வல்லவனுக்கு வல்லவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் தயாரிப்பாளர்களுக்குள்ளே தனித்துவம், திட்டமிடல், உறுதி,


கண்டிப்பு என்று அனைத்தும் கொண்ட ஒருவராகத் திகழ்ந்தவர் டி . ஆர். சுந்தரம். இவர் உருவாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் பல சாதனைகளை செய்ததோடு பல "முதல்களுக்கு" சொந்தமானது. தமிழில் முதல் இரட்டை வேடப் படம், முதல் கலர் படம், முதல் ஆன்டி ஹீரோ படம், முதல் மலையாள படம் என்று சிறப்புகளை காரணமான இந்த நிறுவனம் முதன் முதலாக நூறு படங்களை தயாரித்த நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது. 97 படங்களை தயாரித்து முடித்த நிலையில் சுந்தரம் இயற்கை எய்து விட பட நிறுவனத்தின் பொறுப்பை அவர் மகன் ராமசுந்தரம் ஏற்றுக் கொண்டார். அவரின் தயாரிப்பு, இயக்கத்தின் கீழ் மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படம் 1965ம் ஆண்டு தயாரானது.

 
படங்களுக்கான கதையை தேர்ந்து எடுப்பதில் தந்தை வழியை

தேர்ந்தெடுத்த ராமசுந்தரம் அதற்காக பம்பாய் புறப்பட்டார். அங்கே அவர் கவனத்தை கவர்ந்த படம் ஹிந்தியில் வெளியான உஸ்தாத்தோன் கி உஸ்தாத். இப் படத்தையே தமிழில் எடுக்கலாம் என்று அப் படத்தின் உரிமையாளரை தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்ட போது அப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் படத்தின் புரொடியூசர் என்று தெரிய வந்தது. அவர் தான் பிரபல நடிகர் ஷேக் முக்தார். முதல் சந்திப்பிலேயே அவருடன் நண்பராகி விட்ட ராமசுந்தரம் இரண்டு உஸ்தாத்துகளுடன் சேலம் திரும்பினார். ஆம் , ஷேக் முக்தார் நடித்த உஸ்தாத்தோன் கி உஸ்தாத் , தோ உஸ்தாத் என்று இரண்டு படங்களின் உரிமைகளோடு வந்தவர் மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படமாக உஸ்தாத்தோன் கி உஸ்தாத் படத்தை தமிழில் தயாரிக்கலானார். அந்தப் படம் தான் வல்லவனுக்கு வல்லவன்.


நூறாவது படம் என்பதற்காக ராமசுந்தரம் நட்சத்திர கதாநாயக நடிகர்களை தேடி அலையவில்லை, அணுகவில்லை. அதற்கு பதில் வில்லன் நடிகர்களாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த எஸ். ஏ . அசோகன், ஆர். எஸ். மனோகர் இருவரையும் ஹீரோவாக தெரிவு செய்தார். ஹிந்தியில் கௌரவ நடிகராக அசோக்குமார் நடித்த வேடத்துக்கு ஜெமினி கணேசன் தெரிவானார். ஒரே ஒரு பாடல் காட்சியில் சாவித்திரி தோன்றினார். ஹிந்தியில் ஜானி வாக்கர் நடித்த காமெடி வேடம் கே. ஏ. தங்கவேலுவுக்கும், ஹெலன் நடித்த பாத்திரம் மனோரமாவுக்கு தரப் பட்டது. கதாநாயகியாக மணிமாலா நடித்தார். இவர்களுடன் எஸ். வி ராமதாஸ், பக்கிரிசாமி, டி . பி. முத்துலெஷ்மி, சாக்ரடீஸ் தங்கராஜ் ஆகியோரும் நடித்தனர்.

என்ஜினியர் பட்டதாரியான ரமேஷ் தனது தொழில் வளர்ச்சி

திட்டங்களுக்கு உதவி வேண்டி தொழில் அதிபர் சோமசுந்தரத்தை அணுகுகிறான். அவரின் மகள் கீதாவின் சிபாரிசுடன் சோமசுந்தரம் உதவ முன் வருகிறார். தொழிற்சாலை அமைக்க நிலம் பார்க்க ஆவடி செல்லும் ரமேஷின் பெட்டி பஸ்ஸில் கூடவே பயணிக்கும் மாலாவின் பெட்டியுடன் மாறி விடுகிறது. அந்த பெட்டியில் கொள்ளையடிக்க பட்ட பணம் இருக்கவே போலீசார் ரமேஷை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ரமேஷ் உயிருடன் இருந்தால் மாலாவை அடையாளம் காட்டி விடுவான் என அஞ்சும் கொள்ளைக்காரர்கள் அவனை சிறையிலேயே தீர்த்துக் கட்ட பிச்சுவா பக்கிரி என்ற போக்கிரியிடம் பொறுப்பை ஒப்படைகிறார்கள். அவனோ ரமேஷை சிறையில் இருந்து தப்பச் செய்து தனது பணயக் கைதியாக தன் இருப்பிடத்தில் அடைத்து வைக்கிறான். ஆனால் மர்ம மனிதனாக நடமாடும் ஜெகதீஷ் ரமேஷை அங்கிருந்து தப்பிப் போக உதவுகிறான். ரமேஷ் தனது காதலி கீதா, நண்பன் ஆகியோர் உதவியுடன் கொள்ளைக்காரர்களை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனாலும் ஒரு பக்கம் போலீஸ், மறு பக்கம் பிச்சுவா பக்கிரி, இன்னொரு புறம் கொள்ளைக் கூட்டம் என்று ரமேஷை பல பருந்துகள் வட்டமிடுகின்றன. அவனின் முயற்சி வெற்றி கண்டதா என்பதே மீதி படம்.


படத்தில் ரமேஷாக வரும் அசோகனின் நடிப்பு தரமாக அமைந்தது. அவர் ஹீரோவாக நடித்த படங்களில் இதில் தான் அவர் நடிப்பு கவரும் படி இருந்தது. பிச்சுவா பக்கிரியாக வரும் மனோகர் பிச்சு உதறி விட்டார். பிச்சுவா பக்கிரி கச்சிதமா காரியத்தை முடிச்சிடுவான் என்று அவர் அடிக்கடி சொல்வது நல்ல பன்ச்! தங்கவேலு இல்லை என்றால் படமே சப் என்றாகி இருக்கும். ஆனால் மனோரமா இதில் ஏற்ற பாத்திரம் புதுமை என்றால் , அவரின் நடிப்பு சூப்பர். ஜெமினி ஸ்டைலிஷ்ஷாக வந்து கவருகிறார்.

வல்லவனுக்கு வல்லவன் படத்துக்கு இசை வேதா. அவரின் இசைக்கு

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது. ஆனால் படத்தில் இடம் பெற்ற ஏழு பாடல்களும் லட்டு போல் இனிக்கின்றன. கண்ணதாசன் இயற்றிய ஓர் ஆயிரம் பாடலிலேயே , மனம் என்னும் மேடை மேலே, பாரடி கண்ணே கொஞ்சம், பொழுதும் புலரும் பூவும் மலரும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

படத்துக்கு வசனம் ஏ .எல் .நாராயணன். அவரின் அனுபவம் வசனத்தில் வெளிப்பட்டது. சண்டைக் கட்சிகளுக்கு குறைவில்லை. எஸ் . எஸ் . லால் படத்தை ஒளிப்பதிவு செய்தார். எல் . பாலு எடிட்டிங்கை கவனித்தார். 

தான் இயங்கும் முதல் படம் என்ற சுவடு தெரியாமல் அனுபவப்பட்ட இயக்குனர் போல் படத்தை கச்சிதமாக ராமசுந்தரம் இயக்கியிருந்தார். தந்தை வல்லவன் என்றால் தான் வல்லவனுக்கு வல்லவன் என்பதை நிரூபித்தார் அவர். படமும் நூறு நாட்கள் ஓடி மாடர்ன் தியேட்டர்ஸுக்கு பெருமை சேர்த்தது.

No comments: