இன்னுமொருமுறை எழுதுவேன்
                                                                                          
                                                              நடராஜா முரளிதரன்


நான் சிறு பையனாக
இருந்தவேளை
எனது அம்மம்மா சொல்வாள்
தான் பிறந்த வாழ்ந்த
ஓடு வேய்ந்த
சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி
ஊடுருவி உறைந்து

காலக்கண்ணாடியில் படிந்து
சடத்துவமாய் காட்சி தந்து
மூலக்கூற்றுக் கவர்ச்சி விசையிலிருந்து
பிரிந்து அவை
எங்கே செல்ல முடியும்

அந்தவேளையில்
அது அழிக்கப்பட்டு
அதன்மீது குந்தியிருந்தது
இன்னுமோர் சீமெந்துக் கட்டிட வீடு
என்னுள் அடங்கிய ஆர்ப்பரிப்புச் சுழல்களின்
மூல இருப்பை
சுருங்கிய ஆதாரத்தின்
மைய மோகிப்பை
உந்தித்தள்ளிய விசையின்
திமிறலை
என்னால் எடுத்துரைக்க முடியாது

சூழ இருந்தது தோட்டம்
மா பலா வாழை மாதுளை எலுமிச்சை
வேம்பு பனை தென்னை புளியென
எல்லாமே அங்கு பூத்துக் கிடந்தது

கல் விளைந்த அப்பூமியில்
என் முன்னோர்
பயிர் விளைக்க முனைந்த கதை
கழிவிரக்கத்தால்
இங்கு பாடுபொருள் ஆகியது

எனது அப்பு பென்சனில் வந்து
அந்த மண்ணுக்குள்ளே
புதைந்து கொண்டு
வெளியே வர மறுத்தார்
தனது ஊனினை உருக்கி
ஓர் தவம் புரிந்தார்
பச்சைத் தாவரங்களின்
தழுவல்களுக்கிடையில்

சேர்ந்து சுகித்த
காலங்களின் வதையை
மோதி உராய்ந்து
சுக்கிலத்தைச் சிதறியும்
கலத்தில் ஏற்றியும்
ஏறியும் புரண்டும்
உச்சத்தில் ததும்பியும்
மது வேண்டியும்
திளைத்து நின்ற இழந்த
அந்த மண்ணின் வரலாற்றை
நான் எப்படியும்
இன்னுமொருமுறை எழுதுவேன்

No comments: