அகம் தீண்டும் அரும்பு
-கவிஞர் க. கணேசலிங்கம்
திறந்த வெளியினில் தென்றலில் நிலவினில்
தேன்மலர் அழகினில் தீந்தமிழில்
பிறந்த காலையின் மலர்ச்சியில் உளக்கடல்
பெருகிடும் கவிதைகள் அலைபுரளும்!
பறந்து திரிந்த பறவைகள் கூடியே
பசுமரக் கிளைகளில் ஒலியெழுப்பும்!
சிறந்த மாலையில் செவிகளில் பறவைகள்
சிந்தும் ஒலிகள்நல் விருந்தளிக்கும்!
முதிர்ந்த வயதினில் முன்னைய நினைவுகள்
முகிலென அசைந்தின்று மதிமயக்கும்!
உதிர்ந்த மலரென ஓடிய நாட்களில்
ஒன்றிய காட்சியில் உளம்நெகிழும்;!
மாந்தளிர் மேனி மலர்களின் மென்மை
மதிதரு தண்ணொளி சிறுகுறும்பு
பூந்தளிர் இதழ்களில் பூத்திடும் எழில்நகை
பொன்னொளிர் குழவியின் றுளந்தவழும்!
மாதுளம் பூவிதழ் சிந்திடு மதலையின்
மனந்தொடு குரலினில் உடலசைவில்
ஈதெழில் வாழ்வென எண்ணிடும் உளம்!புவி
ஏகிய நாட்களும் பொருள்நிறையும்!
No comments:
Post a Comment