மெல்பனில் நடந்த பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா


                                                                                                       திரு லெ முருகபூபதிஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தினால் பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா மெல்பனில் கடந்த மேமாதம் 22 ஆம் திகதி முழுநாள் விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வாண்டு பத்தாவது ஆண்டை நிறைவு செய்வதையிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

அவுஸ்திரேலியாவில் வாழும் பல எழுத்தாளர்கள் பங்குகொண்ட இந்தவிழாவில், ஜெர்மனியில் இருந்து பத்திரிகையாளரும், ஓவியருமான எம். கே. ஏஸ். சிவகுமாரன், தமிழ்நாட்டிலிருந்து  எழுத்தாளரும், கவிஞருமான எஸ். வைதீஸ்வரன் இலங்கையிலிருந்து எழுத்தாளர் எஸ்.ரஞ்சகுமார் ஆகியோரும் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்; சங்கத்தின் தலைவர் திருமதி. அருண்விஜயராணியின் தலைமையில் விழா நடைபெற்றது.

திரு.திருநந்தகுமார் தலைமையில் மாணவர் அரங்கும் அதைத்தொடர்ந்து இடம்பெற்ற சிறுவர் அரங்கு செல்வி காவியா வேந்தன் என்ற சிறுமியின் தலைமையிலும் நடந்தன. சிறுவர்கள் பங்குகொண்ட இந்நிகழ்ச்சி எல்லோரையும் மிகவும் கவர்ந்தது.

இலக்கியக் கருத்தரங்கு லெ.முருகபூபதி தலமையிலும் கவியரங்கு பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா தலைமையிலும் நடந்தன. விழாவைமுன்னிட்டு “பூமராங்” என்;ற மலர் வெளியிடப்பட்டது. பூமராங் என்பது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதம். அதனை ஒருவர் ஏவினால் குறித்த இலக்கைச் சென்றடைந்து மீண்டும் ஏவியவரிடமே திரும்பிவந்து சேரக்கூடியது. ஜெர்மனியிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் ஓவியரும் ‘வெற்றிமணி’ இதழின் ஆசிரியருமான எம்..கே.எஸ்.சிவகுமாரனின் ஓவியங்கள் வித்தியாசமானமுறையில் ஒளிப்படக்காட்சியாக காண்பிக்கப்பட்டது.

குறும்படக்காட்சி

அபர்ணா சுதன் இயக்கிய ஒருநாள் ஒருவன், மற்றும் கந்தையா ஸ்ரீகந்தவேள் இயக்கிய பள்ளிக்கூடம் ஆகிய குறும்படங்கள் காண்பிக்கப்பட்டன. பொதுவாகக் குறும்படங்களின் நோக்கங்கள், அவை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் தாக்கங்கள், காண்பிக்கப்பட்ட குறும்படங்கள் குறித்து டொக்டர் நடேசன் கருத்துரை வழங்கினார்.

விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகளை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கே.எஸ்.சுதாகரன் அறிவித்தார்.இவ்விழாவின் நிகழ்ச்சிகளை நவரட்ணம் அல்லமதேவன் தொகுத்தளித்தார். சங்கத்தின் செயலாளர் சண்முகம் சந்திரன் நன்றி நவின்றார்.சர்வதேச சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுபெற்ற ரஞ்சகுமார்

ஈழத்து புனைகதை இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த கவனத்தைப்பெற்றுள்ள எஸ்.ரஞ்சகுமார் எழுதிய ‘நவகண்டம்’ சிறுகதை இந்த ஆண்டு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சர்வதேச தமிழ் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசைப்பெற்றுள்ளது. இந்தப்பணப்பரிசின் பெறுமதி 300 அவுஸ்திரேலியன் டொலர்களாகும். எதிர்பாராதவிதமாக அவுஸ்திரேலியா பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் கலந்துகொண்ட ரஞ்சகுமாருக்கு இப்பரிசு கிடைத்தமையும் எதிர்பாராத நிகழ்வே. அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு மறைந்த எழுத்தாளர் அமரர் தெ. நித்தியகீர்த்தி ஞாபகார்த்தமாக இப்பரிசினை திருமதி மாலதி நித்திய கீர்த்தி வழங்கினார்.

‘தமிழகத்தின் இன்றைய முக்கிய சிறுகதை எழுத்தாளர்களான கோணங்கி, பிரபஞ்சன், ஜெயமோகன் ஆகியோருடன் ஒப்பிடத்தக்க எழுத்தாளர்தான் ரஞ்சகுமார்’- என்று 1993 இல் பேராசிரியர் கா.சிவத்தம்பி விதந்து கூறியிருக்கும் கருத்து, ரஞ்சகுமாரின் சில தரமான சிறந்த சிறுகதைகளைக்கொண்ட ‘மோகவாசல்’ தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

No comments: