UNSW பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் துறையின் முன்னாள் துணைவேந்தரும், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் பீடத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா,
2026-ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய தின கௌரவப் பட்டியலில் Officer of the Order of Australia (AO) என்னும் ஆஸ்திரேலியாவின் உயரிய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சாரப் பொறியியல், தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் இலங்கைச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Order of Australiaவின் நான்கு முக்கிய விருது பிரிவுகளில், Officer of the Order of Australia (AO) என்பது நாட்டின் மிக உயரிய
கௌரவமாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர்,
UNSW பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்த முதல் இலங்கையை சேர்ந்த முதல் கல்வியலாளர் ஆவார். அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய வாழ்நாள் பணிக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது, அவரது அர்ப்பணிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூகத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணமாகும்.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தைப் பெற்ற இவர், இலங்கையில் CISIR நிறுவனத்தில் அறிவியல் ஆராய்ச்சியாளராக தனது பணியைத் தொடங்கினார். நெதர்லாந்தில் மதிப்புமிக்க புலமைப்பரிசிலை (Philips Research Scholarship) வென்ற முதல் இலங்கையர் இவராவார். அங்கு இவரின் ஆராய்ச்சிகள் கார் வானொலிகளில் நவீன தானியங்கி ட்யூனிங் (Automatic Radio Tuning) கண்டுபிடிப்பிற்கு பங்களித்தது. ஐக்கிய இராச்சியத்தின் கீல் (Keele) பல்கலைக்கழகத்தில் Signal Processing துறையில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். பின்னர் அயர்லாந்தின் அத்லோன் தொழில்நுட்பக் கல்லூரியில் (Athlone Institute of Technology) விரிவுரையாளராகச் சேர்ந்து, துறைத் தலைவர் மற்றும் பொறியியல் பீடாதிபதி என மிக விரைவாக உயர்ந்தார். அயர்லாந்தில் பேராசிரியர் அம்பிகைராஜா தான் முதல் முறையாக வெளிநாட்டு கல்வியாளராகவும், தலைமைப் பொறுப்பில் பீடாதிபதியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இவ்வளவு வெற்றியை அவர் அடைந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டபோது, யாழ் இந்துக் கல்லூரியில் பெற்ற கணித அறிவும், மொரட்டுவாவில் பெற்ற எஞ்சினியரிங் அடித்தளமும் முக்கிய காரணங்களாக இருந்ததாக அவர் கூறினார். அடிப்படைகளை நன்கு கற்பிப்பதில் இலங்கை ஆசிரியர்களை யாராலும் வெல்ல முடியாது என்பதே அவரது அனுபவமாகும்”
1999-இல் சிட்னி
UNSW பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர், மின்சாரப் பொறியியல் மற்றும் தொலைத்தொடர்புப் பீடத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இலங்கையர் ஆனார். இவரது தலைமையின் கீழ், அந்தப் பீடம் ஆஸ்திரேலியாவில் முதலிடத்தையும், உலகளவில் மிக உயர்ந்த தரவரிசையையும் எட்டியது. பின்னர்,
UNSW-வின் முதல் இலங்கை பதில்துணைவேந்தராகப் பணியாற்றி, பல்கலைக்கழகத்தை ஒரு தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இவரின் சாதனைகளுக்கும், சேவைகளுக்கும் பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவற்றில்
2004 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போர்டுகளையும் கலப்பு கற்றல் முறைகளையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியதற்காக UNSW துணைவேந்தர் விருது,
2014 இல் தலைமைத்துவ யுக்திகளுக்காகவும், சிறந்த வழிகாட்டியாக இருந்ததற்காகவும் பலரின் பாராட்டுகளையும் பெற்று சிரேஷ்ட தலைமைத்துவத்திற்கான UNSW விருது, 2019 இல் அதிகபட்ச வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட UNSW
தலைவரின் 'மக்கள் தெரிவு' (People’s Choice) விருது மற்றும்
2025 இல் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் (IESL NSW கிளை) Engineering
Excellence விருது என்பவை குறிப்பிடத்தக்கவை.
பேராசிரியர்
அம்பிகைராஜா அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு புதிய
திறமையாளர்களைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக,
இலங்கையைச் சேர்ந்த பத்து பொறியியல்
பட்டதாரிகளை ஆஸ்திரேலியாவில் முனைவர் (PhD) பட்டப்படிப்பை மேற்கொள்ள
அவர் ஊக்கப்படுத்தினார். அவர்கள்
அனைவரும் தற்போது மிகவும் திறமைவாய்ந்த
பொறியியலாளர்களாக ஆஸ்திரேலியாவின் உழைக்கும் சக்தியில் (Workforce) பெரும்
பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
பேராசிரியர்
அம்பிகைராஜா அவர்கள், தற்போது ஆஸ்திரேலியாவில்
வாழும் இலங்கைச் சமூகத்திற்குத்
தொடர்ச்சியாகப் பங்களிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த
பொறியியல் துறையின் வளர்ச்சிக்கும் தனது
நேரத்தைப் பெருமளவில் அர்ப்பணிக்கும் ஒரு
சிறந்த வழிகாட்டியாக (Mentor) விளங்குகின்றார்.
அத்துடன், தான் பிறந்த
தாய்நாட்டிற்குச் செய்யும் கைம்மாறாக, இலங்கையிலுள்ள
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக
மாணவர்கள் மற்றும் ஊழியர்களது கல்வி
மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு
அவர் தொடர்ச்சியான ஆதரவையும்
வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார்.
மேலும் தனது சொந்தபணத்தில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை
ஊக்குவிப்பதற்காக பல புலமைப்பரிசில்களையும்
வழங்கி வருகிறார். இத்தகைய
சமூகப் பொறுப்புணர்வு மிக்க
வழிகாட்டிகள் இன்றைய காலத்தில்
மிகவும் அரிதானவர்கள். இவ்வாறு
சமூக முன்னேற்றத்திற்காக பல
செயற்திட்டங்களை முன்னெடுத்து அதனை திறம்பட
செயற்படுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜாவிற்கு
இந்த Officer of the Order of Australia (AO) விருது ஒரு மாபெரும்
அங்கீகாரமாகும்
கடந்த வருடம் யாழ் இந்து கல்லூரிக்கு பிரதம விருந்தினராகச் சென்றபோது, 40 முன்னிலை
மாணவர்களுக்கும் மாணவர் தலைவர்களுக்கும் (prefects) தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கினார்.
அவர்கள் எப்படி தலைவர்களாக உருவாக வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைக்
தனது அனுபவத்தின் அடிப்படையில் பகிர்ந்தார். மாணவர்களிடம் அவர் கூறியது: ‘எனக்கு தலைமைத்துவம்
என்பது பிறரை முன்னேற்றுவது, அவர்களுக்கு அதிகாரமும் வாய்ப்புகளும் வழங்குவது, அடுத்த
தலைமுறைக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதிலேயே இருக்கிறது.
பேராசிரியர் அம்பிகைராஜா, மறைந்த திரு. முருகேசு இளையதம்பி அவர்களின் புதல்வர் ஆவார். ஆசிரியராகவும், தத்துவஞானியாகவும், எழுத்தாளராகவும் விளங்கிய இவரது தந்தையின் நற்பண்புளும், வழிகாட்டல்களுமே இவரை கல்வி மற்றும் தலைமைத்துவப் பாதையில் வழிநடத்தியுள்ளன.
கடந்த
இருபத்தைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள்
மற்றும் சமூகங்களுக்குச் சேவை செய்தது தமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியங்களில்
ஒன்றாக இருந்ததாக அவர் தெரிவித்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த ஆதரவு
அமைப்பு இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிள்ளைகளை
வளர்ப்பதிலும், குடும்பத்தை நிர்வகிப்பதிலும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தனது
மனைவி சத்தியரஞ்சினிக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவருடைய
ஆதரவில்லாமல் தாம் இவ்வளவு உயர்வை அடைவது மிக கடினம் என அவர் கூறினார். மேலும்,
தனது நான்கு பிள்ளைகளின் தொடர்ச்சியான ஆதரவே தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட
வாழ்விலும் அவர் கற்பனை செய்ததை விட மேலான உயரங்களை எட்ட உதவியது எனவும் அவர்
குறிப்பிட்டார்.
பேராசிரியர்
அம்பிகைராஜா சிட்னியில் உள்ள ஹோம்புஷ் தமிழ் கல்வி மையத்தின் ஓய்வுபெற்ற
முதல்வரும், யாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கனகாம்பிகை
ஜெயகாந்தனின் சகோதரருமான அவர், தனது சகோதரியின் தொடர்ந்த ஊக்கம் எப்போதும்
தன்னுடன் இருந்ததாக அவர் கூறினார்.

No comments:
Post a Comment