சிட்னி தமிழ் அறிவகம் கொடிதினம் 2010 ஒரு பார்வை


                                                                                                                  கு கருணாசலதேவா


யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து சிட்னி தமிழ் அறிவகம் கொடிவார விழாவை ஒவ்வொரு வருடமும் நடாத்துவது தெரிந்ததே. இவ்வாண்டும் சென்ற ஜுன் மாதம் 5ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் கொடிதினத்தை சிறப்பாக நடாத்தியது.

முன்னாள் தலைவர் திரு ந கருணாகரன் அவர்கள் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் தமிழ்மொழி வாழ்த்து பாடினார்கள்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து திரு தி திருநந்தகுமார் வரவேற்புரை வழங்கினார்.
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் செல்வன் ஜெனோசன் தர்மகுலசிங்கம் யாழ் பொது நூலகத்தை பற்றியும் செல்வன் ஆதித்தன் திருநந்தகுமார் சிட்னி தமிழ் அறிவகத்தைப் பற்றியும் சிறப்புரைகள் ஆற்றினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து தலைவர் திரு வீ குணரஞ்சிதன் தனது தலைவர் உரையை நிகழ்த்தினார்.

அடுத்த நிகழ்ச்சியாக நடைபெற்ற திருமதி மீனாட்சி வெங்கடேசன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி எல்லோருடைய பாராட்டையும் பெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக 97,000க்கு மேற்பட்ட விலை மதிக்கமுடியாத புத்தகங்கள் நிறைந்த யாழ் நூலகத்தை 1981ம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூர்வதற்கான கொடிவிற்பனை ஆரம்பமாகியது. சிட்னியிலுள்ள எல்லா நிறுவனங்களின் சார்பிலும் பலர் பங்கேற்று கொடிவிற்பனையை சிறப்பித்து வைத்தார்கள்.
இடைவேளையின் போது இலவசமாக எல்லோருக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது.

இடைவேளையைத் தொடர்ந்து ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் “புலம்பெயர் தமிழரின் வளமான வாழ்வுக்காய் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டியவர்கள் யார்?” என்ற தலைப்பில் விவாத அரங்கு ஒன்றை நடாத்தினார்கள். இவ்விவாத அரங்குக்கு செல்வன் திரோஜன் யூட் ஜோன் பீற்றர் தலைமை தாங்கினார். செல்வி வருணி சாந்தகுமார் சமூக நிறுவனங்கள் அல்ல பிள்ளைகளே என்ற தலைப்பிலும் செல்வி ஜினோதா லோகேந்திரன் பிள்ளைகள் அல்ல பெற்றோரே என்ற தலைப்பிலும் செல்வி கஸ்தூரி முருகவேல் பெற்றோர் அல்ல மூத்தோரே என்ற தலைப்பிலும் செல்வி தேவிகிருஸ்ணா தேவேந்திரன் மூத்தோர் அல்ல சமூகமே என்ற தலைப்பிலும் செல்வி தாரணி திருநாவுக்கரசு சமூகம் அல்ல நிறுவனங்களே என்ற தலைப்பிலும் மிக சிறப்பாக நல்ல கருத்துக்களை முன்வைத்து விவாதத்தை சிறப்பாக நடாத்தினார்கள். விழாவிற்கு வருகைதந்தவர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை கூறி ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களை போற்றினார்கள்.


திரு கௌரிதாசன் அவர்களின் நன்றியுரையோடு அன்றைய விழா முடிவுற்றது.

No comments: