அட்சய திருதியை                 
                                                சாந்தினி புவனேந்திரராஜா


சித்திரை அமாவாசையை அடுத்துவரும் மூன்றாம் நாளான அட்சய திருதியை நாள் இந்த ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியில் கொண்டாடப்பட்டது.  “அட்சயம் என்ற சொல்லுக்கு “நிறைவானது , குறைவில்லாதது” என்பது அர்த்தம்.

அட்சய திருதியை அன்று செய்யப்படும் காரியங்கள் நல்லபடியாக நிறைவுபெறும் என்பதும் இத்தினத்தில் தானதர்மம் செய்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பாக அட்சய திருதியையில் அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். தானங்களில் சிறந்தது அன்னதானம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அல்லவா! இது கொடுக்கும் தினம் – கொடுப்பதில் இன்பம் கொள்ளும் தினம்.
அதே நேரம் அட்சய திருதியையில் மங்கலப் பொருட்களை வீட்டுக்கு வாங்கிவந்தால் வீட்டிற்கு மகாலட்சுமியை அழைத்து வந்தது போல என்று சொல்வார்கள். அது குங்குமமாகவும் இருக்கலாம், குத்துவிளக்காகவும் இருக்கலாம். ஆனால் தங்கம் வாங்கினால் தான் வீட்டில் செல்வம் தங்கும்(மகாலட்சுமி தங்குவாள்)என்ற ஒன்றை எவரோ ஒரு தங்கவியாபாரி தொடக்கிவிட, அதுவே தாரகமந்திரமாகி அட்சய திருதியையில் தங்கம் வாங்கியே தான் ஆகவேண்டும் என்றாகிவிட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியையில் தங்கம் வாங்கவேண்டும், தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கமாய்க் கொட்டும் என்பதில் அபார நம்பிக்கை பலருக்கு. இதனால் இது நம்மவருக்குள்ளும் பிரபல்யமாகிவிட்டது (அட்சய திருதியையில் தங்கம் வாங்கக்கூடாது என்பதல்ல. ஆனால் தங்கம் தான் வாங்கவேண்டும் என்பதும் அல்ல)..
அதனால் இன்று அட்சய திருதியையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் தங்க வியாபாரம் தான் நடக்கிறது. அட்சய திருதியையின் அர்த்தமும் மாறிவிட்டது
நாங்கள் நமது தாய்நாட்டில் இருந்தபோது அட்சய திருதியை பற்றி அறிந்திருந்தோமா என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் சொல்பவர்கள் தான் அதிகமாக இருப்போம். அட்சய திருதியை பற்றி எம்மில் பலரும் அறிந்திருக்கவில்லை ஆனால் அதுபற்றி இப்போது அறியும்போது அதனைச் சரியாக அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

அட்சயதிருதியை பற்றி நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், அட்சய பாத்திரம் என்ற அதிசய பாத்திரம் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதில் இருந்து வந்தது தான் இது!

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், அதன் நாயகி மணிமேகலைக்குக் கிடைத்த அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரத்தில் இருந்துதான் மணிமேகலை பஞ்சத்தில் வாடியவர்களுக்கு உணவளித்தாள் என்று கூறுகிறது மணிமேகலை.

வனவாசம் சென்ற பாண்டவர்களுக்குச் சூரியபகவானால் கொடுக்கப்பட்ட அட்சய பாத்திரத்தில் இருந்துதான் திரௌபதி அவர்களுக்கு நாள்தோறும் அறுசுவை உணவளித்தாள் என்கிறது மகாபாரதம்.

அன்னை பராசக்தி தனது கையில் வைத்திருக்கும் அட்சய பாத்திரத்தில் இருந்து பரமேஸ்வரனுக்கு உணவு படைத்த நாள் தான் அட்சய திருதியை என்றும் கூறுகிறார்கள். இந்த நாளில் நாமும் மற்றவர்களுக்கு உணவளித்தால் இறைவனுக்கு உணவளித்த பலன் கிடைக்கும் என்றும் இதனால் தான் அட்சய திருதியையில் அன்னமிட்டால் ஆண்டுமுழுவதும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. “அடடா! அந்த அட்சய பாத்திரம் ஒன்று எமக்குக் கிடைக்காதா? அதுமட்டும் எமது கைகளில் கிடைத்துவிட்டால்------- அட்சய திருதியையில் மட்டுமல்ல ஆண்டுமுழுவதுமே அன்னதானம் செய்வோமே! இந்த அவசரமான வாழ்க்கையில் வீட்டில் சமையல் கூடச் செய்யவேண்டாமே” என்று எண்ணுகிறீர்களா? - - - அப்படியானால் அதனால்தான் இப்போது அட்சய பாத்திரம் எங்கோ ஓடி ஒழிந்து கொண்டுவிட்டது போலும்!

மகாவிக்ஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகிய பரசுராமர் அவதரித்ததும் மகாபாரதத்தை வேதவியாசர் வினாயகருக்குச் சொல்ல அதனைஅவர் தனது தந்தத்தை முறித்து அதனால் எழுதியதும் அட்சய திருதியை அன்று என்றும் அறிகிறோம். அட்சய திருதியை அன்று கௌரி அம்மனை நோக்கிப் பெண்கள் விரதம் இருந்தால் அவர்கள் அவளின் அருளைப் பெறுவார்கள் என்றும் கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் நல்ல கணவனையும் பிள்ளைகளையும் பெறுவார்கள் என்றும் இந்திராணி பிள்ளை வரம் வேண்டி இந்த விரதத்தைக் கடைப்பிடித்ததனால் ஜெயந்தனைப் பெற்றதாகவும் அருந்ததி அட்சய திருதியை பூசை செய்ததனால் வசிட்டருடன் வானத்தில் சப்தரிக்ஷி மண்டலத்தில் உயர்பதவி பெற்றாள் என்றும் புராணக்கதைகள் கூறுகின்றன.
இதுவெல்லாம் புராண இதிகாசக்கதைகள் இப்போது இதுவெல்லாம் நடக்காது. அட்சய திருதியையில் இப்போது என்னதான் நடக்கிறது என்றால் தங்கவியாபாரம் நன்றாகவே நடக்கிறது. அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கமாய்க் கொட்டும் என்ற நம்பிக்கையில் மூடநம்பிக்கையில் முழுநாளையும் நகைக்கடைகளை முற்றுகையிடுவதில் செலவிடுபவர்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.

சில வருடங்களுக்கு முன் அட்சயதிருதியையில் பொன் நகை வாங்குவது பற்றிக் கேள்விப்பட்ட போது என்னை மறந்த ஏதோ ஒரு மயக்கத்தில் அந்தமுறை – அந்த ஒரே ஒரு முறைமட்டும் தங்கநகை வாங்கியிருக்கிறேன். இதை நினைத்து இப்போது எனக்குள் சிரித்துக்கொள்கிறேன்.  சரி இது ஒரு பரீட்சார்த்த அனுபவமாக இருக்கட்டுமே என்று என்னைச் சமாதானப்படுத்தியும் கொள்கிறேன்.

எது எப்படியோ! தமிழ்நாட்டுத் தங்கவியாபாரிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட வியாபார தந்திரம் இன்று உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழர்களை ஆக்கிரமித்து விட்டது. அட்சயதிருதியை என்பதன் அர்த்தமும் மாறிவிட்டது.

No comments: