அவுஸ்திரேலியா மெல்பனில் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி

                                                                                                                -ரஸஞானி

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘அனுபவ பகிர்வு’ நிகழ்ச்சி கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கத்தின் தலைவர் திருமதி அருண்.விஜயராணி தலைமையில் மெல்பனில் Spectrum Immigration Services (SIS) மண்டபத்தில் நடந்தது.

கலை,இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், கணினி வலைப்பதிவு, சமூகம், ஓவியம், சிற்பம், குறும்படம், அறிவியல் உட்பட பல துறைகளைப்பற்றியும் கலந்துரையாடும் ‘அனுபவப்பகிர்வு’ என்னும் வித்தியாசமான அமர்வின் முதலாவது நிகழ்வில் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலை அவுஸ்திரேலியாவில் நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், பல்வேறு கருத்தும் சிந்தனையும் கொண்டவர்களின் வாழ்வனுபவங்களை பகிர்ந்துகொள்ளுவதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையாவது ஒன்று கூடி கருத்துப்பரிமாற்றத்தை புரிந்துணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என்று இச்சந்திப்பில் உரையாற்றிய எழுத்தாளர் லெ.முருகபூபதி குறிப்பிட்டார்.

முதல் நிகழ்ச்சியில் மூவர் தமது வாழ்வனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில், கொழும்பில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும் மும்மொழிகளிலும் நன்கு தேர்ச்சி அடைந்தவரும் சிறுவர் சீர்திருத்த பாடத்திட்டங்களை தயாரித்த குழுவில் அங்கம் வகித்தவருமான திருமதி செல்வராணி வேதநாயகம் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, பாடத்திட்ட தயாரிப்பில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களையும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தெரிவித்தார். கௌதம புத்தரின் உருவப்படத்தை பாடத்திட்டங்களுக்காக வரையும்போது அவர் இலங்கையின் புத்தராக சித்திரிக்கப்படவேண்டியிருந்தது என்று அவர் சொன்னபோது புத்தரின் உருவப்படங்கள் சிற்பங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டிருப்பதையும் விளக்கினார்.

தமிழ்நாட்டில் திருச்சியில் நீண்டகாலம் அகதி முகாமில் மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றிய திருமதி ராஜினி அலோஸியஸ் உரையாற்றும்போது, தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலப்பகுதியில் சென்னையில் நடந்த மகளிர் மகாநாட்டில் தாம் கலந்துகொண்டு பேசியபோது பெண்களின் உயர்வு குறித்து ஒரு பாடலைப்பாடியதாகவும் அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பிரதம விருந்தினராக கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார். எனினும் அந்த மகாநாடு நடந்த பிரபல மகளிர் கல்லூரி அவரது பதவிக்காலத்தில் இடிக்கப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுதான் தமக்கு வியப்பளித்தது என்றார்.

அம்மகாநாட்டில் தமது உரையின் பின்னர், திருச்சிக்கு தம்மைத்தேடி வந்த சில புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திச்சென்றனர். எனினும் பாரதூரமாக எதுவும் நடக்கவில்லை என்றார்.

பெரியாரின் பாசறையில் வளர்ந்த ஒருவருக்கு மகனாகப்பிறந்து பகுத்தறிவு சார்ந்த தமிழ்த்திருமணம் புரிந்துகொண்ட திரு. செல்வபண்டியன், மெல்பனில் ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அவர் தமது உரையில் தமிழகத்தில் தமிழ்த்திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பது பற்றி விளக்கினார். அத்துடன் அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கும் திராவிட கலாசாரத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இதுபற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு ‘அனுபவ பகிர்வு’ நிகழ்ச்சியில் எவரேனும் உரையாற்றினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த அனுபவ பகிர்வு நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் ‘பாடும்மீன்’ ஸ்ரீகந்தராசா, ஆவூரான் சந்திரன், கே.எஸ்.சுதாகரன், சிசு.நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, கௌசல்யா அன்ரனிப்பிள்ளை, யாழ்.பாஸ்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அடுத்த ‘அனுபவ பகிர்வு’ நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என இச்சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

No comments: