இலங்கைச் செய்திகள்

 யாழில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய சமாதானப் பேரவை கலந்துரையாடல்

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்: பண்டத்தரிப்பு முகாமும் அகற்ற நடவடிக்கை!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறிதலுக்காக 12 கோல்போஸ்கோப் இயந்திரங்கள் 12 மாவட்டங்களுக்கு விநியோகம்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு



யாழில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய சமாதானப் பேரவை கலந்துரையாடல்

Published By: Vishnu

23 Jan, 2026 | 04:44 AM


தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் வியாழக்கிழமை (22)  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அதிபர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வு மதங்களுக்கு இடையிலான நல்லுறவை பேணுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதாகவும், மனிதனின் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் மதம் அடிப்படையாகவுள்ளது எனவும், பிறப்பிலிருந்து அம் மதத்தை கடைப்பிடித்து ஒழுகி வருவதாகவும், நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல மதம் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சமூகத்தை ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை மதங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், ஒரு பிள்ளையினுடைய சமூகமயமாக்கல் செயற்பாட்டில்

மதங்கள் பாரிய செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், ஒரு குழந்தை ஆரம்ப கல்வி, பாடசாலை கல்வி கற்பதன் ஊடாக மதம் சார்ந்ததாக மாற்றப்படுவதாகவும் மத நம்பிக்கை மற்றும் பின்பற்றப்படும் அனுட்டானங்கள், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் பழகுகின்ற போது பிள்ளை இயல்பாகவே மதங்களின் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் மதங்கள் இரண்டு விதமான விடயங்களை கூறுவதாகவும், ஒன்று மதங்கள் நல்லிணக்கத்தையும் நல்ல செயற்பாடுகளையும் சமூகத்துக்கு மேற்கொள்கின்றது எனவும், மற்றையது மதங்களுக்கு இடையே நல்லிணக்க செயற்பாட்டை வலுப்பெற செய்வதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 


மேலும், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை நல்லிணக்கச் செயற்பாடுகள் வலுப்பெற்று வருவதாகவும், முன்னைய காலத்தில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டதாகவும் அவை தற்போது மாறி வலுப்பெற்று வருவதாகவும் , முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்ப்பதற்கான இயலுமை மத தலைவர்களிடம் காணப்படுவதாகவும், பொது நிகழ்வுகளில் மதத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி வருவது சமூக நல்லிணக்கத்திற்கான தொடக்க செயற்பாடாகவும் தெரிவித்தார். 

மேலும், இறைவன் பொதுவான ஒருவராக காணப்பட்டாலும் அவரை

பல்வேறு மதங்களும் ஒவ்வொரு மத பிரமாணத்துடன் வழிபட்டு வருவதாகவும் , விழுமியங்கள் , பண்பாடுகள், கலாசாரங்கள் ஆகிய நெறிமுறைகளை சரியாக பேணுவோமேயனால் மத நல்லிணக்கம் பேசு பொருளாய் இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படாது எனவும், சமூகப் போக்கில் மத நிகழ்வுகளோடு மட்டும் நின்றுவிடாமல் சமூக நல்லிணக்கம், சமூக விழிப்புணர்வு சமூக செயற்பாடுகளில் உயர்ந்தளவு மத விழுமியங்கள் தேவைப்படுதாகவும், ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவதற்கு இம் மதங்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் மத நல்லிணக்க செயற்பாடுகள் நல்ல நிலையில் காணப்படுவதாகவும், அதனை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க அனைவரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறுகேட்டுக் கொண்டார். 


இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட சர்வமத தலைவர்கள் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர்   ச.செந்தூர்ராஜா, தேசிய சமாதானப் பேரவையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு உத்தியோகத்தர் த.நிலக்சி, PAIRS நிறுவன யாழ்ப்பாண,வவுனியா மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்ட செயலக துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.   



























































நன்றி வீரகேசரி 














யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்: பண்டத்தரிப்பு முகாமும் அகற்ற நடவடிக்கை!

Published By: Digital Desk 1

24 Jan, 2026 | 10:40 AM

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார்.

அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 








கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறிதலுக்காக 12 கோல்போஸ்கோப் இயந்திரங்கள் 12 மாவட்டங்களுக்கு விநியோகம்

23 Jan, 2026 | 02:21 PM

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மாதமாகும்.  கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 12 கோல்போஸ்கோப்புகள் (Colposcope), 12 மாவட்டங்களில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதன் மதிப்பு ரூ. 72 மில்லியனுக்கும் அதிகமாகும். 

நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் ஐந்தாவது பொதுவான


புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கப் பயன்படும் 12 கோல்போஸ்கோப் (Colposcope) இயந்திரங்கள் இந்த சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை மையங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் விநியோகிக்கப்பட்டன. 


இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றின் மதிப்பு ரூ. 6 மில்லியன் ஆகும். இந்த இயந்திரங்களுக்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் ரூ. 72 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது, இவை அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருணாகல், டி சொய்சா மகளிர் மருத்துவமனை, கண்டி, கம்பஹா, மாத்தறை, மொனராகலை, புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள சிகிச்சை மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.  

கோல்போஸ்கோபி என்பது கருப்பை வாய் மற்றும் யோனியில் ஏற்படும் அசாதாரணங்களை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். 

கோல்போஸ்கோப் எனப்படும் ஒரு சிறப்பு உருப்பெருக்கி கருவி


, கர்ப்பப்பை வாய் திசுக்களின் விரிவான பார்வையை வழங்குகிறது, இது மருத்துவர்கள் அசாதாரண செல்கள் அல்லது புண்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மகளிர் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் பெண்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட அசாதாரணங்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க இந்த சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர். 

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத் தரவுகளின்படி, ஒரு வருடத்தில் சராசரியாக 1200 நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள், மேலும் இந்தப் புற்றுநோய் தடுக்கக்கூடிய புற்றுநோய் என்றும், இது மனித பாப்பிலோமா வைரஸால் பரவும் நோய் என்றும் காட்டுகிறது. 


இந்த வைரஸுக்கு எதிராக வழங்கப்படும் HPV தடுப்பூசி மூலம் இதைத் தடுக்க முடியும், மேலும் இலங்கையில் பள்ளி நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், 10 வயது பூர்த்தியடைந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 6 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது, மேலும் எந்தவொரு மாணவரும் அதைத் தவறவிட்டால், அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து தடுப்பூசியைப் பெறுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இந்த திட்டம் சுட்டிக்காட்டுகிறது. 

இந்த புற்றுநோயை புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். இது புற்றுநோயாக மாறுவதைத் தடுக்கலாம் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் வலியுறுத்துகிறது. 

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம், சுவனாரி மருத்துவமனை மூலம் 35 மற்றும் 45 வயதுடைய பெண்களுக்கு இலவச PAP பரிசோதனைகள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டுகிறது. சம்பந்தப்பட்ட வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த மருத்துவமனைகளுக்கு வந்து இந்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம், ஆனால் தற்போது குறைந்த வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களிடையே வருகைகளின் வருகை குறைவாகவே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அசாதாரண யோனி இரத்தப்போக்கு நோயின் முதன்மை அறிகுறியாக இருக்கலாம் என்றும், ஆரம்ப கட்டத்தில் வந்து சிகிச்சை பெறுவதன் மூலம் அதை குணப்படுத்த முடியும் என்றும் இந்த திட்டம் சுட்டிக்காட்டுகிறது, ஆனால் நோயாளிகள் தாமதமாக வந்தால் நோயாளிகளை குணப்படுத்துவது கடினம் என்றும், முதல் அறிகுறிகளுடன் வருவது அவசியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத் தரவுகளின்படி, தற்போது, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 1200 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள், மேலும் ஆண்டுக்கு சுமார் 180 நோயாளிகள் இறக்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்காக, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் நாடு முழுவதும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, துணை இயக்குநர் (தொற்றுநோயற்ற நோய்கள்) மருத்துவ நிபுணர் சம்பிகா விக்ரமசிங்க, துணை இயக்குநர் (உயிர் மருத்துவ பொறியியல்) பிரசன்ன ஹேரத், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் டாக்டர் சேனக தலகல, சமூக விசேட மருத்துவர்களான ஹசரேலி பெர்னாண்டோ மற்றும் சூரஜ் பெரேரா, மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  நன்றி வீரகேசரி 






நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

23 Jan, 2026 | 12:08 PM

இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நீல்கல' (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

சுமார் 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக்கும் நடவடிக்கை, 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய வனப்பரிபாலன திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

இந்த பிரகடனத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றாடல் சீர்கேட்டைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமையும்.

இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றாடல் சமநிலைக்கு மாத்திரமன்றி, வனவிலங்குகளுக்கான நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் அவசியமானதாகும்.

மனிதர்களும் இயற்கையும் இணைந்து வாழக்கூடிய பசுமையான தேசத்தை நோக்கிய பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும், நிலையான உயிர்ச்சூழலை  கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த தீர்மானம் மீள உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் சுட்டிக்காட்டினார்.   நன்றி வீரகேசரி 








2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு

Published By: Vishnu

23 Jan, 2026 | 04:31 AM

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி கண்டதுடன், தொடர்ந்து இவ்வாண்டு மூன்றாவது முறையாக இச்சர்வதேச சட்ட மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில் இம்மூன்றாவது சர்வதேச சட்ட மாநாடானது  இரு தினங்களும் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலைவரை இடம்பெறவுள்ளது.

ஆய்வு, மறுவடிவமைப்பு. மீள்நிர்மாணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு மாநாட்டின் தொனிப்பொருள் சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புகள் தொடர்பில் உரையாடவுள்ளனர்.

மாநாட்டின் முதல் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரம்பிள்ளை துரைராஜாவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தலைவர் நீதிபதி ரோகத்த அபேசூரியவும் சிறப்பு விருந்தினராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் அன்றைய தினத்தின் பிரதம உரையாளர்களாக இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மரியோ கோமெஸிம், பாரிஸ்டர் ஸாரா மண்டிவல்லா அக்பரால்டும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதல்நாள் நிகழ்வின் மற்றுமொரு பிரதான அம்சமாக “சட்டத்தின் எதிர்காலம் ஆட்சி நிர்வாகம், தொழிநுட்பம், சமூகம் மற்றும் உலக பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழான குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலானது ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளதோடு குறித்த தலைப்புகள் தொடர்பில் முறையே சட்டத்தரணி லூவி கணேசநாசன், இலங்கை ஜிரிஎன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஜிரிஎன் குழுமத்தின் உலகளாவிய பகிரப்பட்ட சேவைகள் தலைவர் அர்ஜுன நாணயக்கார,கலாநிதி பகீரதி ரசனென், பேராசிரியர் அ.சர்வேஷ்வரன் மற்றும் ஷெலானி.சி.டயாஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

அதனை தொடர்ந்து யாழ் மண்ணின் பண்பாட்டுச்சுவடுகளை பிரதிபலிக்கும் பண்பாட்டு நிகழ்வொன்றும் அன்றைய நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது, அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் இரண்டாம் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி, பிராங்க் குணவர்தனவும், சிறப்பு விருந்தினராக அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர் ஹரிப்ரியா ஜயசுந்தரவும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் அன்றைய நாளின் சிறப்புரைகளை ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரனும் பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கமும் வழங்கவுள்ளனர்.

இரண்டாம் நாளின் மற்றொரு பிரதான நிகழ்வாக ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் ஆய்வாரள்கள். தங்களின் ஆய்வுக்கட்டுரை சுருக்கங்களை முன்வைக்கவுள்ளனர்.

மாநாட்டின் ஓரங்கமாக “செயற்றிட்டங்களிலிருந்து பங்காளித்துவத்திற்கு தூண்டுகோலாக மக்கள் பங்கேற்பு” எனும் தொனிப்பொருளின் கீழான மாநாட்டு முன் சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது தை மாதம் 23ம் திகதி பிற்பகல் 3மணி முதல் 6 மணி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், பொறியியலாளர் அ. ரொபர்ட் பீரிஸ்,யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் வைதேகி நரேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவினர் கோரியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 










No comments: