மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
காணும் இடமெல்லாம் கடவுள் இருப்பார்
ஆணவும் உள்ளார் காணவும் மாட்டா
அரும் பொருளாகி இருக்கிறார் ஆண்டவன்
இருளிலும் இருப்பார் ஒளியிலும் இருப்பார்
இல்லம் இருக்கும் விளக்கிலும் இருப்பார்
இரும்பிலும் இருப்பார் செம்பிலும் இருப்பார்
கரும்பினில் சுவையாய் யாகியும் இருப்பார்
அருமறை அனைத்திலும் ஆண்டவன் இருப்பார்
ஆதியும் அந்தமும் இல்லார் ஆண்டவன்
ஓசையின் உள்ளே ஆண்டவன் இருப்பார்
ஓவியம் காவியம் அனைத்திலும் இருப்பார்
நோயாய் வருவார் வைத்தியம் செய்வார்
மருந்தாய் அமைந்து சுகத்தைக் கொடுப்பார்
விருந்தாய் இருப்பார் வேற்றுமை காட்டார்
காயாய் இருப்பார் கனியாய் இருப்பார்
கற்கண்டுக் குள்ளே இனிப்பாய் இருப்பார்
தேனாய் இருப்பார் பாலாய் இருப்பார்
தேடுவார் தேடினால் தெரிவார் ஆண்டவன்
கருவில் உயிராய் இருப்பார் கடவுள்
உருவாய் அருவாய் ஒளிர்வார் கடவுள்
அருளின் உருவாய் ஆகியே இருக்கிறார்
அன்புடை அகத்தில் அமருவார் கடவுள்
ஆண்டவன் வடிவம் ஆருமே அறியார்
அவரவர் கற்பனை ஆண்டவன் வடிவம்
அன்பின் வடிவே ஆண்டவன் என்பது
ஆணவம் அகற்றிய ஆன்றோர் வாக்கே
அன்பு கருணை அடைக்கலம் அணைப்பு
துன்பம் துடைத்தல் துயரம் களைதல்
தாங்கிப் பிடித்தல் சமயத்தில் வருதல்
அனைத்தும் ஆண்டவன் என்பதே நம்பிக்கை
விஞ்ஞானம் அறியா வியப்பே கடவுள்
மேலான ஞானமே கடவுளை காணும்
அஞ்ஞான நிலையில் ஆண்டவன் தெரியார்
அஞ்ஞானம் அகன்றால் ஆண்டவன் தெரிவார்
காணாப் பொருளைக் கண்டவர் சிலரே
கற்பனைக் கெட்டா அதுவே கடவுள்
கற்பனைக் கடந்த ஜோதியே கடவுள்
கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் !
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment