அத்துவித நிலைதன்னை ஆனைமுகா தந்தருளாய்!

 













சிவனவன் திருநிறை சீர்உருக் கொண்டவா!

திருவடி தொழுதிடச் சிறியனேன் சிந்தையில்

குவலயங் காப்பவா! குஞ்சர முகத்தவா!

குருபரா நல்லதோர் மனநிலை தந்திடாய்!

 

வேழ முகத்தவா!தாள்தொழு தரற்றிடும்

ஏழையின் ஓலமுன் செவிகளில் ஒலிக்குமா?

வாழ்வதா சாவதா வஞ்சனை யுலகினில்

வல்வினை கழைவையோ? மலரடி சேர்ப்பையோ?

 

கந்தவேள் அழைத்ததும் கடிதினற் சென்றுநீ

காதலுக்(கு) அருளினை! கருணையால் அவ்வையின்

செந்தமிழ்த் தேறலை மாந்தி மகிழ்ந்தனை!

சிறியனேன் புலம்பலுன் செவியிடஞ் சேருமோ?

 

அனைத்திலும் உள்ளவா! அணைக்குமோ உனதுகை?

அலைத்திடும் வினைகளை அழித்தே அருள்வையோ?

உனைத்தினம் தூயநல் உளத்தொடு துதிப்பனே!

ஓடிவந் தருளிடாய்! ஐங்கர ரூபனே!

 

தவஞ்செயச் சடாமுடி வளர்த்திட மாட்டேன்!

தனிமையிற் பசியொடு தவித்திட மாட்டேன்!

உவந்துவந் தெனது உளந்தருந் தமிழை

ஊட்டிட உண்ணவா! உமையவள் விநாயகா!

 

ஓங்காரப் பொருளென ஒளிர்ந்திடும் நாதனே!

ஒருபொருள் வேண்டேன் உன்விரை மலர்த்தாள்

பாங்குடன் காலுமுன் சோதியில் என்தனின்;

பாழ்வினை கரைத்துநற் பதந்தரு வாயோ?


(வேறு)

கந்தனுக்கு மூத்தோனே! காரானை முகத்தோனே!

விந்தைகளைச் செய்துதினம் வினையகற்றும் ஐங்கரனே!

எந்தையே! ஏரம்பா இடர்களைந்தே ஆட்கொளவா!

பந்தம்அறுத் தேயுன்றன் பாதமலர் சேர்ப்பாயோ?

 

விரிசடையில் மதிசூடி பரிபூரண தேவனான

கரிமுகவா கருதடியர் கண்பனித்து அருள்வேண்டப்

புரியாத சிவஞானம் போதித்தே அறிவூட்டி

அரிதான பதமுத்தி ஈய்வதெந்த நாளெதுவோ?

 

பிறந்துவிட்ட நாள்முதலாயப்; பேதைநானும் வாழ்நாளில்

அறந்தன்னை மறந்திட்டு ஆற்றிவந்த பாவமெலாம்

புறந்தள்ளி மன்னித்துப் போக்கிடாயோ புங்கவனே!

மறந்துமினி யுனைமறவேன் மதகரியே துதிக்கின்றேன்!

 

நிலையில்லா இவ்வுலகில் நிறைவாகத் துயர்கண்டேன்!  

மலைபோலக் குவிந்துவரும் மூவினைக்கும் ஆளானேன்!

அலைகடலில் துரும்பெனவே அல்லலுற்றே உழல்கின்றேன்

தலையாய நிலைகாண வழிகாட்டி அருள்வாயே!

 

சிந்தைநிறை தந்தையானாய்! சீர்மைமிகு  தாயுமானாய்!

சந்ததமும் உன்னரிய செங்கமலம்; தொழுமெனது

முந்தைவினை ஒழித்துமாயப் பற்றெதுவும் பற்றாத

அந்தத்துவித  நிலைதன்னை ஆனைமுகா தந்தருளாய்!




இயற்றியவர்:  சிவஞானச் சுடர்’ பல்மருத்துவ கலாநிதி  பாரதி இளமுருகனார்

(பிளெமிங்ரன் கற்பக விநாயகர் கோயில் திருவிழா ஆரம்பமாகியதை ஒட்டி இக்கவிதை பிரசுரமாகிறது)


No comments: