-சங்கர சுப்பிரமணியன்.
ஒரு சிறுகிராமத்தில் வளர்ந்த நான் விமானத்தை உள்ளங்கை அளவில் மட்டுமே வானில் பார்த்திருந்தேன். என்றாவது ஒருநாள் இதுபோன்ற விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உண்டு. ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் ஒருதடவையாவது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
மருத்துவமனை ஒன்றில் செவிலியாக பணிபுரிந்த மார்கரெட்டுக்கு விமானத்தில்
முன்பகுதியில் இருக்கும் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே போனது. இப்போது பணியிலிருந்து ஓய்வுபெற்று வயதும் என்பத்துமூன்று ஆகிவிட்டது.
கால் முட்டில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்ததால் நெடுநாட்களாக நியூயார்க்கிலுள்ள மகளைபார்க்க முடியாமல் இருந்தாள். ஒருநாள் மகளைப் பார்க்க விமானத்தில் சென்று கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பார்க்க முடியாத அதிசயம் நடந்தது.
அந்த அதிசயம், அவள் பயணித்த அதே விமானத்தில் பயணித்த ஜோசப் என்ற இளைஞன் செய்த செயல்தான். அந்த செயல் விமானத்தில் பயணித்தவர்களை மட்டுமின்றி உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது.
அந்த விமானத்தின் பணிப்பெண்ணான ஏஞ்சலா, “நான் பணிபுரிந்த நூற்றுக் கணக்கான விமானங்களில் பணிப்பெண்ணாக எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள், விளம்பர அழகிகள், ஹாலிவுட் நடிகர்கள் போன்ற எத்தனையோ பேரை கவனித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. ஆனால் இந்த விமானத்தில் நான் பெற்ற அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். அதற்கு காரணம் ஜோசப்பின் செயல்தான்.” என்று வியப்போடு கூறினாள்.
மேலும் கழிவறைக்குப் பின்னால் வரிசையாக இருந்த இருக்கைகளில் ஒன்றில் ஜோசப்
மார்கரட் தற்செயலாகத்தான் ஜோசப்பை விமானத்துக்குள் செல்லுமுன் சந்தித்தாள். இருவரும் விமானத்துக்குள் ஏறுமுன் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படி பேசிக்
கொண்டிருந்த போது மார்கரட் தன்னைப் பற்றிய விபரங்கள் தனது ஆசை மற்றும்
நெடுநாட்களுக்குப் பிறகு மகளைப் பார்க்கப் போவது போன்றவற்றை சொன்னாள்.
மார்கரட் கூறியவை அனைத்தையும் கேட்ட ஜோசப், “அப்படியா?” என்ற ஒற்றைச் சொல்லில் பதிலளித்துக் கொண்டிருக்கையில் விமானத்தின் பின் வரிசை இருக்கைகளில் அமரும் பயணிகளை அழைத்த அழைப்பைத் தொடர்ந்து மார்கரட் ஜோசப்பிடம் சந்திப்போம் என்று சொன்னபடி விடைபெற்றாள்.
விமானத்தில் எல்லோரும் அமர்ந்தனர். விமானம் புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்தன. அப்போது மார்கரட் இருந்த இருக்கையை நோக்கி வந்த பணிப்பெண்,
“மேடம், முதல் வகுப்பில் பயணிக்கும் பயணி ஒருவர் அவரது இருக்கையில் நீங்கள் அமர்ந்து பயணம் செய்ய விரும்புகிறார். உங்கள் இருக்கையில் அவர் வந்து அமர்ந்து கொள்வாராம். வாருங்கள்” என்று அழைத்தாள்.
“என்னது? விமானத்தின் முன்பகுதியில் உள்ள முதல் வகுப்பிலா? யாரது?” என்று புருவத்தை உயரத்தியபடியே பணிப்பெண்ணை கேட்க,
“அதை அங்கு வந்து பாருங்கள்” என்று அழைத்துச் சென்றாள்.
அங்கு சென்றபின்னரே தெரிந்தது அது ஜோசப் என்று. மார்கரட்டை பார்த்ததும் இருக்கையில் இருந்து எழுந்தவன்,
“மேடம், என் இருக்கையில் அமருங்கள். நான் உங்கள் இருக்கைக்கு போகிறேன். இன்று உங்கள் நெடுநாளைய ஆசை நிறை வேறட்டும்” என்று கூறி மார்கரட்டை இருக்கையில் அமர்த்தினான்.
மார்கரட் தான் இயல்பாகத்தான் பேசிக் கொண்டிருந்ததையும் எதையும் எதிர்பார்த்துப் பேசவில்லை என்றும் கூறினாள். ஜோசப் முதல்வகுப்பில் பயணிக்கிறான் என்பதுகூட அவளுக்கு தெரியாது என்பதையும் கூறி இருக்கையில் அமர மறுத்தாள்.
ஆனால் ஜோசப் மார்கரட் சொன்னதை எதையும் காதில் வாங்காமல் வற்புறுத்தி இருக்கையில் அமர்த்தி விட்டு பின்னால் இருக்கும் அவளின் இருக்கைக்கு சென்றான்.
மார்கரட்டால் எதையும் நம்ப முடியவில்லை. உண்மையில் ஜோசப் முதல் வகுப்பில்தான் பயணிக்கிறான் என்பதுகூட அவனிடம் அவள் பேசிக் கொண்டிருந்தபோது தெரியாது. அதைப்பற்றி ஜோசப்பும் எதுவும் சொல்லவில்லை.
மார்கரட் வியப்பிலிருந்து விடுபடும் முன்னரே ஜோசப் இருக்கைக்கு வந்துவிட்டான். முதல்வகுப்பில் மிகவும் வசதியாக என்றுமே பயணிக்கும் அவனுக்கு அந்த இருக்கை மிகவும் சிரமமாகவும் வசதிகள் குறைவாகவும் இருந்தது.
வரிசையாக இருந்த இருக்கைகளில் அதிலும் கழிவறைக்குப் பின்னால்தான் மார்கரட்டின் இருக்கை இருந்தது. இருப்பினும் அசௌகரியம் எதையும் காட்டிக் கொள்ளாமல் பயணம் முடியும்வரை அமைதியாகவே இருந்தான்.
உணவு வேளையில் மார்கரட்டை போய்ப் பார்த்தான். உணவுண்டபின் அவளை படுக்கையில் படுக்கவைக்க உதவியபோது
மார்கரட் கண்களில் நன்றியையும் முகத்தில் மகிழ்ச்சியையும் கண்டான். அப்படியொரு மகிழ்ச்சியை அவனது இளகிய மனதினால் மார்க்கரட்டுக்கு கொடுக்க முடிந்தது.
இப்படியொரு நிகழ்வு நடந்ததை தன் மகள் சொன்னாலும் நம்பமாட்டாள். அவளை நம்ப வைப்பதற்காக முதல் வகுப்பு இருக்கையில் அவள் இருப்பதையும் அதற்கு காரணம் ஜோசப் என்பதையும் நிரூபிக்க ஒரு படமும் அவனுடன் ஒரு செல்பியும் எடுக்க விரும்பினாள். அதையும் ஜோசப் தட்டாமல் நிறைவேற்றியது அந்த விமானத்தில் பயணித்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.
No comments:
Post a Comment