நான்
நடந்து கொண்டிருந்த தெரு, நில
மட்டத்திலிருந்து
ஒரு நாலைந்து மீற்றர் உயரத்திலிருந்தது. அங்குள்ள வீடுகளையும்,
கட்டடங்களையும் அவற்றின் கூரை
உச்சிகளையும் ஒரு பறவையைப் போல
என்னால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பழைய வீடுகள், அவற்றுள் சில பலகை வீடுகள். தெரு
மட்டத்திலிருந்து வீட்டு முற்றங்களுக்கு இறங்க செங்குத்தான படிகள் இருந்தன.
காலை
ஏழு மணி. வெயில் ஆறுமணிக்கே
விழத் தொடங்கியிருந்த கோடை
காலக் காற்றிலும் குளிர்
இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன் மரக் கூம்புகள் கொண்ட
மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே
தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத்
தெரியும் வரை இந்தப் புகார்
இருக்கும்.
ஏழு
மணிக்கே சூப்பர் மார்க்கட் கடைத் தொகுதியின் நுழைவாயில் தானியங்கிக் கதவு திறந்திருந்தாலும் உள்ளே இன்னும்
பல கடைகள் பூட்டிக் கிடந்தன. ஒரேயொரு சுவர்களில்லாத திறந்த காலையுணவுக்கடையில் இரு சீனச் சிறுமிகள்
பிசியாக நின்றனர். அவர்களிடம் கேட்டபோது கோப்பி, தேநீர் விற்பதில்லையென்றனர். வெளியே ஒரு கடை உண்டு
என்றாள் அவர்களில் ஒருத்தி.
வெளிச்செல்லும்
தானியங்கிக் கதவினூடு
வர இடப்புறத்தில் நான் தேடி வந்த
GPS காட்டிய கடை இருந்தது
கடையுள்ளே
ஐந்தாறு வட்ட மேசைகளும்
சுற்றிவர அலுமீனியக் கதிரைகளும் இருந்தன.
வெயில் உள்ளேயும் வந்திருந்தது . நின்றபடி ஒருத்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். கவுண்டரில் நீல ஜம்பர் அணிந்த
ஐம்பது வயது மதிக்கத் தக்க
ஒருவனும் உள்ளே கோப்பி மெஷினில் கருப்பு உடையும் ஏப்ரனும் அணிந்த நாற்பது மதிக்கத்தக்க பெண்ணும் நின்றனர்.
எனது
வழக்கமான கப்பசீனாவும் இரண்டு சுகரும் என்று சொன்னேன். அடுக்கப்பட்டிருந்த மூன்று ஸைஸ் பிளாஸ்டிக்
கப்புகளில் நடுத்தரமான ஒன்றைக் காட்டினேன். உள்ளிருந்த
பெண் எடுத்துச் செல்லவா இல்லையா என்று கேட்டாள். மூடியில்
துளை வைத்த டேக் எவே கப்பில் அருந்துவது என் வழக்கம். அப்படியே
எடுத்துச் செல்லவும் வசதி. ‘டேக் எவே’ என்றேன்.
இதே நேரம் தானியங்கிக் கதவு திறக்க ஒரு மின்சார மூன்று சில்லு ஸ்கூட்டரில் கட்டைக் காற்சட்டை அணிந்த ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனுக்கு இடது கால் இல்லை. ஸ்கூட்டரில் அவனது வலது காலுக்கு அருகில் படுத்திருந்த படி வந்த கருப்பு நிற நாயொன்று ஸ்கூட்டர் நின்றதும் குதித்துக் கீழே இறங்கியது.
நல்ல பருமனான அந்த
நாய் நடக்கும் போது அதன் வயிறு இடமும், வலமும்
மெதுவாக அசைந்தன.
கடைக்காரனைப்
பார்த்து வாலாட்டி முகத்தில் குதூகலத்தைக் காட்டியது. பிறகு உள்ளே கிச்சினைப் பார்த்து ‘வௌ’
என்றது.
காலில்லாதவன்
அதை அதட்டி “கைலி ஸ்டாப்” என்றான். அது
வாலைத் தழைய விட்டபடி
தலையைக் குனிந்தது.
காலில்லாதவன்
எதையும் ஓடர் பண்ணவில்லை.
அவனது வலது
கணுக்காலுக்கு மேல் ஒரு சாண் வரை உயர்ந்த தோற் சப்பாத்து அணிந்திருந்தான். அது வழமையாக
இராணுவ வீரர்கள் அணிவது. ஒரு வேளை தாக்குதல்
ஒன்றில் காலை இழந்த ஒய்வு பெற்ற வீரனாக இருக்கலாம்.
இப்போது
மீண்டும் கைலி உள்ளே எட்டி
பார்த்து ‘வௌ’
என்றது.
கடைக்காரன்
குனிந்து "டோன்ட்" என்றான். பிறகு
தலையைத் தடவிக் கொடுத்தான். கைலி வாலை ஆட்டியது.
உள்ளே
அந்தப்பெண் கோப்பி மெஷினை ஓட விட்டுக் கொண்டிருந்தது கேட்டது. 'கிர்ர்ர்ர்'
என்று வடிகட்டிய கோப்பி வெளிவரும் பழக்கமான சத்தம். பிறகு சீனியைப் போட்டுக் கலக்கிக் கொண்டு வருவாள். ஒவ்வொரு
கடைக்கு கடை கோப்பியின் செறிவு, அதன்
சூடு, சுவை என்பன மாறிக்கொண்டேயிருக்கும்.
இது எப்படியென்று இன்னும்
சில வினாடிகளில் தெரிந்துவிடும்.
பிறகு எனது
கப்பசீனோவை என் மேசைக்கு கொண்டு
வந்தாள். காலில்லாதவனுக்கும் ஸ்கூட்டரில்
வைத்தே ஒரு கப் கொடுக்கப்பட்டது.
இதே நேரம் பேப்பர்
படித்துக் கொண்டிருந்த பெண் தனது கோப்பியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
இப்போது மூன்றாவது
தரம் கைலி உள்ளே பார்த்து
‘வௌ’ என்றது.
கடைக்காரன்
குனிந்து “ஸ்டாப்
கைலி” என்றான் உரத்து.
அதை
புரிந்து கொண்டு கைலி ஸ்கூட்டரில்
ஏறிக் கொண்டது.
கடைக்காரன்
உள்ளே போய் எதையோ கையில்
கொண்டு வந்தான். குனிந்து கீழே வைத்தான். அந்தச்
சிறிய தட்டில் கொஞ்ச வெண்நிற ஐஸ்கிரீம்
இருந்தது.
இதைக்
கண்டதும் ஸ்கூட்டரிலிருந்து குதித்து ஓடிவந்து அதை வளக் வளக்
என்று நக்கிச் சாப்பிட்டது கைலி.
கைலிக்கு இது
பெரும் விருப்பம் என்றான் கடைக்காரன்.
சாப்பிட்ட தட்டிலிருந்து
சிறு பகுதி நிலத்தில் வழுக்கி விழுந்தது.
கீழே
விழுந்ததைக் காட்டி 'கைலி சாப்பிடு' என்றான்
கடைக்காரன். அது
சாப்பிடவில்லை எங்கோ பார்த்தபடி நின்றது.
மீண்டும்
'கைலி சாப்பிடு'
அது
கீழே பார்த்து விட்டு மீண்டும் தலையை உயர்த்தியது.
கடைக்காரன்
உள்ளே போய் ஒரு துணியை
எடுத்துக் கொண்டு வந்தான்.
குனிந்து ஒரு
கையால் தட்டை எடுத்துக் கொண்டு மறு
கையால் விழுந்ததை துணியால் வழித்து எடுத்தான்.
இதை
எதிர் பார்த்திருந்த கைலி அவன் முகத்தை
நக்கியது. அவன் சங்கோஜப்பட்டு
‘ஸ்டாப்’ என்றபடி முகத்தைத்
திருப்பினான். அது அவன் தலையை நக்கியது.
பிறகு
ஸ்கூட்டரில் எறிக் கொண்டது. காலில்லாதவன் கடைக்காரனுக்கு நன்றி சொல்லி விட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு
வெளியேறினான்.
நான்
கோப்பியை அருந்திக் கொண்டே இப்போது நிகழ்ந்ததை எண்ணிப் பார்த்தேன்.
ஒருவேளை இது
அன்றாடம் நிகழ்வதாகவிருக்கலாம்.
பீகாவிலிருந்து
நான் இன்று மாலையே கிளம்பி விடுவேன். இந்தப் பக்கம் இனி இன்னொரு முறை வருவேனா தெரியாது.
வந்தாலும் இந்தக் கடைக்கு வருவதென்பதும் சாத்தியமில்லை.
எனது
வாழ்வில் இந்த
நிகழ்வு இனி திரும்பி வராது.
மனதில்
எதோ உறுத்த நான் கடைக்காரனைப் பார்த்து
‘ இவர்கள் அடிக்கடி வருவார்களா?’ என்றேன்.
‘ஒவ்வொரு
நாளும் வருவார்கள். ஆனால் கைலி இனி வராது.
ஒருவேளை ரோபர்ட் மட்டுமே வரக்கூடும்.’
‘கைலிக்கு
வயதாகி அதன் சிறுநீராகம் பழுதடைந்து
விட்டது. அந்தக் குழாயில் கான்சர் கட்டி இருக்கிறது அதுக்கு
பதினாலு வயது, ஆனால் பார்த்தால் தெரியாது.’
‘ ரொபேர்ட்
அவனது மகள் இருக்கும்
தாத்ரா நகரிலுள்ள வீட்டுக்கு நாளை போகிறான். மகளின்
பிறந்த நாள் பரிசாகத்தான் கைலியை
ரொபேர்ட் வாங்கிக் கொடுத்திருந்தான் அவள் வீட்டில் வைத்துத்தான்
ஊசி மூலம் கைலியை நித்திரையாக்கப் போகிறார்கள்.
‘
‘அதுதான்
இப்போது சில நாட்களாக கைலிக்கு
விருப்பமான ஐஸ்கிரீமை கொடுத்து வந்தேன்’
அப்போதுதான் தெரிந்தது இது கடைக்காரனுக்கும் வாழ்வில் திரும்பி வராத நிகழ்வு என்று.
No comments:
Post a Comment