தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 12…..சங்கர சுப்பிரமணியன்.

இதில் கொடுமை என்னவென்றால் தமிழை வைத்துப் பிழைப்பவர்களும் தமிழால் பெயரும் புகழும் அடைபவர்களும்கூட தமிழ்பற்றி மூச்சுவிடாது மௌனம் சாதிப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது சங்கப்பலகையின் சூட்சுமத்தை சொல்கிறேன். தமிழரின் அறிவியல் திறன் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அநுமானத்தில் சொல்கிறேன்.


சங்கப்பலகையின் அடியில் பலகையை நீருக்குள் மூழ்கச் செய்யவும் திரும்பவும் மேலெழச் செய்யவும் விசையொன்று கண்ணுக்கு தெரியாதபடி இணைக்கப் பட்டிருந்திருக்கும். இந்த விசையா ஒரு நூலின் தகுதியை தீர்மானிக்கிறது? அது எப்படி விசை தகுதியைத் தீர்மானிக்கும்? விசை தீர் மானிக்காது விசையை
இயக்குபவர்தான் தீர்மானிப்பார்.

எங்கோ இருந்து கொண்டு ரிமோட் மூலம் திறப்புவிழா

நடத்துவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். அது சரிவருமா? அவர் நேர்மையுடையவராக இருக்க வேண்டுமே. அவர் என்றால் அவர் மட்டுமே அல்ல. ஒரு புலவர்கள் குழாம் இருக்கும். அவர்களில் தலைமைப் புலவரிடம் விசை இருக்கும். இந்த புலவர்களின் குழாமிடம் முன்னதாகவே சங்கப்பலகையில் வைக்கப்படும் நூல்கள் கொடுக்கப் பட்டுருக்கும்.

அந்த நூலைப்படித்த புலவர்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள். அந்த கருத்துக்களின் பெரும்பான்மையை வைத்து தகுதி நிர்ணயிக்கப்படும். இந்த முடிவை வெளியிடமாட்டார்கள். சங்கப்பலகையின் மூலம் அன்றுதான் முடிவு வெளிவரும். சங்கப்பலகையை இயக்கும் விசையை எங்கோ இருந்து கொண்டு தலைமைப் புலவர் இயக்குவார். இது வெறும் கற்பனை என்றாலும் ஏற்கும்படி உள்ளதா?

இல்லாவிடில் சங்கப்பலகை எப்படி தானாகவே முடிவெடுக்கும்? இதைத்தான் இறையனார் குறளில் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்று இயம்பியிருக்கிறார். அறிவை எந்த தளத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். தளத்தில் வேறுபாடு கண்டால் அது அறிவல்ல.
வள்ளுவர் கூற்றுப்படி நுண்பொருள் அறிவதன்றோ அறிவு.

ஹுட்டாங்கை கடந்து வந்தோம். மழை பெய்வதும் விடுவதுமாக இருந்தது. நாங்களும் குடையை திறந்து மூடியபடியே இருந்தோம். நீண்ட வரிசை இருந்தது. ஒருவழியாக சோதனையிடும் இடத்துக்கு வந்தோம். சோதனை செய்யும் இடத்தில் பாஸ்போர்ட் மட்டுமின்றி ஆட்களையும் சோதனைக்கு உள்ளாக்கினார்கள். ஒரு இடத்தில் எனக்கு நடந்த சோதனை விசித்திரமாக இருந்தது.

சோதனை செய்பவர் என்னிடம் பதிவு செய்ததற்குண்டான சான்றைக் கேட்டார். டியானன்மன் ஸ்கொயருக்கும் ஃபோர்பிடன் சிட்டிக்கும் அனுமதி என்னவோ இலவசம் ஆனால் முன்பதிவின்றி வந்தால் உள்ளே செல்லமுடியாது. அடுத்ததாக அவர் என்னைக் கேட்டதுதான் தூக்கிவாரிப் போட்டது. வீசா வீசா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்பவும் சோதனையை கடுமையாக செய்கிறார்களாம்.


கடுமையாகவே செய்யட்டும் ஆனால் வீசா இல்லாமல் எப்படி நுழைந்திருக்க முடியம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனதுதான் ஆச்சர்யமாக இருந்தது? வீசா இல்லாமல் எப்படி உங்கள் நாட்டுக்குள் விட்டிருப்பார்கள் என்று அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டேன். அவன் கண்டு கொள்ளவேயில்லை. கிளிப்பிள்ளைபோல் வீசா வீசா என்றான்.

பாஸ்போர்ட்ட திறந்து பாருய்யா என்று தமிழில் சொல்லியபடியே அவனிடமிருந்து( ஆங்கிலம் கொஞ்சம்கூட தெரியாததாலும் வீசா கேட்டு பொறுமையை சோதித்துதால் கடுப்பாகி மரியாதை குறைந்தது) பாஸ்போர்ட்டை வாங்கி பக்கங்களை விரித்து காண்பித்ததும் ஏதோ பிழைத்துப்போ என்று சொல்வதுபோல் ஹாவ்தே என்றான். நானும் ஹாவ்தே, ஷீஷீ என்றேன். சரி என்று சொன்னவனிடம் சரி, நன்றி என்பதே நான்

சொன்னதன் பொருள்.

இப்போது மூச்சுவிட முடிந்தது. வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஆனால் வரிசையற்ற திருவிழா கூட்டம். கூட்டத்தில் தொன்னூறு சதம் சீனர்களே இருந்தனர். உள்நாட்டு மக்களே சுற்றுலாவுல் அதிகமாக இருப்பதால் வெளியிலிருதந்து வரும் மக்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை என்று நினைக்கிறேன். அதனால்தான் ஒருவேளை ஆங்கிலத்தை புறக்கணிக்கிறார்களோ என்று எண்ணினேன்.

எப்படியோ நுழையுமிடத்தை அடைந்தோம். முதலில் ஃபோர்பிட்டன் சிட்டிக்குள் நுழைந்தோம். முதலில் ஃபோர்பிடன் சிட்டி என்றால் என்ன என்பதை சொல்லிவிடுகிறேன்.
இது பதினான்காம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த மிங்க் மற்றும் க்யிங்க் பேரரசைச் சேர்ந்த இருபத்தி நான்கு பேரரசர்களின் அரண்மனைகளாகும்.

1925ல் இருந்து  இந்த அரண்மனைகளை பேலஸ் மியூசியம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் 1987 முதல் உலகத்தின் பாரம்பரிய இடமாகவும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த அரண்மனைகள் கிட்டத்தட்ட 178 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 8886 அறைகளைக் கொண்டவை. உலகில் மிகவும் பழமை வாய்ந்த கலைநுட்பத்துடனும் முழுவதும் மரத்தினாலும் கட்டப்பட்டு பாதுகாக்கப்படும் அரண்மனைகள்தான் இவை.


அதன் நிலப் பரப்பை வைத்தே அதன் பிரம்மாண்டம் தெரிகிறதல்லவா? இந்த அரண்மனைக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் பிரம்மாண்டம் மற்றும் முழுக்க முழுக்க இதனுள் நுழைய குறிப்பிட்ட சிலரைத்தவிர மற்றவர்களுக்கு அக்காலத்தில் அனிமதியின்மையுமே ஆகும். பேரரசர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் அரசகுலப் பெண்களுக்கு பாதுகாவலுக்கு அமர்த்தப் பட்டவர்கள் மட்டுமே இந்த குறிப்பிட்டவர்களில் அடங்குவார்கள்.

அரசகுலப் பெண்களின் பாதுகாப்புக்கு அமர்த்தப்படும் ஆண்களின் ஆணுறுப்புகள் அகற்றப்பட்டு ஆண்மையற்றவர்களாக இருப்பார்கள். பழங்காலத்தில் அரசாட்சியின்போது ஆணுறுப்புகளை அகற்றும் தண்டனையும் பாலியல் குற்றம் புரிவோருக்கு தண்டனையாக வழங்கியுள்ளார்கள்.

இது தவிர இதுபோன்ற அரசவேலைகளில் சேரும்போது அரசின் செல்வாக்கு கிடைக்கும் என்பதால் விரும்பியே ஆணுறுப்புகளை அகற்றப் பட்டவர்களும் இருந்திருக்கிறார்கள். சுட்ட மண்ணால் செய்யப்பட்டு புதைக்கப் பட்டிருந்த உருவங்களை அகழ்ந்தெடுத்து சுற்றுலாத் தளங்களாக காட்சிப்படுத்தப் படுத்தியிருக்ஙிறார்கள். இத்தகைய சுட்டமண் உருவங்களை உற்பத்தி செய்யும் பணியிலும் இவர்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

 இந்த அரண்மனை உடபுறம் வடக்கு மற்றும் வெளிப்புறம் தெற்கு என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. நுழைவிடத்தில் இருந்து ஒன்றையடுத்து ஒன்றாக கட்டிடங்கள் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. கண்ணுக் கெட்டியதூரம் என்பதுபோல் வெகுதூரம் பலபகுதிகளாக பல காரணங்களுக்காக பல கட்டிடங்களைகட்டியிருக்கிறார்கள்.

இதில் மெரிடியன் கேட் (தெற்கு வாசல்) மிகவும் பிரம்மாண்டமான நுழைவு வாயிலாகும். இது ஐந்து அலங்கார வளவுகளைக் கொண்டதடன் அவ்வளவு எளிதில் அக்காலத்தில் எளிதில் நுழைய முடியாத ஒன்றாகவும் இருந்திருக்கிறது. இங்கு சடங்குகள் மற்றும் அரசாணைகளை நிறைவேற்றுமிடமாகவும் இருந்திருக்கிறத. இந்த அரண்மனை பேரரசர்களுக்கு அதிகார பூர்வமான வசிப்பிடமாகவும் குளிர்காலத்தில் தங்குமிடமாகவும் இருந்தது.


-சங்கர சுப்பிரமணியன்.

No comments: