நாம் மது அருந்தினால் தவம் என்னும் அறிய குணம் நம்மிடையே குறைந்து விடும். தவம் என்றால் ஒரு காட்டிற்குச் சென்று தவம் செய்வது என்று புரிந்து கொள்ளாதீர்கள். தவம் என்றால் பெரிய ஒரு விஷயத்தை அடைவதற்காக நாம் கஷ்டமான ஒரு விஷயத்தை செய்வது என்று பொருள். நம்முடைய வாழ்வில் நாம் அனைவரும் தினமும் தவம் செய்து கொண்டிருக்கிறோம். உதாரணமாக ஒரு மாணவன் தன்னுடைய படிப்பிற்காக திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி படிப்பில் கவனம் செலுத்துகின்றான். இது ஒரு விதமான தவம் ஆகும். கட்டிடக் கலைஞர்கள் மாதக் கணக்கில் வெயிலில் உழன்று மகத்தான ஒரு மாளிகையைக் கட்டுகின்றனர். இதுவும் ஒரு வித தவமே. நாமும் நம்முடைய குடும்பத்திற்காக அலுவலகத்தில் ஓயாது வேலை செய்கின்றோம். இதுவும் தவமே. ஒரு தாய் தனது குழந்தையை வளர்க்க இரவு பகலாக தன்னுடைய சுகத்தை மறந்து குழந்தைக்காக வாழ்கிறாள். இதுவும் ஒரு மகத்தான தவமே. இவ்வாறு நாம் அனைவரும் தவம் செய்கிறோம். இந்த தவம் செய்வதற்கு நமக்கு விடாமுயற்சியும் திடமும் வேண்டும். நாம் மது அருந்தினால் இந்தத் திடம் நாம் உடலில் குறைந்து விடும். மாறாக இந்த மது உண்பதைத் தவிர்த்தல் நமக்கு வெற்றி கைவசப்படும்.

3. சூதாட்டம்

நாம் சூதாட்டம் ஆடினால் உண்மை பேசும் குணம் நம்மிடையே குறைந்து விடும். இதைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபம். சூதாட்டம் ஆடும் எவரும் கூடிய விரைவில் பொய் பேச ஆரம்பித்து விடுவர். இதை யாரும் மறுக்கவே முடியாது. இதனால் தான் இந்த கெட்டப் பழக்கத்தை நாம் விட வேண்டும் என்று வேதத்தில் கூறப்பட்டு இருக்கின்றது. மகாபாரதத்தில் ஒருவர் சூதாடினால் என்னென்ன கஷ்டப் பட வேண்டும் என்று பாண்டவர்கள் பட்ட இன்னல்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். பாஞ்சாலி அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தப் பட்டாள். பாண்டவர்கள் தங்களது ராஜியத்தை இழந்தனர். 13 ஆண்டுகள் காட்டில் திரிந்தனர். பிறகு மகாபாரதப் போரில் பல வீரர்கள் இறந்தனர். கௌரவ குலமே முற்றிலுமாக அழிந்தது. ஒருவர் சூதாடினால் என்ன கஷ்டம் நிலவும் என்பதற்கு இதைவிட பொருத்தமான உதாரணத்தை வேறு எங்கும் காண முடியாது. ஆகவே சூதாட்டம் என்னும் கெட்ட பழக்கத்தை நிறுத்தினால் உண்மை பேசும் மகத்தான குணம் உலகமெங்கும் நிலவும்.

4. தவறான உறவு முறை(அதாவது கணவன் மனைவி அல்லாது வேறொருவருடன் பாலுறவு)

வேதத்தில் தவறான உறவு முறை வைத்திருப்பதை வெகுவாக கண்டிக்கப்பட்டிருக்கிறது. கணவன் மனைவி அல்லாது வேறொருவருடன் பாலுறவு வைத்திருந்தால் தூய்மை என்னும் குணமானது நம்மை விட்டு வெகு தூரம் ஓடி விடும். குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் தான் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேத இலக்கியத்தில் பல இடங்களில் நாம் காணலாம். இந்த தவறான உறவு முறை இந்தக் காலத்தில் தலை விரித்து ஆடுகின்றது. இதில் யார் சிக்கினாலும் சமுதாயத்தில் அவருடைய நல்ல பெயர், செல்வம், புகழ், குடும்பம், தூய்மை, அமைதி அனைத்தும் அவரை விட்டு ஓடி விடும். இந்தப் பழக்கத்தால் நம்முடைய அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை - இவை இரண்டும் சேதப் படும். ஆகவே இந்த கொடிய பழக்கத்தில் யாரும் சிக்கிக் கொள்ளாமல் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை ஜெபித்து நல்ல வழியில் சென்றால் நாமும் சந்தோஷமாக இருக்க முடியும் நம்முடைய குடும்பமும் என்றும் சந்தோஷ சூழ்நிலையில் இருக்கும்.

மாமிசம், மது, சூதாட்டம், தவறான உறவு முறை - இந்த நான்கு கெட்ட பழக்கத்தையும் நாம் தவிர்த்தால், கருணை, உண்மை, தவம் மற்றும் தூய்மை ஆகிய நான்கு தெய்வீக குணங்களும் வளர்ந்து இந்த உலகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்

1 comment:

Unknown said...

hi,
fine...each and every human must and should follow the same