மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்…. அவுஸ்திரேலியா
சேக்கிழார் பெருமான் செப்பிய கதையில்
மாக்கதை யாக மனமதில் பதிவது
கண்ணினை அப்பிய கண்ணப்பன் கதையே
எண்ணிட எண்ணிட வியப்பாய் விரியுது
நடக்குமா என்று கேட்டிட வைக்கும்
நம்பவே இயலா கண்ணப்பன் கதையே
படித்திடும் தோறும் பதறுதே நெஞ்சம்
கண்ணைப் பிடுங்கிட எண்ணிய காரியம்
வெட்டுக் குத்து ரத்தம் இறைச்சி
பார்த்துப் பழகிய வேடுவர் வாழ்க்கை
அந்த வாழ்க்கையை பற்றியே வாழ்ந்தவன்
பக்தி வலைக்குள் புகுந்தது வியப்பே
கொல்வதும் தின்பதும் கொண்டாடிக் களிப்பதும்
நல்லது என்றுமே நாளுமே வாழ்ந்தவர்
வாழ்ந்தவர் மரபில் வந்தவன் கண்ணப்பன்
கற்றவன் அல்ல தேர்ந்தவன் அல்லன்
அறமும் அறியான் அஹிம்சையும் அறியான்
ஆனால் அவனுள் ஏதோ இருந்தது
அதுவே அவனின் அன்பாய் மலர்ந்தது
கோவிலும் தெரியான் சாமியின் தெரியான்
சடங்கு மறியான் சாத்திர மறியான்
பக்தி ஊற்று பீறிட்டு எழுந்தது
பரமனின் முன்னே தன்னையே மறந்தான்
சுவைத்துச் சுவைத்து இறைச்சியைப் படைத்தான்
வாயுடை நீரால் மஞ்சனம் செய்தான்
சூதும் அறியான் சூழ்ச்சியும் தெரியான்
தூய மனத்துடன் அனைத்துமே யாற்றினான்
கண்ணைப் பிடிங்கி அப்பினான் கண்ணப்பன்
எப்பிடிப் பிடிங்கினான் என்பதே கேள்வி
தன்னை மறந்து கண்ணப்பன் இருந்தான்
கண்ணைப் பிடிங்கினான் காணிக்கை ஆக்கினான்
இறைவனின் கண்களில் இரத்தங் கண்டான்
பதறித் துடித்தான் பரிகாரம் கண்டான்
கண்ணே மருந்து என்றே எண்ணினான்
எண்ணிய திண்ணன் பிடிங்கியே அப்பினான்
கண்ணப்பன் நிலையை கணக்கிடல் அரிது
அன்பின் வடிவமாய் ஆகினான் அவனும்
அன்பினில் அமிழ்ந்த கண்ணப்பன் செய்கை
ஆருமே நினைக்கா அரும்பெருஞ் செய்கை
அன்பின் முதிர்நிலை கண்ணப்பன் அடைந்தான்
அவனுக் கீடார் யாருமே இல்லை
அதனால் அவனை அணைத்தார் ஆண்டவன்
அன்பே சிவமாய் அமைந்ததன் விளைவே !
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment