உலகச் செய்திகள்

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி

ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப்

ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!  




அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை 

24 Jan, 2026 | 01:54 PM

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளின் காரணமாக வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இது ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படை படையணி (Armada) நகர்த்தப்பட்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ஈரான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும், அது எவ்வளவு வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம். அமெரிக்கா எங்களை தாக்கினால், அதற்குப் பதிலாக அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சி தனது வசம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் என்றும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மிகக் கடுமையான வழிகளில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்கானதல்ல என்று ஈரான் நம்புவதாகக் கூறிய அந்த அதிகாரி, இருப்பினும் மோசமான சூழ்நிலைக்கும் ஈரான் இராணுவம் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, ஈரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், “தாக்குதலுக்கான பொத்தானில் ஈரான் விரல் வைத்துள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் முழுமையான போராக மாறக்கூடும் என்ற அச்சத்தை உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது.    நன்றி வீரகேசரி 




காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி 

Published By: Digital Desk 3

22 Jan, 2026 | 12:42 PM


(இணையத்தள செய்திப் பிரிவு)

காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களில், மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று மாத கால போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் புதன்கிழமை இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய காசாவின் நெட்சரிம் (Netzarim) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாமை படம்பிடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலஸ்தீனிய ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்லப்பட்ட செய்தியாளர்கள் பொதுமக்களின் துயரங்களை ஆவணப்படுத்தும் மனிதாபிமான ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், இரண்டு 13 வயது சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு புரைஜ் (Bureij) அகதிகள் முகாமின் எல்லையில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுவன், அவனது தந்தை மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கிழக்கு நகரமான பானி சுஹைலா (Bani Suheila) பகுதியில்


சமையலுக்குத் தேவையான விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, 13 வயதான மொட்செம் அல்-ஷராபி என்ற சிறுவன் இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிறுவனின் உடலைப் பார்த்து அவனது தந்தை கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் முகமது சலா காஷ்டா, அப்துல் ரவூப் ஷாத் மற்றும் அனஸ் க்னீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அப்துல் ரவூப் ஷாத், ‘ஏஜென்ஸி பிரான்ஸ்-பிரஸ்’ (AFP) செய்தி நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், எரிக்கப்பட்ட வாகனத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்த காணொளிகள் இணையத்தில் பரவின. ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம் எகிப்திய நிவாரணக் குழுவினுடையது என்றும், அது குறித்த தகவல்கள் முன்னரே இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய ட்ரோன் ஒன்றை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டதன் பின்னரே துல்லியமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பின் தகவலின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை காசாவில் குறைந்தது 29 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2023 அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 220 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காசாவில் மட்டும் 466 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 






ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 

Published By: Digital Desk 3

22 Jan, 2026 | 12:50 PM

(இணையதள செய்திப்பிரிவு)

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் மிகச்சிறந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் தனது பணியிலிருந்து விலகியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ்  இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

சுனிதா வில்லியம்சின் தந்தை தீபக் பாண்ட்யா குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலா சன் பகுதியை சேர்ந்தவர். நரம்பியல் நிபுணரான அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த போனி என்பவரை மணந்தார்.

ஓகியோவின் யூக்ளிட் நகரில் பிறந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், மெல்போர்னில் உள்ள புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் மேலாண்மை யில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 

அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ் 1998-ம் ஆண்டு நாசாவில் பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ்,

என்னை அறிந்த அனைவருக்கும் விண்வெளிதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பது தெரியும். நாசாவில் பணியாற்றியதும், 3 முறை விண்வெளியில் பறக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு நம்பமுடியாத பெருமையாகும்.

நாசாவில் எனக்கு ஒரு அற்புதமான 27 ஆண்டு காலப் பணி வாழ்க்கை அமைந்தது.அதற்கு முக்கியக் காரணம் எனது சக ஊழியர்களிடமிருந்து நான் பெற்ற அற்புதமான அன்பும் ஆதரவும்தான். சர்வதேச விண்வெளி நிலையம், அங்குள்ள மக்கள், பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன. அவை நீலவு மற்றும் கிரகத்திற்கான அடுத்தகட்ட ஆய்வுகளை சாத்தியமாக்கி உள்ளன.

நாங்கள் அமைத்த அடித் தளம் இந்தத் துணிச்சலான நடவடிக்கைகளை இன்னும் சற்றே எளிதாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். நாசா-வரலாறு படைப்பதை ஆவலுடன் காணக் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப் 

Published By: Digital Desk 3

22 Jan, 2026 | 10:47 AM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கவிருந்த வரி அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றுள்ளார். 

டென்மார்க் நாட்டிடமிருந்து கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது, பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீத வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். தற்போது அந்த தீர்மானத்தை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரூட்டேவைச் சந்தித்த பின்னர், கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பிராந்தியம் தொடர்பாக ஒரு புதிய "ஒப்பந்தக் கட்டமைப்பு" உருவாக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாகக் கூறிய ட்ரம்ப், அதற்காகப் படைபலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என உறுதியளித்துள்ளார்.

"நான் நினைத்தால் யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு பலத்தைப் பயன்படுத்த முடியும், ஆனால் அதை நான் செய்யமாட்டேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும், அமெரிக்கா பொருளாதார ரீதியாக உயரும்போது மற்ற நாடுகளும் அதைப் பின்பற்றுவதாகவும் ட்ரம்ப் பெருமிதம் கொண்டார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் தமக்கு மிகச்சிறந்த உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஷி ஜின்பிங்கை "அதிசயமான மனிதர்" என அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.   நன்றி வீரகேசரி 






ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!  

20 Jan, 2026 | 12:31 PM

ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாகவும் இந்த வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது. 

கடந்த 2003இல் சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஈராக்கை நோக்கி அமெரிக்கா படையெடுத்தது. அப்போது அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தது அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்திலாகும். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படையினர் இருந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிகக படைகள் உபகரணங்களையும் ஈராக் படைத்தளத்திலிருந்து அகற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 








No comments: